Saturday, November 11, 2023

08.03.068 - கண்ணி - முடியானை - மடக்கு

08.03 – மடக்கு

2016-02-28

08.03.068 - கண்ணி - முடியானை - மடக்கு

-------------------------

கண்ணி பிடிதூதர் கைப்படுமுன் அங்கயற்

கண்ணி பதியைக் கதிர்மதியக் - கண்ணி

முடியானை முக்கண் முதல்வனைஎஞ் ஞான்றும்

முடியானை நாவே மொழி.


பதம் பிரித்து:

கண்ணி பிடி-தூதர் கைப்படுமுன், அங்கயற்-

கண்ணி பதியைக், கதிர்-மதியக் - கண்ணி

முடியானை, முக்கண் முதல்வனை, எஞ்ஞான்றும்

முடியானை, நாவே மொழி.


சொற்பொருள்:

கண்ணி - 1. கயிறு; சுருக்கு; 2. கண் உடையவள்; 3. தலையில் அணியும் மாலைவகை;

கைப்படுதல் - கைவசமாதல்;

படுதல் - அகப்படுதல்; சாதல்; அழிதல்;

பதி - கணவன்; தலைவன்;

முடி - தலை;

முடிதல் - சாதல்; அழிதல்;

முடியானை - 1. முடிமேல் உடையவனை; 2. முடியாதவனை (முடிதல் இல்லாதவனை);

மொழிதல் - சொல்லுதல்;


கண்ணி பிடி-தூதர் கைப்படுமுன் - பாசம் பற்றிய காலதூதரின் கையில் சிக்கி அழிவதன் முன்னமே;

அங்கயற்கண்ணி பதியைக் - அழகிய கயல் போன்ற கண்களை உடைய உமையின் கணவனை;

கதிர்-மதியக் கண்ணி முடியானை - கதிர்கள் வீசும் சந்திரனைக் கண்ணி என்னும் மாலை போலத் தலைமேல் அணிந்தவனை;

முக்கண் முதல்வனை - முக்கண் உடையவனை, யாவரினும் முற்பட்டவனை, எல்லார்க்கும் தலைவனை;

எஞ்ஞான்றும் முடியானை - எக்காலத்தும் அழிவில்லாதவனை;

நாவே மொழி - என் நாக்கே, நீ போற்றுவாயாக;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


07.24 – கருவூர் - (கரூர்) - துணிமதிக்கு இளநாகம்

07.24 – கருவூர் - (கரூர்)

2016-02-21

கருவூர் - (கரூர்)

------------------

(அறுசீர் விருத்தம் - "தனன தானன தானா தனதன தனதன தானா" என்ற சந்தம்;

யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க);

(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்");


1)

துணிம திக்கிள நாகம் துணையெனச் சடைமிசை வைத்தார்

மணியி லங்கிய கண்டர் மாமலை மாதொரு பங்கர்

அணியி லங்கிய கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

பணியும் அன்பர்கள் தங்கள் பழவினை தீர்த்தருள் வாரே.


துணிமதிக்கு இள நாகம் துணை எனச் சடைமிசை வைத்தார் - பிறைச்சந்திரனுக்கு இளம்பாம்பைத் துணை என்று சடையில் வைத்தவர்; (துணிமதி - பிறைச்சந்திரன்; நிலாத்துண்டம்); (துணி - துண்டம்);

மணி இலங்கிய கண்டர் - நீலமணி திகழும் கண்டம் உடையவர்; (இலங்குதல்- திகழ்தல்);

மா மலைமாது ஒரு பங்கர் - அழகிய உமை ஒரு பங்கர்; (மா - அழகு);

அணி இலங்கிய கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - அழகிய கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் எழுந்தருளிய எம் சுவாமி; (அணி - அழகு); (கருவூர் - ஊர்ப்பெயர் - கரூர்); (ஆனிலை - அவ்வூரில் (கரூரில்) உள்ள கோயிற் பெயர்); (மேய - விரும்பி உறைகின்ற); (அடிகள் - கடவுள்);

பணியும் அன்பர்கள் தங்கள் பழவினை தீர்த்து அருள்வாரே - வழிபடும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்து அருள்புரிவார் (/ அருள்பவர்);


2)

மழுவை ஏந்தெறி பத்தர் மண்ணுல காள்புகழ்ச் சோழன்

தொழுது போற்றிய ஈசர் தூயவெண் ணீறணி மார்பர்

அழகி லங்கிய கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

கழலை வாழ்த்தடி யார்கள் கருதிய வரமருள் வாரே.


