Saturday, May 30, 2020

03.05.062 – பொது - மேதினியில் இடர்பல - (வண்ணம்)

03.05.062 – பொது - மேதினியில் இடர்பல - (வண்ணம்)

2009-01-08

3.5.62) மேதினியில் இடர்பல - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தனதனனத் .. தனதான )


மேதினியில் இடர்பலவுற் .. றுழலாமல்

.. மேலைவினை அறுநிலையைப் .. பெறுமாறே

நீதியென அடியவரைப் .. பிரியாத

.. நேயனென அரிபிரமற் .. கரிதான

சோதியென அணிமதியைச் .. சடைமீது

.. சூடியென அரியமறைப் .. பொருளான

ஆதியென அமலனெனத் .. துதிபாடி

.. ஆதிரைய னடியிணையைப் .. பணிவேனே.


பதம் பிரித்து:

மேதினியில் இடர் பல உற்று உழலாமல்

.. மேலைவினை அறுநிலையைப் பெறுமாறே

நீதி என, அடியவரைப் பிரியாத

.. நேயன் என, அரி பிரமற்கு அரிது ஆன

சோதி என, அணி மதியைச் சடைமீது

.. சூடி என, அரிய மறைப்பொருள் ஆன

ஆதி என, அமலன் எனத் துதி பாடி,

.. ஆதிரையன் அடி இணையைப் பணிவேனே.


மேதினியில் இடர் பல உற்று உழலாமல் - பூமியில் பல துன்பங்கள் அடைந்து வருந்தாமல்; (மேதினி - பூமி);

மேலைவினை அறுநிலையைப் பெறுமாறே - என் பழவினைகள் தீரும்படி; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்);

நீதி என - நீதி வடிவினன் என்றும்;

அடியவரைப் பிரியாத நேயன் என - பக்தர்களை என்றும் நீங்காத அன்பன் என்றும்; (நேயன் - அன்புடையவன்);

அரி பிரமற்கு அரிது ஆன சோதி என - திருமால் பிரமன் இவர்களால் காண ஒண்ணாத ஒளிவடிவினன் என்றும்;

அணி மதியைச் சடைமீது சூடி என - அழகிய சந்திரனைச் சடையின்மேல் சூடியவன் என்றும்;

அரிய மறைப்பொருள் ஆன ஆதி என - அரிய வேதங்களின் பொருள் ஆன ஆதி என்றும்;

அமலன் எனத் துதி பாடி - தூயன் என்றும் பலவாறு அவனது புகழைப் பாடி; (அமலன் - மலமற்றவன்);

ஆதிரையன் அடி இணையைப் பணிவேனே - திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவனான சிவபெருமானது இரு திருவடிகளைப் பணிவேன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.061 – பொது - சொல்வதொன்று செய்வதொன்று - (வண்ணம்)

03.05.061 – பொது - சொல்வதொன்று செய்வதொன்று - (வண்ணம்)

2009-01-07

3.5.61) சொல்வதொன்று செய்வதொன்று - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தந்த தய்ய தந்த

தய்ய தந்த .. தனதான )


சொல்வ தொன்று செய்வ தொன்று

..... தொல்லை பொங்கு .. வழிநாடித்

.. தொய்ய உந்தும் ஐவர் உண்டு

..... துய்ய உன்றன் .. அடிபேணல்

வெல்ல வந்த எய்தி நின்ற

..... வெய்ய முந்தை .. வினையாவும்

.. விள்ளு கின்ற செய்கை என்ற

..... மெய்யை நெஞ்சும் .. உணராதோ

கல்லெ றிந்து பொய்த விர்ந்து

.... கைவ ணங்கில் .. அதுகூடக்

.. கள்ள ருந்த மொய்சு ரும்பு

..... கள்வி ரும்பு .. மலர்போல

நல்ல தென்று கொள்ளு மின்ப

..... நள்ளல் நின்று .. நடமாடீ

.. நையும் அன்பர் உள்ளு றைந்து

..... நல்கும் எந்தை .. பெருமானே.


பதம் பிரித்து:

சொல்வது ஒன்று செய்வது ஒன்று,

..... தொல்லை பொங்கு வழி நாடித்

.. தொய்ய உந்தும் ஐவர் உண்டு;

..... துய்ய, உன்றன் அடி பேணல்,

வெல்ல வந்த எய்தி நின்ற

..... வெய்ய முந்தை வினை யாவும்

.. விள்ளுகின்ற செய்கை என்ற

..... மெய்யை நெஞ்சும் உணராதோ?

