Saturday, February 27, 2016

02.86 – கரிவலம்வந்தநல்லூர்

02.86 – கரிவலம்வந்தநல்லூர்

2013-05-11
கரிவலம்வந்தநல்லூர் (சங்கரன்கோவிலுக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் உள்ள தலம்)
----------------------------
(எழுசீர் விருத்தம் - 'விளம் மா விளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி")
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - வைத்தனன் தனக்கே)

1)
மறையவை நாலும் அங்கமோர் ஆறும்
.. வாய்மொழிந் தருளிய ஒருவன்
அறைகடல் அதனில் எழுவிடம் கண்ட
.. அமரர்கள் அஞ்சிவந் தேத்தக்
கறையணி கண்டன் பிறையணி பெம்மான்
.. கரிவலம் வந்தநல் லூரில்
உறைபவன் மடமான் உமையொரு பங்கன்
.. ஒண்கழல் உள்குமென் உளமே.



மடமான் உமை - இளைய மான் போலும் உமையம்மை;
ஒண் கழல் - ஒள்ளிய வீரக்கழலை அணிந்த திருவடி;
உள்குதல் - உள்ளுதல் - நினைதல்; இடைவிடாது நினைத்தல்;


மறைஅவை நாலும் அங்கம் ஓர் ஆறும் வாய்மொழிந்து அருளிய ஒருவன் - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பாடியருளிய, ஒப்பற்றவன்;
அறைகடல் அதனில் எழு விடம் கண்ட அமரர்கள் அஞ்சி வந்து ஏத்தக் கறை அணி கண்டன் - அலைமோதும் கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சிய தேவர்கள் வந்து போற்றவும் அவர்களுக்கு இரங்கிக் கண்டத்தில் கருமையை அணிந்தவன்;
பிறை அணி பெம்மான் - சந்திரனை அணிந்த பெருமான்;
கரிவலம்வந்தநல்லூரில் உறைபவன் - கரிவலம்வந்தநல்லூரில் எழுந்தருளியுள்ளவன்;
மட மான் உமை ஒரு பங்கன் ஒண் கழல் உள்கும் என் உளம் - இளமான் போன்ற உமையை ஒரு பங்கில் உடைய அப்பெருமானது ஒளியுடைய கழல் அணிந்த திருவடிகளை என் உள்ளம் எண்ணும்;



2)
தார்விட நாகம் சாந்தம்வெண் ணீறு
.. தலையொரு பரிகலம் ஆகப்
போர்விடை ஏறும் புனிதனைப் போற்றிப்
.. பூவிடு தேவரைக் காத்த
கார்விடக் கண்டன் கதிர்மதி முடியன்
.. கரிவலம் வந்தநல் லூரில்
மேவிடும் மடமான் உமையொரு பங்கன்
.. விரைகழல் உள்குமென் உளமே.



தார் - மாலை; (சம்பந்தர் தேவாரம் - 1.136.4 - "வாருறு மென்முலை ... தாருறு நல்லரவம் ... தருமபு ரம்பதியே.");
சாந்தம் - சந்தனம்;
பரிகலம் - உண்கலம் (Plate or eating vessel);
(கருவூர்த்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.15.2 - "பாந்தள்பூ ணாரம் பரிகலம் கபாலம் பட்டவர்த் தனம்எருது ... சாந்தமும் திருநீறு...);
கார்விடக் கண்டன் - கரிய விடம் திகழும் நீலகண்டன்;
விரைகழல் - மணம் கமழும் திருவடி;


