Saturday, January 30, 2016

02.66 – கோயில் (தில்லை / சிதம்பரம்)

02.66 – கோயில் (தில்லை / சிதம்பரம்)



2012-11-24
கோயில் (தில்லை / சிதம்பரம்)
----------------------
(சந்தக்கலிவிருத்தம் - 'தான தானன தான தானனா')
(சம்பந்தர் தேவாரம் - 2.28.1 - "தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்...")



1)
மங்கை பங்கினர் கங்கை யாளொடு
திங்கள் சூடிய தில்லைக் கூத்தனார்
பொங்க ராப்புனை அண்ணல் பொன்னடி
தங்கை யால்தொழச் சாரும் இன்பமே.



பொங்கரா - பொங்கு அரா - பொங்கும் பாம்பு;
தங்கையால் - தம் கையால்; (தாம் - அவர்கள்; நீங்கள்;)
சார்தல் - பொருந்தியிருத்தல் (To be associated or connected with); சென்றடைதல் (To reach, approach);



2)
பொருப்பி லோர்கணை பூட்டி முப்புரம்
சிரிப்பி னாலெரி தில்லைக் கூத்தனார்
நெருப்பி னேர்வணர் நித்தர் நீள்கழல்
விருப்பி னால்தொழ மேவும் இன்பமே.



பொருப்பு - மலை;
நெருப்பின் நேர் வணர் - நெருப்பை ஒத்த வண்ணர் - தீவண்ணர்;
நித்தர் - நித்தியர் - அழிவற்றவர்;
மேவுதல் - அடைதல் (To join; to reach); பொருந்துதல் (To be attached; to be united; to be fitted or joined);



3)
கங்கை வேணியர் கையில் வேலினர்
செங்கண் ஏறமர் தில்லைக் கூத்தனார்
கொங்கு லாமலர் கொண்டு தாள்தொழ
இங்கு நாடொறும் எய்தும் இன்பமே.



வேணி - சடை;
வேல் - மூவிலைவேல் - சூலப்படை;
ஏறு - இடபம்;
கொங்குலாமலர் - கொங்கு உலாம் மலர் - தேன் நிறைந்த பூக்கள்;
உரைநடை அமைப்பில்: கொங்குலாமலர் கொண்டு கங்கை வேணியர் ... தில்லைக் கூத்தனார் தாள்தொழ இங்கு ... இன்பமே.



4)
அவிந்த ரண்பட அன்று நக்கவர்
சிவந்த மேனியர் தில்லைக் கூத்தனார்
குவிந்த வல்வினைக் கோத றுப்பவர்
உவந்து தாள்தொழ ஊறும் இன்பமே.



அவிதல் - வேதல்; அழிதல்;
அரண் - முப்புரம்;
படுதல் - அழிதல்;
அவிந்து அரண் பட - அரண் அவிந்து பட - முப்புரங்களும் வெந்து அழிய;
(காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.81 -
"காலனையும் வென்றோம் ... அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து. -- 'அவிந்து அழிய' என்பது ஒரு பொருட்பன்மொழி);
குவிதல் - திரளுதல்;
கோது - குற்றம்;
அறுத்தல் - நீக்குதல்; தீர்த்தல்;
உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்;


(சம்பந்தர் தேவாரம் - 1.8.6 - "குற்ற மறுத்தார் குணத்தி னுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்..." - குற்றம் அறுத்தார் - அடியார்கள் செய்த குற்றங்களை நீக்கியவர்.);


5)
கரத்தல் அற்றவர் கங்கை யாரயன்
சிரத்தில் ஊண்மகிழ் தில்லைக் கூத்தனார்
வரத்தை நல்கிடும் வள்ளல் வார்கழல்
கரத்தி னால்தொழக் காண்ப தின்பமே.



கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்; கொடாதிருத்தல்;
கரத்தல் அற்றவர் - அடியவர்களுக்கு வஞ்சமின்றி அருள்பவர்;
கங்கையார் - கங்கையைத் தாங்கியவர்; கங்கையைச் சடையில் ஒளித்தவர்;
அயன் சிரத்தில் - பிரமனது மண்டையோட்டில்;
ஊண் - உணவு;
வார்கழல் - நீள்கழல் - கழல் அணிந்த திருவடி;
காண்தல் - பெறுதல் ( To attain, obtain, get);


6)
ஆரும் வந்திடும் ஐயம் ஓட்டினில்
தேரும் பண்பினர் தில்லைக் கூத்தனார்
நீரும் சேர்சடை நெற்றிக் கண்ணரைச்
சாரும் பத்தரைச் சாரும் இன்பமே.



ஆரும் வந்து இடும் ஐயம் - யார் இடுகிற பிச்சையையும்;
ஓட்டினில் - பிரமனின் மண்டையோட்டில்;
தேர்தல் - கொள்ளுதல் (To acquire, obtain);
நீரும் சேர் சடை - திங்கள், நாகம், மலர்கள் இவற்றோடு கங்கையும் பொருந்துகின்ற சடை; (உம் - எச்சவும்மை - something understood);
சார்தல் - பொருந்தியிருத்தல் (To be associated or connected with); சென்றடைதல் (To reach, approach);



7)
நற்ற வர்க்கரண் நண்ண லார்புரம்
செற்ற வில்லினர் தில்லைக் கூத்தனார்
பெற்றம் ஏறியின் பேரு ரைத்திட
வற்றும் வல்வினை மல்கும் இன்பமே.



நற்றவர்க்கு அரண் - நல்ல தவம் செய்வோர்க்குப் பாதுகாவல்;
நண்ணலார் - பகைவர்;
செற்ற வில்லினர் - அழித்த வில்லை ஏந்தியவர்; (செறுதல் - அழித்தல்);
பெற்றம் ஏறி - இடபத்தில் ஏறுபவர்;
வற்றுதல் - இல்லாமல் போதல்;
மல்குதல் - பெருகுதல்;



8)
பன்ன கத்தினைப் பால்ம திக்கயல்
சென்னி வைத்தவர் தில்லைக் கூத்தனார்
முன்னி லங்கைமன் மூட்ட டர்த்தவர்
உன்னும் நெஞ்சினில் ஊறும் இன்பமே.



பன்னகம் - பாம்பு;
பால் மதிக்கு அயல் - பால் போன்ற சந்திரனுக்குப் பக்கத்தில்;
சென்னி - தலை;
இலங்கை மன் - இலங்கைக்கு அரசன் - இராவணன்;
மூட்டு - சந்து - உடல் முதலியவற்றின் பொருத்து (Joint; articulation);
அடர்த்தல் - நசுக்குதல்;
உன்னுதல் - நினைத்தல்;


(அப்பர் தேவாரம் - 5.60.10 -
உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லாதோ ரின்பம் அணுகுமே. )

9)
வீட ளிப்பவர் வேதன் மாலொடு
தேட நின்றவர் தில்லைக் கூத்தனார்
வாடல் வெண்டலை மாலை சூடியை
நாட நாடொறும் நண்ணும் இன்பமே.



வீடு - முக்தி;
வேதன் - பிரமன்;
வாடல் வெண்டலை மாலை சூடி - உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவர்; (சம்பந்தர் தேவாரம் - 1.56.7 - "வாடல் வெண்டலை சூடினர்....");
நாடொறும் - நாள்தொறும்;
நண்ணுதல் - கிட்டுதல்; பொருந்துதல்;



10)
மேவி டாதுழல் வீணர் சொல்விடும்
தேவி கூறமர் தில்லைக் கூத்தனார்
ஏவி னாற்புரம் எய்த ஈசரைப்
பாவி னால்தொழப் பாரில் இன்பமே.



மேவிடாது - சிவனை விரும்பி வழிபடாமல்; (மேவுதல் - விரும்புதல்);
ழல்தல் - அலைதல்; நிலைகெடுதல்;
விடும் - விடுவீர்; (உம் - முன்னிலைப் பன்மை விகுதி ); (விடுதல் - நீங்குதல் - To leave, quit, part with);
தேவி - உமாதேவி;
அமர்தல் - விரும்புதல்;
- அம்பு;
ஈசர் - தலைவர்;
பாவினால் தொழ - பாமாலைகள் பாடிப் பணிந்தால்;
பார் - பூவுலகம்;



11)
மூவ ராகிய மூர்த்தி முக்கணர்
தேவ தேவரெம் தில்லைக் கூத்தனார்
சேவ தேறிய செல்வர் சீரினை
நாவ தாற்சொல நாளும் இன்பமே.



சே - இடபம்;
சீர் - புகழ்;
நாவதால் - நாக்கால்; 'அது' பகுதிப் பொருள்விகுதி. (expletive suffix; as suffix added on to a word without changing its sense); (சம்பந்தர் தேவாரம் - 2.96.2 - "தேவர் ... நாவ தாலமிர் துண்ண நயந்தவர் ....);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
சந்தக்கலிவிருத்தம் - 'தான தானன தான தானனா' என்ற அமைப்பு.
முதற்சீர் 'தனன' என்றும் வரக்கூடும்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.28.1 -
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயு மன்பரே.



3) கோயில் - தில்லை - சிதம்பரம் - நடராஜர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=492
கோயில் (சிதம்பரம்) - தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=121

-------------- --------------

No comments:

Post a Comment