கல் எறிந்து பொய் தவிர்ந்து

.... கை வணங்கில், அதுகூடக்

.. கள் அருந்த மொய் சுரும்புகள்

..... விரும்பு மலர் போல

நல்லது என்று கொள்ளும் இன்ப;

..... நள் அல் நின்று நடம் ஆடீ;

.. நையும் அன்பர் உள் உறைந்து

..... நல்கும் எந்தை பெருமானே.


* அடி-3 - சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டு உய்ந்ததைச் சுட்டியது.


சொல்வது ஒன்று செய்வது ஒன்று, தொல்லை பொங்கு வழி நாடித் தொய்ய உந்தும் ஐவர் உண்டு - சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று துன்பம் மிகும்படி செயல்பட்டுத் தளரும்படி என்னை உந்துகின்ற ஐம்புலன் ஆசைகள் உண்டு; (தொல்லை - துன்பம்); (பொங்குதல் - மிகுதல்); (தொய்தல் - இளைத்தல்; சோர்தல்); (ஐவர் - ஐம்புலன்கள்);

துய்ய, உன்றன் அடி பேணல், வெல்ல வந்த எய்தி நின்ற வெய்ய முந்தை வினை யாவும் விள்ளுகின்ற செய்கை என்ற மெய்யை நெஞ்சும் உணராதோ - தூயனே, உன் திருவடியை வழிபடுவதுதான், என்னைத் தாக்க வந்தடைந்த கொடிய பழைய வினைப்பகையெல்லாம் நீங்குமாறு செய்யும் செயல் என்ற உண்மையை என் நெஞ்சும் உணராதோ? அருள்வாயாக; (துய்ய - 1. தூய; பரிசுத்தமான; 2. தூயனே என்ற விளி; துய்யன் - தூயன்); (எய்துதல் - அடைதல்); (வெய்ய – கொடிய); (விள்ளுதல் - நீங்குதல்); (அப்பர் தேவாரம் - 5.43.6 - "அல்லலாக ஐம்பூதங்கள் ஆட்டினும் வல்லவாறு சிவாய நமவென்று நல்லம் மேவிய நாதன் அடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே); (சுந்தரர் தேவாரம் - 7.48.7 - "விரும்பி நின் மலர்ப்பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன");

கல் எறிந்து பொய் தவிர்ந்து கை வணங்கில், அதுகூடக் கள் அருந் மொய் சுரும்புகள் விரும்பு மலர் போல நல்லது என்று கொள்ளும் இன்ப - (சாக்கிய நாயனார்) கள்ளமற்ற உள்ளத்தோடு கல்லை உன் திருமேனிமேல் வீசியெறிந்து வணங்கியபொழுது, அந்தக் கல்லையும், மதுவுண்ண விரும்பி வண்டுகள் மொய்க்கின்ற சிறந்த பூப் போலக் கருதி அருள்புரிந்த இன்பனே; (இன்ப - இன்பனே);

நள் அல் நின்று நடம் ஆடீ - நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்றவனே; (நள் - நடு); (அல் - இரவு; இருள்); (திருவாசகம் - சிவபுராணம் - அடி-89 - "நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே");

நையும் அன்பர் உள் உறைந்து நல்கும் எந்தை பெருமானே - மனம் உருகி வழிபடும் பக்தர்களது நெஞ்சில் உறைந்து அவர்களுக்கு அருள்கின்ற எந்தையாகிய பெருமானே; (உள் - உள்ளம்; மனம்; உள்ளே); (நல்குதல் - கொடுத்தல்; அருள்செய்தல்); (அப்பர் தேவாரம் - 5.2.1 - "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்"); (திருவாசகம் - சிவபுராணம் - அடி-74 - "ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.060 – இடைமருதூர் - மெய்யை வளர்வழி - (வண்ணம்)

03.05.060 – இடைமருதூர் - மெய்யை வளர்வழி - (வண்ணம்)

2009-01-04

3.5.60) மெய்யை வளர்வழி - (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தய்ய தனதன தனதன .. தனதான )


மெய்யை வளர்வழி அதுநினை .. மனமாகி

.. வெய்ய வினைதனை மலையென .. மிகுமாறு

செய்ய விழைகிற சிறுமையை .. உடையேனும்

.. செவ்வி மிகுமடி இணைதொழ .. அருளாயே

பெய்யு(ம்) மழையெனும் வடிவமும் .. உடையானே

.. பிள்ளை மதியொடு நதியணி .. சடையானே

கொய்யு(ம்) மலர்மலி பொழிலிடை .. மருதூரில்

.. கொவ்வை இதழுமை யுடனுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மெய்யை வளர் வழி அது நினை மனமாகி,

.. வெய்ய வினைதனை மலை என மிகுமாறு

செய்ய விழைகிற சிறுமையை உடையேனும்

.. செவ்வி மிகும் அடி-இணை தொழ அருளாயே;

பெய்யும் மழை எனும் வடிவமும் உடையானே;

.. பிள்ளை மதியொடு நதி அணி சடையானே;

கொய்யும் மலர் மலி பொழில் இடைமருதூரில்

.. கொவ்வை-இதழ் உமையுடன் உறை பெருமானே.


மெய்யை வளர் வழி அது நினை மனமாகி - உடலைப் பேணுவதையே எப்பொழுதும் எண்ணும் மனத்தினன் ஆகி; (மெய் - உடல்);

வெய்ய வினைனை மலை என மிகுமாறு செய்ய விழைகிற சிறுமையை உடையேனும் - கொடிய வினையை மலைபோல் மிகும்படி செய்ய விரும்புகின்ற சிறுமையை உடைய நானும்; (வெய்ய - சுடுகின்ற; கொடிய);

செவ்வி மிகும் அடி-இணை தொழ அருளாயே - அழகும் வாசனையும் மிகும் உன் இரு திருவடிகளைத் தொழுவதற்கு அருள்வாயாக; (செவ்வி - அழகு; வாசனை);

பெய்யும் மழை எனும் வடிவமும் உடையானே - பெய்கின்ற மழை என்ற வடிவத்தையும் உடையவனே; (அப்பர் தேவாரம் - 6.50.6: "மழையா யெங்கும் பெய்வானை");

பிள்ளை மதியொடு நதிணி சடையானே - பிறைச்சந்திரனையும் கங்கையையும் சடையில் அணிந்தவனே; (பிள்ளை மதி - இளம்பிறைச்சந்திரன்);

கொய்யும் மலர் மலி பொழில் இடைமருதூரில் கொவ்வை இதழ் உமையுடன் உறை பெருமானே - பறிக்கும் பூக்கள் மிகுந்த சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் கொவ்வைக்கனி போல் சிவந்த வாயையுடைய உமையுடன் உறைகின்ற பெருமானே. (கொவ்வை - கொவ்வைக்கனி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.05.059 – பொது - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (வண்ணம்)

03.05.059 – பொது - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (வண்ணம்)

2009-01-02

3.5.59 - இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தந்தத் தனதன தந்தத் தனதன

தந்தத் தனதன தந்தத் தனதன

தனத்த தனதன தனத்த தனதன

தனத்த தனதன தனத்த தனதன .. தனதான - என்ற சந்தக்குழிப்பு )

(விந்துப் புளகித இன்புற் றுருகிட - திருப்புகழ் திருவண்ணாமலை)


இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில்

..... முந்தைப் புரிவினை துன்பத் தொடர்தர

.. இளைத்து மிகுபிணி வருத்த இழிவினை

..... இழைத்து நிதமிக அலுத்து வழிதனை .. அறியாமல்

நொந்தித் துயரற வந்தித் திடுமொரு

..... சிந்தைத் திறனிலி அம்பொற் கழலிணை

.. நுவற்சி தனைநினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடி னுனக்கு வருகுறை .. உளதோசொல்

பந்தத் திருமண மொன்றைத் தடைசெய

..... அன்றச் சுவடியை முன்பிட் டதுவொரு

.. படிச்சு வடியென வழக்கி லுரைசெய்து

..... தனக்க டிமையென முடித்து மிகவருள் .. புரிவோனே

அந்திப் பிறையொடு கொன்றைச் சரமணி

..... செம்பொற் சடைவிடை வென்றிக் கொடிமிசை

.. அலைக்கு நதிமுடி மலைக்கு மகளுட

..... லருத்த மெரிவிழி இருக்கு மழகிய .. பெருமானே.


