Saturday, February 6, 2016

02.70 – வைகாவூர் (திருவைகாவூர்)

02.70 – வைகாவூர் (திருவைகாவூர்)



2012-12-30
திருவைகாவூர்
------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் 2.48.1 - கண்காட்டு நுதலானும்)



1)
ஆழமிகு கடலெழுந்த ஆலமுண்ட கண்டத்தாய்
ஏழையொரு பங்கமரும் எம்பெருமான் வினைக்குழியில்
வீழமிக விரைவேனை மெய்ந்நெறியிற் சேர்த்தருளாய்
வாழையொடு தாழைமலி வைகாவூர் மேயவனே.



அமர்தல் - விரும்புதல்;
தாழை - தென்னை;
(சம்பந்தர் தேவாரம் - 3.79.2 - "...வண்கடலெ ழுந்தவிட முண்டசிவன் வாழுமிடமாம் ...");
ஆழம் மிகு கடல் எழுந்த ஆலம் உண்ட கண்டத்தாய் - ஆழமான கடலில் விளைந்த ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனே;
ஏழைரு பங்கு அமரும் எம்பெருமான் - பார்வதியை ஒரு பங்காக விரும்பும் எம்பெருமானே;
வினைக்குழியில் வீழ மிக விரைவேனை மெய்ந்நெறியிற் சேர்த்தருளாய் - வினை என்ற குழியில் விழுவதற்கே விரையும் என்னை உண்மைநெறியில் சேர்த்து அருள்வாயாக;
வாழையொடு தாழை மலி வைகாவூர் மேயவனே - வாழையும் தென்னையும் மிகுந்த தோட்டங்களும் சோலைகளும் திகழும் திருவைகாவூரில் விரும்பி உறைகின்ற சிவபெருமானே;



2)
எதிர்புரங்கள் மூன்றினையும் இமைப்பொழுதில் எரித்தவனே
கதிர்மதியக் கண்ணியொடு கங்கையையும் முடிவைத்தாய்
அதிபதியே அடியேனை அன்புநெறிச் சேர்த்தருளாய்
மதிதடவும் வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



எதிர்புரங்கள் - எதிர்த்த முப்புரங்கள்; (வினைத்தொகை);
கதிர்மதியம் - ஒளி வீசும் சந்திரன்; (கதிர் - கிரணம்; ஒளி);
கண்ணி - தலையில் அணியும் மாலை;
அதிபதி - தலைவன்;
அன்புநெறி - காதல்வழி; பக்திமார்க்கம்; சிவநெறி;
மதிதடவும் வண்பொழில்சூழ் - திங்கள் வந்து தொடுமாறு உயர்ந்த, வளம் மிக்க சோலைகள் சூழ்ந்த;
(திருமந்திரம்: 10.3.12.1 - மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை:
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதரும்
காதல் வழிசெய்து காக்கலு மாமே. )
(திருமந்திரம்: 10.1.21.1 - முதல் தந்திரம் - 21. அன்புடைமை:
"அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்...")



3)
கண்டார்க்குக் கற்பகத்தின் கனியொப்பாய் உலகெல்லாம்
உண்டாக்கிக் காத்தொடுக்கும் ஒருவாமுன் மதுரையினில்
மண்டூக்கிப் புண்சுமந்தாய் வந்தென்னை ஏன்றுகொளாய்
வண்டார்க்கும் வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



கண்டார்க்குக் கற்பகத்தின் கனி ஒப்பாய் - (சேந்தனார் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்....);
ஒருவா - ஒருவனே - ஒப்பற்றவனே; (அப்பர் தேவாரம் - 5.13.4 - "முத்தனே முதல்வா.... ஒருவா உரு வாகிய சித்தனே...");
உலகு எல்லாம் உண்டாக்கிக் காத்து ஒடுக்கும் ஒருவா - எல்லா உலகங்களையும் படைத்துக் காத்துப் பின் ஒடுக்குதலைச் செய்யும் ஒப்பற்றவனே;
மண்டூக்கி - மண் தூக்கி;
முன் மதுரையினில் மண் தூக்கிப் புண்சுமந்தாய் - முன்னர் மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டவனே;
ஏன்றுகொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல்;
வண்டு ஆர்க்கும் வண் பொழில் - வண்டுகள் ஒலிக்கும், வளம் மிக்க சோலை;



