Tuesday, May 19, 2020

03.08.007 - நாட்டார் தொழும் - மடக்கு

03.08 – பலவகை

2008-12-07

3.8.7 - நாட்டார் தொழும் - மடக்கு

----------------------------------------

(அறுசீர் விருத்தம் - மா விளம் விளம் - அரையடி வாய்பாடு)


நாட்டார் தொழும்சிவ னாரையுள்

.. நாட்டார் சிலர்அவர்க் குத்தமைக்

காட்டார் நான்மறை போற்றுவெண்

.. காட்டார் முக்கணர் வெண்ணிற

மாட்டார் அடிஅரி காணவும்

.. மாட்டார் அடிதொழு திமையவர்

கேட்டார் அவர்களின் குறைகளைக்

.. கேட்டார் ஆலமுண் கண்டரே.


பதம் பிரித்து:

நாட்டார் தொழும் சிவனாரை உள் நாட்டார் சிலர்; அவர்க்குத் தமைக்

காட்டார், நான்மறை போற்று வெண்காட்டார்; முக்கணர்; வெண்ணிற

மாட்டார்; அடி அரி காணவும் மாட்டார்; அடி தொழுது இமையவர்

கேட்டார்; அவர்களின் குறைகளைக் கேட்டார் (/ கேட்டு ஆர்) ஆலம் உண் கண்டரே.


சொற்பொருள்:

நாட்டார் - 1. தேசத்தினர் / உலகத்தவர்; / 2. நிலையாக எழுந்தருளச்செய்யமாட்டார்;

காட்டார் - 1. காட்டமாட்டார்; / 2. காட்டில் இருப்பவர்;

மாட்டார் - 1. செல்வர்; இடபவாகனர்; (மாடு - செல்வம்; எருது) / 2. இயலார்;

கேட்டார் - 1. வேண்டினார்; / 2a. செவிமடுத்தார்; (கேட்டல் - வேண்டுதல்; காதால் கேட்பது); 2b. கேட்டு ஆர்;


நாட்டார் தொழும் சிவனாரை உள் நாட்டார் சிலர் - நாட்டிலுள்ளோர் பலரும் தொழும் சிவபெருமானாரைச் சிலர் மனத்தில் வைத்து எண்ணமாட்டார்கள்; (உள் - மனம்); (நாட்டுதல் - நடுதல்);

அவர்க்குத் தமைக் காட்டார், நான்மறை போற்று வெண்காட்டார்; - அத்தகையோர்களுக்குத் தம்மைக் காட்டாதவர் (அவர்களால் அறிய ஒண்ணாதவர்), நால்வேதங்களும் போற்றுகின்ற திருவெண்காட்டு ஈசர்;

முக்கணர் - நெற்றிக்கண்ணர்;

வெண்ணிற மாட்டார் - வெண்ணீறு பூசிய மேனியர்; (மேனியெங்கும் திருநீற்றுப் பூச்சால்) வெண்மை திகழும் செல்வர்; (விபூதி - செல்வம். திருநீறு; மாடு - செல்வம்); (இக்கால வழக்கில், "மாடு - எருது" என்று கொண்டும் பொருள்கொள்ளல் ஆம்; - வெள்ளை எருதினை வாகனமாக உடையவர்);

அடி அரி காணவும் மாட்டார் - திருமால் ஈசனார் திருவடியைத் தேடியும் காணாதவர் ஆனார்; (உம் - அசை);

அடி தொழுது இமையவர் கேட்டார் - திருவடியை வணங்கித் தேவர்கள் வேண்டினார்கள்;

அவர்களின் குறைகளைக் கேட்டார் ஆலம் உண் கண்டரே - அத்தேவர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிந்தார், (அவர்களது வேண்டுகோளைக் கேட்டு) அரிய ஆலகால விடத்தை உண்ட நீலகண்டர்; (ஆலம் - விஷம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment