Sunday, January 3, 2016

02.56 – பொது - (மெய்யானான் போற்றி)

02.56 – பொது - (மெய்யானான் போற்றி)

2012-09-11
பொது
மெய்யானான் போற்றி
----------------------------
(18+1 = 19 பாடல்கள்; எதுகையில் மெய்யெழுத்துகள் (க் முதல் ன் வரை) + ஆய்த எழுத்து))
(முன்னர் 2011-04-30 -இல் எழுதிய அ முதல் ஔ வரை உயிரெழுத்துகளில் தொடங்கும் 12 பாடல்கள் அடங்கிய "உயிரானான் போற்றி" என்பதைத் தொடர்ந்து இப்போது மெய்யெழுத்துகள் வரிசை. முன்னர் இட்ட "உயிரானான் போற்றி" என்ற அப்பதிகத்தை இங்கே காணலாம்: 2.17 உயிரானான் போற்றி: http://madhisudi.blogspot.com/2015/08/0217.html)


(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் 2.66.1 - மந்திர மாவது நீறு)

1)
நாக்கொடு நாமமு ரைக்கும்
.. நல்லவர்க் கின்னருள் செய்து
காக்கிற கழலடி யாலே
.. காலனை நெஞ்சிலு தைத்தான்
தீக்கணை யாற்புரம் மூன்றைச்
.. செற்றவன் சடையிடை ஆற்றைத்
தேக்கிடு வானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



செற்றவன் - அழித்தவன்;


தம் நாவினால் திருவைந்தெழுத்தைச் சொல்லும் நல்லவர் மார்க்கண்டேயர்க்கு இனிய அருள் செய்து, காக்கும் திருவடியால் எமனை மார்பில் உதைத்தவன்; எரிக்கும் அஸ்திரத்தால் முப்புரங்களை அழித்தவன்; சடையினுள் கங்கையைத் தேக்கியவனான ஈசன் திருவடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



2)
தேங்கமழ் பூவினை இட்டுச்
.. சேவடி தொழுதெழு வாரைத்
தாங்குவான் சங்கரன் தாய்போல்
.. சடையிடைக் கங்கைக ரந்தான்
மூங்கிலார் தோளியொர் பங்கன்
.. முடிமிசை வெண்பிறை சூடி
தீங்கிலா தானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



தேம் கமழ் - தேன்மணம் கமழும்;
கரத்தல் - ஒளித்தல்;
ஆர்தல் - ஒத்தல்;
மூங்கில் ஆர் தோளி - மூங்கிலைப் போன்ற தோள்கள் உடைய பார்வதி; (சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - "வேயுறு தோளிபங்கன் ...." - மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவன்);
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
சூடி - சூடுபவன்;



3)
பூச்சியன் நால்வருக் கையம்
.. போக்கிட ஆலமர் செல்வன்
ஈச்சுர னேயருள் என்ற
.. இமையவர்க் காவிடம் உண்டான்
பூச்சரம் போல்முடி மீது
.. போழ்மதி யம்புனை எம்மான்
தீச்சடை யானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



பூச்சியன் - பூஜ்யன் - பூசிக்கத்தக்கவன்;
நால்வர் - சனகாதியர்;
ஐயம் - சந்தேகம்;
ஆல் அமர் செல்வன் = கல்லால மரத்தின்கீழ் அமர்ந்தவன் - தக்ஷிணாமூர்த்தி;
ஈச்சுரனே - ஈஸ்வரனே;
இமையவர்க்கா - தேவர்களுக்காக; (கடைக்குறையாக வந்தது);
போழ் மதியம் - பிறைச்சந்திரன்;
தீச்சடையான் - தீயைப் போன்ற சிவந்த சடையினன்;
(சம்பந்தர் தேவாரம் - 2.18.9 - “எரியார் சடையும் அடியும்” - எரி ஆர் சடை - நெருப்பைப்போலும் சிவந்த சடை);



4)
குஞ்சியிற் கூவிளம் வன்னி
.. கொக்கிற கும்புனை கோமான்
நஞ்சினை உண்டிருள் கண்டன்
.. நம்பிடும் அடியவர் நெஞ்சில்
சஞ்சலம் தீர்த்தருள் சம்பு
.. தையலைப் பங்கமர் கின்ற
செஞ்சடை யானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



குஞ்சி - ஆடவர் தலை மயிர். அது ஆகுபெயராய்த், தலையைக் குறித்தது.
கூவிளம் - வில்வம்;
கொக்கிறகு - (சுந்தரர் தேவாரம் - 7.94.3 - "கோல அரவுங் கொக்கின் இறகும்" - சிவபெருமான் கொக்குருவம் கொண்ட குரண்டாசுரன் என்ற அசுரனை அழித்து, அதன் அடையாளமாகக் கொக்கிறகைச் சடையில் அணிந்தமையைக் கந்தபுராணத்துட் காண்க. இனிக், 'கொக்கிறகு' என்பதொரு மலரும் உண்டு);
கோமான் - அரசன்; பெருமையிற் சிறந்தவன்;
நம்புதல் - விரும்புதல்;
சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்;
அமர்தல் - விரும்புதல்;



5)
கொட்டுமா முழவுகள் ஆர்ப்பக்
.. கூளிகள் சூழ்ந்திசை பாட
நட்டமா டிடமெனக் கானை
.. நயப்பவர் நான்மறை நாவர்
மட்டுவார் குழலியைப் பாகம்
.. மகிழ்பவர் வானவர் போற்றும்
சிட்டனார் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



கொட்டுதல் - வாத்திய முழக்குதல் (To beat, as a drum, a tambourine);
மாமுழவு - பெரிய முழவு என்னும் வாச்சியம்;
ஆர்ப்ப - ஒலிக்க;
கூளி - குறட்பூதகணம்;
மட்டுவார் குழலி - வாசம் கமழும் நீண்ட குழலை உடைய உமாதேவி; (,மட்டு - வாசனை; தேன்);
நட்டம் - திருநடம்;
கான் - சுடுகாடு;
சிட்டனார் - உயர்ந்தவர் - சிவன்;
(இலக்கணக் குறிப்பு: நாவர், மகிழ்பவர், சிட்டனார் என்று பன்மையிற் சொல்லிச் சிவபெருமான் என்றது ஒருமை பன்மை மயக்கம்);


கொட்டுகிற பெரிய முழவுகள் ஒலிக்கக், குறட்பூதங்கள் சுற்றிநின்று இசைபாடத், திருநடம் செய்யும் இடம் என்று சுடுகாட்டை விரும்புபவர்; நால்வேதம் பாடும் நாவினர்; வாசம் கமழும் நீண்ட குழலை உடைய உமாதேவியை ஒரு பங்காக உடையவர்; தேவர்கள் போற்றும் உயர்ந்தவரான ஈசனாரின் சிவந்த திருவடிளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்;



6)
கண்பொலி நெற்றியன் அம்பெய்
.. காமனைப் பொடிபட நோக்கி
பண்பொலி பாடல்கள் பாடும்
.. பத்தரைப் புரந்தருள் செய்வான்
விண்பணிந் தேத்தவி ரங்கி
.. விரவலர் புரமெரி வெற்புத்
திண்சிலை யானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



பொலிதல் - திகழ்தல்;
நோக்கி - நோக்கியவன்;
பண் பொலி பாடல்கள் - பண்ணோடு கூடிய தேவாரம் திருவிசைப்பா முதலிய பாடல்கள்;
புரத்தல் - காத்தல்;
விண் - தேவர்கள்;
விரவலர் - பகைவர்;
வெற்பு - மலை;
சிலை - வில்;


கண் திகழும் நெற்றியை உடையவன்; அம்பு எய்த மன்மதனைச் சாம்பலாகும்படி நோக்கியவன்; பண்ணோடு பொருந்திய தேவாரம், திருவிசைப்பா, திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடிப் போற்றும் பக்தர்களைக் காத்தருள்பவன்; தேவர்கள் தொழுது போற்ற அவர்களுக்கு இரங்கிப், பகைவர்களது முப்புரங்களை எரித்த, மேருமலை என்ற வலிய வில்லை ஏந்தியவன் திருவடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



7)
கைத்தவி டத்தினை உண்டு
.. கருமணி போல்திகழ் கண்டன்
கத்தலை நதியினைச் சூடி
.. கடியவெள் ஏறமர் எம்மான்
முத்தலைச் சூலமொன் றேந்தி
.. முன்னவன் முடிவிலா இன்பன்
சித்துரு வன்னடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



கைத்த விடம் - கசப்பான நஞ்சு;
கத்து அலை நதி - ஒலிக்கும் அலைகளை உடைய கங்கை;
கடிய வெள் ஏறு அமர் எம்மான் - விரைந்து செல்லும் வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பும் எம் இறைவன்;
முத்தலைச்சூலம் ஒன்று ஏந்தி - திரிசூலத்தை ஏந்தியவன்;
முன்னவன் - ஆதி;
முடிவிலா இன்பன் - நித்தியன் ஆனந்தன்;
சித்து உருவன் - சித்ஸ்வரூபி - அறிவு வடிவானவன்;
உருவன்னடி - உருவன் அடி - னகர ஒற்று விரித்தல் விகாரம்;



8)
வந்தரு வரையையி டந்த
.. வல்லரக் கன்முடி பத்தும்
சிந்திடத் திருவிரல் வைத்தான்
.. சேயிழை யாளொரு கூறன்
தொந்தம றுத்திட வேண்டித்
.. துதிசெயும் ஞானியர் தங்கள்
சிந்தையி னானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



பதம் பிரித்து:
வந்து அரு வரையை இடந்த .. வல் அரக்கன் முடி பத்தும்
சிந்திடத் திருவிரல் வைத்தான் .. சேயிழையாள் ஒரு கூறன்
தொந்தம் அறுத்திட வேண்டித் .. துதிசெயும் ஞானியர் தங்கள்
சிந்தையினான் அடி போற்றி .. சிவபெருமான் அடி போற்றி.


அரு வரை - அரிய மலை - கயிலை;
இடத்தல் - பெயர்த்தல்;
சிந்துதல் - அழிதல்;
சேயிழையாள் - பெண் - பார்வதி;
தொந்தம் - துவந்துவம் - இரட்டை; தம்முள் மாறுபட்ட இருவகைநிலை (Pair of opposites, as cold and heat, profit and loss, joy and sorrow); - இருவினை;



9)
முப்புரம் செற்றவன் தீயாய்
.. முளைத்திரு வர்க்கரி தானான்
அப்பனும் அம்மையும் ஆகி
.. அடியவர்க் கருள்புரி அண்ணல்
அப்பெரு மணத்திலா ரூரர்
.. அடிமையென் றாவணம் காட்டிச்
செப்பிய வன்னடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



பதம் பிரித்து:
முப்புரம் செற்றவன் தீயாய் .. முளைத்து இருவர்க்கு அரிது ஆனான்
அப்பனும் அம்மையும் ஆகி .. அடியவர்க்கு அருள்புரி அண்ணல்
அப்-பெரு மணத்தில் ஆரூரர் .. அடிமை என்று ஆவணம் காட்டிச்
செப்பியவன் அடி போற்றி .. சிவபெருமான் அடி போற்றி.


பெரு மணம் - பெரிய விவாகம்;
ஆரூரர் - சுந்தரர்;
ஆவணம் - உரிமைப்பத்திரம் (Bond, deed);
செப்பியவன்னடி - செப்பியவன் அடி - னகர ஒற்று விரித்தல் விகாரம்;



10)
எம்பிரான் இணையடி ஏத்தா
.. திழிமொழி தன்னையே பேசி
வம்பராய் உழல்பவர் சொல்லை
.. மதியுளோர் மதித்திட மாட்டார்
நம்புவார் தமக்கர ணாகும்
.. நல்லவன் அம்பவ ளம்போற்
செம்பெரு மானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இழிமொழி - பழிச்சொற்கள்;
வம்பர் - வீணர்; துஷ்டர்;
நம்புதல் - விரும்புதல்;
அரண் - பாதுகாவல்; கவசம்;
அம் பவளம் போல் செம்பெருமான் - அழகிய பவளம் போன்ற செம்மேனி உடைய பெருமான்;
(திருவாசகம் - வாழாப்பத்து - 8.28.2 - "...செம்பெரு மானே சிவபுரத் தரசே ...");



11)
மெய்யினில் நீற்றினைப் பூசி
.. விரைமலர் தூவிவ ணங்கி
மெய்ம்மையுள் நிற்கிற அன்பர்
.. வினைகளைக் களைந்தருள் செய்வான்
நெய்யொடு பால்தயிர் ஆடி
.. நேரிழை பங்கினன் எல்லாம்
செய்யவல் லானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



மெய் - உடல்;
மெய்ம்மையுள் நிற்கிற அன்பர் - சத்தாகிய இறைவனது தன்மையின்கண், பிறழாது நிற்கும் இயல்புடைய பக்தர்கள்;
விரைமலர் - வாசமலர்;
நெய்யொடு பால் தயிர் ஆடி - நெய், பால், தயிர் முதலியவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;
நேரிழை - பெண் - பார்வதி;
எல்லாம் செய்ய வல்லான் - சர்வவல்லமை உடையவன் (Omnipotent);


(சம்பந்தர் தேவாரம் - 1.50.4 - “மெய்யராகிப் பொய்யைநீக்கி”)
(அப்பர் தேவாரம் - 5.90.3 -
ஆளா கார்ஆள் ஆனாரை டைந்துய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளா தசுரை யோதொழும் பர்செவி
வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே.”)



12)
தேர்ந்தநன் மாமலர் தூவித்
.. திருந்தடிச் சிந்தையர் ஆகிச்
சார்ந்தவர்க் கின்னருள் செய்யும்
.. சங்கரன் தன்னிகர் இல்லான்
ஆர்ந்தநஞ் சுண்டிருள் கண்டன்
.. அயன்சிரம் ஒன்றினில் ஐயம்
தேர்ந்துழல் வானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



தேர்தல் - தெரிந்தெடுத்தல்; ஆய்தல்;
திருந்து அடி - அழகிய அடி;
சார்ந்தவர் - சரண் அடைந்தவர்;
தன்னிகர் இல்லான் - தனக்கு ஒரு நிகர் இல்லாதவன் - ஒப்பற்றவன்;
ஆர்ந்த நஞ்சு உண்டு இருள் கண்டன் - பரவிய ஆலகால விஷத்தை உண்டு கருமை திகழும் நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - பரவுதல் (To spread over));
அயன் சிரம் - பிரமனின் மண்டையோடு;
ஐயம் தேர்தல் - பிச்சை ஏற்றல்;
உழல்தல் - திரிதல்;



13)
வல்லவன் தாளிணைக் கன்பு
.. வைத்தநற் சாக்கியர் வீசும்
கல்லையும் மலரெனக் கொள்வான்
.. கார்முகில் போல்திகழ் கண்டன்
மெல்லிய லாளொரு பங்கன்
.. மின்சடை வீசிநின் றாடும்
தில்லையெம் மானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



* முதல் ஈரடிகள் - சாக்கிய நாயனார் கல்லெறிந்து ஈசனை வழிபட்டதைச் சுட்டியது.
மெல்லியலாள் - மென்மைத்தன்மை வாய்ந்த பெண் - பார்வதிதேவி;
மின்சடை - மின்னலைப் போன்ற சடை;
(11.32.2 - கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - "என்பும் தழுவிய ஊனும்....தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே. ")



14)
எவ்வடி வத்தினை எண்ணி
.. இங்கடி யார்தொழு தாலும்
அவ்வடி வத்தின னாகி
.. அவர்களுக் கிடர்தரு கின்ற
வெவ்வினை தீர்த்தருள் செய்வான்
.. வெள்விடை யான்பவ ளம்போற்
செவ்வுரு வன்னடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



எவ்வடிவத்தினை எண்ணி இங்கு அடியார் தொழுதாலும் - இங்கு அடியவர்கள் எந்த வடிவத்தை எண்ணித் தொழுதாலும் / எந்த வடிவத்தை எண்ணி இங்கு அடியை எத்தகையவர் தொழுதாலும்;
செவ்வுருவன்னடி - செவ்வுருவன் அடி - னகர ஒற்று விரித்தல் விகாரம்;
செவ்வுருவன் - சிவந்த திருமேனியை உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.82.7 - “சைவத்தசெவ் வுருவன்திரு நீற்றன்”);


ஈசனை எந்த வடிவத்தில் எண்ணி வழிபட்டாலும், அவன் அவ்வடிவை ஏற்றுப் பக்தர்களுக்கு அருள்புரிந்து கொடிய வினைகளைத் தீர்ப்பவன்; வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்; பவளம் போன்ற சிவந்த உருவினனான அவன் அடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் அடிகளுக்கு வணக்கம்.


(சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலா - 11.8.7/8 -
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான் ....
--- எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.)





15)
ஆழ்கடல் தன்னிலெ ழுந்த
.. அருவிடம் உண்டிருள் கண்டன்
வீழ்புன லோடிள நாகம்
.. விரைகமழ் கொன்றையம் போது
போழ்மதி யம்தலை மாலை
.. புனைந்தவன் அம்பலத் தாடும்
தாழ்சடை யானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



வீழ் புனலோடு - கங்கையோடு;
விரை கமழ் கொன்றை அம் போது - மணம் வீசும் அழகிய கொன்றை மலர்;
போழ் மதியம் - பிளவுபட்ட திங்கள் - பிறைச்சந்திரன்;
தலைமாலை - மண்டையோடுகளால் ஆன மாலை; (மண்டையோட்டுமாலையைக் "கரோடி / கரோடிகை" என்ற பெயராலும் சொல்வர்); (करोटम् / करोटिः = f. 1 The skull );



16)
கள்ளமொ ழிந்தம னத்தாற்
.. கண்ணுத லான்பெயர் தன்னை
உள்ளிடும் அன்பருக் கென்றும்
.. உயர்வினைத் தந்தருள் செய்வான்
துள்ளிடு மான்மறிக் கையன்
.. தோத்திரம் செய்யிமை யோர்க்குத்
தெள்ளமு தன்னடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



தெள் அமுதன்னடி - னகர ஒற்று விரித்தல் விகாரம்;
கள்ளம் அற்ற மனத்தினால் நெற்றிக்கண்ணன் திருப்பெயரைத் தியானிக்கும் பக்தர்களுக்கு என்றும் மேன்மையைத் தந்தருள்பவன்; துள்ளும் மான்கன்றைக் கையில் ஏந்தியவன்; துதிக்கும் தேவர்களுக்குத் தெளிவான அமுதம் போன்றவனான ஈசன் திருவடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



17)
நற்றவர் நால்வருக் காற்கீழ்
.. நான்மறை விரித்தருள் நாதன்
கற்றவர் இன்தமிழ் பாடக்
.. களிப்பொடு கேட்கிற காதன்
சுற்றிய வான்புரம் மூன்றைச்
.. சுடுகணை ஒன்றினை ஏவிச்
செற்றவன் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஆற்கீழ் - ஆல் கீழ் - கல்லால மரத்தடியில்;
வான் - வானம் (ஆகாயம்); அழகிய; பெரிய; வலிமை;


சனகாதியர் நால்வர்க்குக் கல்லால மரத்தடியில் நால்வேதப் பொருளை விளக்கிய குருநாதன்; இனிய தமிழான தேவார திருவாசகப் பாடல்களைக் கற்றவர் பாட, தனைத் திருச்செவியால் கேட்டு மகிழ்பவன்; வானில் எங்கும் திரிந்த வலிய பெரிய முப்புரங்களை எரிக்கும் அம்பு ஒன்றைச் செலுத்தி அழித்தவனான ஈசன் திருவடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



18)
இன்னிசை ஆர்தமிழ் பாடி
.. ஏத்திடும் தொண்டருக் கன்பன்
துன்னிய தொல்வினை எல்லாம்
.. துடைத்தவர்க் கின்பம ளிப்பான்
மின்னிடை யாளொரு கூறன்
.. வெண்பொடி மேனியன் திங்கட்
சென்னியி னானடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இன்னிசை பொருந்திய திருமுறைப் பாடல்களைப் பாடி வழிபடும் தொண்டர்களுக்கு அன்பன்; அவர்களைப் பொருந்திய பழவினைகளை எல்லாம் தீர்த்து அவர்களுக்கு இன்பம் அளிப்பவன்; மின்னல் போன்ற இடையை உடைய பார்வதியை ஒரு பங்காக உடையவன்; திருநீறு பூசிய உடம்பினன்; சந்திரனைச் சூடிய முடியினனான ஈசன் திருவடிகளுக்கு வணக்கம்; சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



19)
அஃறிணை உயர்திணை என்னும்
.. அத்தனை யாய்வரும் அத்தன்
வெஃகுதல் அற்றவ ராகி
.. விரைகமழ் சொன்மலர் கொண்டு
பஃறொடை யும்புனை வார்க்குப்
.. பரிபவன் மூவிலை ஆரும்
எஃகுடை யானடி போற்றி
.. எம்பெரு மானடி போற்றி.



அஃறிணை - அல் திணை; ( Inferior class of beings, whether animate or inanimate, neuter, opp. to உயர்திணை;)
அத்தனையாய் - அத்தனையுமாகி - எல்லாம் ஆகி;
வெஃகுதல் - அவா; பொறாமை;
விரைகமழ் சொன்மலர் - மணம் வீசும் சொற்களாகிய பூக்கள்;
பஃறொடை - பல் தொடை - பல்விதப் பாமாலைகள்; பஃறொடை வெண்பாவும் ஆம்; (தொடை - மாலை; பாட்டு);
(இலக்கணக் குறிப்பு : ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்: 152. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த ல ள க்கள், அல் வழியில், வருந் தகரந் திரிந்த விடத்து, றகர டகரங்களாகந் திரிதல்லன்றி, ஆய்தமாகவுந் திரியும். - உதாரணம். - கல் + தீது = கற்றீது / கஃறீது)
எஃகு - ஆயுதம் (Weapon in general); வேல்;
மூ இலை ஆரும் எஃகு - மூவிலைச்சூலம் - திரிசூலம்;


எல்லாவித உயிர்களாகவும் சடப்பொருளாகவும் உள்ளவன்; அனைவர்க்கும் தந்தை அவன்; ஆசை, பொறாமை அற்றவராகி மணம் கமழும் சொல்மலர்களால் பலவிதப் பாமாலைகள் புனைந்து போற்றும் அடியவர்க்கு இரங்குபவன்; திரிசூலபாணி திருவடிகளுக்கு வணக்கம்; எம்பிரான் சிவபெருமான் திருவடிகளுக்கு வணக்கம்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • "விளம் விளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு.
  • இது ஓரளவிற்குக் கீழ்க்குறித்துள்ள சம்பந்தர் தேவாரத்தின் அமைப்பை ஒத்து உள்ளது. சம்பந்தர் பதிகத்தில் அரையடிக்குள் வெண்டளை பயிலும். ஆயின், மேலுள்ள என் பதிகம் வெண்டளைக் கட்டுப்பாடு இன்றி அமைந்தது);



2) சம்பந்தர் தேவாரம் - 2.68.2 -
அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.


சம்பந்தரின் இத்தேவாரப் பதிகத்தின் அமைப்பு:
  • "தானன தானன தானா" என்ற அரையடி அமைப்பு.
  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள்; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகள்.
  • அரையடிக்குள் வெண்டளை பயிலும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.
  • அரையடியின் ஈற்றுச் சீர் மாச்சீர்.



3) திருநாவுக்கரசர் தேவாரம் - 5.97 பதிகம் - சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை .
'சிந்திப்பார் மனத்தான்' என்று தொடங்குவதால் இப்பெயர் பெற்றது. முப்பது திருப்பாடல்களைக்கொண்ட சிறப்புடையது. இதனுள் அகரம் முதல் ஔகாரம் வரை பன்னிரண்டு உயிர் எழுத்துகளையும் ககரம் முதல் மெய்யெழுத்துக்களில் பதினான்கு எழுத்துகளையும் , ஆய்த எழுத்தையும் இரண்டாம் பாடல் முதல் 28 வரை உள்ள பாட்டுக்களில் முறையே முதலெழுத்தாய் வரும்படி ஆக்கப்பட்ட சிறப்பும் உடையது.
அப்பர் தேவாரம் - 5.97.1 -
சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தான்அணி ஆர்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னான்அடி
வந்திப் பார்அவர் வானுல காள்வரே.
( - தன்னை நினைப்பவர்கள் மனத்தில் உறைபவன்; சிவன்; மாலையில் திகழும் சிவந்த ஒளி பொருந்திய வானம் போன்ற நிறம் உடையவன்; அழகு நிறைந்த பிறைச்சந்திரனைச் சூடியவன்; முக்கண்ணன்; அப்பெருமான் திருவடிகளை வணங்குபவர்கள் வானுலகை ஆள்வர்.)

----------------- ----------------

No comments:

Post a Comment