தார் விட நாகம், சாந்தம் வெண்ணீறு, தலை ரு பரிகலம் ஆகப் - மாலையாக விஷப்பாம்பையும் சந்தனமாகத் திருநீற்றையும், உண்கலனாக ஒரு மண்டையோட்டையும் உடைய;
போர் விடை ஏறும் புனிதனைப் போற்றிப் பூ இடு தேவரைக் காத்த கார் விடக் கண்டன் - போர் செய்ய வல்ல இடபத்தின்மேல் ஏறும் தூயவனை வணங்கி மலர் இட்டு வழிபட்ட தேவர்களைக் காத்து அருளிய கரிய விடம் திகழ்கின்ற கண்டம் உடையவன்;
கதிர் மதி முடியன் - கதிர்கள் வீசும் சந்திரனைத் திருமுடிமேல் அணிந்தவன்;
கரிவலம்வந்தநல்லூரில் மேவிடும், மட மான் உமை ஒரு பங்கன் விரை கழல் உள்கும் என் உளம் - கரிவலம்வந்தநல்லூரில் விரும்பி உறைகின்ற, இளமான் போன்ற உமையை ஒரு பங்கில் உடைய அப்பெருமானது மணம் கமழும் கழல் அணிந்த திருவடிகளை என் உள்ளம் எண்ணும்;



3)
சென்னியிற் கங்கை செழுமதி சூடி
.. சிலையென மலையினை ஏந்தி
முன்னெயில் மூன்றைச் சுட்டவன் மூவா
.. முக்கணன் முப்புரி நூலன்
கன்னல்வில் ஏந்து காமனைக் காய்ந்தான்
.. கரிவலம் வந்தநல் லூரில்
இன்னருள் புரியும் ஏந்திழை பங்கன்
.. இணையடி உள்குமென் உளமே.



செழுமதி - அழகிய சந்திரன்;
சூடி - சூடியவன்;
சிலை - வில்;
எயில் மூன்று - முப்புரங்கள்;
மூவா - மூப்பு இல்லாத;
முப்புரி நூலன் - முப்புரி நூலை மார்பில் அணிந்தவன்;
கன்னல் வில் ஏந்து காமனைக் காய்ந்தான் - கரும்பினால் ஆன வில்லை ஏந்தும் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியவன்;
இன் அருள் - இனிய அருள்;
ஏந்திழை - பெண் (Woman beautifully decked with jewels) – உமையம்மை;



4)
ஒளித்தவன் கங்கைப் புனலினைச் சடையில்
.. உம்பர்கள் உண்பதற் கமுதை
அளித்தவன் ஆனஞ் சாடிய அண்ணல்
.. அருவிபோல் மும்மதம் பொழிந்த
களிற்றினை உரித்துப் போர்வையாக் கொண்டான்
.. கரிவலம் வந்தநல் லூரில்
களித்தவன் மடமான் காரிகை பங்கன்
.. கழலிணை உள்குமென் உளமே.



உம்பர் - தேவர்;
ஆனஞ்சு - ஆன் அஞ்சு - பஞ்சகவ்வியம் (பால், தயிர், நெய், முதலியன);
ஆடுதல் - அபிஷேகம் செய்யப்பெறுதல்;
களிறு - ஆண்யானை;
போர்வையாக் கொண்டான் - போர்வையாகக் கொண்டான்;
காரிகை - பெண் - உமையம்மை;
கழலிணை - கழல் இணை - இரு திருவடிகள்;

ஒளித்தவன் கங்கைப் புனலினைச் சடையில்; உம்பர்கள் உண்பதற்கு அமுதை அளித்தவன்; ஆன் அஞ்சு ஆடிய அண்ணல்; அருவிபோல் மும்மதம் பொழிந்த களிற்றினை உரித்துப் போர்வையாக் கொண்டான்; கரிவலம்வந்தநல்லூரில் களித்தவன்; மடமான் காரிகை பங்கன் கழல்இணை உள்கும் என் உளமே.



5)
சென்றடை அன்பர் தீவினை தீர்க்கும்
.. செய்யவன் திருநுத லிற்கண்
ஒன்றுடை ஐயன் ஓட்டினை ஏந்தி
.. உண்பலிக் கூர்தொறும் உழல்வான்
கன்றிய காலற் கடிந்தவன் கவினார்
.. கரிவலம் வந்தநல் லூரில்
நின்றவன் மடமான் நேரிழை பங்கன்
.. நீள்கழல் உள்குமென் உளமே.



