Saturday, February 20, 2016

02.77 – வெஞ்சமாக்கூடல் - (வெஞ்சமாங்கூடலூர்)

02.77வெஞ்சமாக்கூடல் - (வெஞ்சமாங்கூடலூர்)



2013-02-09
வெஞ்சமாக்கூடல் (இக்காலத்தில் "வெஞ்சமாங்கூடலூர்")
----------------------
(கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "விளம் விளம் விளம் விளம்" என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.29.1 - "வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்");
(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்";)
(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்")



1)
உகிர்தனால் வேதனின் ஓர்சிரம் கொய்தவர்
முகிலினேர் கண்டனார் முளைமதிக் கண்ணியார்
துகிலுமோர் பால்புலித் தோலுமோர் பால்திகழ்
விகிர்தனார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



உகிர் - நகம்;
தான் - Expletive affixed to any noun or pronoun and declined instead of it - அசைச்சொல்;
வேதன் - பிரமன்;
கண்ணி - தலையில் அணியும் ஒருவித மாலை;
விகிர்தன் - மாறுபட்ட செயல்களை உடையவன்; மற்றவரினும் வேறுபட்டவனாகிய சிவபெருமான்; விரூபாக்கன் முதலிய நிலைமையன்; (विरूपाक्षः - Siva as having an unusual number of eyes);


உகிர்தனால் வேதனின் ஓர் சிரம் கொய்தவர் - நகத்தால் பிரமனின் தலைகளுள் ஒன்றைக் கிள்ளிக் கொய்தவர்;
முகிலின் நேர் கண்டனார் - மேகம்போல் நீல கண்டத்தை உடையவர்;
முளைமதிக்கண்ணியார் - பிறைச்சந்திரனை முடிமேல் கண்ணிமாலையாகச் சூடியவர்;
துகிலும் ஓர் பால், புலித்தோலும் ஓர் பால் திகழ் விகிர்தனார் - ஒரு பக்கம் நல்லாடையும் ஒரு பக்கம் புலித் தோலாடையும் அணியும் அர்த்தநாரீஸ்வரர்;
மேவு இடம் வெஞ்சமாக் கூடலே - அப்பெருமானார் விரும்பி உறையும் இடம் திருவெஞ்சமாக்கூடல்;


* விகிர்தேசுவரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்.



2)
நாட்டனார் நெற்றியில் நாரியை ஓர்புறம்
காட்டினார் காட்டினில் நட்டனார் காதலாற்
பாட்டினால் அடிதொழும் பத்தரின் பழவினை
வீட்டினார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



நாட்டனார் நெற்றியில் - நெற்றிக்கண்ணர்;
நாட்டம் - கண்; (தீவண்ணம் - தீவண்ணன் என்பதுபோல், நாட்டம் - நாட்டன்);
நட்டன் - கூத்தாடுபவன்;
வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்;


(திருப்புகழ் - "ஏட்டி லேவரை பாட்டி லேசில ..... கோட்டு மாயிர நாட்ட னாடுறை கோட்டு வாலிப மங்கைகோவே ...." - கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை ... விளங்கும் ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும்);



3)
அரும்புமோர் செங்கதிர் அன்னவண் ணத்தினர்
பெரும்பிணி தீர்த்தருள் மருந்தவர் ஒருபுறம்
கரும்பினேர் இன்மொழிக் காரிகை பங்கென
விரும்பினார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



உதிக்கின்ற செஞ்ஞாயிறுபோல் செம்மேனியர்; பெரிய பிணிகளைத் தீர்க்கும் மருந்து அவர்; கரும்பைப்போல் இனிய மொழி பேசும் உமையைத் தம் மேனியில் ஒரு புறம் பங்காக விரும்பியவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.


(சுந்தரர் தேவாரம் - 7.96.2 - "பொன்னானே ... செக்கர்வா னத்திள ஞாயி றன்னானே பரவையுண் மண்டளி அம்மானே" - .... செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே ....);



4)
நாதனார் கானிடை நடிப்பவர் தோடணி
காதனார் நெற்றியிற் கண்ணினார் ஆலமர்
போதனார் சடையினிற் புனலினார் பொய்யிலா
வேதனார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



