Saturday, January 2, 2016

02.55 – புறவார் பனங்காட்டூர் ("பனையபுரம்")

02.55 – புறவார் பனங்காட்டூர் ("பனையபுரம்")



2012-09-02
புறவார் பனங்காட்டூர் ('பனையபுரம்' - near Vikravandi toll plaza)
---------------------------------------------------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - “கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே”)



1)
திரையார் புனல்சூடீ தெரிவை பிரியாதாய்
வரதா அருளென்று வானோர் தொழவன்று
புரமூன் றெரிசெய்தாய் புறவார் பனங்காட்டூர்ப்
பரமா பவனேநின் பாதம் பணிவேனே.



திரை ஆர் புனல் - அலைகள் பொருந்திய கங்கை;
சூடீ - சூடியவனே; (சூடி = சூடியவன்; சூடி என்பது விளியில் சூடீ);
தெரிவை - பெண் - உமை;
பவன் - சிவன் ( God, as self-existent;);



2)
மின்னேர் சடைமீது மிளிரும் மதிசூடித்
தன்னேர் இலனானாய் தவள விடையானே
பொன்னேர் திருமேனீ புறவார் பனங்காட்டூர்
மன்னே மணிகண்டா மலர்த்தாள் மறவேனே.



மின் நேர் சடை - மின்னலைப் போன்ற சடை;
தன் நேர் இலன் ஆனாய் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன் ஆனவனே;
தவள விடை - வெண்ணிற இடபம்;
பொன் நேர் திருமேனீ - பொன் போன்ற திருமேனியை உடையவனே; (2.24.1 - "பொன்நேர் தருமே னியனே..."); (7.1.6 - "தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ" - 'திருமேனி' என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது.);
மன் - அரசன்;
மணிகண்டன் - நீலகண்டன்;



3)
பனிமா மதிசூடீ பாவை ஒருபங்கா
முனிவா மறைநாவா முதலும் முடிவானாய்
புனிதா எழிலாரும் புறவார் பனங்காட்டூர்
இனியாய் உனையன்றி இங்குத் துணையாரே.



இனியாய் - இனியவனே;
(அப்பர் தேவாரம் - 6.38.1 - "ஓசை யொலியெலா மானாய் நீயே ... பேசப் பெரிதும் இனியாய் நீயே ...");


குளிர்ந்த அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவனே! அர்த்தநாரீஸ்வரனே! முனிவனே! வேதம் சொல்லும் நாவினனே! ஆதியும் அந்தமும் ஆனவனே! புனிதனே! அழகிய புறவார் பனங்காட்டூரில் உறையும் இனியவனே! உன்னை அல்லால் இங்கே யார் துணை? (நீ அருள்புரிவாயாக என்பது குறிப்பு)



4)
அன்றோர் அலரெய்தான் ஆகம் பொடிசெய்தாய்
குன்றோர் சிலையாகக் குனித்த திறலோனே
பொன்றாப் புகழானே புறவார் பனங்காட்டூர்
நின்றாய் உனதாளை நித்தம் நினைவேனே.



அலர் - பூ;
ஆகம் - உடல்;
சிலை - வில்;
குனித்தல் - வளைத்தல்;
பொன்றுதல் - அழிதல்; இறத்தல்; ('பொன்றாப் புகழான்' - என்றும் நிலைத்த புகழ் உடையவன்);
உன - உன்னுடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);


முன்பு ஒரு மலர்க்கணை எய்த மன்மதன் உடலைச் சாம்பல் ஆக்கியவனே! ஒரு மலையை வில்லாக வளைத்த ஆற்றல் உடையவனே! அழியாப் புகழ் உடையவனே! புறவார் பனங்காட்டூரில் உறைபவனே! உனது திருவடிகளைத் தினமும் எண்ணுவேன்.



5)
ஏவும் கணையொன்றால் எயில்கள் சுடுவோனே
தாவும் மறியேந்திச் சடைமேல் பிறையோடு
பூவும் புனைவோனே புறவார் பனங்காட்டூர்
மேவும் பெருமானே வினைதீர்த் தருளாயே.



எயில்கள் - முப்புரங்கள்;
மறி - மான்கன்று;



6)
வேதா விடையேறும் விகிர்தா குழையாரும்
காதா எனவன்பர் கரைய அதுகண்டு
போதா பொலிவேறும் புறவார் பனங்காட்டூர்
நாதா உனதாளை நானும் தொழுவேனே.



விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - சிவபெருமான்;
குழை ஆரும் காதா - காதில் குழையை அணீந்தவனே;
அன்பர் - பக்தர்;
கரைதல் - உருகுதல்; சொல்லுதல்;
போதன் - ஞான வடிவினன்;
பொலிவு - அழகு;
உன தாளை - உனது திருவடிகளை; (- ஆறாம் வேற்றுமை உருபு);


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.91.3
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானும் தொழுவனே. )



7)
குரைசே வடியாலே கூற்றை உதைசெய்தாய்
நரையே றமர்கின்ற நம்பா கருமேகம்
புரைமா மணிகண்டா புறவார் பனங்காட்டூர்
அரைசே அடியேற்கும் அஞ்சல் அருளாயே.



குரை சேவடி - ஒலிக்கின்ற கழல் அணிந்த சிவந்த திருவடி; (கூற்றுவனை உதைப்பதற்காகத் திருவடி மிக விரைந்து சென்றபோது விளைந்த ஒலியைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். 'swish');
(சுந்தரர் தேவாரம் - 7.57.1 - "தலைக்க லன்தலை மேல்தரித் தானைத் .... கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை ..." - கூற்றுவனை உதைத்த, ஒலித்தல் பொருந்திய கழலை அணிந்த திருவடியை உடையவன்);
நரை ஏறு அமர்கின்ற நம்பன் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக விரும்பும் சிவபெருமான்;
கருமேகம் புரை மா மணி கண்டன் - கரிய மேகம் போன்ற அழகிய நீலமணி கண்டத்தை உடையவன்;
அரைசன் - அரசன்;



8)
அலையார் கடல்சூழ்ந்த இலங்கைக் கிறைவாட
மலைமேல் விரலிட்ட வரதா தமிழ்பாடிப்
புலவோர் புகழீசா புறவார் பனங்காட்டூர்த்
தலைவா அடிபோற்றும் தமியேற் கருளாயே.



இலங்கைக்கு இறை - இலங்கைக்கு அரசன் - இராவணன்;
வரதன் - வரம் அருள்பவன்;
புலவோர் - புலவர்கள்;
தமியேற்கு - தமியேனுக்கு - துணையற்ற எனக்கு;



9)
கரியான் மலர்மேலான் கையால் தொழுதேத்த
எரியாய் எழுவோனே ஏழை ஒருகூறா
புரியார் சடையானே புறவார் பனங்காட்டூர்
பிரியாப் பெருமானே பிணிதீர்த் தருளாயே.



கரியான் - திருமால்;
மலர்மேலான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
எரியாய் எழுவோனே - சோதி ஆகி உயர்ந்தவனே;
ஏழை - பெண் - பார்வதி;
புரி ஆர் சடையான் - சுருண்ட சடையை உடையவன்;



10)
தூற்றும் மதியீனர் சொல்லும் சிறுமார்க்கம்
ஏற்றம் அளியாதால் எழுதா மறைநாலும்
போற்றும் புரிநூலன் புறவார் பனங்காட்டூர்
ஏற்றன் கழல்பாடில் இன்னல் அடையாவே.



ஏற்றம் - மேன்மை;
அளியாதால் - அளியாது + ஆல்;
அளியாது - அளிக்கமாட்டாது; கொடாது; தாராது;
ஆல் - ஓர் அசைச்சொல்;
எழுதா மறைநாலும் - எழுதாக்கிளவியான நான்கு வேதங்களும்;
புரிநூலன் - முப்புரிநூல் மார்பன் - சிவபெருமான்;
ஏற்றன் - இடபத்தை ஊர்தியாக உடையவன்;
கழல் பாடில் - திருவடியைப் பாடினால்;
இன்னல் - துன்பம்;



11)
வாச மலரோடு மதியம் புனைகின்ற
ஈசன் எருதேறும் எந்தை திருநீறு
பூசும் மணிமார்பன் புறவார் பனங்காட்டூர்
நேசன் அடிவாழ்த்தில் நில்லா வினைதானே.



மதியம் - சந்திரன்;
மணி - அழகு;
அடி வாழ்த்தில் - திருவடியைப் போற்றினால்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.
மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.



3) புறவார் பனங்காட்டூர் - (பனையபுரம்) - பனங்காட்டீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=968

------------------- 

No comments:

Post a Comment