Saturday, February 20, 2016

02.80 – விரிஞ்சிபுரம்

02.80 – விரிஞ்சிபுரம்



2013-03-17
விரிஞ்சிபுரம் ( இத்தலம் வேலூர் அருகே உள்ளது)
------------------
(சந்த வஞ்சிவிருத்தம் - தானன தானன தானதனா - 'விளம் விளம் காய்' என்ற அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.112.1 - "இன்குர லிசைகெழும் யாழ்முரலத்")



1)
வெண்ணிற விடைதிகழ் வெல்கொடியான்
விண்ணுயர் மதிலணி விரிஞ்சையமர்
கண்ணுதல் கழலிணை கருதிடுவார்
பண்ணிய பழவினை பற்றறுமே.



வெண்ணிற விடைதிகழ் வெல்கொடியான் - வெள்ளை இடபச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவன்;
விண்யர் மதில் அணி - வானளாவும் உயர்ந்த மதிலை உடைய;
விரிஞ்சை அமர் கண்ணுதல் - விரிஞ்சிபுரத்தில் விரும்பி உறைகின்ற நெற்றிக்கண்ணன்;
ழல் இணை கருதிடுவார் - இருதிருவடிகளை விரும்பித் தொழும் அடியவர்கள்;
பண்ணிய பழவினை பற்று அறுமே - முன்செய்த வினைகள் எல்லாம் அழியும்;



2)
புரிசடை மேலணி போழ்மதியன்
விரிபொழில் சூழ்தரு விரிஞ்சையமர்
கரியுரி மூடியைக் கைதொழுவார்
எரிவினை தீர்ந்துயர் வெய்துவரே.



புரிசடை - முறுக்குடைய சடை;
அணி போழ் மதி - அழகிய, பிளவுபட்ட திங்கள் - அழகிய பிறைச்சந்திரன்;
சூழ்தரு - சூழ்ந்த; (தருதல் - ஒரு துணைவினை);
கரி உரி மூடி - ஆனைத்தோலைப் போர்த்தவன்;
எரி வினை - எரிக்கும் வினை - தகிக்கும் தீவினை;



3)
விண்மதி தொடுமதில் விரிஞ்சையமர்
தண்மதி சூடியின் தாளிணையைப்
பண்பொதி தமிழ்கொடு பரவிடினே
மண்மதி வாழ்வது வாய்த்திடுமே.






விண்மதி தொடு மதில் விரிஞ்சை - வானில் உலவும் திங்கள் தீண்டுமாறு உயர்ந்த மதிலை உடைய விரிஞ்சிபுரம்;
தண்மதி சூடி - குளிர்ந்த திங்களைச் சூடியவன்;
பண் பொதி தமிழ் - இசைத்தமிழான தேவாரம்;
பரவிடின் - பரவினால் - துதித்தால்; (பரவுதல் - துதித்தல்; புகழ்தல்);
மண் மதி வாழ்வது வாய்த்திடும் - இந்த உலகமே மதிக்கின்றபடி சிறந்த புகழ்மிக்க வாழ்க்கை அமையும்; (வாழ்வது என்பதில் 'அது' - பகுதிப்பொருள்விகுதி - Expletive suffix; suffix added on to a word without changing its sense);



4)
மாதமர் மேனியன் வழித்துணைவன்
வேதனுக் கருள்புரி விரிஞ்சையமர்
நாதனின் நற்கழல் நச்சிடுவார்
வேதனை தரும்பழ வினையிலரே.



மாது அமர் மேனியன் - அர்த்தநாரீஸ்வரன்;
வழித்துணைவன் - இத்தலத்து இறைவன் திருநாமம் - வழித்துணைநாதர் / மார்க்கபந்தீஸ்வரர்;
வேதன் - பிரமன்; (பிரமனுக்கு ஈசன் அருள்புரிந்ததைத் தலபுராணத்திற் காண்க);
நச்சுதல் - விரும்புதல்;



5)
வெல்லரும் மென்சரம் ஏவுமிக்கு
வில்லியைக் காய்ந்தவன் விரிஞ்சையமர்
நல்லவன் கழலிணை நாளுமெண்ண
வல்லவர் வல்வினை வற்றிடுமே.



வெல்லரும் மென் சரம் ஏவும் - வெல்ல அரிய மென்மையான மலர்க்கணை ஏவும்;
இக்கு வில்லியைக் காய்ந்தவன் - கருப்புவில்லை ஏந்தும் மன்மதனை எரித்தவன்; (இக்கு - இக்ஷு - கரும்பு);



6)
பாலனைக் கொன்றிடப் பாய்ந்துவந்த
காலனைக் கடிந்தவன் விரிஞ்சையமர்
சூலனைத் தொழுதெழும் தொண்டரவர்
பாலணை யாதறும் பழவினையே.