கானிடை நடிப்பவர் - சுடுகாட்டில் திருநடம் செய்பவர்;
தோடு அணி காதனார் - ஒரு காதில் தோட்டை அணியும் அர்த்தநாரீஸ்வரர்; (சம்பந்தர் தேவாரம் - 2.113.6 - "தோடிலங்குங் குழைக்காதர்...");
ஆல் அமர் போதனார் - கல்லால மரத்தின்கீழ் அறம் சொல்லும் ஞானவடிவினர்;



5)
கடையுநாள் தோன்றிய கார்விடம் உண்டவர்
இடையுமாய் ஆதியாய் ஈறுமாய் நின்றவர்
சடையினார் கொன்றையந் தாரினார் பாயுமால்
விடையினார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



பாற்கடலைக் கடையும் போது எழுந்த கரிய நஞ்சை உண்டவர்; முதலும் நடுவும் முடிவும் ஆனவர்; (காலத்தைக் கடந்தவர்); சடையை உடையவர்; அழகிய கொன்றை மாலையை அணிந்தவர்; பாய்ந்து செல்லும் பெரிய இடப ஊர்தியை உடையவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.


(சம்பந்தர் தேவாரம் - 3.114.1 - "பாயுமால்விடை மேலொரு பாகனே");



6)
பேணியார் பேசினும் பேரருள் செய்துயர்
ஏணிபோல் நின்றுவான் ஏற்றிடும் ஏற்றனார்
வாணிலா வோடரா வன்னிகூ விளந்திகழ்
வேணியார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



பேணுதல் - போற்றுதல்;
பேசுதல் - புகழ்தல்;
உயர் ஏணி - உயர்ந்த ஏணி; உயர்த்தும் ஏணி;
ஏற்றன் - இடபவாகனன்;
வாணிலாவோடரா - வாள் நிலாவோடு அரா - ஒளிவீசும் சந்திரனும் பாம்பும்;
வன்னி - வன்னி இலை;
கூவிளம் - வில்வம்;
வேணி - சடை;


எத்தகைய தீவினையாளரே ஆயினும் போற்றித் துதிப்பார்கள் ஆவாரேல் அவர்களுக்கு மிகவும் இரங்கி, ஓர் ஏணிபோல் அவர்களை வானுலகத்திற்கு ஏற்றி அருள்வார்; இடபவாகனர்; ஒளி வீசும் சந்திரனும், பாம்பும், வன்னி இலையும், வில்வமும் திகழும் சடையை உடையவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.


(சம்பந்தர் தேவாரம் - 3.49.7 -
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.
-- ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர்.)



7)
தரித்தவர் சடைமிசைத் தண்மதி வெங்கரி
உரித்தவர் முப்புரம் ஒள்ளழல் வாய்ப்படச்
சிரித்தவர் சேவமர் செல்வனார் நான்மறை
விரித்தவர் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



வெங்கரி - கொடிய யானை; ஒள்ளழல்வாய்ப் பட - தீயில் அழிய; சே - எருது; விரித்தவர் - விளக்கியவர்;
சடைமேல் குளிர்ந்த சந்திரனைத் தாங்கியவர்; கொடிய யானையின் தோலை உரித்தவர்; முப்புரங்களும் தீப்புக்குச் சாம்பலாகச் சிரித்தவர்; இடபவாகனம் உடைய செல்வர்; (கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து) நால்வேதங்களையும் விளக்கியவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.



8)
மடத்தினால் மலையசை வல்லரக் கன்தனை
அடக்கினார் ஆர்த்தழப் பேரருள் செய்தவர்
இடத்திலோர் பெண்ணினார் ஏர்மலி நன்மணி
மிடற்றினார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



மடம் - அறியாமை;
வல் அரக்கன் - கொடிய வலிய அரக்கன்;
ஆர்த்து அழப் பேர் அருள் செய்தவர் - கூக்குரலிட்டுப் பலகாலம் அவன் அழுததால் இராவணன் என்ற பெயர் ஏற்படச் செய்தவர்; அவன் அழுது தொழ, அவனுக்கு நாளும் வாளும் கொடுத்துப் பெரிதும் அருள்செய்தவர்;
ஏர் - அழகு;
மணி மிடற்றினார் - மணிகண்டர் - நீலகண்டர்;


இராவணன் - (रावण - Crying, screaming; रावणः - Daśagrīva (தசக்ரீவன் - பத்துத் தலையன்) - On one occasion he tried to uplift the Kailāsa mountain, but Śiva pressed it down so as to crush his fingers under it. He, therefore, hymned Śiva for one thousand years so loudly that the God gave him the name Rāvaṇa and freed him from his painful position.)


(சம்பந்தர் தேவாரம் 1.11.8 -
முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடம்தோள்இற ஊன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடும் கொடுத்த
மின்னிற்பொலி சடையான்இடம் வீழிம்மிழ லையே.
--- பேர் - மலைக்கீழ் அகப்பட்டு அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்; கீர்த்தியுமாம் );



9)
கமலனும் கண்ணனும் கழல்முடி நேடெரி
எமவினைத் தொடரறுத் தினிதருள் என்றிடும்
தமரெலாம் இன்புறத் தண்ணருள் நல்கிடும்
விமலனார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



கமலன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்;
கண்ணன் - திருமால்;
நேடு எரி - தேடிய சோதி;
எம - எம் + - எங்களுடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);
(சம்பந்தர் தேவாரம் - 3.1.1 - 'ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் ... அருளாய் சுருங்க எம தொல்வினையே');
தமர் - அடியவர்கள்;


திருமாலும் பிரமனும் அடியும் முடியும் தேடிய சோதி; "எங்களது வினைத்தொடரை அறுத்து இன்னருள் புரியாய்" என்று தொழும் அடியவர்கள் எல்லாம் இன்புறுமாறு அவர்களுக்குக் குளிர்ந்த அருளை அளிக்கும் விமலனார் சிவபெருமான். அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.



10)
விழித்திடாக் கண்ணினார் வெண்பொடி பூசிடார்
பழித்தலே தொழிலினார் பசப்பினில் வீழ்ந்திடேல்
வழுத்துவார்க் கன்பினன் மன்மதன் பொடிபட
விழித்தமான் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



பசப்புதல் - இன்முகம் காட்டி ஏய்த்தல்;
வழுத்துதல் - துதித்தல்;
பொடிபடுதல் - சாம்பல் ஆதல்;
மான் - மான், 'மகான்' என்பதன் திரிபு. மகான் - பெரியோன்; சிவன்;
(மான் - பெரியோன். சிவபெருமானை வடமொழி 'மகாதேவன்' என்றும், தமிழ்மொழி 'பெரியோன்' என்றும் கூறும்);
(
சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - ஏகபாதம் - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்");


திறவாத கண்களை உடையவர்கள்; (கண்ணிருந்தும் குருடர்கள்); திருநீற்றைப் பூசாதவர்கள்; எப்பொதும் பழிமொழிகளே பேசுவார்கள்; அவர்களது வஞ்சவலையில் வீழவேண்டா; துதிப்பவர்களுக்கு அன்பு உடையவன்; காமன் சாம்பல் ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவன் சிவபெருமான்; அப்பெருமான் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.



11)
ஆக்கினார் உலகெலாம் அஞ்சடை யிற்புனல்
தேக்கினார் செந்தமிழ் பாடுவார் தீவினை
போக்கினார் கச்செனப் புற்றரா ஒன்றினை
வீக்கினார் மேவிடம் வெஞ்சமாக் கூடலே.



அஞ்சடை - அம் சடை - அழகிய சடை;
கச்சு - அரைக்கச்சு - அரைப்பட்டிகை (Belt, girdle, sash, cummerbund);
புற்றரா - புற்று + அரா - புற்றில் வாழும் பாம்பு; ('புற்றரா' என்றது இனம்பற்றி);
வீக்குதல் - கட்டுதல் (To tie up, bind);


எல்லா உலகங்களையும் படைத்தவர்; அழகிய சடையில் கங்கையைத் தேக்கியவர்; தேவாரம் திருவாசகம் முதலிய செந்தமிழைப் பாடும் பக்தர்களின் தீவினைகளை எல்லாம் தீர்த்தவர்; அரையில் கச்சாக ஒரு பாம்பைக் கட்டியவர்; அப்பெருமானார் விரும்பி உறையும் தலம் வெஞ்சமாக்கூடல்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) யாப்புக் குறிப்பு:
கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "விளம் விளம் விளம் விளம்" என்ற வாய்பாடு;
தானனா என்பது தனதனா என்றும் வரலாம்;
2) சம்பந்தர் தேவாரம் - 3.29.1 -
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி உண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
3)
வெஞ்சமாக்கூடல் (வெஞ்சமாங்கூடலூர்) - விகிர்தேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=88
திருவெஞ்சமாக்கூடல் - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=263

------------ ------------------

No comments:

Post a Comment