Sunday, January 17, 2016

02.63 – நல்லூர் (திருநல்லூர்)

02.63 – நல்லூர் (திருநல்லூர்)



2012-10-30
திருநல்லூர்
----------------
(12 பாடல்கள்)
(நாலடித் தரவு கொச்சகக்கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - 'நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் ஆரறிவார்')



1)
நூறுவிதக் கவலைகளால் நொந்துழலும் மடநெஞ்சே
ஏறுதிகழ் கொடியுடையான் இணையடியே நினைந்துய்யாய்
நீறுதிகழ் மேனியினான் நிறமைந்தும் கொண்டருள்வான்
சேறுதிகழ் வயல்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



நோதல் - வருந்துதல்;
உழல்தல் - சுழலுதல்; அசைதல்; அலைதல்;
ஏறு திகழ் கொடி உடையான் இணையடியே நினைந்து உய்யாய் - இடபக் கொடி உடைய சிவபெருமான் திருவடிகளையே எண்ணி உய்வாயாக;
நீறு - திருநீறு; விபூதி;
நிறம் ஐந்தும் கொண்டு அருள்வான் -
(திருவாசகம் - சிவபுராணம் - ".... நிறங்களோ ரைந்துடையாய் ...." - 'நினைவார் நினைவின் வண்ணம் எந்நிறத்துடனும் தோன்றுவாய்' என்றபடி. இனிச் சிவபிரானது திருமுகங்கள் ஐந்தனுள்ளும் ஒரோவொன்று ஒரோவொரு நிறம் உடையதாதலும் அறிந்து கொள்க.)
திருநல்லூர்த் தல விசேஷம்: இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது.



2)
முன்புரிந்த வினைவந்து மூடாமுன் மடநெஞ்சே
என்பணிந்த கோலத்தன் இணையடியே நினைந்துய்யாய்
மின்புரைபுன் சடையுடையான் வெங்கூற்றை உதைகாலன்
தென்கழனி புடைசூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



என்பு அணிந்த கோலத்தன் - கங்காளன்;
மின் புரை புன்சடை - மின்னல் போன்ற செஞ்சடை;
வெம் கூற்றை உதை காலன் - கொடிய காலனை உதைத்த காலன்;
தென் கழனி - அழகிய வயல்;



3)
தும்மலொடு நோய்பலவும் சூழாமுன் மடநெஞ்சே
மும்மலமும் அறுத்தருளும் முதல்வனடி நினைந்துய்யாய்
விம்மலைசேர் வேலையெழு விடமுண்ட கண்டத்தன்
செய்ம்மலைமேல் கோயில்கொள் திருநல்லூர்ச் சுந்தரனே.



சூழ்தல் - சுற்றியிருத்தல் (To encompass, surround, envelope); தாக்குதல் (To encounter);
மும்மலம் - கன்மம், மாயை, ஆணவம் என்ற மூவகை மலங்கள்;
விம்முதல் - ஒலித்தல் (To sound); மிகுதல்;
வேலை - கடல்;
விம்மு அலைசேர் வேலை எழு விடம் - ஒலிக்கும் மிகுந்த அலைகளை உடைய கடலில் தோன்றிய நஞ்சு;
செய்ம்மலை - வினைத்தொகை - செய்+மலை; செய்த மலை - கட்டுமலை;



4)
கானோக்கி உற்றார்கள் காவாமுன் மடநெஞ்சே
மானோக்கி உமைபங்கன் வார்கழலே நினைந்துய்யாய்
வானோர்க்கும் ஏனோர்க்கும் ஒருதலைவன் மணிகண்டன்
தேனார்க்கும் பொழில்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



கானோக்கி - கான் நோக்கி - சுடுகாட்டிற்கு;
காவுதல் - சுமத்தல்;
(சுந்தரர் தேவாரம் - 7.48.3 - "ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல் காவு நாள் ....");
மானோக்கி - மான் நோக்கி - மான் போன்ற கண்ணையுடையவள்;
வார்கழல் - நீள்கழலடிகள்;
வானோர் - தேவர்கள்;
ஏனோர் - மற்றவர்கள்;
மணிகண்டன் - நீலமணி போன்ற கண்டத்தை உடையவன்;
தேன் - வண்டு;
ஆர்த்தல் - ஒலித்தல்;



5)
வெண்பனிபோல் மயிருச்சி விரவாமுன் மடநெஞ்சே
கண்புனைநெற் றிக்கடவுள் கழலிணையே நினைந்துய்யாய்
பெண்புடைசேர் பெருமையினான் பிளிறுகரி உரிமூடி
தெண்புனலார் வயல்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



வெண்பனிபோல் மயிர் - வெள்ளைவெளேரென்று நரைத்த மயிர்;
உச்சி - தலை;
விரவுதல் - பொருந்துதல்; அடைதல்;
கண் புனை நெற்றிக் கடவுள் - நெற்றிக்கண் உடைய சிவபெருமான்;
புடை - பக்கம்;
பிளிறுகரி உரிமூடி - பிளிறும் யானையின் தோலைப் போர்த்தவன்;
தெண் புனல் ஆர் வயல் - தெளிந்த நீர் பொருந்திய வயல்;



6)
வினைதுன்றி இடர்க்கடலுள் வீழாமுன் மடநெஞ்சே
நனைகின்ற சடையுடையான் நற்கழலே நினைந்துய்யாய்
புனைகொன்றை புற்றரவம் புரிந்தணிந்தான் வண்டுகள்தேத்
தெனவென்றார் பொழில்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



துன்றுதல் - நெருங்குதல் (To be close, thick, crowded together); பொருந்துதல் (To get attached);
புனை - அழகு;
(சுந்தரர் தேவாரம் - 7.40.4 - "பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்");
புற்றரவம் - புற்றில் வாழும் தன்மையுடைய பாம்பு; (புற்றில் வாழ்தல் - இன அடையாக வந்தது);
புரிந்து அணிந்தான் - விரும்பியணிந்தவன்; (புரிதல் - விரும்புதல்);
தேத்தென - வண்டின் ரீங்கார ஒலிக்குறிப்பு;
ஆர்த்தல் - ஒலித்தல்;
வண்டுகள் தேத்தென என்று ஆர் பொழில் சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே - வண்டுகள் தேத்தென என்று ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருநல்லூரில் எழுந்தருளியிருக்கும் சுந்தரன்;
(அப்பர் தேவாரம் - 4.816 - "பூத்தன பொற்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் ... தேத்தென ன்றிசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்து....");


7)
வெவ்வினைசூழ்ந் திடர்க்கடலுள் வீழாமுன் மடநெஞ்சே
எவ்வினையும் தீர்த்தருளும் இணையடியே நினைந்துய்யாய்
திவ்வியநல் வடிவுடையான் திரிசூலப் படையுடையான்
செவ்வழிவண் டார்பொழில்சூழ் திருநல்லூர்ச் சுந்தரனே.



வெவ்வினை - கொடிய வினை;
டர்க்கடலுள் வீழாமுன் - துன்பக்கடலில் விழுவதன்முன்;
திவ்விய நல்வடிவு - ஒளியுடம்பு; (दिव्य a. 1 Divine, heavenly, celestial; 2 Supernatural, wonderful; 3 Brilliant, splendid. 4 Charming, beautiful.);
செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்; நல்ல மார்க்கம்;
வண்டு ஆர் பொழில் சூழ் - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த;



8)
எழுமலைபோல் ஆசைகளால் இடர்ப்படுமென் மடநெஞ்சே
தொழுமலையை இடந்தவன்றன் தோள்நெரித்தான் கழல்பேணாய்
அழுமிலங்கை அரசனுக்கின் னருள்செய்தான் அடலேற்றன்
செழுமலரார் பொழில்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



எழுமலைபோல் ஆசைகள் - எழும் அலைபோல் ஆசை - அலைபோலத் தொடர்ந்து எழுகின்ற ஆசைகள்; ( "எழு மலைபோல் ஆசைகள்" - "உயர்கின்ற மலை போன்ற ஆசைகள்" என்றும் பொருள்கொள்ளலாம்);
தொழு மலை - எல்லாரும் தொழும் கயிலைமலை;
இடந்தவன்றன் - இடந்தவனுடைய; (இடத்தல் - பெயர்த்தல்);
அழும் இலங்கை அரசன் - இராவணன்;
அடல் ஏற்றன் - வலிய இடபத்தை ஊர்தியாக உடையவன்;
செழுமலர் ஆர் பொழில் - செழுமையான பூக்கள் நிறைந்த சோலை;



9)
இகல்கின்ற வினைவந்திங் கெய்தாமுன் மடநெஞ்சே
அகழ்கின்ற மாற்கரியான் அடியிணையே நினைந்துய்யாய்
புகழ்கின்ற அடியார்க்குப் புகலானான் பொற்சடைமேல்
திகழ்கின்ற மதிசூடும் திருநல்லூர்ச் சுந்தரனே.



இகல்தல் - பகைத்தல்;
எய்துதல் - அடைதல்;
மாற்கு அரியான் - திருமாலுக்கு அரியவன்; (மால் அகழ்ந்தது அடிமுடி தேடியபோது என்பதால், பிரமனுக்கும் அரியவன் என்பது குறிப்பால் பெறப்பட்டது);
புகல் - அடைக்கலம்;



10)
நீறணியா நெற்றியர்சொல் வெற்றுரையை ஒழிநெஞ்சே
ஆறணியும் செஞ்சடையன் அடியிணையே நினைந்துய்யாய்
வேறணியா அரவத்தை விரும்பியவன் விடையேறி
சேறணியும் வயல்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



நீறு - திருநீறு;
ஆறு - கங்கை;
வேறு - சிறப்புடையது (That which is special or distinct; that which is distinguished or particularised);
வேறு அணியா அரவத்தை விரும்பியவன் - சிறந்த ஆபரணமாகப் பாம்பை விரும்பிப் பூண்டவன்;
விடையேறி - இடப வாகனன்;



11)
குன்றனைய வினைதீர்ந்து நன்றுமிக நினைநெஞ்சே
அன்றொருவெண் கோவணத்திற் கிணையாக அமர்நீதி
நின்றதுலை யுடனேவான் ஏற்றியருள் நேயனளி
சென்றிசைசெய் பொழில்சூழும் திருநல்லூர்ச் சுந்தரனே.



