02.34
– அதிகை
(திருவதிகை வீரட்டானம்)
2011-11-05
திருவதிகை வீரட்டானம்
-----------------------------
(அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.)
(திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி”)
1)
அவநெறியை அகன்றருமைத் தம்பிவர அனுதினமும் அரனை வேண்டித்
தவமியற்று தமக்கையவர் தாம்மகிழ வேண்டுவரம் தந்த பெம்மான்
பவமறுக்கும் தமிழ்பாடி நாவரசர் பணிந்தபரன் பத்தர்க் கன்பன்
சிவனுறையும் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
2)
நல்வழியைத் தம்பிக்குக் காட்டென்று திலகவதி நாளும் வேண்டக்
கொல்வலிசேர் சூலைதந்தாட் கொண்டருளும் குளிர்மதியன் குமைக்கும் கூற்றை
வெல்வழியைச் சொல்லினிய தேவாரம் பாடடியார் விரும்பும் அன்பன்
செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
3)
தம்மிளவல் சைவநெறி மீளமிகத் தவமியற்று தமக்கை யார்க்கா
வெம்மைமிகு சூலைதந்தாட் கொண்டுதமிழ்ப் பாமாலை விரும்பிக் கேட்டுச்
செம்மைமிகு நாவரசர் என்றவொரு திருப்பெயரும் திகழத் தந்த
செம்மலுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
4)
வாரமிகு மனத்தோடு மாதேவன் மலர்த்தாளில் வாக்கின் மன்னர்
ஆரமென அணிவித்த அருந்தமிழேற் றருள்செய்த அங்கண் அண்ணல்
நீரலையும் செஞ்சடையான் ஓர்கணையால் முப்புரத்தை நீறு செய்த
தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
5)
நாவரசர் தமிழ்கேட்டு நாமத்தை நல்கியருள் நம்பன் நாதா
காவரனே என்றிமையோர் கைதொழுது கழல்போற்ற மூவ ரண்கள்
வேவவரை வில்லேந்திக் கணைதொட்ட வீரனொரு வெள்ளே றேறும்
தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
6)
அஞ்சுகணை வேளையெரி அனற்கண்ணன் பாற்கடலில் அன்றெ ழுந்த
நஞ்சுதனை உண்டொளித்த மஞ்சனைய மிடறுடையான் நால்வே தத்தான்
வஞ்சியன மங்கையுறை வாமத்தான் கண்ணியென மதியி லங்கும்
செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
7)
இட்டமொடு தொழுமாணிக் கிடர்செய்ய வந்தடைந்த எமனே மாள
எட்டியுதை செய்தருளும் எம்பெருமான் எருதேறி ஈமக் காட்டில்
நட்டனொரு நகர்மூன்றை நகையாலே எரியீசன் நல்லார் ஏத்தும்
சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
8)
தலையீரைந் துடையரக்கன் தடவரையை இடந்தெறியத் தலைப்ப டுங்கால்
மலைமேலோர் விரலூன்றி நெரித்துப்பின் வாளருளும் மணிமி டற்றன்
நலமாரும் தமிழ்நயக்கும் நம்பெருமான் புரமெரித்த நாளில் வெற்புச்
சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
9)
புகழ்தமிழால் திலகவதிக் கிளையவர்தன் பொன்னடியைப் போற்ற நாமம்
நிகழவருள் செய்தசிவன் நிகரில்முப் புரமெரித்த நீல கண்டன்
அகழ்திருமால் அயனவர்கள் அடையாத அருஞ்சோதி அரவு திங்கள்
திகழ்முடியான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
10)
மெய்வழியைத் தாமறியார் வெண்ணீறு பூசாஅம் மிண்டர் சொல்லும்
பொய்யுரைகள் பொருளல்ல புறச்சமய இருள்நீங்கிப் போற்றிப் பாடிச்
சைவநெறி தழைக்கச்செய் வாகீசர் தமிழுகந்த சாம வேதன்
செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
11)
கார்பரவு கண்டத்தன் கரியுரியன் கண்ணுதலான் கங்கை ஆற்றின்
நீர்பரவு செஞ்சடையான் நிலவணிந்த கோலத்தான் நேயத் தோடே
ஆர்பரவி அடிதொழினும் அவர்நெஞ்சே தளியாக அமரும் ஐயன்
சீர்பரவித் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) திருவதிகை வீரட்டானம் - இத்தலம் பண்ருட்டி அருகு உள்ளது.