பாலன் - மார்க்கண்டேயர்;
காலனைக் கடிந்தவன் - கூற்றுவனைச் சினந்து உதைத்தவன்;
சூலன் - சூலபாணி;
தொண்டர் அவர்பால் அணையாது அறும் பழவினையே - பக்தர்களிடம் பழவினை நெருங்காது தீர்ந்துவிடும்;



7)
எண்ணிய உருவினை ஏற்றருள்வான்
வெண்ணகை யாளொடு விரிஞ்சையமர்
அண்ணலின் அடிதொழும் அடியவரின்
திண்ணிய தீவினை தேய்ந்தறுமே.



எண்ணிய உருவினை ஏற்றருள்வான் - பக்தர்கள் எண்ணிய வடிவினை ஏற்று அருள்புரிவான்;
வெண்ணகையாள் - உமையம்மை;
திண்ணிய தீவினை தேய்ந்து அறும் - வலிய தீவினைகள் தேய்ந்து கெடும்;


(சேரமான் பெருமாள் அருளிய திருக்கைலாய ஞான உலா - 11.8.7 & 8 -
"எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் ....... "
-- எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடை யறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான். இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் …)


8)
வரையசை அரக்கனின் வலியழித்தான்
விரைமலி பொழிலணி விரிஞ்சையமர்
திரைமலி செஞ்சடைச் சிவனடியை
உரைசெயும் அன்பருக் குயர்கதியே.



வரை அசை அரக்கனின் வலி அழித்தான் - கயிலைமலையை அசைத்த இராவணனின் பலத்தை அழித்தவன்;
விரை மலி பொழில் அணி விரிஞ்சை அமர் - மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும்;
திரை மலி செஞ்சடைச் சிவன் அடியை - கங்கையின் அலை மிகும் சிவந்த சடையை உடைய சிவபெருமான் திருவடியை;
உரைசெயும் அன்பருக்கு உயர்கதியே - புகழ்ந்து போற்றும் பக்தர்கள் உயர்ந்த கதி பெறுவர்.



9)
மாலயன் மண்ணிலும் வானிலும்போய்
மேலடி காண்கிலர் விரிஞ்சையமர்
ஆலனை அருவிடம் ஆர்ந்தகண்ட
நீலனைத் தொழவுயர் நிலைவருமே.



மால் அயன் - திருமாலும் பிரமனும்;
மேல் அடி - அடியும் முடியும்; (எதிர்நிரல்நிரையாக வந்தது)
ஆலன் - கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தவன்;
அரு விடம் ஆர்ந்த கண்ட நீலன் - கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;


(அப்பர் தேவாரம் - 5.72.4 -
"நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல்
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர்
நீலன்..." ;
கண்டத்து அமர் நீலன் - கழுத்திலே பொருந்திய நீலநிறத்தை உடையவன்.)



10)
பொய்திகழ் புன்வழிப் போதனைகள்
மெய்யல மேன்மைகொள் விரிஞ்சையமர்
செய்யவன் சேவகன் சேவமரும்
சைவனின் தாள்தொழத் தளையறுமே.



புன்வழி - புன்னெறி - பொய்ச்சமயங்கள்; தீநெறி;
மெய் அல - உண்மை அல்ல;
செய்யவன் - செம்மேனியன்;
சேவகன் - வீரன்;
சே அமரும் சைவன் - இடப வாகனத்தை உடைய சிவபெருமான்;
தளை - வினைக்கட்டு;



11)
படமணி பாம்பொடு பனிமதிசேர்
இடமணி சடையென இருப்பவனோர்
விடமணி மிடறினன் விரிஞ்சையமர்
நடமணி அடிதொழ நலிவிலையே.



பதம் பிரித்து:
படம் அணி பாம்பொடு பனிமதி சேர்
இடம், அணி சடை என இருப்பவன்; ஓர்
விட மணி மிடறினன்; விரிஞ்சை அமர்
நட மணி அடி தொழ நலிவு இலையே.


ஓர் - ஒரு; ("ஓர் - நினை; சிந்தி;" என்று ஏவல் வினையாகவும் கொள்ளலாம்);
நட மணி - நடம் செய்யும் மணி போன்றவன் - நடனசிகாமணி - நடராஜன்;
நலிவு - துன்பம்;


படம் உடைய நாகப்பாம்பும் குளிச்சி பொருந்திய திங்களும் சேரும் இடம் தன் அழகிய சடை என்று இருப்பவன்; விஷம் ஒரு நீலமணியாகத் திகழும் கண்டத்தை உடையவன்; விரிஞ்சிபுரத்தில் உறையும் கூத்தன்; அப்பெருமான் திருவடியைத் தொழுதால், துன்பம் இல்லை.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்;
'விளம் விளம் காய்' என்ற அமைப்பு ;
2) சம்பந்தர் தேவாரம் - 1.113.1 -
"எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.")
3) விரிஞ்சிபுரம் - மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=828

-------------- --------------

No comments:

Post a Comment