* அமர்நீதி நாயனர் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.


குன்று அனைய வினை தீர்ந்து, நன்று மிக - மலை ஒத்த வினைகள் எல்லாம் தீர்ந்து, நன்மையே மிகுவதற்கு;
அமர்நீதி - அமர்நீதி நாயனர்
துலை - தராசு;
நேயன் - அன்புடையவன்;
அளி சென்று இசைசெய் பொழில் - வண்டுகள் அடைந்து ரீங்காரம் செய்யும் சோலை;


(திருத்தொண்டர் திருவந்தாதி - 11.33.8 -
மிண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின்
முண்டந் தரித்த பிராற்குநல் லூரின்முன் கோவணம்நேர்
கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன்
துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே.
-- கோவணம் நேர் கொண்டு - கோவணத்திற்குச் சம எடையாக ஏற்று.)



12)
இன்றுதுணை இல்லேமென் றேங்காதே என்னெஞ்சே
என்றலைமேல் கழல்சூட்டாய் என்றுதொழு வாகீசர்க்
கன்றருள்செய் மலர்ப்பாதன் அன்புடைய மாணிக்காத்
தென்றிசைக்கோன் தனையுதைத்த திருநல்லூர்ச் சுந்தரனே.



ஏம் - தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி;
என்றலைமேல் - என் தலைமேல்;
வாகீசர் - திருநாவுக்கரசர்;
மாணிக்கா - மார்க்கண்டேயருக்காக; (கடைக்குறை விகாரம்);
தென்றிசைக்கோன் - தென் திசைக்கோன் - இயமன்; (Yama, as regent of the South);


என் மனமே! இன்று நாம் துணை இல்லோம் என்று ஏங்காதே; "என் தலைமேல் உன் திருவடியைச் சூட்டியருள்வாயாக" என்று தொழுத திருநாவுக்கரசருக்கு அன்று அருள்புரிந்த மலர் போன்ற திருவடியை உடையவன்; அன்பு உடைய மார்க்கண்டேயரைக் காப்பதற்காக இயமனை உதைத்தவன்; திருநல்லூரில் எழுந்தருளிய அழகன்.


(பெரிய புராணம் - திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 195 -
நன்மைபெரு கருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்றவர்தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.)



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
  • நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
  • அடிதோறும் 4 காய்ச்சீர்கள் ; விளச்சீர்களும் வரலாம்;
  • ஒரோவழி (சில இடங்களில்) மாச்சீர் வரலாம்; அப்படி மாச்சீர் வரின் அதனை அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;
2) சம்பந்தர் தேவாம் - 2.41.1 -
மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலும்
கண்புகார் பிணியறியார் கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் னவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே.
3) நல்லூர் (திருநல்லூர்) - பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=367
நல்லூர் (திருநல்லூர்) - தேவாரம் ஆர்க் தளத்தில் : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=158
4) திருநல்லூர் - தலக்குறிப்பு :
திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியருளிய தலம். இதுபற்றியே இன்றும் இத்தலத்தில் சடாரி போன்று திருவடி சூட்டப்படுகின்றது.
அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் அவருக்குக் காட்சி வழங்கி ஆட்கொண்டருளிய (முத்தியருளிய) அருட்சிறப்பும் உடையது.



இத்தலம். மிகப்பழமையான, அருமையான, சிறப்புமிக்க திருக்கோயில்.
இறைவன் - பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
இறைவி - கிரிசுந்தரி, பர்வதசுந்தரி, கல்யாணசுந்தரி.



'திருமுறைத் தலங்கள்' (by பு.மா.ஜெயசெந்தில்நதன்) என்ற நூலில் காணும் தகவல்கள்:
மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது. ஒருநாளில், ஆறு நாழிகைக்கு ஒருமுறை - ஒருநாளில் ஐந்துமுறை நிறம் மாறுகின்றது. இதனால்தான் இறைவனுக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் வழங்குகின்றது. பிருங்கி முனிவர், வண்டு வடிவமாய் வழிபட்டதால் இச்சிவலிங்கத்தில் துவாரங்கள் உள்ளன. சதுர ஆவுடையார் சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலங்காட்டி யருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதைவடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரமனும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில் அகத்தியலிங்கம் உள்ளது.)

-------------- --------------

No comments:

Post a Comment