மழுவை ஏந்து எறிபத்தர், மண்ணுலகு ஆள் புகழ்ச்சோழன் தொழுது போற்றிய ஈசர் - மழுவாயுதத்தை ஏந்திய எறிபத்த நாயனாராலும், அரசாட்சி செய்த புகழ்ச்சோழ நாயனாராலும் வழிபடப்பெற்ற ஈசனார்; (* எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார் வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க);

தூய வெண்ணீறு அணி மார்பர் - தூய்மையான வெண் திருநீற்றை மார்பில் பூசியவர்;

அழகு இலங்கிய கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - அழகிய கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

கழலை வாழ்த்து அடியார்கள் கருதிய வரம் அருள்வாரே - தம்முடைய திருவடிகளை வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருள்புரிவார்;


3)

ஓலம் என்றடை உம்பர் உய்ந்திட நஞ்சினை உண்டு

நீலம் நின்றமி டற்றர் நித்தியர் நான்மறை விரித்த

ஆல நீழலர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

ஏலு மாறடி தொழுவார் இருவினை தீர்த்தருள் வாரே.


ஓலம் என்று அடை உம்பர் உய்ந்திட நஞ்சினை உண்டு நீலம் நின்ற மிடற்றர் - ஓலம் என்று கதறி வந்து அடி அடைந்த தேவர்கள் உய்யும்படி விடத்தை உண்டு கருமை தங்கிய கண்டம் உடையவர்;

நித்தியர் - அழிவற்றவர்;

நான்மறை விரித்த ஆல நீழலர் - நால்வேதப் பொருள்களைக் கல்லால மரத்தின்கீழ் உபதேசித்தவர்; (விரித்தல் - விளக்கி உரைத்தல்);

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

ஏலுமாறு அடி தொழுவார் இருவினை தீர்த்து அருள்வாரே - தங்களால் இயன்றபடி திருவடியை வணங்கும் அன்பர்களுடைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்; (அப்பர் தேவாரம் - 5.43.9 - காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின் றேத்துமின்)


4)

எம்பி ரானருள் புரியாய் என்றடி போற்றிய டைந்த

உம்பர் தம்துயர் நீக்கி உழிதரு முப்புரம் படவோர்

அம்பை எய்தவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

நம்பு பத்தருக் கென்றும் நலமிகு வாழ்வருள் வாரே.


"எம்பிரான் அருள் புரியாய்" என்று அடி போற்றி அடைந்த உம்பர் தம் துயர் நீக்கி - "எம் தலைவனே, அருளாய்" என்று திருவடியை வணங்கிய தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி;

உழிதரு முப்புரம் பட ஓர் அம்பை எய்தவர் - எங்கும் திரிந்த முப்புரங்களும் அழிய ஓர் கணையைத் தொடுத்தவர்;

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

நம்பு பத்தருக்கு என்றும் நலம் மிகு வாழ்வு அருள்வாரே - விரும்பித் தொழும் பக்தர்களுக்கு என்றும் நன்மை மிகும் வாழ்வினை அருள்புரிவார்; (நம்புதல் - விரும்புதல்);


5)

கரணம் மூன்றவை கொண்டு கண்ணுத லைத்தொழு மாணி

மரணம் இன்றிநி லைக்க வன்னமன் மார்பிலு தைத்தார்

அரணம் அட்டவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

சரணம் என்றடை அன்பர் தம்வினை தீர்த்தருள் வாரே.


கரணம் மூன்றுஅவை கொண்டு கண்ணுதலைத் தொழு மாணி - மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலும் நெற்றிக்கண் உடைய ஈசனாரைத் தொழுத மார்க்கண்டேயர்; (கரணம் மூன்றவை - அவை - பகுதிப்பொருள்விகுதி);

மரணம் இன்றி நிலைக்க வன்-நமன் மார்பில் உதைத்தார் - மார்க்கண்டேயர் இறவாமல் என்றும் வாழுமாறு கொடிய காலனின் மார்பில் உதைத்தவர்;

அரணம் அட்டவர் - முப்புரங்களை அழித்தவர்;

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

சரணம் என்று அடை அன்பர் தம் வினை தீர்த்து அருள்வாரே - "சரணம்" என்று அடைந்த பக்தர்களுடைய வினைகளைத் தீர்த்து அருள்புரிவார்;


6)

கரிய வெற்புநி கர்த்த கரியது பிளிறவு ரித்த

உரிவை போர்வைய தாக உகந்தவர் ஒருவிடைப் பாகர்

அரிவை பங்கினர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

பரிவர் அன்புடை யார்தம் பழவினை தீர்த்தருள் வாரே.


