Saturday, November 21, 2015

02.33 – திருமழபாடி - (வண்ணவிருத்தம்)

02.33 – திருமழபாடி - (வண்ணவிருத்தம்)



2011-10-10 - 2011-10-20
திருமழபாடி
"மழபாடி மாமணி"
------------------
(வண்ணவிருத்தம்.
"தனனா தனனா .. தனதான" - என் சந்தக்குழிப்பு )
(வரதா மணிநீ ...... யெனவோரில் - திருப்புகழ் - பழநி)



1)
இலையோ மலரோ .. மறவாமல்
.. இணையார் அடிமீ .. திடுவார்தம்
மலைபோல் வினைபோய் .. அழியாத
.. வளமே பெறுமா .. றருளீசன்
தலைமேல் அழகார் .. மதிசூடி
.. தளிர்போல் அடியாள் .. ஒருகூறன்
அலையார் புனல்சேர் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.


பதம் பிரித்து:
இலையோ மலரோ மறவாமல்
.. இணை ஆர் அடிமீது இடுவார்தம்
மலைபோல் வினை போய் அழியாத
.. வளமே பெறுமாறு அருள் ஈசன்;
தலைமேல் அழகு ஆர் மதிசூடி;
.. தளிர்போல் அடியாள் ஒரு கூறன்;
அலை ஆர் புனல் சேர் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


இணை - இரண்டு;
ஆர் - அரிய;
இணை ஆர் அடி - இரண்டு அரிய திருவடிகள்; இணையாகப் பொருந்திய திருவடிகள்;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
தளிர்போல் அடியாள் - தளிர் போன்ற மென்மையான பாதத்தை உடைய பார்வதி;
மணி - மாணிக்கம், வைரம், போன்ற இரத்தினங்கள்;


இலையோ மலரோ மறவாமல் இணை ஆர் அடிமீது இடுவார்தம் மலைபோல் வினை போய் அழியாத வளமே பெறுமாறு அருள் ஈசன் - இலையோ பூவோ எதுவாயினும் மறப்பின்றி இரண்டு அரிய திருவடிகள்மேல் இட்டு வழிபடும் பக்தர்களின் மலைபோன்ற பழவினை நீங்கி அவர்கள் நிலைத்த பேரின்பம் அடைய அருளும் பெருமான்;
தலைமேல் அழகு ஆர் மதிசூடி - முடிமேல் அழகிய பிறைச்சந்திரனைச் சூடுபவன்;
தளிர்போல் அடியாள் ஒரு கூறன் - தளிர் போன்ற மென்மையான பாதத்தை உடைய பார்வதியை ஒரு பாகமாக உடையவன்;
அலை ஆர் புனல் சேர் மழபாடி அகலாது உறை மா மணிதானே - கொள்ளிடத்தின் அலைகள் வந்து அடையும் திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கமே.
----------------
2)
அளியோ டடிபா .. டடியாரை
.. அருநோய் அடையா .. அரணாவான்
வளிநீர் நிலம்வான் .. எரியாகி
.. வருவான் விழியார் .. நுதலீசன்
குளிர்நீர் அலைபாய் .. முடிமீது
.. குரவோ டிளமா .. மதிசூடி
அளியார் பொழிலார் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
அளியோடு அடி பாடு அடியாரை
.. அருநோய் அடையா அரண் ஆவான்;
வளி நீர் நிலம் வான் எரியாகி
.. வருவான்; விழி ஆர் நுதல் ஈசன்;
குளிர் நீர் அலைபாய் முடிமீது
.. குரவோடு இள மா மதிசூடி;
அளி ஆர் பொழில் ஆர் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


அளி - 1) அன்பு; 2) வண்டு;
அருநோய் - தீர்தற்கு அருமையதான பிறவி நோய் முதலியவை;
வளி - காற்று;
நுதல் - நெற்றி;
குரவு - குரா மலர்;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்
ஆர்த்தல் - ஒலித்தல்;


அளியோடு அடி பாடு அடியாரை அருநோய் அடையா அரண் ஆவான் - அன்போடு திருவடியைப் பாடும் அடியவர்களைப் பிறவி நோய் முதலியன அடையாதபடி அரணாக இருந்து காப்பான்;
வளி நீர் நிலம் வான் எரியாகி வருவான் - ஐம்பூதங்களாகத் திகழ்பவன்;
விழி ஆர் நுதல் ஈசன் - நெற்றிக்கண்ணன்;
குளிர் நீர் அலைபாய் முடிமீது குரவோடு இள மா மதிசூடி - குளிர்ந்த கங்கை அலைவீசும் திருமுடிமேல் குரவ மலரையும் அழகிய பிறைச்சந்திரனையும் சூடுபவன்;
அளி ஆர் பொழில் ஆர் மழபாடி அகலாது உறை மா மணிதானே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகள் நிறைந்த திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கமே;
-------------
3)
தணியா தவவா .. அறுமாறு
.. தவறா திருபோ .. தடிபேணிப்
பணிவார் அவர்தீ .. வினைதீரப்
.. பரிவோ டருள்வான் .. அழகாகத்
துணிவான் நிலவா .. றணியீசன்
.. சுடுமோர் விழியான் .. நடமாடி
அணியார் பொழில்சூழ் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
தணியாத அவா அறுமாறு
.. தவறாது இருபோது அடிபேணிப்
பணிவார் அவர் தீவினை தீரப்
.. பரிவோடு அருள்வான்; அழகாகத்
துணி வான் நிலவு ஆறு அணி ஈசன்;
.. சுடும் ஓர் விழியான்; நடம் ஆடி;
அணி ஆர் பொழில் சூழ் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


தணியாத அவா அறுமாறு தவறாது இருபோது அடிபேணிப் பணிவார் அவர் தீவினை தீரப் பரிவோடு அருள்வான் - ஓயாது எழும் ஆசைகள் அற்றுப்போகத் தினமும் தவறாமல் அந்தியும் நண்பகலும் திருவடியைப் போற்றி வணங்குவார்களின் பாவங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்படி இரங்கி அருள்புரிவான்;
அழகாகத் துணி வான் நிலவு ஆறு அணி ஈசன் - வான் நிலாவின் துண்டத்தையும் கங்கை ஆற்றையும் அழகுற அணியும் ஈசன்;
சுடும் ஓர் விழியான், நடம் ஆடி - தீயை உமிழும் நெற்றிக்கண்ணன்; திருநடம் செய்பவன்;
அணி ஆர் பொழில் சூழ் மழபாடி அகலாது உறை மா மணிதானே - அழகிய சோலைகள் சூழும் திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கமே;
--------------------
4)
கடியார் தமிழால் .. அடிபாடில்
.. கவலா நிலையே .. தருமீசன்
கொடியேர் இடையாள் .. ஒருபாதி
.. குறையே துமிலா .. முழுதானான்
முடியா முதலாய் .. உளநாதன்
.. முடிமேல் நதியான் .. அனலாடி
அடியார் திரளூர் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
கடி ஆர் தமிழால் அடி பாடில்
.. கவலா நிலையே தரும் ஈசன்;
கொடி ஏர் இடையாள் ஒரு பாதி;
.. குறை ஏதும் இலா முழுது ஆனான்;
முடியா முதலாய் உள நாதன்;
.. முடிமேல் நதியான்; அனல் ஆடி;
அடியார் திரள் ஊர் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


கடி - வாசனை;
ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
கடி ஆர் தமிழ் - மணக்கின்ற தேவாரம் திருவாசகம் முதலியன;
பாடில் - பாடினால்;
கவலா நிலை - கவலையற்ற நிலை;
கொடி ஏர் இடையாள் - கொடி போன்ற இடையை உடைய பார்வதி;
குறை ஏதும் இலா முழுது ஆனான் - எக்குறையும் இல்லாத பரிபூரணன்; (சுந்தரர் தேவாரம் - 7.70.6 - "குறைவிலா நிறைவே... " - குறை எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவுடையவனே);
முடியா முதல் - அழிவற்றவன்; முதற்பொருள்;
அனலாடி - அனலிடை ஆடுபவன்; கையில் தீயை ஏந்தி ஆடுபவன்;
அடியார் திரள் ஊர் மழபாடி - பக்தர்கள் திரளும் ஊரான திருமழபாடி;
---------------
5)
அழையா தடைவார் .. எமதூதர்
.. அவர்வா ருமெனா .. முனமேஉள்
குழைவோ டடியே .. தொழுவாரைக்
.. குளிர்வா னுறுமா .. றருளீசன்
குழையோர் செவியான் .. எருதேறி
.. கொடிமேல் விடையான் நதிசூடி
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
அழையாது அடைவார் எமதூதர்;
.. அவர் வாரும் எனா முனமே உள்
குழைவோடு அடியே தொழுவாரைக்
.. குளிர் வான் உறுமாறு அருளீசன்;
குழை ஓர் செவியான்; எருதேறி;
.. கொடிமேல் விடையான்; நதிசூடி;
அழகு ஆர் பொழில் சூழ் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


