Thursday, November 26, 2015

02.36 – நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು)

02.36நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು)



2011-11-25
நஞ்சனகூடு (Nanjangud - (Kannada ನಂಜನಗೂಡು) - மைசூர்க்கு அருகுள்ள தலம்)
----------------------
(சந்தக் கலித்துறை - 'தான தானன தானன தானன தானன'. - என்ற சந்தம்);
(சம்பந்தர் தேவாரம் - 2.9.1 - "களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்")



1)
வேத னைத்தொடர் நல்கிடும் வெவ்வினை வேரறப்
பாதை யைத்தெளி பற்றொடு சென்றடை நெஞ்சமே
மாதை ஓர்புறம் வைத்தவன் வல்விடம் உண்டருள்
நாதன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
வேதனைத் தொடர் நல்கிடும் வெவ்வினை வேர் அறப்
பாதையைத் தெளி; பற்றொடு சென்று அடை நெஞ்சமே;
மாதை ஓர் புறம் வைத்தவன் வல்விடம் உண்டு அருள்
நாதன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


வெவ்வினை - கொடிய வினை;
தெளிதல் - அறிதல்;
பற்று - பக்தி;
கபினி - நஞ்சனகூடு என்ற தலத்தில் ஓடும் ஆற்றின் பெயர்;


வேதனைத்தொடர் நல்கிடும் வெவ்வினை வேரறப் பாதையைத் தெளி - இடைவிடாது துன்பத்தைக் கொடுக்கும் கொடிய வினைகளை அடியோடு நீக்கும் வழியை அறி;
பற்றொடு சென்று அடை நெஞ்சமே - பக்தியோடு சென்று சேர்வாய் மனமே;
மாதை ஓர் புறம் வைத்தவன் - பார்வதியை இடப்பக்கத்தில் கொண்டவன்;
வல்விடம் உண்டருள் நாதன் ஊர் கபினிக்கரை நஞ்சனகூடு அதே - கொடிய விடத்தை உண்டு அருள்புரிந்த தலைவன் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



2)
துன்ப மாயின போய்ச்சுகம் சேர்வழி சொல்லுவன்
அன்பி னாலடி போற்றிய டைந்திடு நெஞ்சமே
உம்ப ரார்தொழ ஓதவி டந்தனை உண்டருள்
நம்பன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
துன்பம் ஆயின போய்ச் சுகம் சேர் வழி சொல்லுவன்,
அன்பினால் அடி போற்றி அடைந்திடு நெஞ்சமே;
உம்பரார் தொழ ஓத விடந்தனை உண்டு அருள்
நம்பன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


சொல்லுவன் - சொல்லுவேன்;
உம்பரார் - தேவர்கள்;
ஓத விடம் - கடல் நஞ்சு;
நம்பன் - சிவன் (விரும்பத்தக்கவன்);



3)
துக்க மார்பிற விச்சுழல் தீர்வழி சொல்லுவன்
பொக்கம் அற்றடி போற்றிய டைந்திடு நெஞ்சமே
அக்கின் ஆரமும் ஆமையின் ஓடும ணிந்தவன்
நக்கன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
துக்கம் ஆர் பிறவிச் சுழல் தீர் வழி சொல்லுவன்,
பொக்கம் அற்று அடி போற்றி அடைந்திடு நெஞ்சமே;
அக்கின் ஆரமும் ஆமையின் ஓடும் அணிந்தவன்,
நக்கன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


பொக்கம் - பொய்; வஞ்சம்;
அக்கு - எலும்பு;
நக்கன் - நக்நன் - ஆடையற்றவன்;


துக்கம் ஆர் பிறவிச் சுழல் தீர் வழி சொல்லுவன் - துக்கம் மிகுந்த பிறவி என்ற சுழலை நீங்கும் உபாயம் கூறுகின்றேன்;
பொக்கம் அற்று அடி போற்றி அடைந்திடு நெஞ்சமே - வஞ்சம் இன்றித் திருவடியை வாழ்த்திச் சென்றடைவாய் மனமே;
அக்கின் ஆரமும் ஆமையின் ஓடும் அணிந்தவன் - எலும்பு மாலையும் ஆமையோட்டையும் அணிபவன்;
நக்கன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே. - திகம்பரனான சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



