Saturday, February 20, 2016

02.81 – குற்றாலம்

02.81 – குற்றாலம்



2013-03-29
குற்றாலம்
--------------
(வஞ்சித்துறை (திருவிருக்குக்குறள் அமைப்பில்) - 'மா மாங்காய்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.1 - "நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை")



1)
துளியோர் மணியாக
ஒளிர்மா மிடறானூர்
குளிரார் குற்றாலம்
அளியோ டடைநெஞ்சே.



துளி - விடம்; (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்...");
மா மிடறான் - அழகிய கண்டத்தை உடையவன்;
குளிர் ஆர் குற்றாலம் - குளிர்ச்சி பொருந்திய குற்றாலம்;
அளி - அன்பு;


ஆலகால விஷம் நீலமணியாக ஒளிர்கிற அழகிய நீலகண்டத்தை உடைய சிவபெருமான் உறையும் தலமான, குளிர்ச்சி பொருந்திய குற்றாலத்தை அன்போடு அடை மனமே.



2)
ஓடுண் கலனாகும்
வேடன் பதிசாரல்
கூடும் குற்றாலம்
நாடு மடநெஞ்சே.



ஓடு உண் கலன் ஆகும் - பிரமனின் மண்டையோடே பிச்சைப்பாத்திரம் ஆகும்;
வேடன் - வேடத்தை உடையவன்; (வேடம் - திருவுருவம்;)
பதி - தலம்;
சாரல் - மலையில் மேகங்கட்டிப் பெய்யுந் தூற்றல் (Drizzling rain from clouds gathering on hill-tops);


பிரமன் மண்டையோடே பிச்சைப்பாத்திரமாகும் திருவுருவம் உடையவன் தலமான, சாரல் மிகுந்த குற்றாலத்தை விரும்பி அடை பேதைமனமே.



3)
குறைவில் குற்றாலம்
உறையும் உமைபங்கன்
கறைகொள் கண்டன்தாள்
மறவல் மடநெஞ்சே.



குறைவு இல் குற்றாலம் - குற்றமற்ற குற்றாலம்; வளங்கள் பொருந்திய குற்றாலம்;
மறவல் - மறவாதே; (அல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);



4)
தீர்த்தன் முடிமீது
கோத்த தலைமாலைக்
கூத்தன் குற்றாலம்
ஏத்தி இருநெஞ்சே.



தீர்த்தன் - புனிதன்; தூயவன்;
'முடிமீது' என்ற சொல்லை இருபுறமும் இயைத்தும் பொருள்கொள்ளலாம். 'முடிமீது தீர்த்தன்' - முடிமேல் கங்கையை உடையவன்;
முடிமீது கோத்த தலைமாலைக் கூத்தன் - தலைக்குத் தலைமாலை அணிந்த கூத்தன்;



5)
ஆவின் மிசையூரும்
தேவின் புகழ்புட்கள்
கூவும் குற்றாலம்
மேவு மடநெஞ்சே.



- இடபம்;
மிசை - மேல் (ஏழாம் வேற்றுமை உருபு);
ஊர்தல் - ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்;
தே - தெய்வம்;
புட்கள் = பறவைகள்;
மேவுதல் - அடைதல்; விரும்புதல்; பொருந்துதல்;


இடபவாகனத்தை உடைய தெய்வமான சிவபெருமானின் புகழைப் பறவைகள் கூவும் குற்றாலத்தைப் பொருந்து பேதைமனமே.



6)
மலையாள் மணவாளன்
அலையார் சடையான்பூங்
குலையார் குற்றாலம்
நிலையா நினைநெஞ்சே.



மலையாள் - இமாசலகுமாரியான உமாதேவியார். 'மலையான் மருகா' என ஆண்பாலில் வந்துள்ளதுபோலப் பெண்பாலில் மலையாள் என வந்தது.
(2.73.4 - "மாமலையாள் கணவன்மகிழ் வெங்குரு");
பூங்குலை - பூங்கொத்து;
நிலையா - நிலையாக - (கடைக்குறை விகாரம்); (நிலை - உறுதி - Firmness, fixedness, stability, permanence, durability);
(சம்பந்தர் தேவாரம் - 1.83.8 - "....சூலப் படையான் கழனாளும் நிலையா நினைவார்மே னில்லா வினைதானே" - சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா);


பார்வதி மணாளன், கங்கைச்சடையான் உறையும் தலமான, பூங்கொத்துகள் நிறைந்த குற்றாலத்தை என்றும் நிலையாக நினைவாய் மனமே.



7)
நிலவு புனல்நாகம்
உலவும் சடையான்வான்
குலவும் குற்றாலம்
சொலவும் துயர்வீடே



வான் - மேகம்; அழகு;
குலவுதல் - உலவுதல்; விளங்குதல்;
சொலவும் - சொல்லவும்; சொல்ல உம்;
சொல்லுதல் - புகழ்தல்;
வீடு - நீக்கம்; விடுதல்; முடிவு;


பிறைச்சந்திரன், கங்கை, பாம்பு இவை உலாவும் சடையை உடையவன் உறையும் தலமான, மேகம் வந்து உலவும் குற்றாலத்தைப் புகழ்ந்து உரைத்தால் துயர்கள் நீங்கும்;


(குற்றாலம் சொல உம் துயர் வீடே - 'குற்றாலம் என்று சொன்னால் உங்கள் துயர்கள் நீங்கும்' என்றும் பொருள்கொள்ளலாம்).


(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.9.10 - திருஅங்கமாலை -
"உற்றா ராருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.");



8)
விலங்கல் அசைத்தாற்கும்
நலங்கள் அருள்வான்பூக்
குலுங்கும் குற்றாலம்
வலங்கொள் வருமின்பே.



விலங்கல் - மலை; இங்கே, கயிலைமலை;
அசைத்தாற்கும் - அசைத்தான்+கு+உம் - அசைத்தவனுக்கும் - இராவணனுக்கும்;
நலங்கள் - வரங்கள் - வாழ்நாள், வாள், முதலியன;
குலுங்குதல் - அசைதல்; நிறைதல்;
வலங்கொள் - பிரதட்சிணம் செய்து வணங்கு; (வலங்கொள்ளுதல் - பிரதட்சிணம் செய்தல்);
(அப்பர் தேவாரம் - 5.80.10 - "...அன்பிலா லந்துறை வலங்கொள் வாரைவா னோர்வலங் கொள்வரே." -- வலங்கொள்வாரை - வலமாகச் சுற்றி வணங்குவாரை);


கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுக்கும் வரங்கள் அருள்புரிந்த சிவபெருமான் உறையும், பூக்கள் தென்றலில் அசைகின்ற (பூக்கள் நிறைந்த) குற்றாலத்தை வலம்செய்து வணங்குவாயாக. அப்படிச் செய்தால் இன்பமே வரும்.



9)
விரையார் மலரான்மால்
அரையா எனுஞ்சோதி
குரையார் குற்றாலம்
உரையாய் உயர்வாமே.



விரை ஆர் மலரான் மால் - வாசத் தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்;
அரையா - அரசனே;
குரை ஆர் - ஒலி பொருந்திய; ஒலி மிகுந்த;


வாசத் தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் (அடிமுடி தேடி) "அரசனே" என்று போற்றச் சோதியாய் நின்றவன் உறையும், (அருவி, மக்கள் இவர்களின்) ஒலி நிறைந்த குற்றாலத்தைப் போற்றிப் பாட, உயர்கதி ஆகும்.



10)
பழிசொல் மதிகேடர்
மொழிவிட் டொழிமுக்கட்
குழகன் குற்றாலம்
தொழநற் கதிதானே.



மதிகேடர் - நல்லறிவில்லாதவர்கள்;
மொழி விட்டொழி - சொல்லை நீங்குவாயாக;
முக்கட்குழகன் = முக்கண்+குழகன் = மூன்று கண்களை உடைய அழகன் - சிவபெருமான்;



11)
பொன்றாப் புகழான்மான்
கன்றோர் கரன்சாரல்
குன்றாக் குற்றாலம்
சென்றால் தெளிவாமே.



பொன்றுதல் - அழிதல்; இறத்தல்;


அழியாப் புகழ் உடையவன் / என்றும் இறத்தல் என்பது இல்லாத புகழ் உடையவன்; மான் கன்றை ஒரு கையில் தாங்கியவன்; அப்பெருமான் உறையும் தலமான, எப்போதும் சாரல் வீசும் குற்றாலத்தைச் சென்றடைந்தால் சித்தத் தெளிவு உண்டாகும்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • தேவாரத்தில் உள்ள திருவிருக்குக்குறள் அமைப்பை ஒட்டியது.
  • தமிழ் யாப்பிலக்கணத்தில் "வஞ்சித்துறை";
  • இப்பதிகத்தில் "மா மாங்காய்" என்ற வாய்பாடு பயில்கின்றது.



2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
  • நான்கு அடிகள்; ஒவ்வோர் அடியிலும் இரண்டு சீர்கள் - (குறளடி நான்கு);
  • எவ்வித வாய்பாட்டிலும் இருக்கலாம். (வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்);
  • சம்பந்தர் தேவாரம் - 1.93.6 -
மொய்யார் முதுகுன்றில்
ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச்
செய்யாள் அணியாளே.



3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html
4) திருக்குற்றாலம் - குற்றாலநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=601
குற்றாலம் / குறும்பலா - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=103

-------------- --------------

No comments:

Post a Comment