அவர் வாரும் எனா முனமே - எமபடர்கள் வா என்று அழைக்கும் முன்னமே;
குளிர் வான் உறுமாறு அருளீசன் - குளிர்ந்த வானுலகம் அடையும்படி அருள்புரியும் ஈசன்;
குழை ஓர் செவியான் - ஒரு காதில் குழையை அணிபவன்;
எருதேறி - எருதின்மேல் ஏறுபவன்;
கொடிமேல் விடையான் - இடபக் கொடி உடையவன்;
நதிசூடி - கங்கை நதியைச் சடையில் சூடுபவன்;
--------------
6)
மதனார் கணையால் .. அலைபாயும்
.. மனமே நினைநீ .. இறையேனும்
பதறா நிலையே .. அருள்வானே
.. பனிமா மலையான் .. அரைநாணாக்
கதநா கமதே .. அணியீசன்
.. கறையார் களனோர் .. விடையூர்தி
அதளா டையினான் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
மதனார் கணையால் அலைபாயும்
.. மனமே; நினை நீ இறையேனும்;
பதறா நிலையே அருள்வானே;
.. பனி மா மலையான்; அரைநாணாக்
கத நாகமதே அணி ஈசன்;
.. கறை ஆர் களன்; ஓர் விடை ஊர்தி;
அதள் ஆடையினான்; மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


மதனார் - மன்மதன்;
கதம் - கோபம்; (கத நாகம் - சினம் பொருந்திய பாம்பு);
களம் - கழுத்து; (கறை ஆர் களன் - நீலகண்டன்);
(3.113.9 - "கடல்விட முண்டக ருங்களனே");
விடை ஊர்தி - காளைவாகனன்;
அதள் - தோல்;


மதனார் கணையால் அலைபாயும் மனமே - மன்மதனின் அம்புகளால் தாக்கப்பட்டு அலைபாய்கிற மனமே;
நினை நீ இறையேனும்; பதறா நிலையே அருள்வானே - நீ சிறிதளவாவது சிவபெருமானை நினை; அவன் பதற்றம் இல்லாத நிலையை அருள்புரிவான்; ( 'நினை நீ; இறையேனும் பதறா நிலையே அருள்வானே' என்றும் பொருள்கொள்ளலாம் - 'நீ சிவபெருமானை நினை; சிறிதும் பதற்றம் இல்லாத நிலையை அருள்புரிவான்');
பனி மா மலையான் - பனி படர்ந்த கயிலைமலையில் வீற்றிருப்பவன்;
அரைநாணாக் கத நாகம் அதே அணி ஈசன் - அரைநாணாகச் சீறும் பாம்பை அணியும் ஈசன்;
கறை ஆர் களன் - நீலகண்டன்;
ஓர் விடை ஊர்தி - ஒப்பற்ற இடபவாகனன்; (ஓர் - ஒரு - ஒப்பற்ற);
அதள் ஆடையினான் - தோலை ஆடையாக உடுப்பவன்;
மழபாடி அகலாது உறை மா மணிதானே - திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கம் போன்ற சிவபெருமான்.
--------------------
7)
இலராய் உளர்பால் .. இரவாமல்
.. இணையார் கழலே .. துதிபாடில்
தொலையா நிதியாய் .. வருமீசன்
.. துடிநேர் இடையாள் .. ஒருகூறன்
தலைமா லையினான் .. நதிபாயும்
.. சடைமேல் ஒருதூ .. மதிசூடி
அலரார் பொழில்சூழ் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.