2) திருவதிகை வீரட்டானம் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=853
-------------- --------------

பவம்
-
பிறப்பு;
தம்
அருமைத் தம்பி சமண சமயத்தை
நீங்கி மீண்டும் சைவத்திற்கு
வர அருள்புரிய வேண்டித்
தினமும் சிவனுக்குத்
திருத்தொண்டாற்றித் தவம்
செய்த திலகவதியார் மகிழ்வெய்தும்படி
அவர் வேண்டிய வரத்தைத் தந்த
பெருமான்;
பிறப்பை
அறுக்கும் தேவாரம் பாடித்
திருநாவுக்கரசர் வணங்கிய
பரமன்;
பக்தர்களுக்கு
அன்பன்;
அச்சிவபெருமான்
எழுந்தருளும் திருவதிகை
வீரட்டானத்தை அடைவாரின்
தீராத நோய் எல்லாம்
தீரும்.
2)
நல்வழியைத் தம்பிக்குக் காட்டென்று திலகவதி நாளும் வேண்டக்
கொல்வலிசேர் சூலைதந்தாட் கொண்டருளும் குளிர்மதியன் குமைக்கும் கூற்றை
வெல்வழியைச் சொல்லினிய தேவாரம் பாடடியார் விரும்பும் அன்பன்
செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
கொல்வலிசேர்
சூலை -
கொல்கின்ற,
வலி
பொருந்திய சூலைநோய்;
குளிர்
மதியன் -
குளிர்ந்த
திங்களைச் சூடியவன்;
குமைத்தல்
-
கொல்லுதல்;
தேவாரம்
பாடு அடியார் விரும்பும்
அன்பன் -
தேவாரம்
பாடும் அடியவரை விரும்பும்
அன்பன்;
3)
தம்மிளவல் சைவநெறி மீளமிகத் தவமியற்று தமக்கை யார்க்கா
வெம்மைமிகு சூலைதந்தாட் கொண்டுதமிழ்ப் பாமாலை விரும்பிக் கேட்டுச்
செம்மைமிகு நாவரசர் என்றவொரு திருப்பெயரும் திகழத் தந்த
செம்மலுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
பதம்
பிரித்து:
தம்
இளவல் சைவநெறி மீள மிகத் தவம்
இயற்று தமக்கையார்க்கா,
வெம்மை
மிகு சூலை தந்து ஆட்கொண்டு,
தமிழ்ப்
பாமாலை விரும்பிக் கேட்டுச்,
செம்மை
மிகு நாவரசர் என்ற ஒரு
திருப்பெயரும் திகழத் தந்த
செம்மல்
உறை திருவதிகை சேர்வார்தம்
தீரா நோய் தீரும் அன்றே.
இளவல்
-
தம்பி;
தமக்கையார்க்கா
-
அக்கா
திலகவதியார்க்காக;
வெம்மை
-
கடுமை;
ஒரு
-
ஒப்பற்ற;
4)
வாரமிகு மனத்தோடு மாதேவன் மலர்த்தாளில் வாக்கின் மன்னர்
ஆரமென அணிவித்த அருந்தமிழேற் றருள்செய்த அங்கண் அண்ணல்
நீரலையும் செஞ்சடையான் ஓர்கணையால் முப்புரத்தை நீறு செய்த
தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
வாரம்
-
அன்பு;
பக்தி;
வாக்கின்
மன்னர் -
திருநாவுக்கரசர்;
ஆரம்
-
ஹாரம்
-
மாலை;
அரும்
தமிழ் -
தேவாரம்;
அணிவித்தல்
-
சாத்துதல்
(To
adorn);
அங்கண்
அண்ணல் -
அருட்கண்ணுடைய
பெருமான்;
தீரன்
-
வீரன்
(Brave,
valiant person);
5)
நாவரசர் தமிழ்கேட்டு நாமத்தை நல்கியருள் நம்பன் நாதா
காவரனே என்றிமையோர் கைதொழுது கழல்போற்ற மூவ ரண்கள்
வேவவரை வில்லேந்திக் கணைதொட்ட வீரனொரு வெள்ளே றேறும்
தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
பதம்
பிரித்து:
நாவரசர்
தமிழ் கேட்டு நாமத்தை நல்கி
அருள் நம்பன்;
"நாதா;
கா;
அரனே"
என்று
இமையோர் கைதொழுது கழல் போற்ற,
மூ
அரண்கள்
வேவ
வரை வில் ஏந்திக் கணை தொட்ட
வீரன்;
ஒரு
வெள் ஏறு ஏறும்
தேவன்
உறை திருவதிகை சேர்வார்தம்
தீரா நோய் தீரும் அன்றே.
இமையோர்
-
தேவர்கள்;
வரை
-
மலை;
மூ
அரண்கள் வேவ வரை வில் ஏந்திக்
கணை தொட்ட -
முப்புரங்கள்
வெந்து அழியக் கையில் ஒரு
மலையை வில்லாகத் தாங்கி
அம்பினை எய்த;
6)
அஞ்சுகணை வேளையெரி அனற்கண்ணன் பாற்கடலில் அன்றெ ழுந்த
நஞ்சுதனை உண்டொளித்த மஞ்சனைய மிடறுடையான் நால்வே தத்தான்
வஞ்சியன மங்கையுறை வாமத்தான் கண்ணியென மதியி லங்கும்
செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
அஞ்சுகணை
வேளை -
ஐந்து
மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை;
('கலக்கம்
தரும் கணைகளை ஏவும் மன்மதனை'
என்றும்
கொள்ளலாம்);
மஞ்சு
அனைய மிடறு உடையான் -
மேகம்
போல் கரிய கண்டத்தை உடையவன்;
வஞ்சி
அன மங்கை உறை வாமத்தான் -
வஞ்சிக்
கொடி போன்ற பார்வதி தங்கும்
இடப்பாகம் உடையவன்;
கண்ணி
என மதி இலங்கும் செஞ்சடையான்
-
தலைக்கு
அணியும் மாலை போல் பிறைச்சந்திரன்
திகழும் செஞ்சடையை உடையவன்;
7)
இட்டமொடு தொழுமாணிக் கிடர்செய்ய வந்தடைந்த எமனே மாள
எட்டியுதை செய்தருளும் எம்பெருமான் எருதேறி ஈமக் காட்டில்
நட்டனொரு நகர்மூன்றை நகையாலே எரியீசன் நல்லார் ஏத்தும்
சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
மாணி
-
அந்தணச்
சிறுவன் -
மார்க்கண்டேயர்;
எருதேறி
-
இடப வாகனன்;
ஈமக்காடு
-
சுடுகாடு;
நட்டன்
-
திருநடம்
செய்பவன்;
நல்லார்
-
நற்குணம்
உடையவர்கள்;
கற்றவர்;
சிட்டன்
-
சிஷ்டன்
-
சிஷ்டாசாரமுடையவன்;
உயர்ந்தவன்;
(அப்பர்
தேவாரம் -
6.29.5 - "பிறநெறியாய்....
ஈமக்
காட்டில் ஓரிபல விடநட்ட மாடி
னானை...")
8)
தலையீரைந் துடையரக்கன் தடவரையை இடந்தெறியத் தலைப்ப டுங்கால்
மலைமேலோர் விரலூன்றி நெரித்துப்பின் வாளருளும் மணிமி டற்றன்
நலமாரும் தமிழ்நயக்கும் நம்பெருமான் புரமெரித்த நாளில் வெற்புச்
சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
பதம்
பிரித்து:
தலை
ஈரைந்து உடை அரக்கன் தட வரையை
இடந்து எறியத் தலைப்படுங்கால்,
மலைமேல்
ஓர் விரல் ஊன்றி நெரித்துப்
பின் வாள் அருளும் மணிமிடற்றன்;
நலம்
ஆரும் தமிழ் நயக்கும் நம்
பெருமான்;
புரம்
எரித்த நாளில் வெற்புச்
சிலை
ஏந்தி;
திருவதிகை
சேர்வார்தம் தீரா நோய் தீரும்
அன்றே.
தட
வரை -
பெரிய
மலை -
கயிலைமலை;
இடத்தல்
-
பெயர்த்தல்;
தோண்டுதல்;
தலைப்படுதல்
-
தொடங்குதல்
(To
commence);
சிலை
-
வில்;
ஏந்தி
-
ஏந்துபவன்;
பத்துத்தலைகளை
உடைய இராவணன் பெரிய கயிலைமலையைப்
பெயர்த்து எறிய முயன்றபொழுது,
அம்மலைமேல்
ஓர் விரலை ஊன்றி அவனை நசுக்கிப்
பின் அவனுக்கு வாளும் அருளிய
நீலகண்டன்;
நன்மை
பொருந்திய தேவாரத்தை விரும்பும்
நம் பெருமான்;
முப்புரங்களை
எரித்த சமயத்தில் மேரு மலையை
வில்லாக ஏந்தியவன்;
அப்பெருமான்
எழுந்தருளும் திருவதிகை
வீரட்டானத்தை அடைவாரின்
தீரா நோய் எல்லாம் தீரும்.
9)
புகழ்தமிழால் திலகவதிக் கிளையவர்தன் பொன்னடியைப் போற்ற நாமம்
நிகழவருள் செய்தசிவன் நிகரில்முப் புரமெரித்த நீல கண்டன்
அகழ்திருமால் அயனவர்கள் அடையாத அருஞ்சோதி அரவு திங்கள்
திகழ்முடியான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
திலகவதிக்குத்
தம்பி தன் பொன்னடியைப் புகழும்
தமிழால் போற்றி வணங்க,
அவர்க்குத்
'திருநாவுக்கரசர்'
என்ற
பெயர் நிலைக்க அருள்புரிந்த
சிவபெருமான்,
ஒப்பற்ற
முப்புரங்களை எரித்த நீலகண்டன்;
நிலத்தை
அகழ்ந்து அடி தேடிய திருமாலாலும்
பிரமனாலும் அடையப்படாத அரிய
சோதி;
திருமுடிமேல்
பாம்பும் பிறைச்சந்திரனும்
திகழ்பவன்;
அப்பெருமான்
எழுந்தருளும் திருவதிகை
வீரட்டானத்தை அடைவாரின் தீரா
நோய் எல்லாம் தீரும்.
10)
மெய்வழியைத் தாமறியார் வெண்ணீறு பூசாஅம் மிண்டர் சொல்லும்
பொய்யுரைகள் பொருளல்ல புறச்சமய இருள்நீங்கிப் போற்றிப் பாடிச்
சைவநெறி தழைக்கச்செய் வாகீசர் தமிழுகந்த சாம வேதன்
செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
மிண்டர்
-
கல்
நெஞ்சர்;
பொருள்
அல்ல -
பொருள்
என மதிக்கவேண்டா;
வாகீசர்
-
திருநாவுக்கரசர்;
சாம
வேதன் -
சாம
வேதம் பாடும் சிவபெருமான்;
செய்யன்
-
சிவந்த
திருமேனியை உடையவன்;
11)
கார்பரவு கண்டத்தன் கரியுரியன் கண்ணுதலான் கங்கை ஆற்றின்
நீர்பரவு செஞ்சடையான் நிலவணிந்த கோலத்தான் நேயத் தோடே
ஆர்பரவி அடிதொழினும் அவர்நெஞ்சே தளியாக அமரும் ஐயன்
சீர்பரவித் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.
கார்
-
கருமை;
பரவுதல்
-
பரந்திருத்தல்;
புகழ்தல்;
துதித்தல்;
பாடுதல்;
கரி
உரியன் -
யானைத்தோலைப்
போர்த்தியவன்;
கண்ணுதலான்
-
நெற்றிக்கண்ணன்;
தளி
-
கோயில்;
நீலகண்டன்;
யானைத்தோலைப்
போர்வையாகப் போர்த்தியவன்;
நெற்றிக்கண்ணன்;
கங்கை
நதியின் நீர் பரவுகிற செஞ்சடையை
உடையவன்;
பிறைசூடி;
அன்போடு
புகழ்ந்து திருவடியை யார்
தொழுதாலும் அவர்களுடைய
மனமே கோயிலாக விரும்பி உறையும்
தலைவன்;
அப்பெருமானின்
புகழைப் பாடித் திருவதிகை
வீரட்டானத்தை அடைவாரின் தீரா
நோய் எல்லாம் தீரும்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) திருவதிகை வீரட்டானம் - இத்தலம் பண்ருட்டி அருகு உள்ளது.
2) திருவதிகை வீரட்டானம் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=853
-------------- --------------
No comments:
Post a Comment