கரிய வெற்பு நிகர்த்த கரிது பிளிற உரித்த உரிவை போர்வையது ஆக உகந்தவர் - கருமையான மலை போன்ற யானை பிளிறுமாறு உரித்த அதன் தோலைப் போர்வையாக விரும்பி அணிந்தவர்; (வெற்பு - மலை); (உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 6.87.3 - "கம்பமதக் கரிபிளிற உரிசெய்தோன் காண்");

ஒரு விடைப்பாகர் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவர்;

அரிவை பங்கினர் - அர்த்தநாரீஸ்வரர்; (அரிவை - பெண்);

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் பரிவர் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள் இரங்குபவர் / இரங்குவார்;

அன்பு உடையார்தம் பழவினை தீர்த்து அருள்வாரே - பக்தர்களுடைய பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்;


7)

குரவம் கூவிளம் கொன்றை குஞ்சியின் மேலணி ஈசர்

இரவில் மாநடம் ஆடும் இறையவர் நாணென அரையில்

அரவம் ஆர்த்தவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

பரவும் அன்பருக் கிரங்கிப் பழவினை தீர்த்தருள் வாரே.


குரவம் கூவிளம் கொன்றை குஞ்சியின் மேல் அணி ஈசர் - குரவமலரும், வில்வமும், கொன்றைமலரும் திருமுடிமேல் அணியும் ஈசனார்;

இரவில் மா நடம் ஆடும் இறையவர் - நள்ளிருளில் பெருநடம் செய்யும் கடவுள்;

நாண் என அரையில் அரவம் ஆர்த்தவர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்; (ஆர்த்தல் - கட்டுதல்);

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

பரவும் அன்பருக்கு இரங்கிப் பழவினை தீர்த்து அருள்வாரே - துதித்துப் போற்றும் பக்தர்களுக்கு இரங்கி அவர்களுடைய பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்;


8)

கடுத்து வந்தரு வரையைக் கைகளின் வலியது கருதி

எடுத்த மூடவ ரக்கன் எழில்முடி பத்தொரு விரலால்

அடர்த்த அங்கணர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

தொடுத்த சொன்மலர் கொண்டு தொழுமடி யார்க்கருள் வாரே.


கடுத்து வந்து அரு வரையைக் கைகளின் வலிது கருதி எடுத்த மூட அரக்கன் எழில் முடி பத்து ஒரு விரலால் அடர்த்த அங்கணர் - கோபித்து விரைந்து வந்து, தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த மூடனான இராவணனுடைய அழகிய முடிகள் பத்தையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கிய அருட்கண்ணர்; (கடுத்தல் - கோபித்தல்; விரைந்து ஓடுதல்); (அரு வரை - அரிய மலை - கயிலைமலை); (அடர்த்தல் - நசுக்குதல்); (அங்கணன் - அருட்கண் உடையவன் - சிவபெருமான்);

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

தொடுத்த சொல்மலர் கொண்டு தொழும் அடியார்க்கு அருள்வாரே - சொல்மலர்களால் தொடுக்கப்பட்ட பாமாலைகளால் வழிபடும் அடியவர்களுக்கு அருள்புரிவார்;


9)

வாதி னாலடி முடியை மாலயன் நேடிவ ணங்கு

சோதி யாயெழும் அண்ணல் தோன்றிய பொருள்களுக் கெல்லாம்

ஆதி ஆனவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

போதி னால்தொழு பத்தர் புரிவரம் தந்தருள் வாரே.


வாதினால் அடிமுடியை மால் அயன் நேடி வணங்கு சோதியாய் எழும் அண்ணல் - தம்முள் வாதிட்ட விஷ்ணுவும் பிரமனும் அடியும் முடியும் தேடி வணங்கும்படி சோதியாகி எழுந்த அண்ணல்; (வாது - தருக்கம்; சண்டை);

தோன்றிய பொருள்களுக்கு எல்லாம் ஆதி ஆனவர் - எல்லாவற்றுக்கும் முற்பட்டவர்; எல்லாவற்றுக்கும் மூலமாக உள்ளவர்;

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

போதினால் தொழு பத்தர் புரி வரம் தந்து அருள்வாரே - பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்கள் விரும்பும் வரங்களைத் தந்து அருள்புரிவார்; (போது - மலர்); (புரிதல் - விரும்புதல்);


10)

மந்தை பல்கிட வேண்டி வஞ்சகர் வலைபல விரிப்பார்

சிந்தை யீர்இது நினைமின் தெண்புனற் சடையினர் ஆதி

அந்தம் அற்றவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

கந்த மாமலர் தூவிக் கைதொழு வார்க்கருள் வாரே.


மந்தை பல்கிட வேண்டி வஞ்சகர் வலை பல விரிப்பார் - மந்தையைப் பெருக்குவதற்காக வஞ்சகர்கள் பல வலைகளை விரிப்பார்கள்; (பல்குதல் - பெருகுதல்);

சிந்தையீர் இது நினைமின் - அறிவுடையவர்களே; இதனை நினையுங்கள்; (சிந்தை - அறிவு);

தெண்புனற் சடையினர் ஆதி - தெளிந்த நீரான கங்கையைச் சடையில் உடையவர்; அனைத்திற்கும் ஆதி ஆனவர்; ("ஆதி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

ஆதி அந்தம் அற்றவர் - முதலும் முடிவும் இல்லாதவர்;

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

கந்த மா மலர் தூவிக் கைதொழுவார்க்கு அருள்வாரே - அப்பெருமானார் வாசமலர்களைத் தூவிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவார்;


11)

துண்ட மாமதி சூடி தோள்மிசை நீற்றினைப் பூசி

உண்ட நஞ்சுமி டற்றில் ஒருமணி போல்திகழ் கின்ற

அண்ட நாயகர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்

தொண்ட ருக்கருந் துணையாய்த் தொல்வினை தீர்த்தருள் வாரே.


துண்ட மா மதி சூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவர்; (சூடி - சூடியவர்);

தோள்மிசை நீற்றினைப் பூசி - புஜங்களில் திருநீற்றைப் பூசியவர்; (பூசி - பூசியவர்);

உண்ட நஞ்சு மிடற்றில் ஒரு மணி போல் திகழ்கின்ற அண்ட நாயகர் - உண்ட விடம் கண்டத்தில் ஒப்பற்ற நீலமணி போல் விளங்குகின்றவரும், அண்டங்களுக்கு எல்லாம் தலைவரும் ஆன சிவபெருமானார்;

கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;

தொண்டருக்கு அரும் துணை ஆய்த் தொல்வினை தீர்த்து அருள்வாரே - அடியவர்களுக்கு அரிய துணை ஆகி, அவர்களுடைய பழவினைகளைத் தீர்த்து அருள்புரிவார்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக்குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -

  • "தனன தானன தானா தானன தானன தானா" என்ற சந்தம்;

  • அடிதோறும் முதற்சீரின் அமைப்பு - தனன என்பது தான என்றும் வரலாம். குறில், குறில் + ஒற்றில் முடியும்;

  • அடிதோறும் இரண்டாம் சீர் - நேரசையில் தொடங்கும்;

  • தானன என்ற இடத்தில் தனதன வரலாம்; தானா என்ற இடத்தில் தனனா வரலாம்.

  • விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்;


2) சம்பந்தர் தேவாரம் - 2.90.4 -

துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி

உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்

பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்

அன்னம் ஆருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


வி. சுப்பிரமணியன்

----------------- ----------------


08.03.067 - நீரானை - பாரானை - மடக்கு

08.03 – மடக்கு

2016-01-27

08.03.067 - நீரானை - பாரானை - மடக்கு

-------------------------

நீரானை ஈருரி தாங்கு நிமலனை

நீரானை ஆட்டானைக் காவானை - நீரானைப்

பாரானை விண்ணெரிகால் ஆனானைச் சாராரைப்

பாரானை நாவேநீ பாடு.


பதம் பிரித்து:

நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை,

நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை, - நீரானைப்,

பாரானை, விண் எரி கால் ஆனானைச், சாராரைப்

பாரானை, நாவே நீ பாடு.


சொற்பொருள்:

நீர் - 1. கங்கை; 2. காவிரிப் புனல்; 3. புனல்;

ஆனை - யானை;

ஈர்த்தல் - உரித்தல்;

உரி - தோல்;

ஆட்டுதல் - அபிடேகித்தல்;

பார் - பிருதிவி என்னும் பூதம்;

எரி - நெருப்பு;

கால் - காற்று;

சார்தல் - புகலடைதல்;

பார்த்தல் - கடைக்கணித்தல் (To look at with compassion) - கடைக்கண்ணாற் பார்த்தல்;


நீர், ஆனை ஈர் உரி தாங்கு நிமலனை - கங்கையையும் யானையின் உரித்த தோலையும் தரித்த நின்மலனை;

நீர் ஆனை ஆட்டு ஆனைக்காவானை - யானை நீரால் அபிஷேகம் செய்த திருவானைக்கா ஈசனை;

நீரானைப் பாரானை விண் எரி கால் ஆனானைச் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆனவனை;

சாராரைப் பாரானை - தன்னைச் சரணடையாதவர்களை அருளோடு பாராதவனை ( = அவர்களுக்கு அருள் இல்லாதவனை);

நாவே நீ பாடு - என் நாவே, நீ பாடுவாயாக;


பிற்குறிப்புகள்:

1. அப்பர் தேவாரம் - 6.50.1 - "போரானை ஈருரிவைப் போர்வை யானை ... பாரானை .. நெடுவெளியாய்ப் பரந்து நின்ற நீரானைக் காற்றானைத் தீயா னானை";

2. அப்பர் தேவாரம் - 6.11.3 - "வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம் மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்" - தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன்;

3. அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


08.03.066 - காட்டிடைப் - பார்த்தற்கு - மடக்கு

08.03 – மடக்கு

2016-01-26

08.03.066 - காட்டிடைப் - பார்த்தற்கு - மடக்கு

-------------------------

காட்டிடைப் பாரிடம் பாட்டிசைக்க ஆடியைமின்

காட்டிடைப் பாவை கணவனைக் - காட்டிடைப்

பார்த்தற் கருள்செய் பசுபதியை மாலயனால்

பார்த்தற் கரியானைப் பாடு.


பதம் பிரித்து:

காட்டிடைப் பாரிடம் பாட்டு இசைக்க ஆடியை, மின்

காட்டு-இடைப் பாவை கணவனைக், - காட்டிடைப்

பார்த்தற்கு அருள்செய் பசுபதியை, மால் அயனால்

பார்த்தற்கு அரியானைப் பாடு.


சொற்பொருள்:

காட்டிடை - 1. சுடுகாட்டில்; 2. மின் காட்டு இடை - மின்னல் போன்ற இடை; 3. காட்டில்;

இடை - 1. ஏழாம் வேற்றுமை உருபு; 2. மருங்குல் (waist);

பாரிடம் - பூதம்;

இசைத்தல் - பாடுதல்;

பார்த்தற்கு - 1. பார்த்தனுக்கு; 2. காண்பதற்கு; (பார்த்தல் - காணுதல்; அறிதல்);


காட்டிடைப் பாரிடம் பாட்டு இசைக்க ஆடியை - சுடுகாட்டில் பூதங்கள் பாடத் திருநடம் செய்பவனை; (அப்பர் தேவாரம் - 4.67.4 - "காட்டிடை அரங்கமாக ஆடிய கடவுளே");

மின் காட்டு இடைப் பாவை கணவனை - மின்னல் போன்ற இடை உடைய உமைக்குக் கணவனை; (அப்பர் தேவாரம் - 6.76.3 - "மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண்" - "மின்னலைத் தன்னிடத்தே காட்டும்" என்பது சொற்பொருளாயினும், "காட்டும்" என்பது உவம உருபேயாம்);

காட்டிடைப் பார்த்தற்கு அருள்செய் பசுபதியை - காட்டில் அருச்சுனனுக்கு (பாசுபதாஸ்திரம்) அருளிய பசுபதியை;

மால் அயனால் பார்த்தற்கு அரியானைப் பாடு - விஷ்ணு பிரமன் இவர்களால் காண்பதற்கு அரியவனைப் பாடுவாயாக; (மனமே என்ற விளியை வருவித்துக்கொள்க);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்) - சுடலையில் இருளினில்

07.23 – முதுகுன்றம் (விருத்தாசலம்)

2016-01-23

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------

(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - திருவிராகம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது)


1)

சுடலையில் இருளினில் நடமிடு கழலினன்

இடைமெலி மலைமகள் இடமுறை எழிலினன்

அடலெரு தமரரன் அழகிய மதியொடு

படவர வணியிறை பதிபழ மலையே.