பதம் பிரித்து:
இலராய் உளர்பால் இரவாமல்,
.. இணை ஆர் கழலே துதி பாடில்,
தொலையா நிதியாய் வரும் ஈசன்;
.. துடி நேர் இடையாள் ஒரு கூறன்;
தலைமாலையினான்; நதி பாயும்
.. சடைமேல் ஒரு தூ மதிசூடி;
அலர் ஆர் பொழில் சூழ் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


இலராய் உளர்பால் இரவாமல், இணை ஆர் கழலே துதி பாடில், தொலையா நிதியாய் வரும் ஈசன் - யாசிப்பவர்களுக்கு இல்லை என்று சொல்கின்ற, (பொருள் இருந்தும் தர மனம்) இல்லாதவர்களிடம் சென்று யாசிப்பதை விடுத்து, இரு திருவடிகளையே துதித்துப் பாடினால், அழிவற்ற செல்வமாக வரும் ஈசன்;
துடி நேர் இடையாள் ஒரு கூறன் - உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதியை ஒரு கூறாகக் கொண்டவன்;
தலைமாலையினான் - தலைமாலை அணிந்தவன்;
நதி பாயும் சடைமேல் ஒரு தூ மதிசூடி - கங்கைச்சடைமேல் ஒரு தூய திங்களைச் சூடியவன்;
அலர் ஆர் பொழில் சூழ் மழபாடி அகலாது உறை மா மணிதானே - மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கமே;
-----------------
8)
மதியா தவிரா .. வணன்வாட
.. மலைமேல் விரலால் .. அடரீசன்
நதியார் சடையான் .. அடியார்பால்
.. நமனார் அணுகா .. நிலையீவான்
உதிஞா யிறுபோல் .. ஒளிர்மேனி
.. உடையான் உமைகோன் .. மறைநாவன்
அதிரார் விடையான் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
மதியாத இராவணன் வாட
.. மலைமேல் விரலால் அடர் ஈசன்;
நதி ஆர் சடையான்; அடியார்பால்
.. நமனார் அணுகா நிலை ஈவான்;
உதி ஞாயிறுபோல் ஒளிர் மேனி
.. உடையான்; உமைகோன்; மறை நாவன்;
அதிர் ஆர் விடையான்; மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


அடர்த்தல் - நசுக்குதல்;
ஆர்தல் - பொருந்துதல்;
நமனார் - நமன் - காலன்;
உதி ஞாயிறு - உதிக்கின்ற சூரியன்;
மறை நாவன் - வேதம் ஓதுபவன்;
அதிர்தல் - ஒலித்தல்;
(சம்பந்தர் தேவாரம் - 3.42.4 - "கதிரார் திங்கள் .... அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி" - அதிர்தல் (சதங்கை மணி முதலியவற்றால்) ஒலித்தல். ஆர் - பொருந்திய. பைங்கண் ஏறு - பசிய கண்களையுடைய விடை).
--------------
9)
கழலா வினைபோய் .. மகிழ்வாகக்
.. கருதாய் மனமே .. முடிமீது
சுழலார் புனலோ .. டரவோடு
.. தொடுபோ தணிவான் .. உமைநேசன்
கழலார் அடிதே .. டரியோடு
.. கவினார் மலரான் .. அடையாத
அழலாய் எழுவான் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
கழலா வினை போய் மகிழ்வு ஆகக்
.. கருதாய் மனமே; முடிமீது
சுழல் ஆர் புனலோடு அரவோடு
.. தொடுபோது அணிவான்; உமைநேசன்
கழல் ஆர் அடி தேடு அரியோடு
.. கவின் ஆர் மலரான் அடையாத
அழலாய் எழுவான்; மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


கழலுதல் - நீங்குதல்;
போது - மலர்;
தொடு போது - வினைத்தொகை - தொடுத்த மலர்;
நேசன் - அன்பன்;
ஆர்தல் - பொருந்துதல்;
கழல் ஆர் அடி - வீரக்கழல் அணிந்த திருவடி;
கவின் - அழகு;
கவின் ஆர் மலரான் - அழகிய தாமரை மலர்மேல் இருக்கும் பிரமன்;
--------------------
10)
மடமார் மொழியே .. உரையீனர்
.. வழியா வதுதான் .. அறியாரே
விடமா சுணமோர் .. அணியாக
.. விரைநீ றதுபூ .. சியமேனி
உடையாய் அருளாய் .. எனவீவான்
.. உயர்வான் உமையாள் .. மணவாளன்
அடலே றமர்வான் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
மடம் ஆர் மொழியே உரை ஈனர்
.. வழி ஆவதுதான் அறியாரே;
"விட மாசுணம் ஓர் அணி
.. விரை நீறது பூசிய மேனி
உடையாய்; அருளாய்" என, ஈவான்
.. உயர் வான் உமையாள் மணவாளன்;
அடல் ஏறு அமர்வான்; மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


