03.05.061 – பொது - சொல்வதொன்று செய்வதொன்று - (வண்ணம்)
2009-01-07
3.5.61) சொல்வதொன்று செய்வதொன்று - (பொது)
--------------------------------------------------
(வண்ணவிருத்தம்;
தய்ய தந்த தய்ய தந்த
தய்ய தந்த .. தனதான )
சொல்வ தொன்று செய்வ தொன்று
..... தொல்லை பொங்கு .. வழிநாடித்
.. தொய்ய உந்தும் ஐவர் உண்டு
..... துய்ய உன்றன் .. அடிபேணல்
வெல்ல வந்த எய்தி நின்ற
..... வெய்ய முந்தை .. வினையாவும்
.. விள்ளு கின்ற செய்கை என்ற
..... மெய்யை நெஞ்சும் .. உணராதோ
கல்லெ றிந்து பொய்த விர்ந்து
.... கைவ ணங்கில் .. அதுகூடக்
.. கள்ள ருந்த மொய்சு ரும்பு
..... கள்வி ரும்பு .. மலர்போல
நல்ல தென்று கொள்ளு மின்ப
..... நள்ளல் நின்று .. நடமாடீ
.. நையும் அன்பர் உள்ளு றைந்து
..... நல்கும் எந்தை .. பெருமானே.
பதம் பிரித்து:
சொல்வது ஒன்று செய்வது ஒன்று,
..... தொல்லை பொங்கு வழி நாடித்
.. தொய்ய உந்தும் ஐவர் உண்டு;
..... துய்ய, உன்றன் அடி பேணல்,
வெல்ல வந்த எய்தி நின்ற
..... வெய்ய முந்தை வினை யாவும்
.. விள்ளுகின்ற செய்கை என்ற
..... மெய்யை நெஞ்சும் உணராதோ?
கல் எறிந்து பொய் தவிர்ந்து
.... கை வணங்கில், அதுகூடக்
.. கள் அருந்த மொய் சுரும்புகள்
..... விரும்பு மலர் போல
நல்லது என்று கொள்ளும் இன்ப;
..... நள் அல் நின்று நடம் ஆடீ;
.. நையும் அன்பர் உள் உறைந்து
..... நல்கும் எந்தை பெருமானே.
* அடி-3 - சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டு உய்ந்ததைச் சுட்டியது.
சொல்வது ஒன்று செய்வது ஒன்று, தொல்லை பொங்கு வழி நாடித் தொய்ய உந்தும் ஐவர் உண்டு - சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று துன்பம் மிகும்படி செயல்பட்டுத் தளரும்படி என்னை உந்துகின்ற ஐம்புலன் ஆசைகள் உண்டு; (தொல்லை - துன்பம்); (பொங்குதல் - மிகுதல்); (தொய்தல் - இளைத்தல்; சோர்தல்); (ஐவர் - ஐம்புலன்கள்);
துய்ய, உன்றன் அடி பேணல், வெல்ல வந்த எய்தி நின்ற வெய்ய முந்தை வினை யாவும் விள்ளுகின்ற செய்கை என்ற மெய்யை நெஞ்சும் உணராதோ - தூயனே, உன் திருவடியை வழிபடுவதுதான், என்னைத் தாக்க வந்தடைந்த கொடிய பழைய வினைப்பகையெல்லாம் நீங்குமாறு செய்யும் செயல் என்ற உண்மையை என் நெஞ்சும் உணராதோ? அருள்வாயாக; (துய்ய - 1. தூய; பரிசுத்தமான; 2. தூயனே என்ற விளி; துய்யன் - தூயன்); (எய்துதல் - அடைதல்); (வெய்ய – கொடிய); (விள்ளுதல் - நீங்குதல்); (அப்பர் தேவாரம் - 5.43.6 - "அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும் வல்லவாறு சிவாய நமவென்று நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே); (சுந்தரர் தேவாரம் - 7.48.7 - "விரும்பி நின் மலர்ப்பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன");
கல் எறிந்து பொய் தவிர்ந்து கை வணங்கில், அதுகூடக் கள் அருந்த மொய் சுரும்புகள் விரும்பு மலர் போல நல்லது என்று கொள்ளும் இன்ப - (சாக்கிய நாயனார்) கள்ளமற்ற உள்ளத்தோடு கல்லை உன் திருமேனிமேல் வீசியெறிந்து வணங்கியபொழுது, அந்தக் கல்லையும், மதுவுண்ண விரும்பி வண்டுகள் மொய்க்கின்ற சிறந்த பூப் போலக் கருதி அருள்புரிந்த இன்பனே; (இன்ப - இன்பனே);
நள் அல் நின்று நடம் ஆடீ - நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்றவனே; (நள் - நடு); (அல் - இரவு; இருள்); (திருவாசகம் - சிவபுராணம் - அடி-89 - "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே");
நையும் அன்பர் உள் உறைந்து நல்கும் எந்தை பெருமானே - மனம் உருகி வழிபடும் பக்தர்களது நெஞ்சில் உறைந்து அவர்களுக்கு அருள்கின்ற எந்தையாகிய பெருமானே; (உள் - உள்ளம்; மனம்; உள்ளே); (நல்குதல் - கொடுத்தல்; அருள்செய்தல்); (அப்பர் தேவாரம் - 5.2.1 - "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்"); (திருவாசகம் - சிவபுராணம் - அடி-74 - "ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
சிவாய நம
ReplyDelete