Saturday, February 6, 2016

02.71 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)

02.71 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)



2012-12-30
திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
--------------------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - “சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை)



1)
எண்டோள் ஈசன் இமையவர் தானவர்
பண்டோர் பாற்கடல் மத்திட வந்தநஞ்
சுண்டான் ஒப்பில் உமையாளை ஓர்பங்கு
கொண்டான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



எண் தோள் ஈசன் - எட்டுப் புஜங்களை உடைய ஈசன்; (எண்டோள் = எண் + தோள்);
இமையவர் தானவர் பண்டு ஓர் பாற்கடல் மத்திட வந்த நஞ்சு உண்டான் - தேவர்களும் அசுரர்களும் முற்காலத்தில் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விடத்தை உண்டவன்;
ஒப்பு இல் உமையாளை ஓர் பங்கு கொண்டான் - ஒப்பற்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்;
பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே - திருப்பாண்டிக்கொடுமுடியில் உறைகின்ற சிவபெருமான்;



2)
உமைக்கோர் பங்கினை ஈந்தவன் உம்பர்கோன்
கமைப்பாய் காவெனும் மாணி களித்திட
இமைப்போ திற்கழ லாலிருங் கூற்றினைக்
குமைத்தான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



உம்பர் கோன் - தேவர்கள் தலைவன்;
கமைப்பாய் - கமைப்பவனே - பொறுப்பவனே; (கமைத்தல் - பொறுத்தல் - To bear with, endure, forgive, pardon);
கா எனும் மாணி - "காத்தருளாய்" என்று தொழுத மார்க்கண்டேயர்;
இமைப்போது - இமைப்பொழுது - க்ஷணம் (Brief moment of time, as the twinkling of an eye);
கழலால் - கழல் அணிந்த திருவடியால்;
இருங்கூற்று - பெரிய கரிய கூற்றுவன்; (இருமை - பெருமை; கருமை - Blackness);
(அப்பர் தேவாரம் - 4.109.1 - "பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் ....இருங் கூற்றகல...");
(அப்பர் தேவாரம் - 4.107.1 -
"மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவா ளெயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம் பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே."
-- இருட்டிய மேனி - இருளதாய மேனி - கரிய உடம்பு);
குமைத்தல் - மிதித்து உழக்குதல்; அழித்தல்;



3)
அலைத்தார் வேலை விடந்தனை ஆர்ந்தவன்
மலைப்பா வைக்கிடம் தந்து மகிழ்ந்தவன்
நிலைத்தான் நேயமி லாத்தக்கன் வேள்வியைக்
குலைத்தான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



அலைத்து ஆர் வேலை விடந்தனை ஆர்ந்தவன் - அலையெழுப்பி ஒலிக்கும் கடலில் தோன்றிய நஞ்சை உண்டவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (வேலை - கடல்); (ஆர்தல் - உண்ணுதல்);
மலைப்பாவைக்கு இடம் தந்து மகிழ்ந்தவன் - பார்வதியை இடப்பக்கம் விரும்பி ஏற்றவன்;
நிலைத்தான் - என்றும் உள்ளவன்; (நிலைத்தல் - அழிவின்மை);
நேயம் இலாத் தக்கன் வேள்வியைக் குலைத்தான் - அன்பு இல்லாத தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (நேயம் - அன்பு); (குலைத்தல் - அழித்தல்);



4)
மைதான் காட்டும் மணிகண்டன் பாரெலாம்
செய்தான் முப்புரம் தீயெழ ஓர்கணை
எய்தான் பங்கயன் சென்னியில் ஒன்றினைக்
கொய்தான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



மை - கருமை;
தான் - அசை; ('தான்' என்ற சொல் அசைநிலையாகச் சில பாடல்களில் வரக்காணலாம். உதாரணம்: 8.5.1 - திருவாசகம் - திருச்சதகம் - "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் ... பொய்தான் தவிர்ந்து ... கைதான் நெகிழ விடேன்..." - 'மெய்தான்' முதலிய நான்கிடத்தும் வந்த 'தான்' அசைநிலை. );
மைதான் காட்டும் மணிகண்டன் - நீலமணி திகழும் கண்டம் உடையவன்;
பார் எலாம் செய்தான் - அகிலங்களை எல்லாம் படைத்தவன்;
முப்புரம் தீ ஓர் கணை எய்தான் - முப்புரம் எரிய ஓர் அம்பைத் தொடுத்தவன்;
பங்கயன் சென்னியில் ஒன்றினைக் கொய்தான் - பிரமன் தலையில் ஒன்றைக் கிள்ளியவன்; (பங்கயன் - பிரமன்);



5)
செவியால் ஈசன் திருப்புகழ் கேட்பவர்
புவிமேல் மீண்டும் புலாலுட லுட்புக்குத்
தவியா வண்ணம் அருள்பவன் தன்கரம்
குவியான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



புவிமேல் மீண்டும் புலாலுடலுட் புக்குத் தவியா வண்ணம் அருள்பவன் - மீண்டும் பிறவாத நிலையை அருள்பவன்; (புலால் உடல் - ஊனுடம்பு); (புக்கு - புகுந்து);
கரம்குவித்தல் - கைகுவித்தல் - கைகுவித்து வணங்குதல் (Worshipping, as with joined hands);
தன் கரம் குவியான் - அவன் எவரையும் வணங்கான் என்றது அவனுக்கு ஒரு தலைவன் இன்மையைச் சுட்டியது.
(திருவாசகம் - திருவம்மானை - 8.8.13 - "கையார் வளைசிலம்பக் ... வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை ... ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்."
- திருவாவடுதுறை ஆதீன உரைநூலில் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கம்: 'சேர்ந்தறியாக் கையான்' - யாரையும் குவித்து வணங்கியறியாத கைகளையுடையவன்.);
(பரிபாடலில் வரும் ஒரு பிரயோகம்: உரையாசிரியர்: பெருமழைப்புலவர், திரு பொ வே சோமசுந்தரனார்:
அணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் றிரிபுரஞ் செற்றுழிக்
கல்லுயர் சென்னி யிமயவி னாணாகித்
தொல்புகழ் தந்தாருந் தாம்;
பணிவு இல் சீர் செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி - தன்னைப் பிறர் பணிதல் அன்றித் தான் பிறரைப் பணிதல் இல்லாத தலைமைத் தன்மையினையும் விரைந்து செல்லும் காளையூர்தியினையும் உடைய பிறவாயாக்கைப் பெரியோன் முப்புரத்தை அழித்த காலத்தே;
பணிவு இல் சீர் - தான் பிறரைப் பணிதல் வேண்டாத சிறப்பு என்க.
அஃதாவது தனக்கொரு தலைவனின்றி அனைவர்க்கும் தானே தலைவன் ஆகும் சிறப்பு என்க. );
(10.1.1.5 - திருமந்திரம் - முதல் தந்திரம் - சிவபரத்துவம் -
பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
- என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெருமான், ..... அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.
குறிப்புரையில் காண்பது: "பின்னால்" என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். 'பின்தாழ் சடையானை' (தி.1 .71 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து.)


(அப்பர் தேவாரம் - 6.98.1 -
"நாமார்க்குங் குடியல்லோம் ....
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் ..."
= தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையன்ஆகிய சங்கரன்);


(அப்பர் தேவாரம் - 6.93.1 -
"நேர்ந்தொருத்தி .......
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
.. பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே."
= புலால் பொருந்திய துருத்தி போன்ற உடம்பைப் போக்கலாவது, ஒன்று நீங்க மற்றொன்று வாராதவாறு பிறப்பை அறுத்துக்கொள்ளுதல்);



6)
மழவெள் ளேறேறி வந்துண் பலிகொள்வான்
பழையன் நெய்தயிர் பாலுகந் தாடுவான்
குழையொர் காதினன் கோல மதியணி
குழகன் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



மழ வெள் ஏறு - இள வெண்ணிற எருது;
உண்பலி - பிச்சை (Alms of food); (8.10.2 - திருவாசகம் - திருக்கோத்தும்பி - "நானார்என் உள்ளமார் ... ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் ...");
பழையன் - புராணன்;
ஆடுதல் - அபிஷேகம்;
குழைர் காதினன் - ஒரு காதில் குழையை அணிந்தவன் - அர்தநாரீஸ்வரன்;
குழகன் - இளைஞன்; அழகன்;



7)
நீறார் மேனியன் நீல மிடற்றினன்
ஆறார் செஞ்சடை அண்ணல் அருள்நிலை
மாறான் வந்தேத்தும் அன்பர்க் கிலையென்று
கூறான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



நீறு ஆர் மேனியன் - திருநீற்றைப் பூசியவன்;
நீல மிடற்றினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
று ஆர் செஞ்சடை அண்ணல் - கங்கையைச் செஞ்சடையில் தாங்கிய கடவுள்;
அருள் நிலை மாறான் - எப்போதும் அருள்பவன்;
வந்து ஏத்தும் அன்பர்க்கு இலை என்று கூறான் - வந்து தன்னைப் பணியும் அடியவர்களுக்கு "இல்லை" என்று சொல்லாது அவர்கள் வேண்டியனவெல்லாம் அருள்புரிபவன்;



8)
கடுத்தே கைகள்நா லஞ்சால் கனவெற்பை
எடுத்தான் சென்னிகள் ஈரஞ் சடர்த்திசை
மடுத்தான் நாளொடு வாளும் அவனுக்குக்
கொடுத்தான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



கடுத்தல் - சினத்தல்;
கைகள் நாலஞ்சால் - இருபது கைகளால்;
கன வெற்பு - பெரிய மலை - கயிலைமலை;
எடுத்தான் சென்னிகள் ஈரஞ்சு அடர்த்து இசை மடுத்தான் - எடுத்த இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கி இசை கேட்டவன்; (அடர்த்தல் - நசுக்குதல்);
நாளொடு வாளும் அவனுக்குக் கொடுத்தான் - இராவணனுக்கு நீண்ட ஆயுளையும் ஒரு வாளையும் அருளியவன்;



9)
புள்ளூர் வானொடு போதனும் காண்கிலார்
கள்வார் கொன்றை கமழ்சடை அண்ணலை
அள்ளூ றித்தொழு வாரகம் கோயிலாக்
கொள்வான் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



புள் ஊர்வானொடு போதனும் காண்கிலார் - கருட வாகனம் உடைய திருமாலும் தாமரைப்பூவில் உறையும் பிரமனும் காணமாட்டார்; (புள் - பறவை); (போது - பூ);
கள் வார் கொன்றை கமழ்சடை அண்ணலை - தேன் சொரியும் கொன்றைமலர் கமழ்கின்ற சடையை உடைய சிவபெருமானை;
அள்ளூறித் தொழுவார் அகம் கோயிலாக் கொள்வான் - அன்புமிகப் பெருகிப் பணியும் பக்தர்களது மனமே கோயிலாகக் கொள்வான்;
(9.13.3 - "அற்புதத் தெய்வம் ... உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு ..." - அள் ஊறும் - மிக உருகுகின்ற; என்றதனை, 'உருகி நினைக்கின்ற' என்க.)
(அப்பர் தேவாரம் - 5.80.3 - "அன்பின் ஆனஞ்சு ... அம்மானை அள்ளூறிய அன்பி னால்நினைந் தாரறிந் தார்களே" - அம்மானை, நெஞ்சில் அள்ளூறி அன்பினால் நினைந்தவர்களே அறிந்தவர்கள்);
(அப்பர் தேவாரம் - 4.40.8 - "சகமலா தடிமை ல்லை ... தொண்டர் அகமலாற் கோயில் இல்லை ஐயன் ஐயாற னார்க்கே." - வணங்கித் துதிக்கும் தொண்டர்களின் உள்ளத்தைத் தவிர அவருக்கு வேறு இருப்பிடம் இல்லை);



10)
நீறு பூசிடா நீசர்சொல் நீங்குமின்
நாறு நாண்மலர் தூவிடில் நம்வினை
பாறு மாறருள் வான்பண்டை நான்மறை
கூறு பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



பாறுதல் - அழிதல்;
பண்டை - பழைய; தொன்மையான;
கூறுதல் - சொல்லுதல்; துதித்தல்;


நீறு பூசிடா நீசர்சொல் நீங்குமின் - திருநீறு பூசமாட்டாத கீழோர்கள் சொல்லும் சொற்களை (அவர்கள் சொல்லும் மார்க்கங்களை) மதிக்க வேண்டா;
நாறு நாண்மலர் தூவிடில் - மணம் வீசும் புதிய பூக்களைத் தூவி வழிபட்டால்;
நம் வினை பாறுமாறு அருள்வான் - நம் வினைகள் அழியும்படி அருள்புரிபவன்;
பண்டை நான்மறை கூறு - பழைய நால்வேதங்களும் துதிக்கும் / தொன்மையான நால்வேதங்களைப் பாடுகின்ற;
பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே - திருப்பாண்டிக்கொடுமுடியில் உறையும் கூத்தனான சிவபெருமான்;



11)
ஆலின் கீழே அமர்ந்தீ ரிருவர்க்கு
நூலின் நுண்பொருள் எல்லாம் நுவன்றவன்
கால காலன் கறையணி கண்டத்துக்
கோலன் பாண்டிக் கொடுமுடிக் கூத்தனே.



ஆலின் கீழே அமர்ந்து - கல்லாலமரத்தின்கீழ் இருந்து;
ஈர் இருவர்க்கு - சனகாதியர் நால்வர்க்கு;
நூலின் நுண்பொருள் எல்லாம் நுவன்றவன் - மறைப்பொருளை விரித்து உரைத்தவன்;
கால காலன் - காலனுக்குக் காலன்;
கறைணி கண்டத்துக் கோலன் - நீலகண்டன்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்;
  • இரண்டாம் சீர் நேர்சையில் தொடங்கும்;
  • 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;
2) அப்பர் தேவாரம் - 5.81.1 -
சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்ட னைத்திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.



3) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - மகுடேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=64
4) பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) தலக்குறிப்பு: http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=806
'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது:
ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போட்டியில் ஆதிசேஷன் சுற்றிய மேருவின் ஆயிரம் சிகரங்களுள் ஒன்று, ஐந்து மணிகளாக உடைப்பட்டுச் சிதறியது.
அவற்றுள் சிவப்புமணி திருவண்ணாமலையாகவும், மரகதம் ஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் திருவாட்போக்கியாகவும், நீலம் பொதிகையாகவும், வைரம் கொடுமுடியாகவும் ஆயின என்பது தலபுராணம்.
மேருமலையின் ஒரு கொடுமுடி (சிகரம்) இங்கு வீழ்ந்தமையால் இப்பெயர் வந்தது என்பது வரலாறு. அதுவே சிவலிங்கமாக உள்ளது. சிவலிங்கம் மிகவும் குட்டையானது. சிகர வடிவில் உள்ளது. அகத்தியர் தழுவிய விரல் தழும்பு மேலே உள்ளது. சதுரபீடம். ‘பாண்டிய மன்னனின் விரல் வளர்ந்து குறை தீர்ந்த தலமாதலின் ‘பாண்டிக் கொடுமுடி’ என்றாயிற்று (அங்கவர்த்தனபுரம்) பரத்வாசர், அகத்தியர் வழிபட்ட தலம்.

-------------- --------------

No comments:

Post a Comment