மடம் - அறிவின்மை;
ஆர்தல் - மிகுதல்; பொருந்துதல்;
உரைத்தல் - சொல்லுதல்;
ஈனர் - இழிந்தவர்;
மாசுணம் - பாம்பு;
விரை - வாசனை;
உயர் வான் - உயர்ந்த வானுலகம்;
அடல் ஏறு - வலிய காளை;
அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;


மடம் ஆர் மொழியே உரை ஈனர் வழி ஆவதுதான் அறியாரே - அறியாமை மிகுந்த சொற்களையே சொல்லும் இழிந்தவர்கள், நன்னெறியை அறியாதவர்கள்;
"விட மாசுணம் ஓர் அணி, விரை நீறது பூசிய மேனி உடையாய்; அருளாய்" என, ஈவான் உயர் வான் உமையாள் மணவாளன் - 'விஷப்பாம்பை ஆபரணமாகப் பூண்டு, மணக்கும் திருநீற்றைப் பூசிய திருமேனியை உடையவனே! அருள்வாயாக!" என்று இறைஞ்சினால், பார்வதி மணாளன் உயர்ந்த வானுலகை அளிப்பான்;
அடல் ஏறு அமர்வான் - வலிய இடபத்தை ஊர்தியாக விரும்புபவன்;
மழபாடி அகலாது உறை மா மணிதானே - திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கமே;
--------------------
11)
விடமார் மிடறா .. மறைநாவா
.. விமலா தனியா .. கணநாதா
விடையா சடையா .. எனநாளும்
.. விரையார் தமிழ்பா .. டடியாரின்
இடரா னவைதீர் .. அருளாளன்
.. இசைபா டறுகால் .. நறைநாடி
அடைவார் பொழில்சூழ் .. மழபாடி
.. அகலா துறைமா .. மணிதானே.



பதம் பிரித்து:
"விடம் ஆர் மிடறா; மறை நாவா;
.. விமலா; தனியா; கணநாதா;
விடையா; சடையா;" என நாளும்
.. விரை ஆர் தமிழ் பாடு அடியாரின்
இடர் ஆனவை தீர் அருளாளன்;
.. இசை பாடு அறுகால் நறை நாடி
அடை வார் பொழில் சூழ் மழபாடி
.. அகலாது உறை மா மணிதானே.


விடம் ஆர் மிடறன் - நீலகண்டன்;
மறை நாவன் - வேதம் ஓது நாவினன்;
தனியன் - ஏகனாய் இருப்பவன்;
விரை ஆர் தமிழ் - மணம் மிகுந்த தமிழ்ப்பாடல்களான தேவார திருவாசகம்;
அறுகால் - வண்டு (Beetle which is six-footed);
நறை - தேன்;
வார் பொழில் - நீண்ட சோலை;


விடம் ஆர் மிடறா, மறை நாவா - நீலகண்டனே; வேதம் ஓதும் நாவினனே;
விமலா, தனியா, கணநாதா - தூயவனே; ஒப்பற்றவனே; கணநாதனே;
விடையா, சடையா, என நாளும் - இடபவாகனனே; சடையுடையவனே; என்று தினந்தோறும்;
விரை ஆர் தமிழ் பாடு அடியாரின் இடர் ஆனவை தீர் அருளாளன் - மணம் மிகுந்த தமிழ்ப் பாமாலை பாடும் பக்தர்களின் இடர்களை எல்லாம் தீர்க்கும் அருளாளன்;
இசை பாடு அறுகால் நறை நாடி அடை வார் பொழில் சூழ் மழபாடி அகலாது உறை மா மணிதானே - இசையோடு ரீங்காரம் செய்யும் வண்டினங்கள் தேனை நாடி அடைகின் நீண்ட சோலைகள் சூழ்ந்த திருமழபாடியை நீங்காமல் உறையும் சிறந்த மாணிக்கம் போன்ற சிவபெருமான்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
திருமழபாடி - வயிரத்தூண் நாதர் / வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர் / வைத்யநாதர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=438

-------------- --------------

No comments:

Post a Comment