Saturday, November 28, 2015

02.42 – தாராசுரம்

02.42 – தாராசுரம்



2012-01-29
தாராசுரம்
---------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")



தலக்குறிப்பு : இத்தலம் கும்பகோணத்தை அடுத்து உள்ளது. இக்கோயில் சிற்பச்சிறப்பு உடையது. பெரியபுராணக் காட்சிகள் பலவற்றைக் கண்டு களிக்கலாம்.



1)
பல்லில்களில் தலையொன்றினில் பலியேற்றுழல் பரமற்கு
ஒல்லும்வகை பணிசெய்தமர் உலகாள்பவர் வாழ்வைக்
கல்லும்கதை சொல்லும்தளி தாராசுரம் மேய
செல்வன்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே.



பல் இல்களில் - பல இல்லங்களில்;
பலி - பிச்சை;
ஒல்லும் வகை - தங்களால் இயன்ற விதத்தில்;
தளி - கோயில்;
அமர்தல் - விரும்புதல்;
அமர் உலகு - விரும்பப்படும் உலகம் - சிவலோகம்;


பல மனைகளில் பிரமனின் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத்திரியும் பரமனுக்குத் தங்களால் இயன்ற விதத்தில் தொண்டுசெய்து சிவலோகம் ஆளும் அடியவர்களான நாயன்மார்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்பங்கள் நிறைந்த கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் செல்வன் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் பக்தர்களை வினைகள் அடையமாட்டா.


குறிப்பு : இல் - பன்மையில் எப்படி வரும்? இற்கள்? இல்கள்? 'கேதகைய பூமுடித்த' என்ற திருப்புகழில் 'இற்கள்' என்றும், 'மலைக்கும்மக ளஞ்ச' என்ற சுந்தரர் தேவாரத்தில் 'இல்கள்' என்றும் வரக்காண்கிறேன்.



2)
முற்பட்டவர் முனிநால்வருக் கருநான்மறைப் பொருளைக்
கற்பித்தவன் அருளால்வினைக் கடல்வென்றவர் கதைகள்
சிற்பத்தினில் செப்பும்தளி தாராசுரத் தானை
அற்சித்திடும் அடியார்களை அடையாவினை தானே.



முற்பட்டவர் - One who is ahead of others or first;
அற்சித்தல் - அருச்சித்தல் - வழிபடுதல்;


முன்பு சனகாதி முனிவர்களுக்கு அரிய நான்மறையின் பொருளை ஓதியவன் திருவருளால் வினைக்கடலைக் கடந்த நாயன்மார்களின் கதைகளைச் சிற்பங்களின் வழியே சொல்லும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வாழ்த்தும் பக்தர்களை வினைகள் அடையமாட்டா.
குறிப்பு-1 : 'முற்பட்டவர்' - இப்பாடலில் இச்சொல் சனகாதியருக்கும் பொருந்தும்; நாயன்மார்களுக்கும் பொருந்தும்;
குறிப்பு-2 : அர்ச்சித்தல் / அருச்சித்தல் என்பது சில சமயம் அற்சித்தல் என்றும் வரும். (அதேபோல், அர்ச்சனை / அருச்சனை - அற்சனை). அற்சித்தல், அற்சனை போன்ற பிரயோகங்களைச் சில பாடல்களிற் காணலாம் -
(10.2.3.1 - திருமந்திரம்- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே.)


(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216
மற்றுநீ வன்மை பேசி .. வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் .. பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும் .. ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் .. தூமறை பாடும் வாயார்.)



3)
பெண்ணுக்கொரு பாகம்தரும் பெருமான்கழல் பேணி
விண்ணிற்பொலி வீரத்தினர் அருந்தொண்டுகள் விளம்பும்
கண்ணைக்கவர் கவினார்தளி தாராசுரத் தானை
எண்ணிப்பணி அடியார்களை எய்தாவினை தானே.



விளம்புதல் - சொல்லுதல்;
கவின் - அழகு;
எய்துதல் - அணுகுதல்; அடைதல்;


பார்வதிக்கு ஒரு பாகம் தந்த சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அவன் அருளால் விண்ணுலகில் திகழும், வீரமுடைய அவ்வடியவர்களின் அரிய தொண்டுகளைச் சொல்லும் (சிற்பங்கள் நிறைந்த) கண்ணைக்கவரும் அழகிய கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தியானித்து வணங்கும் பக்தர்களை வினைகள் அடையமாட்டா.


அடியார்தம் வீரத்தைச் சொல்லும் திருமுறைப்பாடல்கள் சில :
(பெரிய புராணம் - திருக்கூட்டச் சிறப்பு - 144:
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதும் குறைவிலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ.
.......... வீரம் - இறை அன்பாலும் இறைத்தொண்டாலும் வரும் வீரம். .........


பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 347:
தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுதன்பு
சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தார் எல்லார்க்கும் தனித்தனிவே றடியேன்என்று
ஆர்வத்தால் திருத்தொண்டத் தொகைப்பதிகம் அருள்செய்தார்.
................ எஞ்ஞான்றும் அழியாத வீரமுடைய அவ்வடியவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவரவர்தம் திருப்பெயரையும் சொல்லி, இவருக்கு அடியேன், இவருக்கு அடியேன் என்றும் ........... )



4)
நாணும்பொறி அரவாகிடும் நம்பன்கழல் போற்றிக்
காணும்பல பத்தர்க்கரன் வானம்தரு காட்சி
பூணும்சுவர் புடைசூழ்தளி தாராசுரத் தானைப்
பேணும்குணம் உடையார்களைப் பிடியாவினை தானே.



நாண் - அரைநாண்;
நம்பன் - சிவன்; (விரும்பப்படுவன்);
காணுதல் - வணங்குதல்; தரிசித்தல்;
வானம் தருதல் - சிவலோகம் அளித்தல்;
பூணுதல் - அணிதல்;
புடை - பக்கம்;
பேணுதல் - போற்றுதல்;
பிடித்தல் - கைப்பற்றுதல்; கட்டுதல்;


(மாலையாகவும், தலைமேலும் திகழ்வதோடல்லாமல்) அரைநாணும் பாம்பே ஆகும் சிவபெருமான் திருவடிகளைப் போற்றி வணங்கும் பல நாயன்மார்களுக்கு ஹரன் சிவலோகம் அளித்து அருள்புரிந்த காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் திகழும் சுவர்கள் சூழும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைப் போற்றும் பக்தர்களை வினைகள் கைப்பற்றமாட்டா.



5)
துளியும்மனம் தளராதரன் தொண்டேபுரி அன்பர்
ஒளியும்பரில் உறையும்பதம் உற்றுய்ந்ததைக் காட்டி
உளியும்கதை உரைக்கும்தளி தாராசுரத் தானை
அளியும்மனத் தொடுவாழ்த்திடில் அடையாவினை தானே.



ஒளி உம்பர் - ஒளி மிகுந்த சிவலோகம்;
அளியும் மனம் - நெகிழும் மனம்;


சிறிதும் மனம் தளராமல் எப்போதும் ஹரன் திருத்தொண்டே செய்த நாயன்மார்கள் ஒளி மிகுந்த சிவலோகத்தில் நிலைத்திருக்கும் நிலையைப் பெற்று உய்ந்ததைக் காட்டி, உளியும் பெரியபுராணக் கதைகளைச் சிற்பங்கள் மூலமாக உரைக்கும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை நெகிழும் மனத்தோடு வாழ்த்தினால், அப்படி வாழ்த்துவார்களை வினைகள் அடையமாட்டா.



6)
காலன்றனைக் கடந்தான்குரை கழற்கேபணி செய்து
ஞாலம்புகழ் நிலையெய்திய நல்லாரவர் தங்கள்
சீலந்தனைச் செப்பும்தளி தாராசுரம் சென்று
சூலன்றனைத் தொழுவார்களைத் தொடராவினை தானே.



காலன் தனை - எமனை;
கடத்தல் - அழித்தல்; வெல்லுதல்;
சீலம் - தன்மை; ஒழுக்கம்;
சூலன் தனை - சூலபாணியை;


எமனை உதைத்து அழித்த ஈசனின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிக்கே தொண்டுசெய்து உலகம் புகழும் நிலையை அடைந்த நாயன்மார்களின் தொண்டின் தன்மையைச் சொல்லும் சிற்பங்கள் நிறைந்த கோயிலான தாராசுரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் சூலபாணியை வணங்குபவர்களை வினைகள் தொடரமாட்டா.



7)
பொல்லாவிடம் உண்டான்திரி புரமூன்றெரி பொருப்பு
வில்லான்திருத் தொண்டைத்தினம் விரும்பிப்புரிந் துய்ந்த
நல்லார்கதை நவிலும்தளி தாராசுரம் நண்ணி
வல்லான்கழல் தொழுவார்களை மருவாவினை தானே.



திரிபுரம் மூன்று - விண்ணில் திரியும் முப்புரங்கள்;
பொருப்பு - மலை;
நண்ணுதல் - சென்றடைதல்;
மருவுதல் - நெருங்குதல்; (To come near; to approach);


கொடியவிடத்தை உண்டவனும் விண்ணில் திரிந்த முப்புரங்களை எரிக்க மலையை வில்லாக ஏந்தியவனும் ஆன ஈசனின் திருத்தொண்டை நாள்தோறும் விரும்பிச்செய்து உய்ந்த நாயன்மார்களின் கதைகளைச் சொல்லும் கோயிலான தாராசுரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் எல்லாம் வல்ல சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா.



8)
ஆயாதரு மலையாட்டிய அரக்கன்தனை அடர்த்த
தீயாடியை மறவாதனு தினமும்பணி செய்த
தூயார்கதை சொல்லும்தளி தாராசுரம் தன்னில்
சேயான்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே.



ஆய்தல் - ஆராய்தல்;
அருமலை - கயிலைமலை;
தீயாடி - நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவன்;
சேயான் - செந்நிறத்தன்; (சேய் - செம்மை; சிவப்பு);


சிறிதும் எண்ணாமல் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை நசுக்கியவனும் தீயிடையே ஆடுபவனும் ஆன ஈசனை மறவாமல் தினந்தோறும் திருத்தொண்டு செய்த தூயவர்களான நாயன்மார்களின் கதைகளைச் சொல்லும் கோயிலான தாராசுரத்தில் செம்மேனி திகழும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் பக்தர்களை வினைகள் அடையமாட்டா.



9)
அரிபங்கயன் அடையாவழல் ஆனான்கழல் அடியே
தரிநெஞ்சினர் தம்கொள்கையில் தளராத்தவர் தங்கள்
சரிதங்களைச் சாற்றும்தளி தாராசுரம் மேய
பரியும்பரன் பாதம்தொழப் பற்றாவினை தானே.



அரி பங்கயன் - திருமாலும் பிரமனும்;
அழல் - தீ;
தவர் - தவசிகள்;
சரிதம் - வரலாறு;
சாற்றுதல் - சொல்லுதல்; புகழ்தல்;
பரிதல் - இரங்குதல்; அன்புகொள்ளுதல்;


திருமாலும் பிரமனும் அடைவதற்கு அரிய சோதி ஆனவனின் கழல் அணிந்த திருவடிகளைத் தரித்த நெஞ்சை உடையவர்களும் தாம் கொண்ட கொள்கையில் அசைவின்றி நிலைத்திருந்த தவம் மிக்கவர்களும் ஆன நாயன்மார்களின் வரலாறுகளைச் சொல்லும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருப்பவனும் பக்தர்களுக்கு இரங்குபவனும் ஆன பரமனின் பாதங்களை வணங்குவார்களை வினைகள் பற்றமாட்டா.



10)
கண்டன்புகழ் கேளாச்செவிக் கையர்க்கரி தானான்
துண்டப்பிறை சூடுஞ்சிவன் பணியேபுரி தூய
தொண்டர்கதை சொல்லும்தளி தாராசுரம் மேய
அண்டன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே.



கண்டன் - நீலகண்டன்; (ஒருபுடைப்பெயர் - ஏகதேசம்);
கையர் - கீழ்மக்கள்; வஞ்சகர்; மூடர்;
துண்டப்பிறை - பிறைத்துண்டம் - பிறைச்சந்திரன்;
அண்டன் - கடவுள்; (God, as Lord of the universe);


நீலகண்டனின் புகழைக் கேளாத காதுகளை உடைய வஞ்சகர்களுக்கு எட்டாதவன்; பிறைச்சந்திரனைச் சூடும் சிவபெருமானின் திருத்தொண்டே செய்த தூய தொண்டர்களின் கதைகளைச் சொல்லும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் அண்டத்தலைவனின் திருவடியைச் சரண்புகுந்தவர்களை வினைகள் அடையமாட்டா.



11)
மத்தம்புனை முடிமேலிள மதிவைத்தவன் அன்பே
சித்தந்தனில் திகழத்தினம் திருத்தொண்டுகள் செய்த
பத்தர்கதை பகரும்தளி தாராசுரம் மேய
அத்தன்கழல் அடைவார்தமை அடையாவினை தானே.



மத்தம் - ஊமத்தை மலர்;
இள மதி - பிறைச்சந்திரன்;
திகழ்தல் - விளங்குதல்;
பகர்தல் - சொல்லுதல்;
அத்தன் - தந்தை;


ஊமத்தை மலரைச் சூடிய திருமுடிமேல் பிறைச்சந்திரனையும் அணியும் ஈசன்மேல் கொண்ட அன்பே என்றும் தங்கள் சித்தத்தில் நீங்காது திகழ்ந்து, நாள்தோறும் திருத்தொண்டுகள் செய்த நாயன்மார்களின் கதைகளைச் சொல்லும் கோயிலான தாராசுரத்தில் எழுந்தருளியிருக்கும் தந்தையின் திருவடியைச் சரண்புகுந்தவர்களை வினைகள் அடையமாட்டா.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) தாராசுரம் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1734
2) யாப்புக் குறித்த ஒரு வினாவும் விடையும் :
Question from a reader: "அருந்தொண்டுகள் என்னும் சீரின் முதலசையில் மெல்லின நகரத்தையடுத்து வல்லினத் தகரம் வருதலால் ஓசை தடைப்படுவது போலப் படுகிறது."
My response: இவ்வகை யாப்பு உடைய திருமுறைப் பாடல்களில் சில இடங்களில் இவ்வகைச் சீர்களும் வரக் காண்கின்றேன். உதாரணமாக :
சம்பந்தர் தேவாரம் - 1.11.8 -
முன்னிற்பவ ரில்லாமுர ணரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.

-------------- --------------

No comments:

Post a Comment