Saturday, February 20, 2016

02.79 – ஆத்தூர் (தாமிரபரணி நதிக்கரைத் தலம்)

02.79 – ஆத்தூர் (தாமிரபரணி நதிக்கரைத் தலம்)



2013-03-09 &10 (இவ்வாண்டின் மஹாசிவராத்திரி)
ஆத்தூர் (தாமிரபரணி நதிக்கரைத் தலம்; திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே உள்ளது)
-------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு);
(சம்பந்தர் தேவாரம் - 1.73.1 - "வானார் சோதி ...... கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே.")



1)
மானேர் நோக்கி மயிலார் சாயல் மங்கை மணவாளன்
பானேர் நீறு பூசும் மார்பன் பனிவெண் மதிசூடி
ஆனே றேறிப் பலிக்குத் திரியும் அத்தன் பதியென்பர்
வானீர்ப் பொருநைத் தென்பால் மகிழும் தேனார் ஆத்தூரே.



பதம் பிரித்து:
மான் நேர் நோக்கி, மயில் ஆர் சாயல், மங்கை மணவாளன்;
பால் நேர் நீறு பூசும் மார்பன்; பனி வெண் மதி சூடி;
ஆன் ஏறு ஏறிப் பலிக்குத் திரியும் அத்தன் பதி என்பர்
வான் நீர்ப் பொருநைத் தென்பால் மகிழும் தேன் ஆர் ஆத்தூரே.


நேர் - ஒப்பு;
ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்;
ஆன் ஏறு - இடபம்;
பொருநை - தாமிரபரணி ஆறு;
தேன் - வண்டுகள்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
வான் நீர் - மழைநீர்;


மான் போல் விழி உடையவளும் மயில் போன்றவளும் ஆன உமையம்மை மணவாளன்; பால் போன்ற வெண்ணீறு பூசும் திருமார்பினன்; குளிர்ந்த வெண்ணிறமுடைய பிறைச்சந்திரனைச் சூடியவன்; இடப வாகனத்தில் பிச்சைக்குத் திரிகின்ற அப்பன் உறையும் தலம், மழைநீர் சேரும் தாமிரபரணி நதியின் தென்கரையில், (சோலையில் தேன் உண்டு) மகிழும் வண்டினங்கள் ரீங்காரம் செய்யும் ஆத்தூர்.
(வான் நீர்ப் பொருநை - 'கங்கையைப் போன்ற சிறந்த தாமிரபரணி' என்றும் பொருள்கொள்ளலாம்);



2)
ஆல நீழல் நாலு முனிவர்க் கறங்கள் உரையண்ணல்
ஓலம் என்ற உம்பர் உய்ய ஓதத் திடையெழுந்த
ஆலம் உண்ட கண்டம் காட்டும் அழகன் பதியென்பர்
நீல வண்டு சால உண்டார் கோல ஆத்தூரே.



உம்பர் - தேவர்கள்;
ஓதம் - கடல்;
நீல வண்டு - கருவண்டு;
சால -மிகவும்;
கோலம் - அழகு;


கல்லால மரத்தின்கீழ்ச் சனகாதி முனிவர்களுக்கு மறைப்பொருளை விளக்கியவன்; 'ஓலம்' என்று சரண்புகுந்த தேவர்கள் உய்யுமாறு, கடலிடைத் தோன்றிய ஆலகால விடத்தை உண்ட கண்டத்தைக் காட்டும் அழகன் உறையும் தலம், கருவண்டுகள் நிரம்ப உண்டு ரீங்காரம் செய்யும் (சோலைகள் சூழ்ந்த) அழகிய ஆத்தூர்.



3)
பழிதீர் கங்கை வேண்டித் தவஞ்செய் பகீர தனைக்கண்டு
கழிபேர் இரக்கம் கொண்டு சற்றுக் கசிய விடுமீசன்
விழியார் நுதலன் கொடிமேல் வெள்ளை விடையன் பதியென்பர்
சுழிநீர்ப் பொருநைத் தென்பால் பொழில்சூழ் எழிலார் ஆத்தூரே.



கழி பேர் இரக்கம் - மிகுந்த தயை; (கழி பேர் - மிகப் பெரிய);
நுதல் - நெற்றி;


முன்னோர்களின் பழியைத் தீர்க்கவேண்டிக் கங்கையை மண்ணுலகுக்கு கொண்டுவருவதற்காகப் பகீரதன் தவம் செய்து வேண்டவும், அவனுக்கு மிகவும் இரங்கித் தன் சடையில் அடைத்த கங்கையைச் சற்றே கசிய விட்ட ஈசன்; நெற்றிக்கண்ணன்; வெண்ணிற இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய சிவபெருமான் உறையும் தலம், சுழித்தோடும் நீர் பாயும் தாமிரபரணி நதியின் தென்கரையில் பொழில்கள் சூழ்ந்த அழகிய ஆத்தூர்.


(சம்பந்தர் தேவாரம் 3.122.3 -
"பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன்.... ");


(11.26.4 - கோயில்நான்மணிமாலை - "....... வீர வெள்விடைக் கொடியும் .....");



4)
குரவம் கொன்றை குளிரும் கங்கை குறைவெண் மதிக்கண்ணி
அரவம் புனையும் அழகன் குழகன் அடியில் மலர்தூவிப்
பரவும் இமையோர் பயங்கள் தீர்த்த பரமன் பதியென்பர்
இரவும் பகலும் ஏத்தும் அன்பர் விரவும் ஆத்தூரே.



குரவம் - குரா மலர்;
குறைவெண் மதிக் கண்ணி - வெண்பிறைச்சந்திரனாகிய தலைமாலை; (3.42.1 - "குறைவெண்டிங்கள் சூடி"); (4.3.6 - "தண்மதிக் கண்ணியி னானை");
குரவம், கொன்றை, குளிரும் கங்கை, குறைவெண் மதிக்கண்ணி, அரவம் - உம்மைத்தொகை;
குழகன் - இளைஞன்;
பரவுதல் - துதித்தல்;
இமையோர் - தேவர்கள்;
விரவுதல் - அடைதல் (To approach, draw near);



5)
சாம வேதம் பாடு நாவன் சோம சுந்தரியை
வாமம் வைத்து மகிழும் மைந்தன் வம்பார் கணையெய்த
காமன் எழிலைக் காய்ந்த நெற்றிக் கண்ணன் பதியென்பர்
பூமன் னெழிலார் பொழில்கள் புடைசூழ் காமர் ஆத்தூரே.



வாமம் - இடப்பக்கம்;
மைந்தன் - கணவன்; இளைஞன்;
வம்பு ஆர் கணை - வாசனை பொருந்திய அம்பு - மலர் அம்பு;
மன்னுதல் - மிகுதல்;
காமர் - அழகு;
பூ மன்னு எழில் ஆர் பொழில்கள் புடை சூழ் காமர் ஆத்தூர் - பூக்கள் மிகுந்த அழகிய சோலைகள் சூழ்ந்த அழகிய ஆத்தூர்;


* சோமசுந்தரி - இத்தலத்து அம்பாள் திருநாமம்.



6)
இயலால் இசையால் இயலும் வகையால் என்றும் அடிபோற்றும்
செயலே செய்யும் அன்பர் சித்தன் திரையின் விடமுண்டு
புயலே போலப் பொலியும் மிடற்றுப் புனிதன் பதியென்பர்
கயலார் புனல்பாய் பொருநைத் தென்பால் வயலார் ஆத்தூரே.



இயலால் இசையால் இயலும் வகையால் - இயல்தமிழாலும் (திருவாசகம் முதலியன), இசைத்தமிழாலும் (தேவாரம், திருவிசைப்பா முதலியன), தமக்கு இயன்றபடி வேறு எவ்விதத்தாலும்;
அன்பர் சித்தன் - பக்தர்களின் நெஞ்சில் குடிகொள்பவன்;
திரை - கடல்;
புயல் - மேகம்;
புயலே போலப் பொலியும் மிடற்றுப் புனிதன் - கறைக்கண்டம் உடைய தூயவன்;
கயல் ஆர் புனல் பாய் பொருநைத் தென்பால் வயல் ஆர் ஆத்தூரே - கயல்மீன்கள் பாயும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் வயல்கள் சூழ்ந்த ஆத்தூர்;



7)
இகழும் தக்கன் வேள்வி தகர்த்த ஈசன் மலர்க்கண்ணை
அகழும் மாலுக் காழி அளித்த அண்ணல் மலைவில்லிற்
பகழி கோத்துப் புரங்கள் சுட்ட பரமன் பதியென்பர்
புகழும் தமிழின் ஓசை என்றும் திகழும் ஆத்தூரே.



ஆழி - சக்கரம்;
பகழி - அம்பு;
புகழும் தமிழ் - தேவாரம், திருவாசகம்;


தட்சன் செய்த வேள்வியை அழித்தவன்; ஈசன்; ஒரு பூக்குறையவும், தன் மலர்க்கண்ணைத் தோண்டி இட்டு அர்ச்சித்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவன்; மேருவில்லில் ஓர் அம்பைக் கோத்து முப்புரங்களை எரித்தவன்; அப்பெருமான் உறையும் பதி, அவன் புகழைப் பாடும் திருமுறைகளின் ஓசை என்றும் கேட்கும் ஆத்தூர்.



8)
செல்லாத் தேரைச் செலுத்தச் சினந்து திருமா மலைதன்னை
எல்லாக் கைக ளாலும் எடுத்த இலங்கைக் கிறைதன்னை
மெல்லோர் விரலிட் டடர்த்த விகிர்தன் மேவும் பதியென்பர்
சொல்லூர் தமிழால் துதிப்போர் திரளும் நல்லூர் ஆத்தூரே.



செல்லாத் தேர் - ஓடாத இரதம்;
திரு மா மலை - கயிலைமலை;
இலங்கைக்கு இறை - இலங்கை மன்னன் - இராவணன்;
மெல் ஓர் விரல் இட்டு அடர்த்த - மென்மையான ஒரு விரலை ஊன்றி நசுக்கிய;
விகிர்தன் - சிவபெருமான்;
மேவுதல் - விரும்புதல்; உறைதல்;
சொல் ஊர் தமிழ் - நல்ல சொற்கள் பொருந்திய தமிழ் - தேவாரம்;
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 215 -
"நல்லூரில் .... சொல்லூர்வண் தமிழ்பாடி வலஞ்சுழியைத் தொழுதேத்தி");
நல்லூர் - நல்ல ஊர்;



9)
கொண்டல் வண்ணன் குளிர்தா மரையான் குறுகார் அடியுச்சி
துண்ட மதியை இண்டை யாகக் கொண்ட மணிகண்டன்
அண்டர் அண்டன் தொண்டர் உள்ளன் அமரும் பதியென்பர்
விண்ட மலரை வண்டு நாடி மண்டும் ஆத்தூரே.



கொண்டல் - மேகம்;
குறுகுதல் - நெருங்குதல்;
அடி உச்சி - கீழும் மேலும்;
துண்ட மதி - பிறைச்சந்திரன்;
இண்டை - தலையில் அணியும் மாலை;
அண்டர் அண்டன் - தேவதேவன்;
விண்ட மலர் - மலர்ந்த பூ;
மண்டுதல் - திரளுதல்; நிரம்ப உண்ணுதல்;


மேகவண்ணத்துத் திருமாலும் தாமரைமேல் வீற்றிருக்கும் பிரமனும் கீழும் மேலும் காணமாட்டார்; பிறைச்சந்திரனை முடிமேல் மாலையாகக் கொண்ட நீலகண்டன்; தேவதேவன்; அடியவர் அகத்தில் இருப்பவன்; அப்பெருமான் உறையும் தலம், மலர்ந்த பூக்களை நாடி வண்டுகள் திரண்டு நிரம்ப உண்ணும் ஆத்தூர்.



10)
வாவா என்பார் வழியை அறியா வம்பர் அரன்தாளை
மேவார் அவர்சொல் வெற்றுப் பேச்சை விடுவீர் உமைபங்கா
காவாய் என்றால் நாவாய் ஆகும் நம்பன் பதியென்பர்
நாவார் தமிழால் போற்றும் ஓசை ஓவா ஆத்தூரே.



வம்பர் - வீணர்கள்; பயனற்றவர்கள் (Worthless person); துஷ்டர்கள்;
மேவார் - விரும்பமாட்டார்; (மேவுதல் - விரும்புதல்; அடைதல்; பொருந்துதல்);
அவர்சொல் வெற்றுப் பேச்சை விடுவீர் - அவர்கள் சொல்லும் பொருளற்ற பேச்சை மதிக்கவேண்டா;
காவாய் - காத்து அருளாய்;
நாவாய் - படகு; (பிறவிக்கடலைக் கடக்க உதவும் புணை);
நம்பன் - சிவன்;
நா ஆர் தமிழ் - நாக்கில் பொருந்திய தேவாரம், திருவாசகம்;
ஓவா - ஓயாத;



11)
பணியே மாலை பணியே கச்சு பணியே முடிமீதும்
அணியாப் புனையும் அழகன் பெருகும் அன்பால் அடிபோற்றிப்
பணிவார் தங்கள் பிணிதீர் பெருமான் பயிலும் பதியென்பர்
மணிநீர் மலியும் பொருநைத் தென்பால் அணியார் ஆத்தூரே.



பணி - நாகம்;
அணி - அலங்காரம்/ஆபரணம்; அழகு;
அணியா - அணியாக - கடைக்குறையாக வந்தது;
பயில்தல் - தங்குதல் (To stay, abide, reside);
மணி - அழகு;



பாம்பையே மாலையாகவும், அரைக்கச்சாகவும், தலைமேல் அலங்காரமாகவும் அணியும் அழகன்; மிகுகின்ற பக்தியோடு திருவடியைப் போற்றித் தொழும் அன்பர்களின் பிணிகளைத் தீர்த்தருளும் சிவபெருமான் உறையும் தலம், அழகிய நீர் மிகுந்த தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ள அழகிய ஆத்தூர்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு;
  • 1-5 சீர்களில் மோனை.
  • பாடல்தோறும் ஈற்று அடியில் 5-ஆம் சீரில் எதுகை அமைந்துள்ளது.
2) சம்பந்தர் தேவாரம் - 1.73.1 -
வானார் சோதி மன்னு சென்னி வன்னி புனங்கொன்றைத்
தேனார் போது தானார் கங்கை திங்க ளொடுசூடி
மானேர் நோக்கி கண்டங் குவப்ப மாலை யாடுவார்
கானூர் மேய கண்ணார் நெற்றி ஆனூர் செல்வரே.
3) ஆத்தூர் - சோமநாதர் ஆலயம் - தகவல் : http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=68&Page=11
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10079&ncat=20

------ --------

No comments:

Post a Comment