Sunday, January 10, 2016

02.58 – வேதிகுடி - (திருவேதிகுடி)

02.58 – வேதிகுடி (திருவேதிகுடி)



2012-10-08
திருவேதிகுடி
----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்).
(அப்பர் தேவாரம் - 5.4.1 - "வட்ட னைம்மதி சூடியை வானவர்")



1)
சீர னைப்புரம் செற்ற சிலைதரி
வீர னைத்திரு வேதி குடியனைப்
பார னைத்தும் படைத்தவ னைச்சடை
நீர னைத்தொழு வார்வினை நீங்குமே.



சீரன் - புகழுடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.94.10 - "ஆர நாகமாம் சீர னாலவாய்த்...");
புரம் செற்ற சிலைதரி வீரன் - முப்புரங்களை அழித்த வில் ஏந்திய வீரன்;
பார் அனைத்தும் - எல்லா உலகங்களையும்;
சடை நீரன் - கங்கைச்சடையன்; (அப்பர் தேவாரம் - 5.12.7 - "தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய நீர னாடிய நீற்றன்...");



2)
சேட னைப்புரம் செற்ற சிலையனை
வேட னைத்திரு வேதி குடியனை
நாட னைத்து நலந்தரும் ஓர்செவித்
தோட னைத்தினந் தோறும் தொழுநெஞ்சே.



சேடன் - பெரியவன்;
சிலையன் - வில்லை ஏந்தியவன்; (சிலை - வில்);
வேடன் - பல அருட்கோலங்களை உடையவன்; (சுந்தர் தேவாரம் - 7.13.5 - "... துறையூர் வேடாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே");
நாடு அனைத்து நலம் தரும் - வேண்டும் எல்லா நன்மைகளும் அளிக்கின்ற;
ஓர் செவித் தோடன் - ஒரு காதில் தோட்டினை அணிந்த அர்த்தநாரீஸ்வரன்;



3)
ஆல னைப்புரம் அட்டவெம் மூவிலை
வேல னைத்திரு வேதி குடியனைப்
பால னைத்தொடர் காலனை அன்றுதை
கால னைத்தொழக் கட்டமொன் றில்லையே.



ஆலன் - ஆலகால விடம் உண்டவன்;
புரம் அட்ட வெம் மூவிலை வேலன் - முப்புரம் எரித்த சூலபாணி;
பாலன் - மார்க்கண்டேயர்;
காலனை அன்று உதை காலனை - எமனை முன்னம் உதைத்த திருவடி உடையவனை; காலகாலனை;
கட்டம் - கஷ்டம்;



4)
சேரு முப்புரம் செந்தீப் படவெய்த
மேரு வில்லியை வேதி குடியனை
ஊரும் ஏறொன் றுடையனைப் போற்றிடத்
தீரும் திண்ணிய தீய வினைகளே.



சேரும் முப்புரம் செந்தீப் பட எய்த மேரு வில்லி - ஒன்றாக இணைந்த முப்புரங்களும் நெருப்பில் வீழ்ந்து அழியக் கணை எய்த, மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
ஊரும் ஏறு ஒன்று உடையன் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்;
திண்ணிய - வலிய;



5)
அஞ்செ ழுத்தனை அப்புரம் மூன்றெரி
வெஞ்ச ரத்தனை வேதி குடியனைக்
குஞ்ச ரத்தினைக் கொன்றுரி போர்த்துழல்
மஞ்ச னைத்தொழ மாயும் வினைகளே.



அஞ்சு எழுத்தனை - திருவைந்தெழுத்து ஆகியவனை;அப்புரம் மூன்று எரி வெம் சரத்தன் - அந்த முப்புரங்களை எரித்த தீக்கணை செலுத்தியவன்;
குஞ்சரத்தினைக் கொன்று உரி போர்த்து உழல் மஞ்சன் - யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துத் திரியும் வீரன்; (சம்பந்தர் தேவாரம் - 1.3.6 - "கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்");
மஞ்சன் - மைந்தன் - வீரன்;



6)
உடையெ னப்புலித் தோலை உடையனை
விடைய னைத்திரு வேதி குடியனைச்
சடைய னைத்தையல் பங்கனை வெண்மழுப்
படைய னைப்பணி வார்வினை பாறுமே.



படை - ஆயுதம்;
பாறுதல் - அழிதல்;



7)
காவ லார்புரம் மூன்றும் கணத்தினில்
வேவ நக்கநம் வேதி குடியனை
நாவ லூரர்க்குத் தோழமை நல்கிய
தேவ னைத்தொழத் தீரும் வினைகளே.



காவல் ஆர் புரம் மூன்று - காவலை உடைய மதில் சூழ்ந்த முப்புரங்கள்;
கணத்தினில் வேவ நக்க - நொடிப்பொழுதளவில் வெந்து சாம்பல் ஆகும்படி சிரித்த;
நாவலூரர்க்குத் தோழமை நல்கிய தேவன் - சுந்தரர்க்குத் தன்னைத் தோழனாகத் தந்த பெருமான்;



8)
அற்பம் இம்மலை என்றான் அழவிரல்
வெற்பின் மேலிடு வேதி குடியனை
நற்ப தந்தரும் நம்பியை நாதனைச்
சொற்ப தங்கடந் தானைத் தொழுநெஞ்சே.



அற்பம் இம்மலை என்றான் அழ - தன் பலத்தின்முன் இந்தக் கயிலைமலை எம்மாத்திரம் என்று எண்ணிய இராவணன் அழும்படி;
விரல் வெற்பின்மேல் இடு வேதிகுடியன் - தன் ஒரு விரலை மலைமேல் வைத்து அவனை நசுக்கியவன் திருவேதிகுடியில் உறையும் சிவபெருமான்;
நற்பதம் தரும் நம்பி - நல்ல கதியைத் தரும் சிறந்தவன்;
சொற்பதம் கடந்தான் - சொல்லின் அளவைக் கடந்து நின்ற புகழை உடையவன்;
(திருவாசகம் - திருவண்டப் பகுதி - "சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க");
(அப்பர் தேவாரம் - 6.64.10 - "சொற்பதமுங் கடந்து நின்ற எம்மான்காண்");



9)
கமலக் கண்ணனும் வேதனும் கைதொழும்
விமல னைத்திரு வேதி குடியனை
அமரர் கோனை அடிபணி வார்க்கெமன்
தமர்க ளால்தடு மாற்றமொன் றில்லையே.



கமலக் கண்ணன் - திருமால்;
வேதன் - பிரமன்;
விமலன் - தூயவன்;
எமன் தமர்களால் தடுமாற்றம் ஒன்று இல்லையே - எமதூதர்களால் மனம் கலங்கும் நிலை இல்லை;



10)
இல்லை என்பவர்க் கென்றுமில் லாதானைச்
சொல்லும் அன்பர் துணைவனை ஓர்மலை
வில்லி யைத்திரு வேதி குடியனை
வல்லி பங்கனை வாழ்த்த வருமின்பே.



இல்லை என்பவர்க்கு என்றும் இல்லாதானை - இறைவன் இல்லை என்று நாத்திகம் பேசியும், இன்னொரு தெய்வம் உண்டு என்று எண்ணிச் சிவனைத் தொழாதவர்களுக்கும், என்றும் அருள் இல்லாதவனை;
சொல்லுதல் - புகழ்தல்; துதித்தல்;
மலை வில்லி - முப்புரம் எரித்த நாளில் மேருமலையை வில்லாகத் தாங்கியவன்;
வல்லி - கொடி - ஆகுபெயராக இளம்பெண் - உமையைச் சுட்டியது;



11)
ஓலம் என்றடை உம்பர்கள் உய்ந்திட
வேலை நஞ்சுண்ட வேதி குடியனைச்
சூலம் ஏந்தியைத் தூமறை பாடியைக்
கால காலனைக் கைதொழ இன்பமே.



வேலை - கடல்;
மறை பாடி - மறை பாடுபவன்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



------- some Q& A on this set -------------
Question from a reader: வேதி குடியனை --> விஷத்தைக் குடித்ததா?
My response: அண்ணாமலை - அண்ணாமலையன் என்பதுபோல், வேதிகுடி - வேதிகுடியன் - திருவேதிகுடியில் உறையும் ஈசன்.
வேதிகுடியான் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், ஈசன் விஷத்தைக்கூட குடித்தவன். ஆகவே, குடியன்! :)



பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்;
  • இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்;
  • 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;

2) அப்பர் தேவாரம் - 5.4.1 -
வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.

2) திருவேதிகுடி - வேதபுரீஸ்வரர் கோயில் - தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=373

----------------- ----------------

No comments:

Post a Comment