பதம் பிரித்து:

இந்தப் புவிதனில் வந்து, இப்பிறவியில்

..... முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர

.. இளைத்து, மிகு பிணி வருத்த, இழிவினை

..... இழைத்து நிதம் மிக அலுத்து, வழிதனை .. அறியாமல்

நொந்து, இத்துயர் அற வந்தித்திடும் ஒரு

..... சிந்தைத் திறன் இலி, அம் பொற்கழல் இணை

.. நுவற்சிதனை நினை மனத்தை அடைகிற

..... வரத்தை அருளிடின் நுனக்கு வரு குறை .. உளதோ சொல்!

பந்தத் திருமணம் ஒன்றைத் தடைசெய

..... அன்று அச் சுவடியை முன்பு இட்டு, அது ஒரு

.. படிச் சுவடி என வழக்கில் உரைசெய்து,

..... தனக்கு அடிமை என முடித்து, மிக அருள் .. புரிவோனே!

அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி

..... செம் பொற்சடை, விடை வென்றிக் கொடிமிசை,

.. அலைக்கும் நதி முடி, மலைக்கு மகள் உடல்

..... அருத்தம், எரி விழி, இருக்கும் அழகிய .. பெருமானே.


* (3-ஆம் அடி சுந்தரரைத் தடுத்தாட்கொண்டு அருள்புரிந்ததைச் சுட்டியது).


இந்தப் புவிதனில் வந்து - இந்த உலகில் பிறந்து;

இப்பிறவியில் முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர இளைத்து, மிகு பிணி வருத்த - முன்பு செய்த வினைகள் இப்பிறவியில் இடையறாத துன்பத்தைத் தர, அதனால் தளர்ந்து, மிகுந்த பிணியும் வருத்த;

இழி வினை இழைத்து நிதம் - மேலும் இழிவான வினைகளே எப்பொழுதும் செய்து;

மிக அலுத்து, வழிதனை அறியாமல் நொந்து - மிகவும் சலிப்படைந்து, நல்ல வழியை அறியாமல் மனம் நொந்து;

இத்துயர் அற வந்தித்திடும் ஒரு சிந்தைத் திறன் இலி - இந்தத் துயரைப் போக்க உன்னை வணங்குகின்ற எண்ணம் இல்லாத அடியேனும்; (வந்தித்தல் - வணங்குதல்; வாழ்த்துதல்); (சிந்தை - மனம்); (திறன் - வலிமை); (இலி - இல்லாதவனான நானும்; உம்மைத்தொகை; உம் - இழிவுசிறப்பும்மை); ("திடமிலிசற் குணமிலி" - திருப்புகழ் - பழநி);

அம் பொற்கழல் இணை நுவற்சிதனை நினை மனத்தை அடைகிற வரத்தை அருளிடின் நுனக்கு வரு குறை உளதோ சொல் - உன்னுடைய அழகிய பொன்னடியைப் புகழ்வதை நினைக்கின்ற மனத்தைப் பெறுகிற வரத்தை (எனக்கு) அருளினால் உனக்கு அதனால் ஏதாவது குறைவு ஆகுமோ? (அம் - அழகிய); (நுவற்சி - சொல்லுதல்); (வருகுறை - வரும் குறை); (அருளிடினுனக்கு - அருளிடின் நுனக்கு/உனக்கு; நுனக்கு = உனக்கு); (சுந்தரர் தேவாரம் - 7.65.3 - "மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்கு"); (சுந்தரர் தேவாரம் - 7.70.6: "ஒருபிழை பொறுத்தால் இழிவுண்டே");

பந்தத் திருமணம் ன்றைத் தடைசெய அன்று - பிணைப்புகளை உருவாக்கும் திருமணம் ஒன்றைத் தடுப்பதற்காக, முன்பு அந்தத் திருமண நாளில் (பந்தலினுள் புகுந்து);

அச் சுவடியை முன்பு இட்டு - அந்த (அடிமைப்) பத்திரத்தைப் பலர்முன் காட்டி;

முன்பு இட்து ஒரு படிச் சுவடி என வழக்கில் உரைசெய்து - (அதனைச் சுந்தரர் பிடுங்கி அழித்தபின், வழக்குத் தொடுத்து, அவ்வழக்கில்) முன்பு மணப்பந்தலில் காட்டியது ஒரு பிரதி ஓலை என்று சொல்லி (வேறு ஒரு மூல ஓலையைக் காட்டி விளையாடி); ("முன்பு இட்டு" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (படிச் சுவடி - பிரதி ஓலை);

னக்கு அடிமை என முடித்து, மிக அருள் புரிவோனே - (சுந்தரரைத்) தனக்கு அடிமை என நிரூபித்து, மிகவும் அருள்செய்பவனே;

அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி செம் பொற்சடை - மாலையில் தோன்றும் பிறைச்சந்திரனையும் கொன்றை மாலையையும் அணிந்த செம்பொற்சடையும்;

விடை வென்றிக் கொடிமிசை - இடபம் பொறிக்கப்பெற்றிருக்கும் வெற்றிக்கொடியும்; (வென்றி - வெற்றி);

அலைக்கும் நதி முடி - அலைக்கின்ற கங்கையைத் தரித்த சென்னியும்;

மலைக்கு மகள் உடல் அருத்தம் - பார்வதி உடலில் பாதி எனவும்; (அருத்தம் - ardham - பாதி);

எரி விழி இருக்கும் அழகிய பெருமானே - எரிக்கும் நெற்றிக்கண்ணும் உடைய அழகிய சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1. "விந்துப் புளகித இன்புற் றுருகிட" - அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நமக்குக் கிட்டியவற்றுள் சந்த அமைப்பிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட பாடல் இதுவாகும்.

https://www.kaumaram.com/thiru/nnt0444_u.html


-------------------------------- -------------------------------

Thursday, May 28, 2020

03.05.058 - பொது - முடிமிசை நீலமயிர் - (வண்ணம்)

03.05.058 - பொது - முடிமிசை நீலமயிர் - (வண்ணம்)

2009-01-01

3.5.58 - முடிமிசை நீலமயிர் - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


முடிமிசை நீல மயிர்நரை யாகி

..... முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழிதடு மாற நமனது தூதர்

..... முடுகியி ழாமு .. னடியேனும்

கடியுல வாத தமிழ்மலி மாலை

..... கவினுறு தாளில் .. இடுவேனோ

.. கனல்மழு சூல(ம்) மறிதலை யோடு

..... கரதலம் ஏறும் .. அருளாளா

துடியிடை மாதை இணைபிரி யாது

..... துணிமதி சூடி .. வருவோனே

.. துளிநிறம் ஏறு மிடறொளி நீறு

..... துதைதிரு மேனி .. உடையானே

வடிவில தான ஒருபொரு ளாகி

..... வடிவுக ளாகும் .. இறையோனே

.. மணிவண னோடு மலரவன் நேட

..... வளரெரி யான .. பெருமானே.


பதம் பிரித்து:

முடிமிசை நீலமயிர் நரையாகி, முதுமையும் ஏறி .. அதனாலே

.. மொழி தடுமாற, நமனது தூதர் முடுகி இழாமுன், .. அடியேனும்

கடி உலவாத தமிழ்மலி மாலை கவினுறு தாளில் .. இடுவேனோ;

.. கனல்-மழு, சூலம், மறி, தலை-ஓடு கரதலம் ஏறும் .. அருளாளா;

துடி-இடை மாதை இணை பிரியாது, துணி-மதி சூடி .. வருவோனே;

.. துளி-நிறம் ஏறு மிடறு, ஒளி நீறு துதை திருமேனி .. உடையானே;

வடிவு இலதான ஒரு பொருள் ஆகி, வடிவுகள் ஆகும் .. இறையோனே;

.. மணிவணனோடு மலரவன் நேட வளர்-எரி ஆன .. பெருமானே.


முடிமிசை நீலமயிர் நரையாகி முதுமையும் ஏறி அதனாலே - தலையின்மேல் மயிர் கருமை நீங்கி நரைத்து, மூப்பும் கூடி அதனால்; (நீலம் - கறுப்பு);

மொழி தடுமாற நமனது தூதர் முடுகிழாமுன் அடியேனும் - என் உரை தடுமாறும்படி யமதூதர்கள் விரைந்து என்னை இழுத்துச்செல்வதன் முன்னமே நானும்; (முடுகுதல் - விரைந்துசெல்லுதல்; நெருங்கிவருதல்); (இழாமுன் - இழுப்பதன் முன்னம்);

கடிலவாத தமிழ்மலி மாலை கவினுறு தாளில் இடுவேனோ - என்றும் வாசனை குன்றாத தமிழ்ச்சொற்கள் நிறைந்த பாமாலையை உன் அழகிய திருவடியில் இட அருள்வாயாக; (கடி - வாசனை); (உலத்தல் - குறைதல்; அழிதல்); (கவின் - அழகு);