4)
கோளரவக் கச்சினனே கொன்றைமலர் உச்சியினாய்
காளமலி கண்டத்தாய் காரிகையோர் பங்குடையாய்
வேளழிய விழித்தவனே மெய்ந்நெறியிற் சேர்த்தருளாய்
வாளைகுதி வயல்புடைசூழ் வைகாவூர் மேயவனே.



கோள் அரவக் கச்சினன் - கொடிய பாம்பை அரைக்கச்சாக அணிந்தவன்;
கொன்றைமலர் உச்சியினாய் - திருமுடிமேல் கொன்றைப்பூவை அணிந்தவனே;
காளம் மலி கண்டத்தாய் - கருமை/விடம் திகழும் கண்டத்தை உடையவனே;
காரிகை - பெண்;
வேள் அழிய விழித்தவனே - காமன் எரிய நெற்றிக்கண்ணால் நோக்கியவனே;
வாளைகுதி வயல்புடைசூழ் - வாளைமீன்கள் தாவும் நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த;



5)
உருவாரும் அறியாதாய் உருவெல்லாம் ஆயவனே
தருவாரென் றளியாதார் தமைநாடி இழியாமல்
திருவாரும் செந்நெறியிற் சிறியேனைச் சேர்த்தருளாய்
மருவாரும் வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



உரு ஆரும் அறியாதாய் - யாருக்கும் அறிய ஒண்ணாத திருவுரு உடையவனே; (அப்பர் தேவாரம் - 5.79.4 - "தன்னுருவை ருவர்க் கறிவொணா மின்னுருவனை");
உரு எல்லாம் ஆயவனே - (அப்பர் தேவாரம் - 6.11.7 - "உரையார் பொருளுக் குலப்பி லானை ழியாமே எவ்வுருவும் ஆனான் தன்னைப்");
அளியாதார்தமை - மனம் இரங்காதவர்களை (அளிதல்); கொடாதவர்களை (அளித்தல்);
திருரும் செந்நெறி - திருப் பொருந்தும் நன்னெறி;
மரு ஆரும் வண் பொழில் - மணம் கமழும் வளம் மிக்க சோலை;



6)
கணம்புடைசூழ்ந் திசைபாடக் கானிலரு நடமாடீ
பணம்சடைமேற் புனைவோனே பார்த்தனுக்குப் படையருளும்
குணம்உடையாய் கொடுவினைகள் குறுகாமற் காத்தருளாய்
மணம்கமழும் வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



கணம் புடைசூழ்ந்து இசைபாடக்- பூதகணங்கள் எல்லாப் பக்கமும் சுற்றிநின்று இசைபாட;
கானில் அருநடம் ஆடீ - சுடுகாட்டில் அரிய கூத்து இயற்றுபவனே;
பணம் - நாகப்பாம்பு ;
புனைதல் - அணிதல்;
பார்த்தனுக்குப் படை அருளும் குணம் உடையாய் = அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருளியவனே; (படை - ஆயுதம்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.10 - "கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்" - விசையற்கு - அர்ச்சுனனுக்கு);
குறுகுதல் - அணுகுதல்;



7)
நீர்பொழியும் சடைமீது நிலாத்திங்கள் புனைந்தவனே
சீர்மொழியும் அன்பர்க்குச் சிவலோகம் தருவோனே
கூர்மழுவும் உடையாய்என் கொடுவினைகள் தீர்த்தருளாய்
வார்பொழில்கள் புடைசூழும் வைகாவூர் மேயவனே.



நிலா - சந்திரனது ஒளி; (அப்பர் தேவாரம் - 6.25.9 - "நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் ...");
சீர் மொழியும் - புகழ் பாடும்;
கூர்மழுவும் உடையாய் - கூர்மை மிக்க மழுவாயுதத்தையும் ஏந்தியவனே;
வார்பொழில்கள் - நீண்ட சோலைகள்;



8)
மையொத்த வண்ணத்து வல்லரக்கன் மலைக்கீழே
நையத்தான் விரலூன்றி நாளொடுவாள் அருள்செய்தாய்
ஐயத்தைச் சிரமேற்பாய் அடியேன்செய் வினைதீராய்
வையத்தோர் வந்தேத்தும் வைகாவூர் மேயவனே.



மை - கண்ணுக்கிடும் அஞ்சனம்; கருநிறம்; கருமேகம்;
மை ஒத்த வண்ணத்து வல் அரக்கன் - மையைப் போன்ற கரிய நிறத்து மேனி உடைய கொடிய இராவணன்;
(சம்பந்தர் தேவாரம் - 3.10.3 - "மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் கானதில் வவ்விய காரரக்கன்...." - கார் அரக்கன் - கரிய இராவணன்);
நைதல் - நசுங்குதல்; வாடுதல்;
நாளொடு வாள் அருள்செய்தாய் - அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் கொடுத்தவனே;
ஐயத்தைச் சிரம் ஏற்பாய் - பிச்சையைப் பிரமன் மண்டையோட்டில் ஏற்பவனே;



9)
பூசலிடு மாலயனார் பொன்னடியும் மேல்காணார்
நேசமலி பூசலவர் நெஞ்சத்தில் நின்றவனே
ஆசைமலி அகத்தேனின் அல்லலறுத் தருள்புரியாய்
வாசமலி வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



பூசல் இடு - பேரொலி செய்த; வாதிட்ட; (பூசல் - பேரொலி - Clamour, loud uproar);
(திருப்பல்லாண்டு - 9.29.5 - "புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்ப..." - இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய்,....);
மால் அயனார் - திருமாலும் பிரமனும்;
பொன்னடியும் மேல் - உம்மைத்தொகை - பொன்னடியும் மேலும் - அடியும் முடியும்;
நேசம் மலி பூசல் அவர் - பக்திமிக்க பூசலார் நாயனார்; ('பூசல் அவர்' என்பதில் 'அவர்' என்பதைப் பகுதிப்பொருள்விகுதியாகக் கொள்ளலாம்.)
இலக்கணக் குறிப்பு: பகுதிப்பொருள்விகுதி - தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி (Expletive suffix; suffix added on to a word without changing its sense);


* இப்பாடலில் முதல் ஈரடிகளை ('மால் அயன் அடிமுடி தேடியது, பூசலார் உள்ளக்கோயிலில் உறைந்தது') தனித்தனியேயும் பொருள்கொள்ளலாம்; ஒன்றாகச் சேர்த்து நோக்கியும் பொருள்கொள்ளலாம்.
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.1.10 -
"நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.")
--------------- some Q&A on this song ---------
Q: Ananth: "பூசலாரைப் பூசலவர் என்று குறிப்பிடுவதுண்டா?"
A: திருமுறைப்பாடல்களில் பூசலாரைப் பூசல் என்று குறிப்பிடக் காணலாம்.
7.39.11 - திருத்தொண்டத்தொகை :
"மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்..."
மன்னியசீர்ப் - பூசல் என்று கூட்டுக. நாவன் - வாக்கினையுடையவன்; நின்றவூர் - நாயனாரது பதி; பூசல் - நாயனாரது பெயர்.
12.65 - பெரியபுராணம் - பூசலார் நாயனார் புராணம்:
நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளைநாம் புகுவோம் ....


.... சிவன் அவன் என் சிந்தையுள்..., (சிவபுராணம்)
(குறிப்புரையிற் காண்பது: "சிவனவன்" என்றதில் 'அவன்', பகுதிப் பொருள் விகுதி. 'சிவன்' என்பதில் விகுதியும் உளதேனும், விகுதிமேல் விகுதி வருமிடத்து, முன்னை விகுதியும் பகுதிபோலக் கொள்ளப்படுமாறு அறிந்துகொள்க. )


....செம்பொற்றாளம் ஐயர் அவர் திருவருளால் .... (பெரியபுராணம்)


'பூசல் அவர்' என்ற பிரயோகம் இவற்றை ஒத்தது. 'அவர்' என்பதைப் பகுதிப்பொருள்விகுதியாகக் கொள்ளலாம்.
Closure: Ananth: ஒருவர்/ஒன்றன் பெயருக்குப் பின் அவர்/ஆர்/அது விகுதிகள் வருவது உகந்ததே.



10)
அஞ்செழுத்தை ஓதாமல் அவக்குழிக்கே அழைக்கின்ற
வஞ்சகர்க்குச் சேயானே மணிகண்டா வழுத்திமகிழ்
நெஞ்சருக்கு வல்வினைகள் நீக்கியின்பம் நிகழ்விப்பாய்
மஞ்சணவும் வண்பொழில்சூழ் வைகாவூர் மேயவனே.



சேயான் - தொலைவில் இருப்பவன்;
வழுத்தி மகிழ் நெஞ்சருக்கு வல்வினைகள் நீக்கி இன்பம் நிகழ்விப்பாய் - உன்னைத் துதித்து மகிழும் மனம் உடைய பக்தர்களுக்கு வலிய வினைகளைத் தீர்த்து இன்பம் விளைப்பவனே;
மஞ்சு அணவும் வண் பொழில் - மேகம் வந்து தழுவும், வளம் மிக்க சோலை;



11)
நிரைகொன்றை பிறைமதியம் நீரரவம் முடிவைத்தாய்
திரைகின்ற கடல்தன்னில் திரள்நஞ்சை மிடற்றிட்டாய்
புரையொன்றும் இலாய்போற்றி புகழ்பாடும் அடியார்க்கு
வரையின்றி வரமருளும் வைகாவூர் மேயவனே.



நிரைகொன்றை - வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலை;
திரைதல் - அலையெழுதல்;
புரை - குற்றம்; ஒப்பு;
வரை - அளவு;


* போற்றி என்ற சொல்லைப் பாடலின் இறுதியில் கொண்டு பொருள்கொள்க.


வரிசையாகத் தொடுத்த கொன்றைமாலையையும், பிறைச்சந்திரனையும், கங்கையையும், பாம்பையும் திருமுடிமேல் அணிந்தவனே; அலையெழும் கடலில் திரண்ட விடத்தைக் கண்டத்தில் வைத்தவனே; குற்றமற்றவனே; ஒப்பற்றவனே; திருப்புகழைப் பாடும் அடியவர்களுக்கு அளவின்றி வரம் அருளும் வைகாவூர் ஈசனே; போற்றி.


(அப்பர் தேவாரம் - 4.77.3 -
விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி கும்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் றல் ஆகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்
அளப்பில கீதம் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே.
- பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் அளவு இல்லாதன.)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
  • நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
  • அடிதோறும் 4 காய்ச்சீர்கள் ; விளச்சீர்களும் வரலாம்;
  • ஒரோவழி (சில இடங்களில்) மாச்சீர் வரலாம்; அப்படி மாச்சீர் வரின் அதனை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;
2) சம்பந்தர் தேவாம் - 2.41.1 -
பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூரும் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்தன் டிநினைந்து
மாலூரும் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.
3) வைகாவூர் (திருவைகாவூர்) - வில்வவனேசுவரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=395
வைகாவூர் (திருவைகாவூர்) - தேவாரம் ஆர்க் தளத்தில் : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=275

-------------- --------------

No comments:

Post a Comment