Tuesday, May 19, 2020

03.04.084 - சிவன் - கோலம் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-11-13

3.4.84 - சிவன் - கோலம் - சிலேடை

-------------------------------------------------------

வெண்பொடி எங்கும் விளங்கும் உருக்கொள்ளும்

மண்மிசைத் தோன்றும்நன் மாவிழையும் - பண்பிருக்கும்

கோடாநிற் கும்பல்லோர் நாளும் குனிந்திடும்

காடாட ரன்கோலம் காண்.


சொற்பொருள்:

வெண்பொடி - 1. வெள்ளைப் பொடி; / 2. திருநீறு;

மாவிழையும் - 1. மா இழையும் (மா = மாவு); / 2. மா விழையும்;

கோடா - 1. கோடாக; (கடைக்குறை விகாரம்) ; / 2. கோடாத - கோடுதல் இல்லாத - பாரபட்சம் இல்லாத; (ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்);

குனிதல் - 1. வளைதல்; / 2. வணங்குதல்;

இடுதல் - 1. வரைதல்; சித்திரமெழுதுதல்; / 2. ஒரு துணைவினை;

காடு - சுடுகாடு;

கோலம் - 1. தரையில் இடும் கோலம்; / 2. தன்மை;

காண் - முன்னிலை அசை;


கோலம்:

வெண்பொடி எங்கும் விளங்கும் உருக் கொள்ளும் - வெள்ளைப் பொடி எங்கும் திகழும் வடிவம் இருக்கும்;

மண்மிசைத் தோன்றும் - (வீட்டின்முன்) தரைமீது இருக்கும்;

நன் மாவு இழையும் பண்பு இருக்கும் - நல்ல (அரிசி) மாவு இழையும் தன்மை இருக்கும் - (மாக்கோலம், இழைகோலம்);

கோடா நிற்கும் - கோடாக இருக்கும் - கோடுகளால் ஆனது;

பல்லோர் நாளும் குனிந்து இடும் - தினமும் பலரும் உடலை வளைத்துக் குனிந்து இடுகின்ற;

கோலம் - தரையில் இடும் கோலம்.


சிவன்:

வெண் பொடி எங்கும் விளங்கும் உருக் கொள்ளும் - திருநீறு திருமேனியில் எங்கும் விளங்கும் வடிவம் உடையவன்;

மண்மிசைத் தோன்றும் - பூமியில் காட்சிகொடுப்பான்;

நன் மா விழையும் பண்பு இருக்கும் - நல்ல எருதை (வாகனமாக) விரும்புபவன்;

கோடா நிற்கும் - பாரபட்சமின்றி இருப்பவன்;

பல்லோர் நாளும் குனிந்திடும் - பலரும் தினமும் வணங்குகின்ற;

காடு ஆடு அரன் - சுடுகாட்டில் நடம் செய்யும் சிவபெருமான்;

கோலம் - தன்மை;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment