Sunday, January 17, 2016

02.64 – பாச்சிலாச்சிராமம் - (திருவாசி)

02.64 – பாச்சிலாச்சிராமம் - (திருவாசி)



2012-11-11
திருப்பாச்சிலாச்சிராமம் (இக்கால வழக்கில் "திருவாசி" )
----------------------
(எழுசீர் விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் விளம் மா" என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - “மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை”)
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்")



1)
கைங்கரி யங்கள் செய்துனைப் பணியக்
.. கடுகள வுங்கரு தேனும்
இங்கனு தினமும் நின்புகழ் தன்னை
.. இயம்பிடு மாறருள் செய்தாய்
சங்கடம் தீர்க்கும் ஐங்கரன் தாதாய்
.. தண்புனற் கொள்ளிடக் கரைமேற்
பைங்கிளி பயிலும் சோலைசூழ் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



கைங்கரியம் - தொண்டு;
கருதேனும் - கருதாத நானும்; - எண்ணாத என்னையும்;
ஐங்கரன் - விநாயகன்;
தாதாய் - தாதையே என்ற விளி; (தாதை - தந்தை);
பயில்தல் - ஒலித்தல்; தங்குதல்;



2)
சேவைகள் செய்து சேவடி போற்றச்
.. சிறிதள வுங்கரு தேனும்
கோவைகள் பாடி நின்புகழ் தன்னைக்
.. கூறிடு மாறருள் செய்தாய்
ஏவையன் றெய்து மேவலர் எயில்கள்
.. எரித்திமை யோர்க்கருள் ஈசா
பாவையர் வந்து பரவிடும் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



கோவை - கோக்கை (Stringing, filing, arranging); கோத்த மாலை; - பாமாலை;
(சம்பந்தர் தேவாரம் - 2.12.11 - "கலிக் கோவையால் சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம் பந்தன்" - கலிக்கோவை - ஒலிமாலை);
- அம்பு;
மேவலர் - பகைவர்;
எயில் - கோட்டை; (முப்புரங்கள்);
இமையோர் - தேவர்கள்;
பரவுதல் - துதித்தல்;



3)
புண்ணியம் செய்து பொன்னடி நாடும்
.. பொற்பது சிறிதுமி லேனும்
தண்ணிருந் தமிழால் மாலைகள் புனைந்து
.. சாத்திடு மாறருள் செய்தாய்
விண்ணினில் ஓடும் வெண்மதி தன்னை
.. விரிசடை மேலணி வோனே
பண்ணிசை ஓவாச் சோலைசூழ் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



பொற்பு - தன்மை;
தண்ணிருந் தமிழால் - 'தண் தமிழால், இரும் தமிழால்' என்று இயைக்க; (இருமை - பெருமை)
சாத்துதல் - அணிதல் (To put on, adorn -- used in reference to idols, great persons, etc.);
பண் இசை ஓவாச் சோலை - வண்டுகளின் ரீங்காரம் எப்போதும் இருக்கும் பொழில்;


(சம்பந்தர் தேவாரம் - 1.14.1 - "வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக் கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்....");



4)
நிசியினை ஒத்த இருளது நாளும்
.. நிலவிடும் நெஞ்சுடை யேனும்
கசிவொடு நின்றன் கழலடி தன்னைக்
.. கழறிடு மாறருள் செய்தாய்
சசியொடு நாகம் சடைமிசை வைத்த
.. சதுரனே நஞ்சினை உண்டாய்
பசியினைத் தீர்க்கும் வயலணி பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



நிசி - இரவு;
நாளும் - எப்பொழுதும்;
கசிவொடு - உள்ளம் உருகி;
கழறுதல் - சொல்லுதல்;
சசி - சந்திரன்;
சதுரன் - சாமர்த்தியம் உடையவன்;
உண்டாய் - உண்டவனே;
பசியினைத் தீர்க்கும் வயல் அணி - வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த;



5)
வேளையி ரண்டும் விரைகழல் போற்றும்
.. மெய்யறி வற்றுழல் வேனும்
காளைய மர்ந்த நின்புகழ் தன்னைக்
.. கழறிடு மாறருள் செய்தாய்
வாளையும் கயலும் மகிழ்ந்துகள் கின்ற
.. வண்புனற் பொன்னியின் வடபால்
பாளையார் தெங்கம் பொழிலணி பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



வேளைரண்டும் - இருபொழுதும்; (காலை மாலை, இரவு பகல்);
விரைகழல் - மணம் பொருந்திய திருவடி;
மெய்யறிவு அற்று - உண்மை உணர்வு இன்றி;
உழல்தல் - திரிதல்;
காளை - இடபம்;
அமர்தல் - விரும்புதல்;
கழறுதல் - சொல்லுதல்;
வாளை, கயல் - மீன்வகைகள்;
உகளுதல் - தாவுதல்; பாய்தல்;
வண் புனற் பொன்னியின் வட பால் - வளம் மிக்க நீர் உடைய காவிரியின் வடகரையில்;
பாளை ஆர் தெங்கம் பொழில் - பாளைகள் பொருந்திய தென்னைமரங்கள் நிறைந்த சோலை;



6)
எந்தையுன் அடியை வந்தனை செய்ய
.. எள்ளள வுங்கரு தேனும்
கந்தம லிந்த மாலைகள் புனைந்து
.. கழறிடு மாறருள் செய்தாய்
முந்தொரு காழி மகன்தமிழ் கேட்டு
.. முயலகன் நோயினைத் தீர்த்துப்
பைந்தொடிக் கிரங்கு பண்பனே பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



எந்தை - எம் தந்தை;
கந்தம் மலிந்த மாலை புனைந்து - மணம் கமழும் பாமாலைகள் தொடுத்து;
கழறுதல் - சொல்லுதல்;
முந்து - முன்னர்;
ஒரு காழிமகன் - ஒப்பற்ற திருஞானசம்பந்தர்;
பைந்தொடி - (Golden bracelet; பொன் வளையல்) - பெண்;


* திருப்பாச்சிலாச்சிரமத்தில் கொல்லி மழவன் மகளின் முயலகன் நோயைத் திருஞான சம்பந்தர் பதிகம் பாடித் தீர்த்தருளியதைச் சுட்டியது.



7)
வாய்கொடு நின்றன் திருப்பெயர் தன்னை
.. வழுத்திடும் சிந்தையி லேனும்
ஆய்தமி ழாலே மாலைகள் கட்டி
.. அணிந்திடு மாறருள் செய்தாய்
காய்விழி யாலே காமனை நோக்கிக்
.. கணத்தினில் அவனுடல் பொடித்தாய்
பாய்புனல் தேங்கு வயலணி பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



வாய்கொடு - வாயால்; (கொடு - கொண்டு - இடைக்குறை விகாரம்); (கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);
ழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;
சிந்தை - மனம்; அறிவு; எண்ணம்;
ஆய்தமிழாலே - ஆய்ந்த தமிழால்; (ஆய்தல் - அழகமைதல் - To be or become beautiful; தெரிந்தெடுத்தல் - To select, seek out);
அணிதல் - அலங்கரித்தல் (To adorn); (பெரியபுராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - 307 - "மழபாடி ... தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத் தொடையணிந்து துதித்துப் போந்தே..." - He danced and with his songs which are fragrant garlands of verse, he adorned the Lord);
காய்விழி - எரிக்கும் கண்;
பொடித்தல் - சாம்பலாக்குதல்;



8)
மையலி னாலே மலரடி தன்னை
.. வாழ்த்திட மறந்திருந் தேனும்
பையவுன் புகழை நாள்தொறும் பாடிப்
.. பரவிடு மாறருள் செய்தாய்
வெய்யசொல் கூறி வெற்பையி டந்தான்
.. மிகவழ ஒருவிரல் இட்டாய்
பையர வூரும் சடையினாய் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



