Sunday, November 15, 2015

02.32 – திருப்பூந்துருத்தி

02.32 – திருப்பூந்துருத்தி



2011-10-01
திருப்பூந்துருத்தி
----------------------------
(கலிவிருத்தம் - 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)
(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")



1)
வெள்ளை விடையன் நீறார் மேனியினான்
வெள்ளச் சடையன் வேதம் விரித்தருள்வான்
புள்ளி னம்சேர் பொழிலார் பூந்துருத்தி
வள்ளல் பாதம் வாழ்த்த வருமின்பே.



நீறு ஆர் மேனியினான் - திருநீறு பூசிய மேனியன்;
புள்ளினம் - பறவைகள்;
பொழில் ஆர் பூந்துருத்தி - சோலைகள் நிறைந்த திருப்பூந்துருத்தி;
இன்பு - இன்பம்;



2)
ஆற்றின் அயலே அரவும் அணிமதியின்
கீற்றும் புனைவெண் ணீற்றன் அன்பரைவான்
ஏற்றும் எம்மான் எழிலார் பூந்துருத்தி
ஏற்றன் பாதம் ஏத்த எழுமின்பே.



அணி மதியின் கீற்று - அழகிய நிலாத்துண்டம்;
வெண்ணீற்றன் - திருநீறு பூசியவன்;
ஏற்றன் - இடப வாகனன்;
எழுதல் - தோன்றுதல்; மிகுதல்;
வான் - சிவலோகம்;
அன்பரை வான் ஏற்றும் எம்மான் -
(சம்பந்தர் தேவாரம் - 2.31.1 -
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.)



3)
நிலவின் துண்டத் தயலே நீர்க்கங்கை
உலவும் சடையன் கரியின் உரிமூடி
புலரும் கதிர்போல் வண்ணன் பூந்துருத்தி
நிலையி னானை நினைய நேருமின்பே.



நீர்க்கங்கை - கங்கைநீர்;
கரியின் உரிமூடி - யானைத்தோலைப் போர்த்தவன்;
புலரும் கதிர்போல் வண்ணன் - உதிக்கின்ற ஞாயிறுபோல் செந்நிறத்தவன்;
பூந்துருத்தி நிலையினான் - பூந்துருத்தியைப் பிரியாது பெயராது உறைபவன்;
நேர்தல் - நிகழ்தல்;
(சம்பந்தர் தேவாரம் - 3.122.3 -
"பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்து....");



4)
சென்னி மேலே கங்கை திகழ்ந்திருக்க
அன்ன நடையாள் பங்கில் அமரண்ணல்
பொன்னிப் பாங்கர்ப் பொழிலார் பூந்துருத்தி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பே.



அமர்தல் - விரும்புதல்;
பொன்னி - காவிரி;
பாங்கர் - பக்கம்;
(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 391: "பொன்னிவலங் கொண்டதிருப் பூந்துருத்தி அவர்இருப்பக்")



5)
சேவார் கொடியாய் திங்கள் திகழ்முடியாய்
மூவா முதல்வா முரலும் வண்டினம்சேர்
பூவார் பொழில்சூழ் பொலிவார் பூந்துருத்தித்
தேவா என்னத் தீரும் தீவினையே.



சே ஆர் கொடியாய் - இடபக்கொடியினனே; (சுந்தரர் தேவாரம் - 7.27.1 - "விடையா ருங்கொடியாய்");
திங்கள் திகழ் முடியாய் - பிறைச்சந்திரன் விளங்கும் முடியினனே;
மூவா முதல்வா - மூப்பில்லாத முதல்வனே;
முரல்தல் - ஒலித்தல்; ரீங்காரம் செய்தல்;
பூ ஆர் பொழில் - மலர்கள் நிறைந்த சோலை;
பொலிவு ஆர் பூந்துருத்தி - அழகிய திருப்பூந்துருத்தி;



6)
காதார் குழையாய் கனலார் கண்ணுதலாய்
மாதோர் பங்கா மணியார் கண்டத்தாய்
போதார் கழலா பொழிலார் பூந்துருத்தி
நாதா என்ன நாளும் வருமின்பே.



ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்;
காது ஆர் குழையாய் - குழை அணிந்த காதினனே;
கனல் ஆர் கண்ணுதலாய் - தீப் பொருந்திய நெற்றிக்கண்ணனே;
மாது ஓர் பங்கா - அர்த்தநாரீஸ்வரனே;
மணி ஆர் கண்டத்தாய் - நீலகண்டனே;
போது ஆர் கழலா - பூக்கள் பொருந்திய திருவடியினனே; பூப்போன்ற திருவடியினனே;
(அப்பர் தேவாரம் - 6.99.7 - "...பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்...")