4)
அயனெ ழுத்தினை மாற்றுதல் ஆம்இனி அஞ்சிடேல்
இயலு மாறடி ஏத்திய டைந்திடு நெஞ்சமே
அயல டைந்தலர் அம்பையெய் காமனை நீறுசெய்
நயனன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
அயன் எழுத்தினை மாற்றுதல் ஆம், இனி அஞ்சிடேல்;
இயலுமாறு அடி ஏத்தி அடைந்திடு நெஞ்சமே;
அயல் அடைந்து அலர் அம்பை எய் காமனை நீறு செய்
நயனன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


அயன் - பிரமன்;
அஞ்சிடேல் - அஞ்சாதே; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி);
அயல் - பக்கம்; அருகு;
அலர் அம்பு - மலர்க்கணை;


அயன் எழுத்தினை மாற்றுதல் ஆம்; இனி அஞ்சிடேல் - பிரமனின் எழுத்தை ('தலையெழுத்தை') மாற்றலாம்; அஞ்சாதே;
இயலுமாறு அடி ஏத்தி அடைந்திடு நெஞ்சமே - இயன்ற வகையில் திருவடியை வாழ்த்திச் சென்றடைவாய் மனமே;
அயல் அடைந்து அலர் அம்பை எய் காமனை நீறு செய் நயனன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - நெருங்கிவந்து மலர்க்கணையைத் தொடுத்த மன்மதனைச் சாம்பல் ஆக்கிய நெற்றிக்கண்ணன் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



5)
அல்லல் ஆயின அற்றும கிழ்ந்திடல் ஆகுமே
வல்ல வாறடி வாழ்த்திய டைந்திடு நெஞ்சமே
கொல்ல வந்தடை கூற்றையு தைத்தடி யார்க்கருள்
நல்லன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
அல்லல் ஆயின அற்று மகிழ்ந்திடல் ஆகுமே;
வல்லவாறு அடி வாழ்த்தி அடைந்திடு நெஞ்சமே;
கொல்ல வந்து அடை கூற்றை உதைத்து அடியார்க்கு அருள்
நல்லன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


அல்லல் - துன்பம்;
வல்லவாறு - இயன்ற வகையில்;
கூற்று - எமன்;
நல்லன் - நல்லவன்; நன்மையே வடிவானவன்;


அல்லல் ஆயின அற்று மகிழ்ந்திடல் ஆகுமே - துன்பங்கள் தீர்ந்து இன்புறலாம்;
வல்லவாறு அடி வாழ்த்தி அடைந்திடு நெஞ்சமே - இயலும் வகையில் திருவடியை வாழ்த்திச் சென்றடைவாய் மனமே;
கொல்ல வந்து அடை கூற்றை உதைத்து அடியார்க்கு அருள் நல்லன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - மார்க்கண்டேயரைக் கொல்வதற்காக அவரை நெருங்கிய எமனை உதைத்து, அவர்க்கு அருள்புரிந்த, நன்மையே வடிவான சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



6)
வந்து வாதைசெய் வல்வினை வற்றிம கிழ்வுறக்
கந்த மார்கழல் கைதொழு தெய்திடு நெஞ்சமே
முந்தி ஓர்கணை யாலெயில் மூன்றையெ ரித்தவன்
நந்தி ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
வந்து வாதை செய் வல்வினை வற்றி மகிழ்வு உறக்,
கந்தம் ஆர் கழல் கைதொழுது எய்திடு நெஞ்சமே;
முந்தி ஓர் கணையால் எயில் மூன்றை எரித்தவன்,
நந்தி ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


வாதை - துன்பம்;
மகிழ்வு - மகிழ்ச்சி;
உறுதல் - அடைதல்; அனுபவித்தல்;
கந்தம் - நறுமணம்;
கழல் - கழல் அணிந்த திருவடி;
எய்துதல் - அடைதல்;
முந்தி - முற்காலம்;
எயில் - கோட்டை;
நந்தி - சிவபெருமானின் பெயர்களுள் ஒன்று;


வந்து வாதைசெய் வல்வினை வற்றி மகிழ்வு உற - நம்மிடம் வந்து துன்புறுத்தும் வலிய வினைகள் எல்லாம் அழிந்து, நாம் இன்புற்று இருக்க;
கந்தம் ஆர் கழல் கைதொழுது எய்திடு நெஞ்சமே - வாசம் கமழும் திருவடியை வணங்கி அடைவாய் மனமே;
முந்தி ஓர் கணையால் எயில் மூன்றை எரித்தவன் - முன்பு ஓர் அம்பால் முப்புரங்களையும் எரித்தவன்;
நந்தி ஊர் கபினிக்கரை நஞ்சனகூடு அதே - நந்தி என்ற திருநாமம் உடைய சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



7)
மட்டி லாதடை வல்வினை யாவையும் மாய்வுற
இட்ட மாயடி ஏத்திய டைந்திடு நெஞ்சமே
மட்டு வார்குழல் மாதொரு பங்கும கிழ்பவன்
நட்டன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
மட்டு இலாது அடை வல்வினை யாவையும் மாய்வு உற,
இட்டமாய் அடி ஏத்தி அடைந்திடு நெஞ்சமே;
மட்டு வார் குழல் மாது ஒரு பங்கு மகிழ்பவன்,
நட்டன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


மட்டு - அளவு; எல்லை; / தேன்; வாசனை;
யாவையும் - யாவும் - எல்லாம்;
மாய்வு - சாவு; அழிதல்;
இட்டம் - இஷ்டம்;
வார்தல் - நீளுதல்; சொரிதல்; ஒழுகுதல்;
குழல் - கூந்தல்;
நட்டன் - திருநடம் செய்பவன்; கூத்தன்;


மட்டு இலாது அடை வல்வினை யாவையும் மாய்வு உற - அளவின்றி வந்தடையும் வலிய வினைகள் எல்லாம் அழிய;
இட்டமாய் அடி ஏத்தி அடைந்திடு நெஞ்சமே - விரும்பித் திருவடியை வணங்கி அடைவாய் மனமே;
மட்டு வார் குழல் மாது ஒரு பங்கு மகிழ்பவன் - தேன் ஒழுகும் புதுமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவன்;
நட்டன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - திருநடம் செய்யும் கூத்தனாகிய சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



8)
பொதிவி னைத்துயர் போய்விடப் போயடை நெஞ்சமே
மதியி லாதரு வெற்பசை மன்னனை ஓர்விரல்
நுதியி னால்அழ வைத்தருள் நோக்கிய வேணியில்
நதியன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
பொதி வினைத்துயர் போய்விடப் போய் அடை நெஞ்சமே;
மதி இலாது அரு வெற்பு அசை மன்னனை ஓர் விரல்
நுதியினால் அழ வைத்து அருள் நோக்கிய, வேணியில்
நதியன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


பொதி - மூட்டை;
பொதிவினை - வினைப்பொதி;
விடுதல் - ஒரு துணைவினை (An auxiliary verb having the force of certainty, intensity, etc.);
வெற்பு - மலை;
மன்னன் - இங்கே இலங்கை மன்னனாகிய இராவணன்;
நுதி - நுனி;
அருள் நோக்குதல் - அருட்பார்வையால் நோக்குதல்;
வேணி - சடை;


பொதி வினைத்துயர் போய்விடப் போய் அடை நெஞ்சமே - பழவினை மூட்டையால் அனுபவிக்கும் துயரங்கள் நீங்கிவிடச் சென்று அடைவாய் மனமே;
மதி இலாது அரு வெற்பு அசை மன்னனை ஓர் விரல் நுதியினால் நுதியினால் அழ வைத்து அருள் நோக்கிய - அறிவின்றிக் கயிலாய மலையை அசைத்த இலங்கை மன்னனான இராவணனை ஓர் விரலின் நுனியால் (நசுக்கி) அழவைத்து, (பின் அவன் பாடிய இசையைக் கேட்டு) அருட்கண்ணால் பார்த்த;
வேணியில் நதியன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - சடையில் கங்கையைத் தாங்கும் சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.


அருள் நோக்குதல் -
(அப்பர் தேவாரம் - 5.47.7
மூக்கு வாய்செவி கண்ணுடல் ஆகிவந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள்
நோக்கு வான்நமை நோய்வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சிஏ கம்பனே.)



9)
ஊனம் அற்றுயர் தானம டைந்திட உன்னினால்
வான ளிக்கிற கானமி சைத்தடை நெஞ்சமே
ஏனம் அன்னமி வர்க்கறி தற்கரி தாயெழும்
ஞானன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
ஊனம் அற்று உயர் தானம் அடைந்திட உன்னினால்,
வான் அளிக்கிற கானம் இசைத்து அடை நெஞ்சமே;
ஏனம் அன்னம் இவர்க்கு அறிதற்கு அரிதாய் எழும்
ஞானன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


ஊனம் - குறை; குற்றம்;
தானம் - ஸ்தானம் - இடம்; நிலை;
உன்னுதல் - எண்ணுதல்;
வான் - வானுலகு - சிவலோகம்;
கானம் - இசைப்பாட்டு;
ஏனம் - பன்றி;
ஞானன் - ஞானஸ்வரூபி;


ஊனம் அற்று உயர் தானம் அடைந்திட உன்னினால் - குற்றம் குறைகள் தீர்ந்து உயர்ந்த நிலை அடைய எண்ணினால்;
வான் அளிக்கிற கானம் இசைத்து அடை நெஞ்சமே - சிவலோகத்தை அளிக்கும் பாடல்களை இசைத்து அடைவாய் மனமே;
ஏனம் அன்னம் இவர்க்கு அறிதற்கு அரிதாய் எழும் ஞானன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - திருமாலும் பிரமனும் பன்றியாய் அன்னமாய்த் தேடியும் அறிய இயலாத சோதியாக உயர்ந்த ஞானவடிவினன் ஆகிய சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.



10)
நாணம் ஒன்றிலர் நஞ்சமு தென்றுரை வஞ்சகர்
காணப் புன்மொழி விட்டொழி பேணிடு நெஞ்சமே
பாண பத்திரர் பாடலு கந்தவன் பாம்பரை
நாணன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
நாணம் ஒன்று இலர்; நஞ்சு அமுது என்று உரை வஞ்சகர்
காண்; அப்-புன் மொழி விட்டு ஒழி; பேணிடு நெஞ்சமே,
பாணபத்திரர் பாடல் உகந்தவன்;
பாம்பு அரைநாணன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


காணப்புன்மொழி - காண்+அப்+புன்மொழி / காணப் புன்மொழி; (காணம் - பொற்காசு; பொருள்);
பாணபத்திரர் - சிவனாரே திருமுகப் பாசுரம் அளித்த பக்தர்; (11ம் திருமுறையில் காண்க);
பாம்பு அரை நாணன் - பாம்பை அரைநாணாகக் கட்டிய சிவபெருமான்;


வெட்கமில்லாமல் காசுக்காக விஷத்தையும் அமுதம் போன்றது என்று சொல்லித் திரியும் வஞ்சகர்களின் இழிந்த சொற்களை விட்டு நீங்குவாய்; நெஞ்சே! பாணபத்திரரின் பாடலை விரும்பியவனும், நாகத்தை அரைநாணாகக் கட்டியவனும் ஆன சிவபெருமான் உறையும் ஊரான, கபினி ஆற்றங்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தைப் போற்றுவாயாக!


* பாணபத்திரர்க்குத் திருவாலவாய் ஈசன் அருள்புரிந்ததைத் திருவிளையாடற்புராணத்திற் காண்க. இறைவனிடம் திருமுகப் பாசுரம் பெற்றுச் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பரிசில் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்தில் கழறிற்றறிவார் புராணத்தில் பன்னிரண்டு செய்யுட்களில் சேக்கிழார் விரித்துரைத்துள்ளார். (திருமுகம் என்பது பெரியோர் எழுதியனுப்பும் செய்தி தாங்கிய மடலாகும்.)


* குறிப்பு : பாணபத்திரர்க்கு அருள்புரிந்த தலம் ஆலவாய் எனினும் சிவபெருமான் அடியார்க்கு அருளும் திறத்தைச் சுட்டும் வண்ணமாக அச்செய்தி இந்த நஞ்சனகூடு பாடலில் வந்தது.
திருநாவுக்கரசர் தேவாரத்தில், 4.49 - திருக்குறுக்கை வீரட்டம் பதிகத்தில் இவ்வாறு (வெவ்வேறு தலங்களில் நிகழ்ந்த) பல அடியவர்களுக்கு அருளிய வரலாறுகள் சுட்டப்பெறுவதைக் காணலாம்.



11)
ஈய ஒன்றிலர் தங்கடை ஏகியி ரந்திடேல்
நேய மாய்த்தமிழ் மாலைபு கன்றடை நெஞ்சமே
தேயன் நான்மறை யானொரு சேவமர் கண்ணுதல்
நாயன் ஊர்கபி னிக்கரை நஞ்சன கூடதே.



பதம் பிரித்து:
ஈய ஒன்று இலர் தம் கடை ஏகி இரந்திடேல்;
நேயமாய்த் தமிழ் மாலை புகன்று அடை நெஞ்சமே;
தேயன், நான்மறையான், ஒரு சே அமர் கண்ணுதல்
நாயன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே.


ஈய ஒன்று இலர் - கொடுக்க ஒன்றும் இல்லாதவர்கள் - யாசிப்பவர்க்கு ஒன்றும் கொடாதவர்கள்;
கடை - வாயில் (Entrance, gate, outer gateway);
ஏகுதல் - போதல்;
இரத்தல் - யாசித்தல்;
நேயம் - அன்பு;
தேயன் - தியானிக்கப்படுவோன் (One who is meditated upon);
சே - எருது;
கண்ணுதல் - நெற்றிக்கண்;
நாயன் - கடவுள்; தலைவன்; அரசன்;


ஈய ஒன்று இலர் தம் கடை ஏகி இரந்திடேல் - கொடுக்க ஒன்றும் இல்லாதவர்களின் வாயிலுக்குச் சென்று யாசியாதே;
நேயமாய்த் தமிழ்மாலை புகன்று அடை நெஞ்சமே - அன்போடு தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ் மாலைகளைப் பாடி அடைவாய் மனமே;
தேயன்; நான்மறையான் - தியானிக்கப்படுபவன்; நால்வேதங்களும் சொல்பவன்;
ஒரு சே அமர் கண்ணுதல் நாயன் ஊர் கபினிக் கரை நஞ்சனகூடு அதே - ஓர் இடபத்தை வாகனமாக விரும்பும், நெற்றிக்கண்ணுடைய கடவுள் ஆகிய சிவபெருமான் உறையும் ஊரான, கபினி நதிக்கரையில் உள்ள நஞ்சனகூடு என்ற தலத்தையே.


குறிப்புகள் :
1. நாயன் :
(12.29.384 - பெரிய புராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்:
"நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று ...." - யாவர்க்கும் மேலாய தலைவனை ஒரு அடியனாய சுந்தரன் ஏவிய செயல் நன்றாயிருக்கிறது!);


2, (சுந்தரர் தேவாரம்- 7.34.1
"தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும், சார்கினும், தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்...")



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
  • சந்தக் கலித்துறை - 'தான தானன தானன தானன தானன'. - என்ற சந்தம்;
  • அடி ஈற்றுச் சீரைத் தவிர ஏனைய சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்று முடியும்.
2) சம்பந்தர் தேவாரம் - 2.9.1 -
"களையும் வல்வினை ஞ்சனெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்டு
ளையும் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே".



3) நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು) - நஞ்சுண்டேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=135

----------- --------------

No comments:

Post a Comment