மையல் - மயக்கம்;
பைய - மெல்ல;
வெய்ய சொல் - கடுஞ்சொல்;
வெற்பு - மலை - கயிலைமலை;
இடத்தல் - பெயர்த்தல்;
வெற்பை இடந்தான் - கயிலைமலையைப் பேர்த்தவன் - இராவணன்;
பை - பாம்புப்படம் (Hood of a cobra);
பை அரவு ஊரும் சடையினாய் - படம் உடைய நாகப்பாம்பைச் சடையில் அணிந்தவனே;



9)
கறைமலி மனத்தால் கழலிணை போற்றக்
.. கடுகள வுங்கரு தேனும்
நறைமலி தமிழால் நின்புகழ் தன்னை
.. நவின்றிடு மாறருள் செய்தாய்
சிறகுடை அன்னம் ஏனமாய் இருவர்
.. தேடிய அளப்பருஞ் சோதீ
பறவைகள் ஆர்க்கும் பொழிலணி பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



கறை - குற்றம்;
மலிதல் - மிகுதல்;
நறை - வாசனை; தேன்;
நவிலுதல் - சொல்லுதல்;
ஏனம் - பன்றி;
சிறகுடை அன்னம் ஏனம் ஆய் இருவர் தேடிய - அன்னப்பறவையும் பன்றியும் ஆகிப் பிரமனும் திருமாலும் தேடிய;
சோதீ - சோதி என்பதன் விளி; சோதியே;
ஆர்த்தல் - ஒலித்தல்;



10)
வேம்பினைத் தேமாங் கனியெனும் எத்தர்
.. வெற்றுரை கேட்டும யங்கேல்
தேம்பிய தேவர் தம்துயர் தீரச்
.. சிரித்தெயில் தீப்புகச் செய்தான்
ஓம்பிடும் அன்பர் உள்ளுறைந் தின்ப
.. ஊற்றெனத் திகழ்கிற ஒருவன்
பாம்பணி மார்பன் பைம்பொழிற் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



வேம்பு - வேப்பங்காய்;
தேமாங்கனி - இனிய மாம்பழம்;
எத்தர் - ஏமாற்றுபவர்; வஞ்சகர்;
வெற்றுரை - பொருளற்ற சொற்கள்;
மயங்கேல் - மயங்கவேண்டா;
தேம்புதல் - வருந்துதல்; விம்மியழுதல்;
எயில் தீப்புகச் செய்தான் - முப்புரங்களை எரித்தவன்;
ஓம்புதல் - போற்றுதல்;
பாம்பு அணி மார்பன் - பாம்பை மாலையாக மார்பில் அணிபவன்;
பைம்பொழில் - பசுமையான சோலை;



11)
பேரிருள் நீக்கும் பெயரினை அடியேன்
.. பேசிடு மாறருள் செய்தாய்
நாரியைக் கூறு நயந்தவெம் மானே
.. நான்முகன் சிரந்தனை ஏந்தி
ஓரிட பத்தில் ஏறிவந் தெங்கும்
.. உண்பலி ஏற்றும கிழ்வாய்
பாரிடம் சூழ நடமிடும் பாச்சில்
.. ஆச்சிரா மத்துறை பரனே.



நாரி - பெண்;
நயத்தல் - விரும்புதல்;
எம்மான் - எம் தலைவன்;
நான்முகன் சிரந்தனை ஏந்தி - பிரமனுடைய மண்டையோட்டைக் கையில் தாங்கி;
ஓர் இடபத்தில் - ஒப்பற்ற எருதின்மேல்;
உண்பலி - பிச்சை;
பாரிடம் - பேய்; பூதகணம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : எழுசீர் விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் விளம் மா" என்ற வாய்பாடு.
2) சம்பந்தர் தேவாம் - 3.120.1 -
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.
3) திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) - மாற்றுரை வரதீஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=118
பாச்சிலாச்சிராமம் - (திருப்பாச்சிலாச்சிராமம்) - தேவாரம் ஆர்க் தளத்தில் : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=195
தலப்பெயர்: பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம் ஆதலின் பாச்சிலாச்சிராமம் என்ற பெயர் பெற்றது. திருவாசிராமம் என்பது மருவி இன்று திருவாசி என்று வழங்குகிறது.

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment