Sunday, January 17, 2016

02.62 – பூவனூர்

02.62 – பூவனூர்



2012-10-28
பூவனூர்
-------------------
(சந்தக்கலிவிருத்தம் - 'தான தானன தான தானனா')
(சம்பந்தர் தேவாரம் - 2.28.1 - "தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்...")



1)
தனிவெள் ளேறமர் தாதை மூவிலை
நுனிகொள் வேலினன் நஞ்சை நுங்கிய
புனிதன் மேவிய பூவ னூர்தனை
இனிது போற்றிட என்றும் இன்பமே.



தனி - ஒப்பற்ற;
அமர்தல் - விரும்புதல்;
தாதை - தந்தை;
நுங்குதல் - விழுங்குதல்;
(சுந்தரர் தேவாரம் - 7.51.11 - "வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கிஅமு தவர்க்கருளி");
இனிது - நன்றாக (adv. Sweetly, favourably); (அப்பர் தேவாரம் - 4.28.6 - "....காதலா லினிது சொன்ன கிஞ்ஞரங் கேட் டு கந்தார் கெடிலவீ ரட்ட னாரே.");


ஒப்பற்ற வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பும் தந்தை; மூன்று இலை போன்ற நுனியைக் கொண்ட சூலத்தை ஏந்தியவன்; விடத்தை உண்ட தூயவன்; அப்பெருமான் உறையும் பூவனூரை இனிது தொழும் அடியவர்களுக்கு என்றும் இன்பமே.



2)
இடையும் ஆதியும் ஈறும் ஆயவன்
விடையன் வெண்ணகை யாளை மேனியிற்
புடைய மர்ந்தவன் பூவ னூர்தனை
அடையும் அன்பருக் கல்லல் இல்லையே.



விடையன் - இடப வாகனன்;
புடை - பக்கம்;
அமர்தல் - விரும்புதல்;


(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8 - "முந்திய முதல்நடு இறுதியு மானாய்";
திருவாசகம் - சிவபுராணம் - "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே");


(அப்பர் தேவாரம் - 6.78.2 - "மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே..." - மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பி ஏற்றவர்.);


(பட்டினத்து அடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 11.28.23 -
"சடைமேல் ஒருத்தி சமைந்திருப்ப மேனிப்
புடைமேல் ஒருத்தி பொலிய.....");


முதலும், நடுவும் முடிவும் ஆனவன்; இடப வாகனன்; வெண்மையான பற்களை உடைய உமையைத் தன் மேனியில் ஒரு பக்கத்தில் விரும்பியவன்; அச்சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பூவனூரை அடையும் பக்தர்களுக்கு அல்லல்கள் இல்லை.



3)
வேதன் மாமலை வில்லி வெண்குழைக்
காதன் நெற்றியிற் கண்ணன் ஆலமர்
போதன் மேவிய பூவ னூர்தனைக்
காத லால்தொழக் கட்டம் நீங்குமே.



வேதன் - வேதங்களின் வடிவாயுள்ளவன், அல்லது வேதங்களை அருளிச்செய்தவன்; (அப்பர் தேவாரம் 5.61.4 - "வேத னைமிகு வீணையில் மேவிய கீதனை....");
மாமலை வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
வெண்குழைக் காதன் - காதில் வெண்குழையை அணிந்தவன்;
ஆல் அமர் போதன் - கல்லால மரத்தின்கீழ் அமர்ந்து அறம் சொல்லும் ஞானவடிவினன்;
காதல் - அன்பு; பக்தி;
கட்டம் - கஷ்டம்;



4)
ஓதம் ஆர்கடல் நஞ்சை உண்டவன்
வேத நாவினன் வெள்ளை ஏற்றினன்
பூத நாயகன் பூவ னூரரன்
பாதம் ஏத்திடப் பாவம் நீங்குமே.



ஓதம் - அலை;
ஆர் - பொருந்திய;
வேத நாவினன் - வேதத்தை முதன் முதலாகச் சொல்லியருளிய திருநாவுடையவன்;
பூதம் - பேய்; உயிர் வர்க்கம் (Any living creature);
பூத நாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்; பூதகணங்களுக்குத் தலைவன்;



5)
சிரங்கள் கோத்தணி செய்யன் வேண்டிய
வரங்கள் ஈபவன் வாளி தொட்டுமுப்
புரங்கள் சுட்டவன் பூவ னூர்தனைக்
கரங்க ளால்தொழக் கட்டம் நீங்குமே.



செய்யன் - சிவந்த நிறத்தினன்;
வாளி -அம்பு;
தொடுதல் - செலுத்துதல் ( To discharge, as an arrow or other missile);


தலைகளைக் கோத்து அணிபவன்; சிவந்த திருமேனியன்; பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தருபவன்; ஒரு கணையைச் செலுத்தி முப்புரங்களையும் எரித்தவன்; அச்சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பூவனூரைக் கைகளால் தொழுவார்கள்தம் கஷ்டங்கள் தீரும்.



6)
கனைக டல்விடம் கண்டம் இட்டவன்
புனைம திக்கயல் புற்ற ராவணி
புனலன் மேவிய பூவ னூர்தனை
நினைப வர்வினை நீங்கி உய்வரே.



கனைகடல் - ஒலிக்கின்ற கடல்;
புனை - அழகு; (புனைதல் - சூடுதல்);
மதி - சந்திரன்;
அயல் - அருகு;
புற்றரா - புற்று அரா - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு;
அணிதல் - சூடுதல்;
புனல் - நீர்;


ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சைத் தன் கண்டத்தில் வைத்தவன்; அழகிய சந்திரனுக்கு அருகே பாம்பையும் அணியும் கங்கைச்சடையன்; அச்சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பூவனூரை நினையும் அன்பர்கள் தம் வினைகள் நீங்கி உய்தி பெறுவார்கள்.



7)
கருப்பு வில்லியை அன்று கண்ணுதல்
நெருப்பி னாற்பொடி செய்த நின்மலன்
பொருப்பு வில்லினன் பூவ னூர்தனை
விருப்பி னால்தொழ மேவும் இன்பமே.



கருப்புவில்லி - கரும்பை வில்லாக ஏந்திய காமன்;
கண்ணுதல் - நெற்றிக்கண்;
பொடிசெய்தல் - சாம்பல் ஆக்குதல்;
பொருப்பு - மலை;
விருப்பு - அன்பு;
மேவுதல் - பொருந்துதல்; அடைதல்;


(சுந்தரர் தேவாரம் - 7.53.4 - "நறைசேர் மலர்ஐங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர்");



8)
மைய ரக்கனின் வாய்கள் பத்தழப்
பைய ஓர்விரல் இட்ட பண்பினன்
பொய்யி லாவரன் பூவ னூர்தனைக்
கையி னால்தொழக் கட்டம் நீங்குமே.



மை அரக்கன் - கரிய நிறம் உடைய இராவணன்;
பைய - மெல்ல;
பொய் இலா அரன் - பொய்ம்மையில்லாத ஹரன்; (தன்னை வேண்டியவர்க்கு அருள் வழங்குதலில் பொய்யில்லாதவன்);
கட்டம் - கஷ்டம்;


(சம்பந்தர் தேவாரம் - 3.10.3 -
"மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன் ...." - கார் அரக்கன் - கரிய இராவணன்);
(அப்பர் தேவாரம் - 5.79.7 - ".... பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர் ....");



9)
போதி னானரி போற்ற அன்றுயர்
சோதி யானவன் தோள்கள் எட்டினிற்
பூதி யானுறை பூவ னூர்தொழ
வாதி யாவினை மல்கும் இன்பமே.



பதம் பிரித்து:
போதினான் அரி போற்ற அன்று உயர்
சோதி ஆனவன்; தோள்கள் எட்டினில்
பூதியான் உறை பூவனூர் தொழ
வாதியா வினை; மல்கும் இன்பமே.


போது - பூ - தாமரைப்பூ;
பூதி - திருநீறு;
வாதித்தல் - "பாதித்தல்" - வருத்துதல் (To torment, afflict, trouble);
மல்குதல் - மிகுதல்; பெருகுதல்;


தாமரைமேல் இருக்கும் நான்முகனும் திருமாலும் போற்றுமாறு அன்று அளவின்றி உயர்ந்த சோதி ஆனவன்; எட்டுத் தோள்களிலும் திருநீற்றைப் பூசியவன்; அச்சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பூவனூரைத் தொழுதால் வினைகள் வருத்தமாட்டா; இன்பம் பெருகும்.



10)
ஏச லேதொழில் என்றி ருக்கிற
நீசர் சொல்நிசம் அல்ல நீற்றினைப்
பூசு மார்பரன் பூவ னூர்தொழும்
நேசர் கட்கிடர் நீங்கி இன்பமே.



ஏசல் - ஏசுதல் - இகழ்தல்; திட்டுதல்; பழி மொழி (Slander);
நீசர் - ஈனர்கள்;
நிசம் - நிஜம்; உண்மை;
நீற்றினைப் பூசு மார்பு அரன் - திருநீற்றைப் பூசிய மார்பை உடைய சிவபெருமான்;
நேசர்கட்கு இடர் நீங்கி இன்பமே - அன்பர்களுக்குத் துன்பங்கள் நீங்கி இன்பமே;



11)
கொடியின் நேருமை கூற மர்ந்தவன்
கடிகொள் கொன்றையன் கங்கை வேணியன்
பொடிகொள் மேனியன் பூவ னூருறை
அடிகள் தாள்தொழ அல்லல் இல்லையே



நேர் - ஒப்பு;
கடி - வாசனை;
வேணி - சடை;
பொடி - திருநீறு;
அடிகள் - கடவுள்;


கொடி போன்ற உமையை ஒரு கூறாக விரும்பியவன்; மணம் கமழும் கொன்றைமலரைச் சூடியவன்; கங்கைச்சடையன்; திருநீறு பூசிய திருமேனியன்; திருப்பூவனூரில் எழுந்தருளியவன்; அச்சிவபெருமான் திருவடியைத் தொழுதால் அல்லல்கள் இல்லை.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
சந்தக்கலிவிருத்தம் - 'தான தானன தான தானனா' என்ற அமைப்பு.
முதற்சீர் 'தனன' என்றும் வரக்கூடும்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.28.1 -
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.



3) பூவனூர் - சதுரங்க வல்லப நாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=151

-------------- --------------

No comments:

Post a Comment