செய்யவன் - சிவந்த திருமேனியன்;
நுதல் - நெற்றி;
உண்பலிக்கு ஊர்தொறும் உழல்வான் - பிச்சைக்காக ஊர்தோறும் திரிபவன்;
கன்றுதல் - சினத்தல்;
கடிதல் - அழித்தல்; விலக்குதல்;
கன்றிய காலற் கடிந்தவன் - மார்க்கண்டேயரிடம் சினத்தோடு வந்தடைந்த காலனை உதைத்தவன்;
(இலக்கணக் குறிப்பு :
காலற் கடிந்தவன் - 2-ஆம் வேற்றுமைத்தொகை - காலனைக் கடிந்தவன்;
ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து: #101 -
உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.)
கவின் ஆர் - அழகிய;
நின்றவன் - நீங்காது உறைபவன்;
நேரிழை - பெண் (Lady, as adorned with fine jewels) - உமையம்மை;
நீள் கழல் - நீண்ட கழல்கள் - அழிவில்லாத திருவடிகள்;


சென்று அடை அன்பர் தீவினை தீர்க்கும் செய்யவன்; திருநுதலில் கண் ஒன்றுடை ஐயன்; ஓட்டினை ஏந்தி உண்பலிக்கு ஓர்தொறும் உழல்வான்; கன்றிய காலற் கடிந்தவன்; கவின் ஆர் கரிவலம்வந்தநல்லூரில் நின்றவன்; மட மான் நேரிழை பங்கன் நீள் கழல் உள்கும் என் உளமே.



6)
வென்றிகொள் விடையன் கானிடைக் கரிய
.. வேட்டுவ உருவினிற் சென்று
பன்றியை எய்து பார்த்தனுக் கருளும்
.. பால்வண நாதனோர் கலைமான்
கன்றினை ஏந்தி மன்றினில் ஆடி
.. கரிவலம் வந்தநல் லூரில்
நின்றவன் மடமான் நேரிழை பங்கன்
.. நீள்கழல் உள்குமென் உளமே.



வென்றி - வெற்றி;
பால்வணநாதன் - பால்வண்ணநாதன் - இத்தலத்து ஈசன் திருநாமம்;
ஓர் கலைமான் கன்றினை ஏந்தி - ஒரு மான் கன்றைக் கையில் ஏந்துபவன்;
மன்றினில் ஆடி - சபையில் கூத்து இயற்றுபவன்;


வென்றிகொள் விடையன் - வெற்றியுடைய இடபவாகனன்;
கானிடைக் கரிய வேட்டுவ உருவினிற் சென்று பன்றியை எய்து பார்த்தனுக்கு அருளும் பால்வண நாதன் - காட்டிடையே கரிய நிறத்து வேடன் வடிவில் போய், ஒரு பன்றியை அம்பால் எய்து, அருச்சுனனுக்கு அருள்புரிந்த பால்வண்ணநாதன்;
ர் கலைமான் கன்றினை ஏந்தி - கையில் ஒரு ஆன்மான் கன்றை ஏந்தியவன்;
மன்றினில் ஆடி - அம்பலத்தில் ஆடுபவன்;
கரிவலம்வந்தநல்லூரில் நின்றவன் - கரிவலம்வந்தநல்லூரில் நீங்காது உறைபவன்;
மட மான் நேரிழை பங்கன் நீள் கழல் உள்கும் என் உளம் - .இளமான் போன்ற உமையை ஒரு பங்கில் உடைய அப்பெருமானது அழிவற்ற கழல் அணிந்த திருவடிகளை என் உள்ளம் எண்ணும்;



7)
இலைநுனை வேலன் மிடற்றினில் நீலன்
.. இடுபலிக் கேந்துக பாலன்
மலையொரு வில்லன் வஞ்சனை இல்லன்
.. வணங்கடி யார்க்கருள் நல்லன்
கலையமர் கையன் கனலன செய்யன்
.. கரிவலம் வந்தநல் லூரில்
நிலையினன் மடமான் நேரிழை பங்கன்
.. நீள்கழல் உள்குமென் உளமே.



இலை நுனை வேலன் - இலை போன்ற நுனியையுடைய திரிசூலத்தை ஏந்தியவன்;
மிடற்றினில் நீலன் - கண்டத்தில் நீலம் திகழ்பவன்;
இடுபலிக்கு ஏந்து கபாலன் - பிச்சைக்குப் பிரமகபாலத்தை ஏந்துபவன்;
மலை ஒரு வில்லன் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
வஞ்சனை இல்லன் - வஞ்சனை அற்றவன்;
வணங்கு அடியார்க்கு அருள் நல்லன் - தொழும் பக்தர்களுக்கு அருளும் நல்லவன்;
கலை அமர் கையன் - மானை ஏந்திய கையினன்;
கனல் அன செய்யன் - தீப்போல் சிவந்த திருமேனியன்;
கரிவலம்வந்தநல்லூரில் நிலையினன் - கரிவலம்வந்தநல்லூரில் நீங்காது உறைபவன்;
மடமான் நேரிழை பங்கன் - இளம் மான் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவன்;
நீள் கழல் உள்கும் என் உளமே - அப்பெருமானின் நீண்ட திருவடிகளை (அழிவில்லாத திருவடிகளை) என் மனம் நினையும்.


(திருப்புகழ் - திருவொற்றியூர் - "கரிய முகில் போலும் .... சிரகரக பாலர் அரிவையொரு பாகர் ..." - ... பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியைத் தமது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும்...);



8)
பொருப்பினை அசைத்த தசமுகன் தன்னைப்
.. பூவன விரலினால் அடர்த்தான்
நெருப்பன வண்ணன் நீள்சடை அண்ணல்
.. நெருங்கிவந் தலர்க்கணை எய்த
கருப்புவில் லானைக் காய்ந்தமுக் கண்ணன்
.. கரிவலம் வந்தநல் லூரில்
இருப்பவன் மடமான் ஏந்திழை பங்கன்
.. இணையடி உள்குமென் உளமே.



பொருப்பு - மலை; இங்கே கயிலைமலை;
தசமுகன் - பத்துத்தலைகளை உடைய இராவணன்;
பூ அன விரல் - மலர் போன்ற மென்மையான விரல்; (சம்பந்தர் தேவாரம் - 2.80.8 - "செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற் கற்குன்றடர்த்த பெருமான்");
நெருப்பு அன வண்ணன் - தீப்போற் சிவந்த திருமேனியன்;
அலர்க்கணை - மலர் அம்பு;
கருப்புவில்லான் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதன்;



9)
அரியவ னல்லன் அடியவர்க் கெளியன்
.. அரியயன் நேடவு யர்ந்த
எரியவன் முடிமேல் இளம்பிறை புனைந்த
.. எழிலினன் இமையவர் போற்றும்
கரியவன் கண்டம் கலைதரி கையன்
.. கரிவலம் வந்தநல் லூரிற்
பெரியவன் மடமான் பேதையோர் பங்கன்
.. பெய்கழல் உள்குமென் உளமே.



அரியவனல்லன் = 1) அரியவன் நல்லன்; 2) அரியவன் அல்லன்;
அடியவர்க்கு எளியன் - அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்;
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்");
அரியன் நேடயர்ந்த எரிவன் - திருமாலும் பிரமனும் தேடுமாறு ஓங்கிய சோதி;
இமையவர் - தேவர்கள்;
கரியவன் கண்டம் - கண்டம் கரியவன் - நீலகண்டன்;
கலை தரி கையன் - கையில் மானை ஏந்தியவன்;
பேதை - பெண் - உமையம்மை;
பெய்கழல் - கட்டப்பட்ட கழலையுடைய திருவடி; (பெய்தல் - அணிதல் - To put on, as harness; to wear, as jewels, cloths, flowers);



10)
இரவினை ஒத்த இருள்மலி நெஞ்சர்
.. இயம்பிடும் பொய்ந்நெறி எல்லாம்
நரகினில் ஆழ்த்தும் ஆதலால் நயவார்
.. நல்லறி வுடையவர் தீயைக்
கரதலம் ஏந்திக் கானிடை ஆடி
.. கரிவலம் வந்தநல் லூரில்
மரகதக் கொடிபோல் மாதொரு பங்கன்
.. மலரடி உள்குமென் உளமே.



இருள்மலி நெஞ்சர் இயம்பிடும் பொய்ந்நெறி எல்லாம் - மனத்தில் கருமையே மிகுந்த வஞ்சகர்கள் சொல்கின்ற பொய்ச்சமயங்கள் எல்லாம்;
நயவார் நல்லறிவு உடையவர் - அவற்றை நல்லறிவு உடையவர்கள் விரும்பமாட்டார்கள்;
கரதலம் - கைத்தலம் - கை;
கானிடை ஆடி - சுடுகாட்டில் ஆடுபவன்;
மரகதக் கொடிபோல் மாது - மரகதக் கொடி போன்ற உமாதேவி; (மரகதவல்லி - பார்வதி);
(பெரியபுராணம் - "வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் ....");
("..கொடிபோல் மாது" - இத்தகைய "போல்" பிரயோக உதாரணம்:
11.37 - ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை - 45
"ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார்" - கலை வன்மையால் நாமகளை ஒத்தும், கற்பின் சிறப்பால் அருந்ததியை ஒத்தும் உள்ளார் என்க)



11)
ஒருமணி ஒலித்த ஆவினுக் காக
.. உடன்மகன் தனைஒறு மனுவுக்
கருள்மணி ஆரூர் அமர்ந்தவன் நஞ்சுக்
.. கஞ்சிய உம்பரைக் காத்த
கருமணி கண்டன் கண்ணமர் நுதலன்
.. கரிவலம் வந்தநல் லூரில்
அருமணி மடமான் அரிவையோர் பங்கன்
.. அடியிணை உள்குமென் உளமே.



ஒறுத்தல் - தண்டித்தல்;
மணி - கண்டை (Bell; gong); அழகு; நீலமணி; சிறந்தது;
அரிவை - பெண்;


ஒரு மணி ஒலித்த ஆவினுக்காக உடன் மகன்தனை ஒறு மனுவுக்கு அருள் மணி ஆரூர் அமர்ந்தவன் - ஆராய்ச்சி மணியை அடித்த பசுவிற்கு நீதி வழங்குவதற்காகச் சற்றும் தயங்காமல் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுத் தண்டித்த மனுநீதிச்சோழனுக்கு அருள்புரிந்த, அழகிய திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமான்;
நஞ்சுக்கு அஞ்சிய உம்பரைக் காத்த கரு மணி கண்டன் - ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சி வந்து வணங்கிய தேவர்களைக் காத்த நீலமணிகண்டன்;
கண் அமர் நுதலன் - நெற்றிக்கண்ணன்;
கரிவலம்வந்தநல்லூரில் அரு மணி - கரிவலம்வந்தநல்லூரில் உறையும் அரிய மணி போல்பவன்;
மடமான் அரிவையோர் பங்கன் - இள மான் போன்ற உமையம்மையை ஒரு பங்காக உடையவன்;
அடியிணை உள்கும் என் உளமே - அப்பெருமானின் இரு திருவடிகளை என் உள்ளம் நினையும்.


(பெரிய புராணம் -
பொன்தயங்கு மதிலாரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத் திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை ஏழுலகும் எடுத்தேத்தும். )



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment