Saturday, January 30, 2016

02.65 – பூவனூர்

02.65 – பூவனூர்



2012-11-17
திருப்பூவனூர்
---------------------------------
(எண்சீர் விருத்தம். 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு. திருத்தாண்டக அமைப்பு)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.1.1 - “அரியானை அந்தணர்தம் சிந்தை யானை”)



1)
தாமுண்ட விடந்தன்னைக் கண்டந் தன்னில்
.. தரித்திமையோர்க் கமுதீந்த சம்பு நாதர்
தாமுண்டு தந்தொண்டுண் டென்றி ருந்து
.. தாளிணையைப் பணிகின்ற அன்பர் கட்குச்
சாமுண்டி தன்னோடும் கூடி நின்று
.. தண்ணருள்செய் சங்கரனார் பதிய தென்பர்
பூமண்டு சோலைகளில் தங்கி வண்டு
.. புகழ்மாலை நிதம்பாடும் பூவ னூரே.



சம்பு - [சுகத்தைத் தருபவன்] சிவன் (Siva, as bestowing happiness);
தாமுண்டு தந்தொண்டுண் டென்றி ருந்து - "தாம் உண்டு தம் தொண்டுண்டு" ன்று இருந்து;
பதியது - தலம், அது - பகுதிப் பொருள் விகுதி.
மண்டுதல் - செறிதல்; அதிகமாதல்;


* இத்தலத்தில் உள்ள சாமுண்டேஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.


தாம் அருந்திய விடத்தைக் கண்டத்தில் தாங்கித் தேவர்களுக்கு அமுது அளித்தவர்; சுகத்தை அளிப்பவர் (சம்பு); தலைவர்; 'தாங்கள் உண்டு, தங்கள் தொண்டு உண்டு' என்று வாழ்ந்து அடியிணையை வணங்கும் பக்தர்களுக்குச் சாமுண்டியும் தாமுமாக அருள்புரியும் சங்கரனார் எழுந்தருளியிருக்கும் தலம், பூக்கள் நிறைந்த பொழில்களில் தங்கி வண்டுகள் எப்போதும் துதிபாடும் திருப்பூவனூர் ஆகும்.



2)
மீக்கொண்ட நீற்றைமாற் றான்மேற் கண்டு
.. வீரத்தால் வாளேந்தி வாளா நின்று
தாக்குண்ட ஏனாதி நாதர் தம்மைத்
.. தன்னோடு சேர்த்தருள்வான் கண்ணீர் மல்கி
நாக்கொண்டு தமிழ்மாலை பாடு வார்க்கு
.. நலிவகற்றும் நாதனுறை பதிய தென்பர்
பூக்கிண்டித் தேனுண்டு வண்டு பாடும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



மீக்கொள்ளுதல் - மேலாக மதித்தல் (To esteem); மேலே தரித்தல் (To put on);
மாற்றான் - பகைவன்;
வாளா - சும்மா;
நலிவு - துன்பம்;
கிண்டுதல் - கிளறுதல்;
புடை - பக்கம்;
கவின் ஆரும் - அழகிய;


* ஏனாதிநாத நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


கேடயத்தை விலக்கிப் பகைவன் தன் நெற்றியில் பூசிய திருநீற்றை வெளிப்படுத்தக் கண்டு, 'திருநீறு பூசியதால் இவர் சிவன் அடியார் ஆயினார்' என்ற எண்ணமே ஓங்க, அதனால் தம் கையில் வாளை ஏந்தியும் போரிடாமல் நின்று உயிர்துறந்த வீரர் ஏனாதிநாதர்க்குத் தன்னைப் பிரியாது இருக்கும் நிலையைத் தந்த சிவபெருமான்; கண்ணிர் பெருக, நாக்கால் தமிழ்ப்பாமாலைகள் பாடும் பக்தர்களின் துன்பத்தைப் போக்கும் தலைவன்; அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம், பூக்களைக் கிளறித் தேன் உண்டு வண்டுகள் பாடும் சோலைகள் நாற்புறமும் சூழ்ந்த அழகிய திருப்பூவனூர் ஆகும்.