சுடலையில் இருளினில் நடம் இடு கழலினன் - சுடுகாட்டில் நள்ளிருளில் திருநடம் செய்யும் திருவடியினன்;

இடை மெலி மலைமகள் இடம் உறை எழிலினன் - மெலிந்த இடையை உடைய உமாதேவி இடப்பக்கம் உறையும் அழகிய திருமேனி உடையவன்;

அடல் எருது அமர் அரன் - வலிய இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஹரன்; (அடல் - வலிமை);

அழகிய மதியொடு பட-அரவு அணி இறை பதி பழமலையே - அழகிய சந்திரனையும் படம் உடைய நாகத்தையும் அணியும் இறைவன் உறையும் தலம் திருமுதுகுன்றம்; (பதி - உறைவிடம்; ஊர்); (பழமலை - முதுகுன்றம் - விருத்தாசலம்);


2)

துன்னிய மலர்கொடு துணையடி தொழுமவர்

நன்னிலை பெறவருள் அரனிமை யவர்பதி

சென்னியில் அணிமதி திரைநதி குரவொடு

பன்னகம் அணியிறை பதிபழ மலையே.


துன்னிய மலர்கொடு துணையடி தொழும்அவர் நன்னிலை பெற அருள் அரன் - நெருங்கத் தொடுத்த மலர்களால் இருதிருவடிகளைத் தொழும் பக்தர்கள் நற்கதி பெற அருளும் ஹரன்; (துன்னுதல் - செறிதல்);

இமையவர் பதி - தேவர்கள் தலைவன்; (பதி - தலைவன்);

சென்னியில் அணி மதி, திரை நதி, குரவொடு பன்னகம் அணி இறை பதி பழமலையே - திருமுடிமேல் அழகிய திங்கள், அலையுடைய கங்கை, குரா மலர் இவற்றோடு பாம்பையும் பூணும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (அணி - அழகிய); (திரை - அலை); (குரவு - குராமலர்); (பன்னகம் - பாம்பு);


3)

சாந்தலர் மணமலி தமிழ்கொடு தொழவினை

மாய்ந்துயர் கதிபெற வரமருள் இனியவன்

ஏந்திழை இடமமர் எழிலவன் நிலவொடு

பாந்தளும் அணியிறை பதிபழ மலையே.


சாந்து, அலர், மணம் மலி தமிழ்கொடு தொழ - சந்தனம், பூக்கள், மணமிக்க தமிழ்ப்பாமாலைகள் இவற்றால் வணங்கினால்; (சாந்து - கலவைச்சந்தனம் - Sandal paste); (அலர் - பூ); (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

வினை மாய்ந்து உயர் கதி பெற வரம் அருள் இனியவன் - அவ்வடியவர்களுடைய வினைகள் அழிந்து அவர்கள் சிவலோகம் அடைய வரம் அருளும் இனியவன்;

ஏந்திழை இடம் அமர் எழிலவன் - உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பிய அழகன்; (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.110.5 - "கரியுரி போர்த்துகந்த எழிலவன்");

நிலவொடு பாந்தளும் அணி இறை பதி பழமலையே - சந்திரனையும் பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பாந்தள் - பாம்பு);


4)

அடைவது சுதையென அலைகடல் கடையவும்

விடமெழ வெருவிய சுரரடி தொழுதெழ

உடனொரு மணியென மிடறிடு பரனதி

படர்சடை அணியிறை பதிபழ மலையே.


அடைவது சுதை என அலைகடல் கடையவும் விடம் எழ - அமுதத்தை அடைவோம் என்று எண்ணிக் கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றவும்; (சுதை - அமுதம்); (அலைகடல் - அலைக்கின்ற கடல்);

வெருவிய சுரர் அடி தொழுதெழ - அஞ்சிய தேவர்கள் ஈசன் திருவடியை வணங்கவும்; (வெருவுதல் - அஞ்சுதல்); (சுரர் - தேவர்கள்);

உடன் ஒரு மணி என மிடறு இடு பரன் -உடனே அவ்விடத்தை உண்டு ஒப்பற்ற நீலமணி போலக் கண்டத்தில் இட்ட பரமன்;

நதி படர்சடை அணி இறை பதி பழமலையே - கங்கையைப் படரும் சடையில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்;


5)

கையினில் உழைமழு கனலெரி யிவைதரி

செய்யவன் ஒருவிடை திகழ்கொடி உடையவன்

மையணி மிடறினன் வளர்மதி அதனொடு

பையர வணியிறை பதிபழ மலையே.


கையினில் உழை, மழு, கனல்-ரி இவை தரி செய்யவன் - கையில் மான், மழு, ஒளி வீசும் நெருப்பு இவற்றைத் தாங்கும் செம்மேனியன்; (உழை - மான்); (கனல் எரி - கனல்கின்ற தீ); (செய் - சிவப்பு); (அப்பர் தேவாரம் - 4.37.5 - "காடிட மாக நின்று கனலெரி கையில் ஏந்திப்");

ஒரு விடை திகழ் கொடி உடையவன் - ஒப்பற்ற இடபக்கொடி உடையவன்;

மை அணி மிடறினன் - கறையை அணிந்த கண்டம் உடையவன்; (மை - கருநிறம்; கறை);

வளர்-மதி அதனொடு பை-அரவு அணி இறை பதி பழமலையே - இளம் திங்களையும் படம் உடைய பாம்பையும் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பை - பாம்பின் படம்);


6)

மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி

பணிபவர் அருவினை பறைதர அருள்பதி

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர்

பணிமுடி அணியிறை பதிபழ மலையே.


மணிமலர் மறைமொழி இவைகொடு மலரடி பணிபவர் அருவினை பறைதர அருள் பதி - அழகிய பூக்கள், வேதமந்திரங்கள் இவற்றால் மலர் போன்ற திருவடியைத் தொழும் அன்பர்களது அரிய வினைகளெல்லாம் அழிய அருளும் தலைவன்; (மணி - அழகு); (மறை - வேதம்); (பறைதல் - அழிதல்); (தருதல் - ஒரு துணைவினை); (பதி - தலைவன்);

துணிமதி அதனொடு சுழிநதி மணமலர் பணி முடி அணி இறை பதி பழமலையே - பிறைச்சந்திரனோடு சுழிகள் உடைய கங்கையையும் வாசமலர்களையும் நாகப்பாம்பையும் திருமுடியில் அணியும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துணிமதி - நிலாத்துண்டம்); (துணி - துண்டம்; துணிதல் - வெட்டுண்ணுதல்); (சுழி - நீர்ச்சுழி - Whirl, vortex, eddy); (சுழித்தல் - 2. To form whirlpools, eddies; நீர்ச்சுழியுண்டாதல்);(பணி - நாகம்); (பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம் - 12.20.56 - "துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்");


7)

காய்கணை கொடுதிரி புரமெரி சிலையினன்

ஆய்மலர் கொடுதொழும் அடியவர் அருவினை

மாய்தர அருளரன் மலைமகள் அவள்பதி

பாய்விடை அமரிறை பதிபழ மலையே.


காய்கணைகொடு திரிபுரம் எரி-சிலையினன் - எரிக்கும் அம்பினால் முப்புரங்களை எரித்த வில்லை உடையவன்; (காய்தல் - சுடுதல்; எரித்தல்; அழித்தல்); (கணை - அம்பு); (சிலை - வில்);

ஆய்மலர் கொடு தொழும் அடியவர் அருவினை மாய்தர அருள் அரன் - ஆய்ந்து எடுத்த சிறந்த பூக்களால் வணங்கும் பக்தர்களது அரிய வினைகள் அழிய அருளும் ஹரன்; (ஆய்தல் - தெரிந்தெடுத்தல் - To select, choose); (மாய்தர - மாய; தருதல் - ஒரு துணைவினை);

மலைமகள் அவள் பதி - உமாபதி; (பதி - தலைவன்; கணவன்); (அவள் - பகுதிப்பொருள்விகுதி);

பாய்விடை அமர் இறை பதி பழமலையே - பாய்ந்து செல்லக்கூடிய இடபத்தை ஊர்தியாக விரும்பிய இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பதி - தலம்);


8)

அருவரை எறிதச முகனழ நெரிதரு

திருவிரல் உடையவன் நிருபமன் அழிவிலன்

உருகிய மனமுடை அடியவர் இடர்துடை

பரிவுடை அரனுறை பதிபழ மலையே.


அருவரை எறி தசமுகன் அழ நெரிதரு திருவிரல் உடையவன் - கயிலாயமலையைப் பெயர்த்து வீச முயன்ற இராவணனை அவன் அழுமாறு நசுக்கிய திருவிரல் உடையவன்; (அரு வரை - அரிய மலை - கயிலாயமலை); (நெரித்தல் - நசுக்குதல்); (தருதல் - ஒரு துணைவினை) (சம்பந்தர் தேவாரம்- 1.125.8 - "கரமிரு பதுமுடி யொருபது முடையவன் உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை");

நிருபமன் - ஒப்பில்லாதவன்;

அழிவு இலன் - அழிவற்றவன்;

உருகிய மனம் உடை அடியவர் இடர் துடை பரிவு உடை அரன் உறை பதி பழமலையே - மனம் உருகும் அடியவர்களது துன்பங்களைத் தீர்க்கும் கருணை உடைய ஹரன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (துடைத்தல் - நீக்குதல்); (பரிவு - அன்பு; இரக்கம்);


9)

தரையகழ் அரியுயர் அயனிவர் தொழுமெரி

அரையினில் உரிவையும் அரவமும் அணியரன்

அரகர எனவனு தின(ம்)நினை பவர்மகிழ்

பரகதி தருமிறை பதிபழ மலையே.


தரை அகழ் அரி, உயர் அயன் இவர் தொழும் எரி - (அடிமுடி தேடி) நிலத்தை அகழ்ந்த திருமால், மேலே உயர்ந்த பிரமண் இவர்கள் இருவரும் வணங்கிய சோதி;

அரையினில் உரிவையும் அரவமும் அணி அரன் - அரையில் தோலும் பாம்பும் அணிந்த ஹரன்; (உரிவை - தோல்); (அரவம் - பாம்பு);

அரகர என அனுதினம் நினைபவர் மகிழ் பரகதி தரும் இறை பதி பழமலையே - அரகர என்று தினமும் நினைந்து வழிபடும் அன்பர்கள் விரும்புகின்ற பரகதியை அளிக்கும் இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (மகிழ்தல் - விரும்புதல்); (பரகதி - மேலான நிலை - முக்தி); (தினநினை - தினம் நினை; புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);


10)

கலிமிகு வழியுரை கசடர்கள் அறிகிலர்

மெலிவுறு மதிதனை முடிமிசை அணியரன்

ஒலிகழல் அடிதொழ உயர்வினை அருளிறை

பலிதிரி பரனுறை பதிபழ மலையே.


கலி மிகு வழி உரை கசடர்கள் அறிகிலர் - துன்பம் மிகுந்த மார்க்கங்களைச் சொல்கின்ற கீழோர் அறியமாட்டார்கள்; (கலி - துன்பம்; வஞ்சகம்); (கசடர் - குற்றமுள்ளவர்);

மெலிவுறு மதிதனை முடிமிசை அணி அரன் - தேய்ந்து வாடிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த ஹரன்; (மெலிதல் - உடல் மெலிதல்; வருந்துதல்);

ஒலி-கழல் அடி தொழ உயர்வினை அருள் இறை - ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியை வணங்கினால் உயர்வை அருளும் இறைவன்;

பலி திரி பரன் உறை பதி பழமலையே - பிச்சைக்கு உழலும் பரமன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (பலி - பிச்சை);


11)

வகைபல மலர்கொடு வழிபடும் அடியவர்

அகமகிழ் வுறவினை அறவருள் அரனடி

புகைமலர் கொடுசுரர் தொழவொரு நகைகொடு

பகைமதில் எரியிறை பதிபழ மலையே.


வகை பல மலர்கொடு வழிபடும் அடியவர் அகமகிழ்வு உற, வினை அற, அருள் அரன் - பலவகைப் பூக்களால் வழிபடும் அடியவர்கள் மனம் மகிழவும் அவர்கள் வினைகள் அழியவும் அருளும் ஹரன்;

அடி புகை மலர்கொடு சுரர் தொழ, ஒரு நகைகொடு பகை மதில் எரி இறை பதி பழமலையே - திருவடியைத் தூபத்தாலும் பூக்களாலும் தேவர்கள் போற்றவும் அவர்களுக்கு இரங்கி ஒரு சிரிப்பால் பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த இறைவன் உறையும் இடம் திருமுதுகுன்றம்; (புகை - நறும்புகை - தூபம்); (நகை - சிரிப்பு);


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு :

சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.


2) சம்பந்தர் தேவாரம் - 1.123.5 -

பிடியத னுருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர வருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------