7)
முன்னோர் நகையால் புரங்கள் மூன்றெரித்தாய்
மின்னேர் இடையாள் பங்கா விடையேறீ
பொன்னேர் சடையா பொழிலார் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே.



ஏர்தல் / நேர்தல் - ஒத்தல்;
மின் நேர் இடையாள் பங்கா - மின்னல் போன்ற இடையை உடைய உமையை ஒரு பங்காக உடையவனே;
விடையேறீ - இடபவாகனனே;
பொன் நேர் சடையா - பொன் போன்ற செஞ்சடையினனே;
மன் - தலைவன்;
மங்குதல் - கெடுதல்; சாதல்;



8)
தடையோ மலையென் றெடுக்கும் தருக்குமிக
உடையான் அலற விரலொன் றூன்றியவா
புடையே பொழில்சூழ் பொலிவார் பூந்துருத்திச்
சடையா என்னச் சாயும் வல்வினையே.



மலை - கயிலைமலை;
தருக்கு மிக உடையான் - ஆணவம் மிக்க இராவணன்;
புடை - பக்கம்;
புடையே பொழில் சூழ் பொலிவு ஆர் பூந்துருத்தி - சோலைகள் புடையே சூழ்ந்த அழகிய பூந்துருத்தி;
சடையா என்ன - சடையனே என்று போற்றி வணங்கினால்;
சாய்தல் - அழிதல்; வலியற்றுக் கெடுதல்;



9)
முயலும் இருவர்க் கரிய முதல்வன்தாள்
இயலின் னிசையால் ஏத்தும் அடியாரைப்
புயலின் வளம்சேர் பொழிலார் பூந்துருத்தி
அயனின் அருளால் அடையா அருவினையே.



முயலும் இருவர்க்கு அரிய முதல்வன் தாள் - அடிமுடி தேடிய திருமாலுக்கும் பிரமனுக்கும் அடைய ஒண்ணாத சிவபெருமான் திருவடிகளை;
இயல் இன்னிசையால் ஏத்தும் அடியாரை - இயல் தமிழ் (திருவாசகம்), இசைத்தமிழ் (தேவாரம்) இவற்றால் துதிக்கும் பக்தர்களை;
புயல் - மேகம்; மழை; நீர்;
அயன் இன்னருளால் - பிறப்பில்லாத சிவபெருமானுடைய இன்னருளால்;


(சுந்தரர் தேவாரம் - 7.28.9 -
"அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய
பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கட வூர்த்திரு வீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக் கார்துணை நீயலதே.")



10)
தூற்றும் வாயர் சொல்லும் புரைமிக்க
மாற்றம் தன்னை மதியார் மதியுடையார்
போற்றும் பத்தர்க் கருளும் பூந்துருத்தி
ஆற்றன் அடியை அடைதல் அழகாமே.



புரை - குற்றம்;
மாற்றம் - வார்த்தை; மாறுதல் (change);
ஆற்றன் - சமயநெறிகளாய் இருப்பவன்; நீதிநெறியே வடிவாக உடையன் எனலுமாம்; (ஆறு - நெறி); கங்கை ஆற்றைச் சடையுள் வைத்தவன்;
அழகு - சுகம்; சிறப்பு;



11)
மலையான் மகளை ஒருபால் மகிழ்வோனே
இலையார் சூலப் படையை ஏந்தியவா
அலைநீர் அடையும் அழகார் பூந்துருத்தித்
தலைவா என்னத் தளரும் வினைக்கட்டே.



மலையான் மகள் - பார்வதி;
இலை ஆர் சூலப் படை - மூவிலைச் சூலம் - திரிசூலம்;
படை - ஆயுதம்;
தளர்தல் - நெகிழ்தல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.
  • சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்" - சம்பந்தரின் அப்பதிகத்தில் அடி ஈற்றுச்சீர் பொதுவாக மாங்காய்ச் சீர். ஆனால் இங்குள்ள பாடல்களில் அடி ஈற்றுச்சீரில் எவ்வகைக் காய்ச்சீரும் வரும்.
2) திருப்பூந்துருத்தி - புஷ்பவனேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=961

-------------- --------------

No comments:

Post a Comment