02.61
– காட்டுப்பள்ளி
(மேலை)
- (திருக்காட்டுப்பள்ளி
(மேலை))
2012-10-21
திருக்காட்டுப்பள்ளி (மேலை)
----------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)
(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்")
1)
வாரி தன்னில் எழுவிடத்தை .. வானோர் உய்ய உண்டவனே
நேரி லாத நின்மலனே .. நீற ணிந்த தீயாடீ
காரின் வளஞ்சேர் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
நாரி பங்கா நின்புகழே .. நவிலும் மதியைத் தாராயே.
2)
பனைக்கை வேழத் துரிமூடீ .. பாவை பங்க கங்கைநதி
நனைக்கும் சடையை உடையானே .. நரைவெள் விடையொன் றமர்வோனே
கனைக்கும் புனலார் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
நினைக்கை கூப்பி நிதம்போற்ற .. நினையும் மதியைத் தாராயே.
3)
மடலார் மலரிட் டுனைவாழ்த்தும் .. மாணிக் காகக் கூற்றுதைத்தாய்
மடவாள் ஒருபங் கமர்வோனே .. மதியை முடிமேற் புனைவோனே
கடல்போற் பரந்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
அடலே றுடையாய் நின்னடியே .. அடையும் மதியைத் தாராயே.
4)
ஒலிக்கும் கழலாய் உன்தளியில் .. ஓர்வி ளக்குத் திரிதூண்டும்
எலிக்கும் வானம் அருள்வோனே .. இறவாப் பிறவாப் பெரியோனே
கலிக்கும் புனலார் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பலிக்குத் திரிவாய் நின்புகழே .. பாடும் மதியைத் தாராயே.
5)
விண்ணுக் கிரங்கி முப்புரங்கள் .. வேவக் கணையொன் றுய்த்தவனே
பெண்ணுக் கொருபங் கீந்தவனே .. பேசற் கரிய பெம்மானே
கண்ணுக் கினிய காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பண்ணுக் கிரங்கும் பண்பஉனைப் .. பாடும் மதியைத் தாராயே.
6)
முனிபுங் கவர்க்கு மறைவிரிக்க .. முன்னம் ஆலின் கீழமர்ந்தாய்
குனிவெஞ் சிலையாற் புரமெரித்தாய் .. கோல மதனைக் கண்சிவந்தாய்
கனியுந் திப்பாய் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பனிவெண் பிறையாய் நாளுமுனைப் .. பாடும் மதியைத் தாராயே.
7)
நரகத் திற்கே விரைவோரும் .. நாமம் சொல்லின் உய்விப்பாய்
கிரகத் தீமை அடியாரைக் .. கிட்டா தருள்வாய் அகத்தியர்தம்
கரகத் துதித்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
உரகப் பூணா உன்புகழே .. உரைக்கும் மதியைத் தாராயே.
8)
கரநா லைந்தால் மலையசைத்தான் .. கதற விரலொன் றூன்றியவா
திரையார் கங்கைச் சடையானே .. தேவர் தங்கள் பெருமானே
கரவா தளிக்கும் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
வரைமா துடையாய் நின்னடியே .. வாழ்த்தும் மதியைத் தாராயே.
9)
புயல்வண் ணனொடு நான்முகனும் .. போற்ற நின்ற பரஞ்சுடரே
இயலும் இசையும் கூத்துங்கொண் .. டேத்தும் அன்பர்க் கன்புடையாய்
கயல்கள் உகளும் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
செயல்கள் எல்லாம் நின்தொண்டாச் .. செய்யும் மதியைத் தாராயே.
10)
வம்பு ரைத்துத் திரிகின்ற .. வஞ்ச நெஞ்சர்க் கருளாதாய்
நம்பும் அன்பர் தங்கட்கு .. நலங்கள் நல்கும் அருட்கடலே
கம்புந் திப்பாய் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
கொம்பன் னாளோர் கூறஉனைக்.. கூடும் மதியைத் தாராயே.
11)
மேகம் போலத் திகழ்கண்டா .. மேனி எங்கும் வெண்ணீற்றாய்
பாகம் பெண்ணாய் மகிழ்வோனே .. பங்கம் இல்லா மாமணியே
காகம் விரித்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
நாகம் பூண்ட நம்பஉனை .. நாடும் மதியைத் தாராயே.
பங்கம் - குற்றம்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) திருக்காட்டுப்பள்ளி (மேலை) - அக்னீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=956
-------------- --------------

வாரி
-
கடல்;
நேர்
இலாத -
ஒப்பற்ற;
தீயாடீ
-
தீயாடி
என்பதன் விளி;
காட்டுப்பள்ளி
உளாய் -
திருக்காட்டுப்பள்ளியில்
உள்ளவனே;
கார்
-
மேகம்;
நாரி
-
பெண்;
நவில்தல்
-
சொல்லுதல்;
கடலில்
எழுந்த நஞ்சைத் தேவர்கள்
உய்யும்பொருட்டு உண்டவனே;
ஒப்பற்ற
நிர்மலனே;
திருநீறு
பூசித் தீயாடும் பெருமானே;
மழைவளம்
சேர்ந்த காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
பார்வதி
பங்கனே;
உன்
புகழையே சொல்லும் அறிவைத்
தந்தருள்வாயாக.
*
தீயாடியப்பர்
-
மேலைத்
திருக்காட்டுப்பள்ளி ஈசன்
திருநாமம்.
2)
பனைக்கை வேழத் துரிமூடீ .. பாவை பங்க கங்கைநதி
நனைக்கும் சடையை உடையானே .. நரைவெள் விடையொன் றமர்வோனே
கனைக்கும் புனலார் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
நினைக்கை கூப்பி நிதம்போற்ற .. நினையும் மதியைத் தாராயே.
வேழத்து
உரி - யானைத்தோல்;
நரைவெள்
விடை -
நரைவெள்ளேறு
-
மிக
வெள்ளிய இடபம்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.98.1 - "நன்றுடையானைத்
தீயதிலானை நரைவெள்ளேறு...");
கனைத்தல்
-
ஒலித்தல்;
பனை
போன்ற துதிக்கையை உடைய யானையின்
தோலைப் போர்த்தவனே;
உமையை
ஒரு பங்காக உடையவனே;
கங்கை
ஆறு நனைக்கின்ற சடையை உடையவனே;
மிக
வெள்ளை எருதை ஊர்தியாக
விரும்புபவனே;
ஒலிக்கும்
நீர் நிறைந்த காவிரியின்
தென்கரையில் (மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
உன்னைக்
கைகூப்பித் தினமும் தொழ
நினைக்கும் அறிவைத் தந்தருள்வாயாக.
3)
மடலார் மலரிட் டுனைவாழ்த்தும் .. மாணிக் காகக் கூற்றுதைத்தாய்
மடவாள் ஒருபங் கமர்வோனே .. மதியை முடிமேற் புனைவோனே
கடல்போற் பரந்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
அடலே றுடையாய் நின்னடியே .. அடையும் மதியைத் தாராயே.
மடல்
ஆர் மலர் -
இதழ்கள்
பொருந்திய பூ -
தாமரை;
மாணி
-
அந்தணச்
சிறுவன் -
மார்க்கண்டேயர்;
கூற்று
-
இயமன்;
மடவாள்
-
பெண்;
அடல்
ஏறு -
வலிய
எருது;
கடல்போற்
பரந்த காவிரி -
(சம்பந்தர்
தேவாரம் -
1.67.5 - திருப்பழனம்
-
"கலவ
மயிலுங் குயிலும் பயிலுங்
கடல்போற் காவேரி");
4)
ஒலிக்கும் கழலாய் உன்தளியில் .. ஓர்வி ளக்குத் திரிதூண்டும்
எலிக்கும் வானம் அருள்வோனே .. இறவாப் பிறவாப் பெரியோனே
கலிக்கும் புனலார் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பலிக்குத் திரிவாய் நின்புகழே .. பாடும் மதியைத் தாராயே.
தளி
-
கோயில்;
கலித்தல்
-
ஒலித்தல்
(To
sound); வேகமாதல்
(To
be swift, quick);
ஒலிக்கின்ற
கழலை அணிந்தவனே;
திருமறைக்காட்டில்
உன் கோயிலில் ஒரு தீபத்தின்
திரியைத் தற்செயலாகத் தூண்டிய
எலிக்கும் வானம் ஆளும் நிலை
அருளியவனே;
பிறப்பும்
இறப்பும் இல்லாத பெருமானே;
ஒலித்துப்
பாயும் காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
(பிரமன்
சிரத்தில்)
பிச்சை
ஏற்று உழல்பவனே;
உன்
புகழையே பாடும் அறிவைத்
தந்தருள்வாயாக.
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
4.49.8 -
நிறைமறைக்
காடு தன்னில் நீண்டெரி தீபந்
தன்னைக்
கறைநிறத்
தெலிதன் மூக்குச் சுட்டிடக்
கனன்று தூண்ட
நிறைகடன்
மண்ணும் விண்ணும் நீண்டவா
னுலக மெல்லாம்
குறைவறக்
கொடுப்பர்போலுங் குறுக்கைவீ
ரட்ட னாரே.
--
திருமறைக்காட்டிலே
எலியாயிருந்து,
திருவிளக்கு
நெய்யுண்ணப் புகுந்து,
சுடர்
சுட மூக்கால் தூண்டிய அபுத்திபூருவ
புண்ணியத்தின் பயனாக மறுமையில்
மூவுலகாளும் மாவலி வேந்தான
வரலாறு இதிற் குறிக்கப்பட்டது.)
5)
விண்ணுக் கிரங்கி முப்புரங்கள் .. வேவக் கணையொன் றுய்த்தவனே
பெண்ணுக் கொருபங் கீந்தவனே .. பேசற் கரிய பெம்மானே
கண்ணுக் கினிய காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பண்ணுக் கிரங்கும் பண்பஉனைப் .. பாடும் மதியைத் தாராயே.
விண்
-
ஆகுபெயராய்த்
தேவர்களைச் சுட்டியது;
உய்த்தல்
-
பிரயோகித்தல்;
செலுத்துதல்;
பண்ணுக்கு
இரங்கும் பண்ப -
பண்ணோடு
பாடும் பாடலுக்கு இரங்கி
அருள்பவனே;
(சுந்தரர்
தேவாரம் -
7.62.8 -
"நாளும்
இன்னிசை யால்தமிழ் பரப்பும்
..
ஞான
சம்பந்த னுக்குல கவர்முன்
தாளம்
ஈந்தவன் பாடலுக்
கிரங்கும்
..
தன்மை
யாளனை ........")
6)
முனிபுங் கவர்க்கு மறைவிரிக்க .. முன்னம் ஆலின் கீழமர்ந்தாய்
குனிவெஞ் சிலையாற் புரமெரித்தாய் .. கோல மதனைக் கண்சிவந்தாய்
கனியுந் திப்பாய் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
பனிவெண் பிறையாய் நாளுமுனைப் .. பாடும் மதியைத் தாராயே.
முனி
புங்கவர் -
முனி
சிரேஷ்டர்கள் -
இங்கே,
சனகாதியர்
நால்வர்;
விரித்தல்
-
விளக்கி
உரைத்தல்;
குனித்தல்
-
வளைத்தல்;
(சம்பந்தர்
தேவாரம் -
3.103.1 - "கொடியுடை
மும்மதில் ஊடுருவக் குனிவெஞ்
சிலைதாங்கி");
சிலை
-
வில்;
கோலம்
-
அழகு;
மதன்
-
மன்மதன்;
காமன்;
நான்கு
முனி சிரேஷ்டர்களுக்கு வேதம்
உரைக்கக் கல்லால மரத்தின்கீழ்
அமர்ந்தவனே;
வளைத்த
வில்லால் முப்புரங்களை
எரித்தவனே;
அழகிய
காமனைக் கோபித்து நெற்றிக்கண்
சிவந்தவனே;
(ஆற்றங்கரை
ஓரத்து மரங்களிலிருந்து
உதிர்ந்த)
பழங்களை
உருட்டிவரும் காவிரியின்
தென்கரையில் (மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
குளிர்ந்த
வெண்பிறையைச் சூடியவனே;
தினமும்
உன்னைப் பாடும் அறிவைத்
தந்தருள்வாயாக.
7)
நரகத் திற்கே விரைவோரும் .. நாமம் சொல்லின் உய்விப்பாய்
கிரகத் தீமை அடியாரைக் .. கிட்டா தருள்வாய் அகத்தியர்தம்
கரகத் துதித்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
உரகப் பூணா உன்புகழே .. உரைக்கும் மதியைத் தாராயே.
கிரகத்
தீமை -
கோள்களால்
ஏற்படும் தீயன;
கிட்டுதல்
-
அண்டுதல்;
நெருங்குதல்;
கரகம்
-
கமண்டலம்;
உரகம்
=
பாம்பு;
(उरगः
(-गी
f.)
[उरसा
गच्छति,
उरस्
-गम्-ड;
सलोपश्च
P.III.2.48
Vārt.] 1 A serpent, snake;)
தீயவினைகளே
செய்து நரகத்தில் வீழவே
விரைபவர்களும் ஐந்தெழுத்தைச்
சொன்னால் அவர்களை உய்விப்பவனே;
அடியவர்களுக்குக்
கோள்களால் தீமை விளையாது
காப்பவனே;
அகத்தியரின்
கமண்டலத்திலிருந்து தோன்றிய
காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
பாம்பை
மாலையாக அணிபவனே;
உன்
புகழையே பேசும் அறிவைத்
தந்தருள்வாயாக.
(சம்பந்தர்
தேவாரம் -
3.49.7 -
நரகம்
ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய்
வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி
யேபுகு வித்திடும் என்பரால்
வரதன்
நாமம் நமச்சி வாயவே.
-----
ஏழ்
நரகங்கட்குச் செல்லக் கூடிய
பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப்
பக்தியோடு உச்சரிப்பார்களேயானால்,
உருத்திர
கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும்
பேற்றினைப் பெறுவர்.
அடியவர்கள்
கேட்ட வரமெல்லாம் தரும்
சிவபெருமானின் திருநாமமும்
திருவைந்தெழுத்தே ஆகும்.)
(சம்பந்தர்
தேவாரம் -
2.85.1 - கோளறு
பதிகம் -
:
வேயுறு
தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு
திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு
திங்கள் செவ்வாய் புதன்வியாழம்
வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு
நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியார்
அவர்க்கு மிகவே.)
8)
கரநா லைந்தால் மலையசைத்தான் .. கதற விரலொன் றூன்றியவா
திரையார் கங்கைச் சடையானே .. தேவர் தங்கள் பெருமானே
கரவா தளிக்கும் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
வரைமா துடையாய் நின்னடியே .. வாழ்த்தும் மதியைத் தாராயே.
கரம்
நாலைந்தால் -
இருபது
கைகளால்;
திரை
-
அலை;
கரவாது
-
வஞ்சனையின்றி;
வரை
-
மலை;
(வரைமாது
-
மலைமகள்);
இருபது
கைகளால் கயிலையை அசைத்த
இராவணன் அழும்படி ஒரு விரலை
அம்மலைமேல் ஊன்றியவனே;
அலை
பொருந்திய கங்கையைச் சடையில்
வைத்தவனே;
வானோர்
தலைவனே;
வஞ்சனையின்றிக்
கொடுக்கும் காவிரியின்
தென்கரையில் (மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
பார்வதி
நாயகனே;
உன்
திருவடியையே வாழ்த்தி வணங்கும்
அறிவைத் தந்தருள்வாயாக.
9)
புயல்வண் ணனொடு நான்முகனும் .. போற்ற நின்ற பரஞ்சுடரே
இயலும் இசையும் கூத்துங்கொண் .. டேத்தும் அன்பர்க் கன்புடையாய்
கயல்கள் உகளும் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
செயல்கள் எல்லாம் நின்தொண்டாச் .. செய்யும் மதியைத் தாராயே.
புயல்
-
மேகம்;
(புயலின்
வண்ணன் -
திருமால்);
கூத்து
-
நாடகம்;
உகளுதல்
-
தாவுதல்;
நின்
தொண்டா -
நின்
தொண்டாக (கடைக்குறை
விகாரம்);
மேகவண்ணம்
உடைய திருமாலும் பிரமனும்
(அடிமுடி
தேடிக் காணாமல்)
வணங்குமாறு
எழுந்த மேலான சோதியே;
இயல்,
இசை,
நாடகம்
என முத்தமிழால் உன்னைப்
போற்றும் அன்பர்களுக்கு
அன்பு உடையவனே;
கயல்மீன்கள்
பாயும் காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
அடியேன்
செய்வன எல்லாம் உன் தொண்டே
ஆகும்படி செய்யும் அறிவைத்
தந்தருள்வாயாக.
10)
வம்பு ரைத்துத் திரிகின்ற .. வஞ்ச நெஞ்சர்க் கருளாதாய்
நம்பும் அன்பர் தங்கட்கு .. நலங்கள் நல்கும் அருட்கடலே
கம்புந் திப்பாய் காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
கொம்பன் னாளோர் கூறஉனைக்.. கூடும் மதியைத் தாராயே.
நம்புதல்
-
விரும்புதல்;
கம்பு
-
சங்கு;
மரக்கொம்பு
(மரக்கிளை);
செடிகொடிகளின்
தண்டு;
(அப்பர்
தேவாரம் -
5.62.7 - "கம்பு
நீர்க்கடு வாய்க்கரைத்
தென்புத்தூர்");
கொம்பு
-
பூங்கொம்பு;
அன்னாள்
-
நிகர்த்தவள்;
(அப்பர்
தேவாரம் -
4.66.4 - "கொம்பனாள்
பாகர் போலும் கொடியுடை விடையர்
போலும்");
கூடுதல்
-
சேர்தல்;
அடைதல்;
வஞ்சத்தை
நெஞ்சுள் மறைத்து,
வம்பு
பேசித் திரியும் ஈனர்களுக்கு
அருளாதவனே;
விரும்பும்
பக்தர்களுக்கு எல்லா நலங்களும்
அளிக்கும் அருட்கடலே;
கம்புகளையும்
சங்குகளையும் சுமந்து வரும்
காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
பூங்கொம்பு
போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;
உன்னைச்
சேரும் அறிவைத் தந்தருள்வாயாக.
11)
மேகம் போலத் திகழ்கண்டா .. மேனி எங்கும் வெண்ணீற்றாய்
பாகம் பெண்ணாய் மகிழ்வோனே .. பங்கம் இல்லா மாமணியே
காகம் விரித்த காவிரித்தென் .. கரையிற் காட்டுப் பள்ளியுளாய்
நாகம் பூண்ட நம்பஉனை .. நாடும் மதியைத் தாராயே.
பங்கம் - குற்றம்;
நம்பன்
-
சிவபெருமானுக்கு
ஒரு பெயர்.
விரும்பத்
தக்கவன் என்பது பொருள்.
மேகம்
போலத் திகழும் நீலகண்டனே;
திருமேனி
எங்கும் வெண்ணீறு பூசியவனே;
ஒரு
பங்கு பெண் ஆகி விளங்குபவனே;
குற்றமற்ற
சிறந்த மாணிக்கமே;
காக்கை
(அகத்தியரின்
கமண்டலத்தைக் கவிழ்த்து)
விரியச்
செய்த காவிரியின் தென்கரையில்
(மேலைத்)
திருக்காட்டுப்பள்ளியில்
எழுந்தருளியவனே;
பாம்பை
ஆபரணமாகப் பூணும் சிவனே;
உன்னை
விரும்பும் அறிவைத் தந்தருள்வாயாக.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) திருக்காட்டுப்பள்ளி (மேலை) - அக்னீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=956
-------------- --------------
No comments:
Post a Comment