(11.33.10 - திருத்தொண்டர் திருவந்தாதி #10 -
பத்தனை ஏனாதி நாதனைப் பார்நீ டெயினைதன்னுள்
அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு
கைத்தனி வாள்வீ டொழிந்தவன் கண்டிப்ப நின்றருளும்
நித்தனை ஈழக் குலதீபன் என்பரிந் நீள்நிலத்தே )



3)
நீற்றைத்தன் மேனியெங்கும் பூசு கின்ற
.. நிமலனுமை மங்கைக்கு நேயன் திங்கட்
கீற்றைத்தன் முடிமீது சூடும் மைந்தன்
.. கீழிறங்க மிகவிரைந்து பாய்ந்த கங்கை
ஆற்றைத்தன் சடையிடையே கரந்து வைத்தான்
.. அருள்வடிவாம் அண்ணலவன் பதிய தென்பர்
போற்றிப்பா டளிகட்குப் பொன்ன ளிக்கும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



நிமலன் - மலமற்றவன்;
உமை மங்கைக்கு நேயன் - உமாதேவிக்கு அன்பன்;
மைந்தன் - அழகன்;
போற்றிப் பாடு அளிகட்குப் பொன் அளிக்கும் பொழில் - வந்து ரீங்காரம் செய்யும் வண்டுகளுக்கு மதுவோடு பொன்னிற மகரந்தத்தையும் வழங்கும் மலர்கள் நிறைந்த சோலை;


(திருமுறை 8 - திருக்கோவையார் - 15.3
"பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றரு வெண்கிழிதஞ்
சேணிகர் காவின் வழங்கும்புன் னை ...."
- பாணரையொக்கும் வண்டினங்கள் சென்று பாடத், தாதாகிய பசும்பொன்னைப் புலப்படுத்தாநின்ற போதாகிய வெண்கிழியைத், தமது சேய்மைக்கண் விளங்குங் காவினின்று அவற்றிற்குக் கொடுக்கும் புன்னை....)



4)
ஆச்சொரிபால் கொண்டுதொழும் போது தைத்த
.. அப்பன்தாள் துணிமகற்குப் பதவி நல்கும்
ஆச்சிரயன் முனிநால்வர்க் காலின் கீழே
.. அறமுரைக்கும் ஆசிரியன் காமம் மோகம்
மாச்சரியம் இவையெல்லாம் நீத்தார்க் கின்பம்
.. வழங்குகின்ற மணிகண்டன் பதிய தென்பர்
பூச்சொரியும் மதுவுண்டு சிறைவண் டார்க்கும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



* சண்டேசுர நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


- பசு;
சொரிதல் - பொழிதல்;
தாள் - கால்;
துணித்தல் - வெட்டுதல்;
ஆச்சிரயன் - புகலிடமாக உள்ளவன்; (ஆச்சிரயம் - Asraya – புகலிடம்); (आश्रयः - 9. Patron, supporter; 11. Help, assistance, protection);
ஆசிரியன் - குரு;
மாச்சரியம் - பொறாமை;
மணிகண்டன் - நீலமணி திகழும் கண்டத்தை உடையவன்;


ஆற்றுமணலில் இலிங்கம் அமைத்துப், பசுக்கள் சொரிந்த பாலைக்கொண்டு அபிஷேகம் செய்த விசாரசருமரின் பூசையைக் கண்டு சினந்து அவற்றைக் காலால் உதைத்த அவர் தந்தையின் கால்களை அவர் வெட்டவும், ஈசன் வெளிப்பட்டு அவரைத் தன் மகனாராக ஏற்றருளி அவர்க்குச் கண்டேசுர பதவியையும் அளித்தருளினார். கல்லால மரத்தின்கீழ் சனகாதியருக்கு மறைப்பொருள் விரித்த குரு; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாத்சரியம் என்ற ஆறு பகைகளையும் வென்றவர்களுக்கு இன்பம் அளிக்கும் நீலகண்டன். அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம், பூக்கள் சொரியும் தேனை உண்டு, சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நாற்புறமும் சூழ்ந்த அழகிய திருப்பூவனூர் ஆகும்.


(12.20.56 - பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம் -
அண்டர் பிரானும் தொண்டர்தமக் .. கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும் .. சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம் .. என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை .. மாலை வாங்கிச் சூட்டினார். )



5)
ஓதுமறை நாலுமங்கம் ஆறு மானான்
.. வாதுபுரி வல்லமணர் உளங்க லங்கத்
தீதுதவிர் செந்தமிழைத் தீயி னுள்ளே
.. சேதமின்றித் திகழவைத்த திருநள் ளாற்றன்
மாதுமரு வாகத்தான் மானொன் றேந்தி
.. மால்விடைமேல் வருமண்ணல் பதிய தென்பர்
போதுதரு தாதையணி வண்டு பாடும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



* மதுரையில் நிகழ்ந்த அனல்வாதத்தைப் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றிற் காண்க.


சேதம் - கேடு;
திருநள்ளாற்றன் - திருநள்ளாற்றில் உறையும் ஈசன்;
மருவுதல் - கலந்திருத்தல் (To combine, join together; to be united together in affection);
ஆகம் - உடல்;
மாது மருவு ஆகத்தான் - பெண் ஒரு பாகம் ஆகும் திருமேனி உடையவன் - அர்தநாரீஸ்வரன்;
போது - பூ;
தாது - மகரந்தம்;
(சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "தளிரிள வளரொளி .... நள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.")



6)
புகலான பாதத்தைப் போற்றும் பத்தர்
.. புரிவினைகள் எல்லாம்தீர்த் தவர்ம னத்துள்
அகலாது வீற்றிருக்கும் அன்பன் வானோர்
.. அஞ்சிவந்து பணிந்தேத்த மலைவில் லேந்தி
நகர்மூன்றை நகையொன்றால் எரித்த வீரன்
.. நச்சரவக் கச்சனவன் பதிய தென்பர்
புகழ்வாரம் அளிபாடிப் பூவா ரந்தேன்
.. புரிந்துண்ணும் பொழில்புடைசூழ் பூவ னூரே.



புரிதல் - செய்தல்; விரும்புதல்;
நகர் மூன்று - முப்புரங்கள்;
நகை - சிரிப்பு;
நச்சு அரவக் கச்சன் - விஷப்பாம்பை இடுப்பில் அரைக்கச்சாகக் கட்டியவன்;
(கச்சு அணிந்தவனைச் சுட்டுவதாகக் கச்சன் என்ற பிரயோகம் தேவாரத்தில் இல்லை என்று எண்ணுகின்றேன். ஆயின் இதை ஒத்த பிரயோகங்கள் உள்ளன.
7.48.10 - 'பாம்பரை நாணன்';
5.12.7 -
தீரன் தீத்திர ளன்சடைத் தங்கிய
நீர னாடிய நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன்
வீரன் வீழி மிழலை விகிர்தனே.
--- கொன்றைத் தாரன் மாலையன் தண்நறுங் கண்ணியன் - கொன்றையாலாகிய தாரும், மாலையும், கண்ணியும் அணிந்தவன்);
வாரம் - இசைப்பாட்டு; தெய்வப்பாடல்;
வார்தல் - சொரிதல்; ஒழுகுதல்;
அம் - அழகிய; (அப்பர் தேவாரம் - 4.15.5 - "ஆலங் காட்டி லந்தேனை");
புரிதல் - விரும்புதல்;
புகழ் வாரம் அளி பாடிப் பூ வார் அம் தேன் புரிந்து உண்ணும் பொழில் - புகழ்கின்ற இசைப்பாட்டை வண்டுகள் பாடிப் பூக்கள் சொரியும் அழகிய தேனை விரும்பி உண்ணும் சோலை;



7)
வதுவையிடை வந்தோலை ஒன்று காட்டி
.. வழக்காடி நாவலர்கோன் தனையாட் கொண்ட
முதுமைதிகழ் கோலத்தன் நெற்றிக் கண்ணன்
.. முப்புரத்தை ஓரம்பால் சுட்ட மைந்தன்
பதுமமெனக் கண்ணிட்ட மாலுக் காழி
.. பரிந்தளித்த பரமேட்டி பதிய தென்பர்
புதுமலரில் மதுவுண்டு சிறைவண் டார்க்கும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



வதுவை - திருமணம்;
நாவலர்கோன் - திருநாவலூராளி - சுந்தரர்;
மைந்தன் - வீரன்;
பதுமம் - தாமரை;
மாலுக்கு - விஷ்ணுவுக்கு;
ஆழி - சக்கராயுதம்;
பரிதல் - இரங்குதல்;
பரமேட்டி - பரம்பொருள் - சிவபெருமான்;



8)
சினமண்டு நெஞ்சினனாய்த் தேர்க டாவத்
.. திருமலையை அசையரக்கன் தனைய டர்த்து
மனமொன்றிக் கீதங்கள் பாடக் கேட்டு
.. வாளொடுநாள் ஈந்தவண்ணல் கணங்கள் சூழ
அனலங்கை ஏந்திநடம் ஆடும் ஐயன்
.. அகலாமல் உறைகின்ற பதிய தென்பர்
புனலுண்ட முகில்வந்து நெற்றி தீண்டும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



மண்டுதல் - மிகுதல்;
கடாவுதல் - செலுத்துதல் (To ride, as an animal; to drive, as a car);
அடர்த்தல் - நசுக்குதல்;
அனல் - தீ;
நெற்றி - உச்சி;


மனத்தில் பொங்கிய சினத்தோடு தன் தேரைச் செலுத்துவதற்காகக் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற தசமுகனை நசுக்கிப், பின் அவன் வருந்தி மனம் உருகிப் பாடியதைக் கேட்டு அவனுக்கு வாளும் வாழ்நாளும் கொடுத்த அண்ணல்; பூதகணங்கள் சூழக் கையில் தீயை ஏந்தித் திருநடம் செய்பவன்; அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் தலம், நீரை உண்ட மேகங்கள் வந்து உச்சியைத் தொடுகிற சோலைகள் நாற்புறமும் சூழ்ந்த அழகிய திருப்பூவனூர் ஆகும்.



9)
கடியாரும் தாமரைமேல் வீற்றி ருந்து
.. கணக்கில்லாப் புவனங்கள் படைக்கின் றானும்
நெடியானும் உயர்கின்ற அன்ன மாயும்
.. நீணிலத்தை அகழ்கின்ற பன்றி யாயும்
அடியோடு முடிநேடி அடைய மாட்டா
.. அழலானான் அமர்கின்ற பதிய தென்பர்
பொடியாரும் நெற்றியராய்ப் பத்தர் வந்து
.. போற்றிநின்று வரங்கொள்ளும் பூவ னூரே.



கடி ஆரும் - வாசம் மிக்க;
நெடியான் - திருமால்; (Tall person; நெட்டையானவன் - திரிவிக்கிரமனாகிய திருமால்);
நீணிலம் - நீள்நிலம் - நீண்டவுலகு (மண்ணுலகு);
நேடுதல் - தேடுதல்;
அழல் - சோதி;
அமர்தல் - விரும்புதல்; இருத்தல்;
பொடி ஆரும் நெற்றியர் - நெற்றியில் திருநீறு பூசியவர்கள்;



10)
தீநாடிப் புகுந்தொழியும் விட்டில் அன்ன
.. சிறுமதியர் திருநீறு பூசி உய்யார்
வானோடி வந்தெம்மைக் காவாய் என்ன
.. வன்னஞ்சைக் கண்டத்தில் மறைத்து வைத்தான்
கானாடி மகிழ்கின்ற கழலன் நாளும்
.. கைதொழுவார்க் கருளுமரன் பதிய தென்பர்
பூநாடி அறுபதங்கள் போற்றிப் பாடும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



நாடுதல் - விரும்புதல்; தேடுதல் (To seek); கிட்டுதல் (To reach, approach);
அன்ன - போன்ற;
உய்யார் - உய்யமாட்டார்கள்;
வான் - தேவர்கள்;
கானாடி - கான் ஆடி - சுடுகாட்டில் திருநடம் செய்து; (கான் - சுடுகாடு);
கழலன் - கழல் அணிந்த திருவடியினன்;
அறுபதம் - வண்டு;



11)
அள்ளிமலர் தூவியடி போற்றும் அன்பர்
.. அருவினையைத் தீர்த்தருளும் அத்தன் அல்லிற்
கொள்ளியொடு குறட்பூத கணங்கள் சூழக்
.. கூத்தாடும் குழகனுமை கூறு கொண்டான்
வெள்ளமடை சடையுடையான் வெள்ளை ஏற்றன்
.. விடமுண்ட விகிர்தனவன் பதிய தென்பர்
புள்ளினங்கள் ஆர்ப்பவண்டு பண்மி ழற்றும்
.. பொழில்புடைசூழ் கவினாரும் பூவ னூரே.



அத்தன் - தந்தை;
அல் - இருள்;
கொள்ளி - நெருப்பு;
குறள் - குறுகிய; (குறட்பூத கணங்கள் - குள்ளமான பூதகணங்கள்);
குழகன் - அழகன்;
வெள்ளம் - கங்கை;
வெள்ளை ஏற்றன் - வெண்ணிற இடபத்தை உடையவன்;
விகிர்தன் - மாறுபட்ட செயலினன்;
புள்ளினங்கள் - பறவைகள்;
ஆர்த்தல் - ஒலித்தல்; (ஆர்ப்ப - ஒலிக்க); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.12 - "ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் ...வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்...");
பண் மிழற்றுதல் - பண் பாடுதல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
திருத்தாண்டக அமைப்பு -
  • எண்சீர் விருத்தம்.
  • பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
  • ஒரோவழி (சில சமயம்) காய்ச்சீர் வருமிடத்தில் விளம் / மா வரும்.
  • அப்படிக் காய்ச்சீர் வருமிடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
2) பூவனூர் - இத்தலம் நீடாமங்கலம் - மன்னார்குடி மார்க்கத்தில் நீடாமங்கலத்திற்குத் தெற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது .
3) திருப்பூவனூர் - சதுரங்க வல்லபநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=331

-------------- --------------

No comments:

Post a Comment