Sunday, January 10, 2016

02.57 – மங்கலக்குடி (திருமங்கலக்குடி)

02.57 – மங்கலக்குடி (திருமங்கலக்குடி)



2012-10-06
திருமங்கலக்குடி
----------------------
(அறுசீர்ச் சந்த விருத்தம் - "விளம் கூவிளம் தேமா தேமா கூவிளம் புளிமாங்காய்" என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.100.1 - "கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி".
சம்பந்தரின் அப்பதிகத்தில் 6-ஆம் சீர் பெரும்பாலும் கூவிளங்காய் அமைப்பு.)



1)
மழைமுகில் தீண்டிடும் வான்பொ ழில்சூழ் மங்கலக் குடிமேவும்
பழையனைப் பண்டொரு பன்றிப் பின்போய்ப் பார்த்தனுக் கருள்வானைக்
குழையொரு காதனைச் சென்னி மீது கோலவெண் பிறையானை
உழையொரு கையனை உம்பர் கோனை உன்னியுய்ம் மடநெஞ்சே.



மழைமுகில் தீண்டிடும் வான்பொழில்சூழ் மங்கலக்குடி மேவும் - மேகம் வந்து தீண்டுமாறு உயர்ந்த அழகிய சோலை சூழ்ந்த திருமங்கலக்குடியில் எழுந்தருளிய தொன்மையானவனை;
பண்டு ஒரு பன்றிப்பின் போய்ப் பார்த்தனுக்கு அருள்வானை - முன்னொருநாள் ஒரு பன்றியைத் துரத்திச்சென்று அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அளித்தவனை;
குழை ஒரு காதனை - ஒரு காதில் குழையை அணிந்த அர்தநாரீஸ்வரனை;
சென்னி மீது கோல வெண் பிறையானை - முடிமேல் அழகிய வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனை;
உழை ஒரு கையனை - ஒரு கையில் மான் ஏந்தியவனை;
உம்பர் கோனை - தேவர்கள் தலைவனை;
உன்னி உய்ம் மடநெஞ்சே - சிந்தித்து உய்வாய் என் பேதைமனமே.


இலக்கணக் குறிப்பு: புணர்ச்சி விதி:
தனிக்குறிலை அடுத்து யகரமெய் அமையும் சொல், ஓர் எழுத்து ஒரு மொழியாக வரும் ஐகாரமாகிய சொல், நொ,து என்னும் ஓர் எழுத்துச்சொற்கள் நிலைமொழிகளாக இருந்து அவற்றிற்கு முன்னே ‘ஞ,,ம’ என்னும் மெல்லின மெய் எழுத்துகளை முதலாகக் கொண்ட வருமொழிகள் வந்து சேரும்போது, அவ்வெழுத்துகள் அல்வழியிலும், வேற்றுமையிலும் மிகும்.
ஆகவே, உய் + மடநெஞ்சே = உய்ம்மடநெஞ்சே;
(அப்பர் தேவாரம் - 5.10.1
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.)



2)
வான்முகில் தீண்டிடும் சோலை சூழும் மங்கலக் குடிமேவும்
பான்மதி சூடியை மேனி பாகம் பாவையை அமர்வானை
மான்மறி ஏந்தியை வந்திப் பார்க்கு வந்தருள் புரிவானைத்
தேன்மலி கொன்றையந் தாரி னானைச் சிந்தியென் மடநெஞ்சே.



பான்மதி - பால் மதி - வெண் திங்கள்;
அமர்தல் - விரும்புதல்;
மான்மறி - மான் கன்று;
வந்திப்பார்க்கு வந்து அருள்புரிவானை - போற்றும் அடியார்க்கு அவர்களை அணுகி வந்து அருள்செய்பவனை;
கொன்றை அம் தாரினான் - அழகிய கொன்றை மாலையை அணிந்தவன்;


(சுந்தரர் தேவாரம் - 7.23.2 -
எங்கே னும்மிருந்துன் னடி யேன்உ னைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் முட னாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத் திட்டெ னையாளுங்
கங்கா நாயகனே கழிப் பாலை மேயானே.)



3)
வார்குழல் மாதர்கள் மைந்தர் ஏத்தும் மங்கலக் குடிமேவும்
கார்திகழ் கண்டனைத் தேவ ரெல்லாம் கைதொழு தடிபோற்றத்
தேர்மிசை நின்றெயில் மூன்றெ ரித்த தேவினைப் பலிகொள்ள
ஓர்சிரம் கையினில் ஏந்தி னானை உன்னியுய்ம் மடநெஞ்சே.



வார் குழல் மாதர்கள் - நீண்ட கூந்தலை உடைய பெண்கள்;
மைந்தர் - கணவர்;
கார் திகழ் கண்டன் - கருமை திகழும் கண்டத்தை உடையவன் - நீலகண்டன்;
எயில் - கோட்டை;
தே - தெய்வம்;
பலி - பிச்சை;
சிரம் - பிரமனின் மண்டையோடு;
உன்னுதல் - நினைத்தல்;



4)
வையகம் வந்தடி வாழ்த்து கின்ற மங்கலக் குடிமேவும்
மையணி கண்டனைப் பூங்கொம் பன்ன மாதொரு புடையானை
நெய்யொடு பால்தயிர் ஆடு வானை நீற்றனைப் பவளம்போல்
செய்யனைத் தீவினை பாற்று வானைச் சிந்தியென் மடநெஞ்சே.



வையகம் - உலகம் - ஆகுபெயராக உலகத்தோரைச் சுட்டியது;
மை அணி கண்டன் - கருமை திகழும் கண்டன் - நீலகண்டன்;
பூங்கொம்பு அன்ன மாது - பூங்கொடி போன்ற பார்வதி;
புடை - பக்கம்;
நெய்யொடு பால் தயிர் ஆடுவான் - நெய், பால், தயிர், இவற்றால் அபிஷேகம் உடையவன்;
பவளம்போல் செய்யன் - பவளத்தைப் போன்ற செம்மேனி உடையவன்; (செய் - சிவப்பு);
பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்;



5)
வண்பொழி லிற்குயில் கீதம் பாடும் மங்கலக் குடிமேவும்
தண்புனல் செஞ்சடைத் தாங்கு வானைத் தாமரை அதுவென்று
கண்பதம் இட்டரி வேண்டி நிற்கக் கண்டுசக் கரமீந்த
பண்பனைக் கண்புனை நெற்றி யானைப் பற்றிநில் மடநெஞ்சே.



வண் பொழில் - வளப்பமான சோலை;
தண் புனல் - கங்கை;
தாமரை அது என்று கண் பதம் இட்டு அரி வேண்டி நிற்கக் கண்டு சக்கரம் ஈந்த பண்பனை - (ஆயிரம் தாமரையில் ஒரு பூக்குறையவும், திருமால் தன் கண்ணையே தோண்டித் திருவடியில் இட்டு வழிபடுவதைக் கண்டு மகிழ்ந்து திருமாலுக்குச் சக்கராயுதத்தைத் தந்தவனை;
கண்புனை நெற்றியானை - நெற்றிக்கண்ணனை;



6)
மல்லிகை ஏந்திவந் தன்பர் ஏத்தும் மங்கலக் குடிமேவும்
செல்வனைச் செம்மன மாணி ஆயுள் தீர்ந்ததென் றுயிர்கொள்ளச்
செல்லெமன் ஆருயிர் வீட்டி னானைத் திங்களஞ் சடையானை
அல்லினில் மாநடம் ஆடு வானை ஆதரி மடநெஞ்சே.



மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;
வீட்டுதல் - அழித்தல்; கொல்லுதல்;
உயிர்கொள்ளச் செல்லெமன் - மார்க்கண்டேயர் உயிரைக் கவரச் சென்ற எமனை;
திங்களஞ்சடையான் - திங்கள் அம் சடையான் - பிறை அணிந்த அழகிய சடையை உடையவன்;
அல் - இரவு;
ஆதரித்தல் - விரும்புதல்; போற்றுதல்;



7)
மங்கையர் வந்துவ ரங்கள் கொள்ளும் மங்கலக் குடிமேவும்
சங்கணி கையனைக் கங்கை வெள்ளம் தாங்கிய சடையானை
அங்கையில் ஆரழல் ஏந்தி ஆடும் அண்ணலை அணியாகப்
பொங்கர வம்புனை மேனி யானைப் போற்றியுய்ம் மடநெஞ்சே.



சங்கு அணி கையன் - வளையல் அணிந்த கையை உடையவன் - அர்த்தநாரீஸ்வரன்;
அணி - ஆபரணம்;
பொங்கு அரவம் புனை - சீறுகின்ற நாகத்தை அணியும்;



8)
மட்டலர் மல்கிய சோலை சூழும் மங்கலக் குடிமேவும்
நட்டனை, நின்றதன் தேர்க டாவ நன்மலை இடக்கச்செல்
துட்டனை ஓர்விர லால டர்த்த தோன்றலை, மறைபோற்றும்
சிட்டனை எட்டனை யேனும் நாளும் சிந்தியென் மடநெஞ்சே.



மட்டு அலர் மல்கிய சோலை - தேன் மலர்கள் நிறைந்த சோலை;
நட்டன் - கூத்தன்;
கடாவுதல் - செலுத்துதல் (To ride, as an animal; to drive, as a car);
நின்ற தன் தேர் கடாவ நன்மலை இடக்கச்செல் துட்டன் - கயிலைமலைமேல் செல்லாமல் கீழ் இறங்கிய தன் தேரைச் செலுத்த எண்ணி அம்மலையைப் பேர்த்து எறியச் சென்ற துஷ்டனான இராவணன்;
தோன்றல் - தலைவன்; பெருமையுடையவன்; (Superiority, greatness);
சிட்டன் - மேலானவன்; (சிரேஷ்டன்);
எட்டனையேனும் - எள் தனையேனும் - சிறிதளவாவது;



9)
வண்டினம் ஆர்த்தடை சோலை சூழும் மங்கலக் குடிமேவும்
கண்டனை மாமல ரானும் மாலும் கைதொழு தழலானை
இண்டைநி லாச்சடை ஏற்றி னானை ஈசனை அடிபோற்றி
அண்டடி யார்களுக் கண்ணிப் பானை ஆதரி மடநெஞ்சே.



ஆர்த்தல் - ஒலித்தல்;
கண்டன் - நீலகண்டன்; (ஒருபுடைப்பெயர் - ஏகதேசம்);
தழலான் - சோதி வடிவினன்;
இண்டை நிலா - தலையில் அணியும் மலர்மாலையாகப் பிறைச்சந்திரனை; (அப்பர் தேவாரம் - 4.85.8 - "....வார்சடைமேல் இண்டை மதியமன் றோவெம் பிரானுக் கழகியதே." - இண்டை பிறைக்கு உவமை. இண்டையாய் நின்ற மதியம் எனலுமாம்.);
அண்டுதல் - சரணடைதல்; ஆசிரயித்தல் (To have as a support);
அண்ணிப்பான் - அண்ணிப்பவன் - இனிப்பவன்; (அண்ணித்தல் - தித்தித்தல்);



10)
வாளைகள் பாய்வயல் சூழ்க வின்சேர் மங்கலக் குடிமேவும்
வாளர வம்பிறை வன்னி சூடும் வார்சடை உடையானை
ஏளனம் செய்பவர்க் கில்லா தானை ஏத்திடும் அடியார்வான்
ஆளவ ருள்புரி அண்ணல் தன்னை ஆதரி மடநெஞ்சே.



வாளை - ஒருவகை மீன்;
கவின் - அழகு;
வாள் அரவம் - கொடிய பாம்பு;
வன்னி - ஒருவகை மரம்; சிவபிரான் சூடுவனவற்றுள் ஒன்று வன்னியிலை;
வார்சடை - நீள்சடை;
ஏளனம் செய்பவர்க்கு இல்லாதானை - இகழ்பவர்களுக்கு அருள் இல்லாதவனை; (இல்லாதான் - அருள் இல்லாதவன்);



11)
வாழ்வினில் இன்புற வேண்டு வார்சேர் மங்கலக் குடிமேவும்
தாழ்சடை அண்ணலைச் சாம்ப லானைச் சம்புவை வடவாலின்
கீழ்மறை ஓதியைக் கேடி லாத கீர்த்திமை உடையானைப்
போழ்மதி சூடிய கோலத் தானைப் போற்றியுய்ம் மடநெஞ்சே.



சாம்பலான் - வெண்ணீற்றைப் பூசியவன்; (அப்பர் தேவாரம் - 6.90.2 - "தலையேந்து கையானை ... சாம்ப லானைக்....");
சம்பு - [சுகத்தைத் தருபவன்] சிவன் (Siva, as bestowing happiness);
வடவாலின்கீழ் - வட ஆலின்கீழ் - கல்லால மரத்தின்கீழ்;
கேடு இலாத கீர்த்திமை உடையான் - அழிவற்ற புகழ் உடையவன்;
போழ் மதி - வினைத்தொகை - போழ்ந்த மதி - பிறைச்சந்திரன்; (போழ்தல் - பிளவுபடுதல்; பிளத்தல்);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
அறுசீர்ச் சந்த விருத்தம் - "விளம் கூவிளம் தேமா தேமா கூவிளம் புளிமாங்காய்" என்ற வாய்பாடு;
சம்பந்தர் தேவாரம் - 3.100.1 - "கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி" - இதனைப் பெரும்பாலும் ஒத்த அமைப்பு . சம்பந்தரின் அப்பதிகத்தில் 6-ஆம் சீர் பெரும்பாலும் கூவிளங்காய் அமைப்பு.



2) சம்பந்தர் தேவாரம் - 3.100.1 -
கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை யோர்பால் மகிழ்ந்த ற்புதம் செப்பரிதால்
பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்தவிடம்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணி புரந்தானே



3) திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=518

-------------- --------------

No comments:

Post a Comment