கனல்-மழு, சூலம், மறி, தலை-டு கரதலம் ஏறும் அருளாளா - சுடர்கின்ற மழுவையும் சூலத்தையும் மான்கன்றையும் மண்டையோட்டையும் கையில் ஏந்திய அருளாளனே; (மறி - மான்கன்று); (தலையோடு - மண்டையோடு);

துடியிடை மாதை இணைபிரியாது துணிமதி சூடி வருவோனே - உடுக்கை போன்ற இடையை உடைய உமையை ஒரு பாகமாக மகிழ்ந்து பிறைச்சந்திரனை அணிந்து வருபவனே; (துடி - உடுக்கை); ((துணி - துண்டம்);

துளி-நிறம் ஏறு மிடறு, ளி நீறு துதை திருமேனி உடையானே - ஆலகால விடத்தின் கருமை திகழும் கண்டத்தையும் ஒளிவீசும் திருநீறு படிந்த திருமேனியையும் உடையவனே; (துளி - விடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன்");

வடிவு இலதான ஒரு பொருள் ஆகி வடிவுகள் ஆகும் றையோனே - உருவமற்ற ஒப்பற்ற பொருள் ஆகியும் பல வடிவங்களை ஏற்பவனும் ஆன இறைவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.35.3 - "கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவு செய்தான் இடம்"); (சம்பந்தர் தேவாரம் - 1.9.5 - "நானாவித உருவால் நமை ஆள்வான்")

மணிவணனோடு மலரவன் நேட வளர் எரி ன பெருமானே - திருமாலும் பிரமனும் தேட ஓங்கிய சோதி ஆன பெருமானே; (மணிவணன் - மணிவண்ணன் - திருமால்); (மலரவன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, May 27, 2020

03.05.057 - பொது - கொடியனவான வினை - (வண்ணம்)

03.05.057 - பொது - கொடியனவான வினை - (வண்ணம்)

2009-01-01

3.5.57 - கொடியனவான வினை - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தான தனதன தான

தனதன தான .. தனதான )

(அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)


கொடியன வான வினைகெடு மாறு

..... குளிர்திரை சூழு(ம்) .. நிலமீது

.. குழுவொடு கூடி அடிமலர் மீது

..... கொழுமலர் தூவும் .. அவர்போல்நான்

பொடியணி மேனி தனிலொரு கூறு

..... புரிகுழ லாளை .. உடையானே

.. புகலென வான உனைமற வாது

..... புகழ்தமிழ் கூற .. அருளாயே

அடியிணை நாடி இசையொடு பாடி

..... அருமல ரோடு .. பலநாளும்

.. அளியொடு பூசை புரிகிற பாலன்

...... அவனுயிர் நாடி .. வருகாலன்

மடிவுறு மாறு நொடியினி லோடி

..... மலரடி மார்பில் .. உறவீசி

.. மறைமுனி வாழ அருளிய ஈச

..... மழவிடை ஏறு .. பெருமானே.


பதம் பிரித்து:

கொடியனவான வினை கெடுமாறு,

..... குளிர்-திரை சூழும் .. நிலம்-மீது

.. குழுவொடு கூடி, அடிமலர் மீது

..... கொழுமலர் தூவும் .. அவர்போல் நான்,

பொடி அணி மேனிதனில் ஒரு கூறு

..... புரி-குழலாளை .. உடையானே,

.. புகல் என ஆன உனை மறவாது

..... புகழ்-தமிழ் கூற .. அருளாயே;

அடியிணை நாடி இசையொடு பாடி

..... அரு-மலரோடு .. பல நாளும்

.. அளியொடு பூசை புரிகிற பாலன்

...... அவன் உயிர் நாடி .. வரு காலன்

மடிவு-உறுமாறு நொடியினில் ஓடி

..... மலரடி மார்பில் .. உற வீசி,

.. மறை-முனி வாழ அருளிய ஈச;

..... மழ-விடை ஏறு .. பெருமானே.


கொடியனவான வினை கெடுமாறு குளிர் திரை சூழும் நிலம் மீது குழுவொடு கூடி அடிமலர் மீது கொழுமலர் தூவும் அவர்போல் நான் - கொடிய வினையெல்லாம் அழியும்படி, குளிர்ந்த கடலால் சூழப்பெற்ற உலகில் அடியார் குழாத்தோடு சேர்ந்து உன் திருவடித்தாமரையில் சிறந்த பூக்களைத் தூவும் பக்தர்களைப் போல நானும்; (திரை - அலை; கடல்); (கொழு மலர் - செழிப்பான மலர்கள்);

பொடிணி மேனிதனில் ஒரு கூறு புரி குழலாளை உடையானே - திருநீற்றைப் பூசிய திருமேனியில் ஒரு பாகமாகச் சுருண்ட கூந்தலையுடைய உமையை உடையவனே; (பொடி - திருநீறு); (கூறு - பாகம்); (புரிதல் - சுருள்தல்; முறுக்குக்கொள்தல்); (குழள் - கூந்தல்);

புகல் என உனை மறவாது புகழ்-தமிழ் கூற அருளாயே - புகலிடமாக உள்ள உன்னை மறத்தல் இன்றி நினைந்து தமிழ்ப்பாமாலைகளை ஓதி வழிபட அருள்வாயாக; (புகல் - சரண்);

அடியிணை நாடி இசையொடு பாடி அரு-மலரோடு பல நாளும் அளியொடு பூசை புரிகிற பாலன் அன் உயிர் நாடி வரு காலன் - இரு திருவடிகளை விரும்பிப் பல நாளும் இசை பாடி நல்ல பூக்களைத் தூவி அன்போடு பூசை செய்த சிறுவர் மார்க்கண்டேயரது உயிரைக் கொல்ல வந்தடைந்த காலனே; (நாடுதல் - விரும்புதல்; அணுகுதல்/கிட்டுதல்; நினைத்தல்); (அளி - அன்பு); (பாலன் - சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்);

மடிவு உறுமாறு நொடியினில் ஓடி மலரடி மார்பில் உற வீசி - இறக்கும்படி க்ஷணப் பொழுதில் அங்கே தோன்றி மலர் போன்ற திருவடியைக் காலன் மார்பில் படும்படி வீசி உதைத்து;

மறை-முனி வாழ அருளிய ஈச - மறைமுனிவரான மார்க்கண்டேயர் உயிர்வாழ அருளிய ஈசனே;

மழ விடை ஏறு பெருமானே - இளைய இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (மழ - இளைய);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, May 26, 2020

03.05.056 – பொது - கற்பதைப் புறக்கணித்து - (வண்ணம்)

03.05.056 – பொது - கற்பதைப் புறக்கணித்து - (வண்ணம்)

2008-12-31

3.5.56 - கற்பதைப் புறக்கணித்து - (பொது)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தனத் தனத்தனத் .. தனதான )


கற்பதைப் புறக்கணித் .. தறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் .. தருபாவம்

வெற்பெனப் பெருக்குமிச் .. சிறியேனும்

.. மித்தையற் றுனைத்தொழற் .. கருளாயே

நற்பதத் தினைக்கருத் .. தினில்நாளும்

.. நச்சிவைத் தவர்க்கினித் .. திடுநாதா

சொற்பதத் தினுக்ககப் .. படலாகாய்

.. சுத்தபொற் சடைப்பிறைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கற்பதைப் புறக்கணித்து அறியாமை

.. கப்பிடப் பவத்தினைத் தரு பாவம்

வெற்பு எனப் பெருக்கும் இச் சிறியேனும்

.. மித்தை அற்று உனைத் தொழற்கு அருளாயே;

நற்பதத்தினைக் கருத்தினில் நாளும்

.. நச்சி வைத்தவர்க்கு இனித்திடும் நாதா;

சொற்பதத்தினுக்கு அகப்படல் ஆகாய்;

.. சுத்த; பொற்சடைப்பிறைப் பெருமானே.


கற்பதைப் புறக்கணித்து அறியாமை ப்பிடப் - அறியவேண்டியவற்றை அறிய நினையாததால், அறியாமை சூழ்ந்து என்னை மூட; (கப்புதல் - மூடுதல்);

பவத்தினைத் தரு பாவம் வெற்பு எனப் பெருக்கும் இச் சிறியேனும் - அதனால், பிறவிகளைத் தருகின்ற வினைகளை மலைபோலப் பெருக்குகின்ற சிறுமையுடைய அடியேனும்; (பவம் - பிறப்பு);

மித்தைற்றுனைத் தொழற்கு அருளாயே - என் அறியாமை நீங்கி உன்னை வழிபடுமாறு அருள்வாயாக; (மித்தை - மித்யை - பொய்);

நற்பதத்தினைக் கருத்தினில் நாளும் நச்சி வைத்தவர்க்கு இனித்திடும் நாதா - நல்ல திருவடியை மனத்தில் என்றும் விரும்பித் தரித்த பக்தர்களுக்கு இனிக்கின்ற நாதனே; (நச்சுதல் - விரும்புதல்);

சொற்பதத்தினுக்கு அகப்படல் ஆகாய் - சொற்பதம் கடந்தவனே; (சொற்பதம் - சொல்லாற் குறிக்கப்படும் நிலை); (அகப்படுதல் - உள்ளாதல்);

சுத்த - சுத்தனே - தூயவனே;

பொற்சடைப்பிறைப் பெருமானே - பொற்சடையில் பிறையைச் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, May 23, 2020

03.04.085 - சிவன் - கயிறு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-12-09

03.04.085 - சிவன் - கயிறு - சிலேடை

-------------------------------------------------------

சென்னிசே ரப்புரியும் நாரியையும் செம்பொருள்

உன்னில் உதவும் ஒருபந்தம் - இன்னிலை

ஆக்கும் அரவமார் ஆகமல்லி ருக்குமருள்

ஆர்க்குநல்கும் ஆலன் கயிறு.


சொற்பொருள்:

புரி - கயிறு, முறுக்கிய கயிறு; (ஆகுபெயராகப் புரிமணை, சும்மாடு இவற்றைச் சுட்டியது; புரிமணை - பாண்டம் வைத்தற்கு வைக்கோல், கயிறு இவற்றால் சுற்றியமைத்த பீடம்);

புரிதல் - விரும்புதல்;

நார் - மட்டை முதலியவற்றின் நார்;

நாரி - பெண்;

இயைதல் - பொருந்துதல்; இணங்குதல்; நிரம்புதல்; ஒத்தல்;

இன்னிலை - 1. இன் நிலை; (இன் - இனிய); / 2. இல் நிலை; (இல் - இல்லாத);

நிலை - உறுதி; நிலைமை;

ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்;

ஆகம் - மேனி;

அல் - இரவு; இருள்;

மல் - வலிமை;

மருள் - மயக்கம்;

ஆர்க்கும் - யாருக்கும்;

ஆலன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி;


கயிறு:

சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் செம்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் - இன் நிலை

ஆக்கும்; அரவம் ஆர் ஆகம் அல் இருக்கும்; மருள்

ஆர்க்கும் நல்கும்; ஆலன் கயிறு.

சென்னி சேர் அப் புரியும் நார் இயையும் செம்பொருள் - தலையில் சேர்கிnற அந்தப் "புரி" என்பதும் நாரால் ஆன செந்நிறம் திகழும் பொருள்; (இங்கே புரி - ஆகுபெயராகப் புரிமணை / சும்மாடு இவற்றைச் சுட்டியது);

உன்னில் உதவும், ஒரு பந்தம் இன்-நிலை ஆக்கும் - சிந்தித்துப் பார்த்தால், அது மிகவும் பயனுள்ள பொருள், எந்தக் கட்டையும் (முடிச்சையும்) அவிழாதவண்னம் நல்லபடி ஆக்கும்;

அரவம் ஆர் ஆகம் அல் இருக்கும் - பாம்பு போல் அதன் உருவம் இருளில் இருக்கும்;

மருள் ஆர்க்கும் நல்கும் - அப்படி அஃது எவருக்கும் மயக்கம் உண்டாக்கும்;

கயிறு.


சிவன்:

சென்னி சேரப் புரியும் நாரியையும்; செம்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் - இல் நிலை

ஆக்கும்; அரவம் ஆர் ஆகம் மல் இருக்கும்; அருள்

ஆர்க்கும் நல்கும்; ஆலன் கயிறு.

சென்னி சேரப் புரியும் நாரியையும் - கங்கையையும் தன் முடிமேல் வைக்க விரும்புவான்;

செம்பொருள் - மெய்ப்பொருள்;

உன்னில் உதவும், ஒரு பந்தம் இல்-நிலை ஆக்கும் - தியானிப்போர்க்கு எவ்வித பந்தமும் இல்லாத நிலையைத் தருவான்;

அரவம் ஆர் ஆகம் மல் இருக்கும் - பாம்புகள் பொருந்தி இருக்கும் திருமேனி வலிமை மிக்கிருக்கும்;

அருள் ஆர்க்கும் நல்கும் - வழிபடும் எவருக்கும் அருள் கொடுப்பவன்;

ஆலன் - ஆலநீழலில் வீற்றிருப்பவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------