03.05.055 – புறவம் (காழி) - ஐம்புலன் இச்சைகள் மூட - (வண்ணம்)
2007-09-21
3.5.55) ஐம்புலன் இச்சைகள் மூட (புறவம் - சீகாழி)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தந்தன தத்தன தான
தந்தன தத்தன தான
தந்தன தத்தன தான .. தனதான )
ஐம்புலன் இச்சைகள் மூட, .. வஞ்சம னத்தினன் ஆகி,
.... அஞ்சனம் இட்டழ கேறும் .. விழிமாதர்
.. அங்கசு கத்தினை நாடி, .. வெந்துயர் உற்றிட வாடி,
.... அஞ்சுபி றப்பொரு கோடி .. பெறலாமோ?
வம்புவ னப்புல வாத .. வண்டமிழ் நித்தலும் ஓதி,
.... மன்றினில் நர்த்தனம் ஆடும் .. உனதாளை,
.. மங்கலம் உற்றிடு மாறு, .. வெம்பவம் அற்றிடு மாறு,
.... வந்துவ ழுத்திடு மாறு .. வரமீயாய்!
நம்பும வர்க்கெளி தாகி, .. அன்றிரு வர்க்கரி தான,
.... நம்பம ழுப்படை சூலம் .. உடையானே!
.. நங்கையி டப்புறம் ஆக, .. அஞ்சடை யிற்புனல் ஓட,
.... நஞ்சுமி டற்றினில் நீல .. மணியாகும்
சம்புவு னைத்தொழு மாணி .. உய்ந்துயிர் பெற்றிட, வாதை
.... தந்துது ரத்திய கோப(ம்) .. மிகுகாலன்
.. தண்டனை பெற்றுயிர் கால .. அங்கவ னைச்செறு கால!
.... தண்புற வத்தினில் மேய .. பெருமானே!
பதம் பிரித்து:
ஐம்புலன் இச்சைகள் மூட, .. வஞ்ச-மனத்தினன் ஆகி,
.... அஞ்சனம் இட்டு அழகு ஏறும் .. விழி-மாதர்
.. அங்க-சுகத்தினை நாடி, .. வெந்துயர் உற்றிட வாடி,
.... அஞ்சு-பிறப்பு ஒரு கோடி .. பெறலாமோ;
வம்பு வனப்பு உலவாத .. வண்-தமிழ் நித்தலும் ஓதி,
.... மன்றினில் நர்த்தனம் ஆடும் .. உன தாளை,
.. மங்கலம் உற்றிடுமாறு, .. வெம்பவம் அற்றிடுமாறு,
.... வந்து வழுத்திடுமாறு .. வரம் ஈயாய்;
நம்புமவர்க்கு எளிது-ஆகி, .. அன்று இருவர்க்கு அரிது-ஆன,
.... நம்ப; மழுப்படை சூலம் .. உடையானே;
.. நங்கை இடப்புறம் ஆக, .. அஞ்சடையிற் புனல் ஓட,
.... நஞ்சு மிடற்றினில் நீல-மணி ஆகும்
சம்பு உனைத் தொழு மாணி .. உய்ந்து உயிர் பெற்றிட, வாதை
.... தந்து துரத்திய கோபம் .. மிகு-காலன்
.. தண்டனை பெற்று உயிர் கால .. அங்கு அவனைச் செறு-கால;
.... தண்-புறவத்தினில் மேய .. பெருமானே.
ஐம்புலன் இச்சைகள் மூட, வஞ்ச மனத்தினன் ஆகி, அஞ்சனம் இட்டு அழகு ஏறும் விழி மாதர் - ஐம்புலன் ஆசைகள் சூழ்ந்துகொண்டதனால், மனத்தில் வஞ்சம் உடையவன் ஆகி, மையணிந்த அழகிய கண்களையுடைய பெண்கள்மேல் ஆசைகொண்டு; (அஞ்சனம் - கண்ணுக்கிடும் மை);
அங்க சுகத்தினை நாடி, வெந்துயர் உற்றிட வாடி, அஞ்சு பிறப்பு ஒரு கோடி பெறல் ஆமோ - உடலின்பத்தை விரும்பி உழன்று, பெரும் துன்பமே அடைந்து வாடி, வினைகள் மிகுந்து அதனால் எண்ணற்ற கொடிய பிறவிகளை அடையலாமா? (அங்கம் - உடல்);
வம்பு வனப்பு உலவாத வண் தமிழ் நித்தலும் ஓதி, - வாசனையும் அழகும் குன்றாத வளம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை நாள்தோறும் பாடி; (வம்பு - வாசனை); (வனப்பு - அழகு); (உலத்தல் - குறைதல்; அழிதல்);
மன்றினில் நர்த்தனம் ஆடும் உன தாளை - அம்பலத்தில் ஆடும் உனது திருவடியை; (உன – உன்+அ – உனது; அ – ஆறாம் வேற்றுமை உருபு);
மங்கலம் உற்றிடுமாறு, வெம்பவம் அற்றிடுமாறு, வந்து வழுத்திடுமாறு வரம் ஈயாய் - நன்மை அடையும்படியும், கொடிய பிறவிநோய் அற்றுப்போகும்படியும், நான் வந்து துதிக்கும்படி வரம் அருள்வாயாக;
நம்பும் அவர்க்கு எளிது ஆகி, அன்று இருவர்க்கு அரிது ஆன, நம்ப - விரும்பித் தொழும் அன்பர்களால் எளிதில் அடையப்படுபவனாகியும், முன்னம் திருமால் பிரமன் அவர்களால் அறியப்படாதவன் ஆகியும் விளங்கும் நம்பனே; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
மழுப்படை சூலம் உடையானே - மழுவாயுதம் சூலம் இவற்றை ஏந்தியவனே;
நங்கை இடப்புறம் ஆக, அஞ்சடையில் புனல் ஓட, நஞ்சு மிடற்றினில் நீல-மணி ஆகும் - உமாதேவி இடப்பக்கம் ஒரு பாகம் ஆக, அழகிய சடையில் கங்கை பாய, ஆலகால விடம் கண்டத்தில் நீலமணி ஆகின்ற;
சம்பு உனைத் தொழு மாணி உய்ந்து உயிர் பெற்றிட, - சம்புவே உன்னைத் தொழுத மார்க்கண்டேயர் இறவாமல் சிரஞ்சீவியாகி உயிர்வாழும்படி; (சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்);
வாதை தந்து துரத்திய கோபம் மிகு காலன் தண்டனை பெற்று உயிர் கால அங்கு அவனைச் செறு கால - அவர்க்குத் துன்பம் தந்து அவரைத் துரத்திய சினம் மிக்க கூற்றுவன் தண்டிக்கப்பட்டு உயிரைக் கக்கும்படி (இறக்கும்படி) அன்று அக்காலனை உதைத்த காலகாலனே; (வாதை - துன்பம்); (கால்தல் - கக்குதல்); (செறுதல் - அழித்தல்);
தண் புறவத்தினில் மேய பெருமானே - குளிர்ந்த புறவம் (சீகாழி) என்ற பதியில் விரும்பி உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment