Saturday, February 6, 2016

02.72 – சேய்ஞலூர் - ('சேங்கனூர்')

02.72 – சேய்ஞலூர் - ('சேங்கனூர்')


2012-12-30
திருச்சேய்ஞலூர் (இக்காலத்தில் 'சேங்கனூர்')
--------------------------------
(12 பாடல்கள்)
(வஞ்சிவிருத்தம் - 'விளம் விளம் காய்')
(சம்பந்தர் தேவாரம் - 1.113.1 - "எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்")

1)
ஆர்ந்தவன் நஞ்சினை அமுதுதன்னை
ஈந்தவன் பூங்கணை எய்தவேளைக்
காய்ந்தவன் அன்பொடு கருதுநெஞ்சிற்
சேர்ந்தவன் உறைவிடம் சேய்ஞலூரே.

ஆர்ந்தவன் நஞ்சினை அமுதுதன்னை ஈந்தவன் - விடத்தை உண்டு தேவர்களுக்கு அமுதத்தை அளித்தவன்; (ஆர்தல் - உண்ணுதல்);
பூங்கணை எய்த வேளைக் காய்ந்தவன் - மலர்க்கணை எய்த மன்மதனை எரித்தவன்;
அன்பொடு கருது நெஞ்சிற் சேர்ந்தவன் - பக்தியோடு எண்ணும் மனத்திற் பொருந்தியிருப்பவன்;
உறைவிடம் சேய்ஞலூரே - அப்பெருமான் உறையும் இடம் திருச்சேய்ஞலூர் ஆகும்;


(அப்பர் தேவாரம் - 6.44.6 - "ஆர்ந்தவனே யுலகெலாம் நீயே யாகி... பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே..." - உன்னைப் பெருமான் என்று நினைக்கும் உள்ளங்களில் சேர்ந்தவனே - நெஞ்சினை உடையாரது செயல், நெஞ்சின் மேல் ஏற்றப்பட்டது.);


2)
பார்த்தவன் பற்பல ஊழிநாகம்
ஆர்த்தவன் அரையினில் நெற்றிதன்னில்
நேத்திரன் நிலவினை அரவினோடு
சேர்த்தவன் உறைவிடம் சேய்ஞலூரே.



பார்த்தவன் பற்பல ஊழி - எண்ற்ற ஊழிகளைப் பார்த்தவன் - காலத்தைக் கடந்தவன்;
நாகம் ஆர்த்தவன் அரையினில் - அரையில் பாம்பினைக் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
நெற்றிதன்னில் நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;
நிலவினை அரவினோடு சேர்த்தவன் உறைவிடம் சேய்ஞலூரே - திருமுடிமேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்த சிவபெருமான் உறையும் இடம் திருச்சேய்ஞலூர் ஆகும்;



3)
கற்றவர் கருத்தினன் போற்றிசெய்யும்
நற்றவர்க் குற்றவன் குமரவேளைப்
பெற்றவன் பேரெயில் மூன்றையன்று
செற்றவன் உறைவிடம் சேய்ஞலூரே.



உற்றவன் - துணைவன்;
குமரவேள் - முருகன்;
பேர் எயில் மூன்று - பெரிய கோட்டைகள் மூன்று - முப்புரங்கள்;
செறுதல் - அழித்தல்;
கற்றவர் கருத்தினன் - கற்றவர்கள் சிந்தையில் இருப்பவன்;
போற்றிசெய்யும் நற்றவர்க்குற்றவன் - வணங்குகின்ற நல்ல தவம் உடையவர்களுக்குத் துணைவன்;
குமரவேளைப் பெற்றவன் - முருகனுக்குத் தந்தை;
பேர் எயில் மூன்றைன்று செற்றவன் உறைவிடம் சேய்ஞலூரே - பெரிய முப்புரங்களை அழித்த சிவபெருமான் உறையும் இடம் திருச்சேய்ஞலூர் ஆகும்;



4)
தரித்தவன் சடைமிசைக் கங்கைவேழம்
உரித்தவன் ஒன்னலர் முப்புரத்தை
எரித்தவன் எடுகணை ஏவிடாமற்
சிரித்தவன் உறைவிடம் சேய்ஞலூரே.



தரித்தவன் சடைமிசைக் கங்கை; வேழம் உரித்தவன்; ஒன்னலர் முப்புரத்தை எரித்தவன், எடுகணை ஏவிடாமற் சிரித்தவன், உறைவிடம் சேய்ஞலூரே.
தரித்தவன் சடைமிசைக் கங்கை - சடையில் கங்கையைத் தாங்கியவன்;
வேழம் உரித்தவன் - யானையின் தோலை உரித்தவன்;
ஒன்னலர் - பகைவர்;
எடுகணை ஏவிடாமல் சிரித்தவன் - எடுத்த கணையை ஏவாமல் சிரித்தவன்;
(8.14.2 - திருவாசகம் -திருவுந்தியார் -
"ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற."
- இறைவர் திருக்கரத்தில் இரண்டு அம்பிருக்கக் கண்டிலேம்; கண்டது ஓரம்பே; அந்த ஓர் அம்பும் திரிபுரம் எரித்தற்கு அதிகமேயாயிற்று என்று உந்தீபறப்பாயாக!);



5)
மெய்யவன் தக்கன்செய் வேள்விசெற்று
வெய்யவன் பல்லுகு விகிர்தனவன்
ஐயவென் பார்துணை ஆரழல்போற்
செய்யவன் உறைவிடம் சேய்ஞலூரே.



மெய்யவன் - மெய்ப்பொருளாய் உள்ளவன்;
செறுதல் - அழித்தல்;
தக்கன்செய் வேள்வி செற்று வெய்யவன் பல் உகு விகிர்தன்அவன் - தக்கன் செய்த வேள்வியை அழித்துச் சூரியனுடைய பல்லை உதிர்த்த விகிர்தன்;
(சம்பந்தர் தேவாரம் 3.115.7 - "வெய்யவன்பல் லுகுத்தது குட்டியே...");
(அப்பர் தேவாரம் - 6.96.9 - "எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்...");
ஐய என்பார் துணை - 'ஐயனே' என்று வணங்கும் அன்பர்களுக்குத் துணை ஆனவன்;
செய்யவன் - சிவந்தவன்; (செய் - சிவப்பு);
ஆரழல்போல் செய்யவன் - தீயைப்போலச் செம்மேனியன்;



6)
ஆவணங் காட்டியும் ஆண்டுகொள்வான்
கோவணங் காட்டியும் கூட்டிக்கொள்வான்
பாவணங் காட்டியும் பரிசருள்வான்
தீவணன் உறைவிடம் சேய்ஞலூரே.



பாவணம் - பா வண்ணம் - பா வடிவம்; பாட்டின் இலக்கணம் (யாப்பு);


ஆவணம் காட்டியும் ஆண்டுகொள்வான் - அடிமை ஓலையைக் காட்டிச் சுந்தரரை ஆட்கொண்டவன்;
கோவணங் காட்டியும் கூட்டிக்கொள்வான் - கோவணத்திற்கு ஈடாகத் துலைத்தட்டில் ஏறிய அமர்நீதியார் குடும்பத்தைச் சிவலோகம் சேர்த்தவன்;
பா வணம் காட்டியும் பரிசு அருள்வான் - தமிழ்ச்செய்யுள் தந்து தருமிக்கும் பாணபத்திரர்க்கும் பொன் அளித்தவன்;
தீ வணன் - தீப்போன்ற செம்மேனியன்;



7)
பரிபவன் பத்தருக் கொருவனாகி
விரிபவன் விண்ணொளிர் சோதியுள்ளே
எரிபவன் இல்தொறும் இடுபலிக்குத்
திரிபவன் உறைவிடம் சேய்ஞலூரே.



பரிபவன் பத்தருக்கு; ஒருவன் ஆகி விரிபவன்; விண் ஒளிர் சோதியுள்ளே எரிபவன்; இல்தொறும் இடுபலிக்குத் திரிபவன் உறைவிடம் சேய்ஞலூரே.
பரிபவன் பத்தருக்கு - பக்தர்களுக்கு இரங்குபவன்;
ஒருவன் ஆகி விரிபவன் - (திருவாசகம் - சிவபுராணம் - ''ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க"); (அப்பர் தேவாரம் - 6.78.1 - "ஒன்றா வுலகனைத்து மானார் தாமே" - 'ஒன்றாய் உலகனைத்தும் ஆனார்' = முன்னர்த் தாமாகிய ஒரு பொருளாய் நின்று, பின்னர் உலகப் பொருள் பலவும் ஆயினார்);
எரிபவன் - பிரகாசிப்பவன்; (எரிதல் - பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 -
"ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்...");
இல்தொறும் இடுபலிக்குத் திரிபவன் - பல இல்லங்களில் பிச்சைக்குச் செல்பவன்;



8)
மலையினை ஆட்டிய வல்லரக்கன்
தலைகளைந் திரட்டியும் குலையவூன்றி
அலையெயில் மூன்றையும் அன்றெரித்த
சிலையினன் உறைவிடம் சேய்ஞலூரே.



மலையினை ஆட்டிய வல்லரக்கன் - கயிலைமலையை அசைத்த வலிய இராவணனுடைய;
தலைகள் ஐந்து இரட்டியும் குலைய ஊன்றி - பத்துத்தலைகளும் குலையும்படி விரலை ஊன்றியவன்;
அலை எயில் மூன்றையும் அன்று எரித்த சிலையினன் - தேவர்களை வருத்தித் திரிந்த முப்புரங்களையும் முன்பு எரித்த வில்லை ஏந்தியவன்; (அலைதல் - திரிதல்); (அலைத்தல் - வருத்துதல்);
(அப்பர் தேவாரம் - 4.107.10 - "தேன்றிகழ் கொன்றையுங் .... வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ ஊன்றிய சேவடி யான்...");



9)
அன்றயன் அரியிவர்க் கறிவரிதாய்
நின்றவன் யாதொரு நிகருமில்லா
ஒன்றவன் மனைதொறும் உண்பலிக்குச்
சென்றவன் உறைவிடம் சேய்ஞலூரே.



அன்று அயன் அரி இவர்க்கு அறிவு அரிதாய் நின்றவன்; யாது ஒரு நிகரும் இல்லா ஒன்றவன்; மனைதொறும் உண்பலிக்குச் சென்றவன் உறைவிடம் சேய்ஞலூரே.
அன்று அயன் அரி இவர்க்கு அறிவு அரிதாய் நின்றவன் - அடிமுடி தேடிய நாளில், பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாதபடி சோதி உருவில் ஓங்கியவன்;
யாது ஒரு நிகரும் இல்லா ஒன்று அவன் - எவ்வித ஒப்பும் இல்லாத ஒருவன்;
(திருமந்திரம் - "ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்" - ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை. அவனது அருள், 'அறக்கருணை, மறக்கருணை' என இரண்டாய் இருக்கும். )
மனைதொறும் உண்பலிக்குச் சென்றவன் - வீடுதோறும் பிச்சைக்குச் சென்றவன்;


(3.92.2 - "என்றுமோ ரியல்பின ரெனநினை வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும் பலிகொளு மியல்பதுவே...");
(7.45.5 - "... சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடை ...");



10)
வைதவம் பேசிடும் வஞ்சநெஞ்சர்
உய்துறை அறிகிலர் உரைகொளேன்மின்
எய்தவன் முப்புரம் எரியில்மூழ்கச்
செய்தவன் உறைவிடம் சேய்ஞலூரே.

வைது அவம் பேசிடும் வஞ்ச நெஞ்சர் - வைதிக தர்மத்தைத் திட்டிப் புன்மொழிகள் பேசும் வஞ்சமனத்தர்கள்;
உய்துறை - உய்யும் துறை - (வினைத்தொகை);
கொளேன்மின் - கொள்ளேன்மின் - மதியாதீர்கள்; நீங்கள் மதிக்கவேண்டா;
உய்துறை அறிகிலர் உரை கொளேன்மின் - உய்திபெறும் மார்க்கத்தை அறியாத அவ்வஞ்சகர்களுடைய பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;
எய்தவன் முப்புரம் எரியில் மூழ்கச் செய்தவன் - ஒரு கணையை எய்து முப்புரங்களைத் தீயில் மூழ்த்தியவன்; ("முப்புரம் எய்தவன், முப்புரம் எரியில் மூழ்கச் செய்தவன்" என்று இயைக்க);



11)
பார்ப்பவன் பழவினைப் பயனையிங்குச்
சேர்ப்பவன் சேவடி போற்றுவாரைக்
காப்பவன் கடலன வினைகளெல்லாம்
தீர்ப்பவன் உறைவிடம் சேய்ஞலூரே.

பார்ப்பவன் - எல்லாவற்றையும் காண்பவன்;
பழவினைப் பயனைங்குச் சேர்ப்பவன் - உயிர்களுக்கு முன்வினைப்பயனை ஊட்டுபவன்;
சேவடி போற்றுவாரைக் காப்பவன் - சிவந்த திருவடியை வணங்கும் அன்பரைக் காப்பவன்;
கடல் அன வினைகள் எல்லாம் தீர்ப்பவன் - கடல் போல மிகுந்துள்ள வினைகள் அனைத்தையும் இல்லாமற் செய்பவன்;

(அப்பர் தேவாரம் - 6.48.7 - "பெண்ணவன்காண் .... எல்லாங் காணுங் கண்ணவன்காண் ...");
(11.8 - சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலா - "பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் முறைமையால்" - 'பிறர் எல்லாம் பொருள்களைக் கண் காட்டும் அளவில், அது காட்டியவாறு காண்பர்' என்பதும், 'சிவபெருமான் அவ்வாறின்றி, எல்லாவற்றையும் உள்ள படி காண்பான்' என்பதும் விளங்கும்.);
(அப்பர் தேவாரம் - 5.4.9 -
"அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ."
4-ஆம் அடியில்: அருத்தன் - அருத்துவோன் , நுகர்விப்போன் ( வினைப்பயனை என்பது அவாய் நிலையான் வந்தது) - உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப்பவன்);
(தருமபுர ஆதீன ஸ்தாபகர் குருஞானசம்பந்த தேசிகர் அருளிய
சிவபோகசாரம் - 101 -
சும்மா தனுவருமோ சும்மா பிணிவருமோ
சும்மா வருமோ சுகதுக்கம் - நம்மால்முன்
செய்தவினைக் கீடாச் சிவனருள்செய் விப்பதென்றால்
எய்தவனை நாடி இரு.)

12)
நரிபரி செய்தவன் நம்பினார்க்குப்
பரியரன் பழவினை பாற்றியின்பம்
சொரிபரன் தூயவெள் ளேறதேறித்
திரிபவன் உறைவிடம் சேய்ஞலூரே.

நரி பரி செய்தவன் - நரிகளைக் குதிரைகள் ஆக்கியவன்;
நம்பினார்க்குப் பரி அரன் - அன்புடைய அடியவர்களுக்கு இரங்கும் ஹரன்; (நம்புதல் - விரும்புதல்); (பரிதல் - இரங்குதல்); (அரன் - ஹரன் - அழிப்பவன்);
பழவினை பாற்றி இன்பம் சொரி பரன் - அவர்களுடைய பழவினைகளை அழித்து இன்பம் சொரியும் பரமன்; (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்); (சொரிதல் - பொழிதல்; மிகக்கொடுத்தல்);
தூய வெள் றுஅது ஏறித் திரிபவன் - தூய வெண்ணிற இடப வாகனன்; (திரிபவன் - திரிகின்ற பவன் என்று வினைத்தொகையாவும் கொள்ளலாம். பவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);
உறைவிடம் சேய்ஞலூரே - அப்பெருமான் உறையும் இடம் திருச்சேய்ஞலூர்.

(அப்பர்தேவாரம் - 4.95.7 - "தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீர்...");
(அப்பர் தேவாரம் - 6.79.4 - "சிவனாகித் திசைமுகனாய்த் ... பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்..." - பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன்);

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
வஞ்சிவிருத்தம் - 'விளம் விளம் காய்' என்ற அமைப்பு ;
2) சம்பந்தர் தேவாரம் - 1.113.1 -
"எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.")
3) சேய்ஞலூர் - ('சேங்கனூர்') - சத்தியகிரீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=380

-------------- --------------

No comments:

Post a Comment