Thursday, November 26, 2015

02.39 – காளத்தி - (திருக்காளத்தி - காளஹஸ்தி)

02.39காளத்தி - (திருக்காளத்தி - காளஹஸ்தி)


2011-12-03
திருக்காளத்தி ("காளஹஸ்தி")
----------------------------------
('தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.112.11 - "வீடி னார்மலி வெங்க டத்துநின் றாட லானுறை யாடானை")


1)
உச்சி மேல்மதி சூடி பாம்பரைக்
கச்சி னானுறை காளத்தி
நச்சி ஏத்திடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே.


உச்சி மேல்மதி சூடி - தலைமேல் பிறைச்சந்திரனைச் சூடியவன்;
கச்சு - அரைப்பட்டிகை (Belt, girdle, sash, cummerbund);
பாம்பு அரைக்கச்சினான் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியவன்;
உறை காளத்தி - அப்பெருமான் உறையும் திருக்காளத்தியை;
நச்சி - விரும்பி;
வைச்ச - வைத்த;
நச்சி ஏத்திடும் அன்பருக்கு அவன் வைச்ச மாநிதி ஆவன் - விரும்பித் தொழும் பக்தர்களுக்குச் சிவபெருமான் சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன் தருவார்;

(அப்பர் தேவாரம் - 5.60.2 -
அச்ச மில்லைநெஞ் சேரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிடம் உண்டகண் டாவெ
வைச்ச மாநிதி வர்மாற் பேறரே.)


2)
நட்டன் மாசுணம் ஒன்றை நாணெனக்
கட்டு வானுறை காளத்தி
இட்ட மாய்த்தொழும் அன்ப ருக்கிடர்
கெட்டு நன்னிலை கிட்டுமே.


நட்டன் - நடனமாடுபவன்; கூத்தன்;
மாசுணம் - பாம்பு;
நாண் - கயிறு - அரைநாண்; வில்லின் நாண்; (முப்புரம் எரித்த நாளில் மலை வில்லில் பாம்பை நாணாகக் கட்டியது);
இட்டம் - இஷ்டம் - விருப்பம்;
கிட்டும் - கிடைக்கும்;


3)
நண்ணு காமனை நீறு செய்ந்நுதற்
கண்ணி னானுறை காளத்தி
எண்ணி இன்தமிழ் பாடி ஏத்திடத்
திண்ண மாய்வினை தீருமே.


நண்ணுதல் - நெருங்குதல்;
நுதல் - நெற்றி;
நுதற்கண்ணினான் - நெற்றிக்கண்ணன்;
நண்ணு காமனை நீறு செய்ந்நுதற்கண்ணினான் - நெருங்கிய மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்;
இன் தமிழ் - இனிய தமிழ் - தேவாரம், திருவாசகம், முதலியன;
திண்ணம் - நிச்சயம்; உறுதி;
இலக்கணக்குறிப்பு : செய் + நுதற்கண்ணினான் - செய்ந்நுதற்கண்ணினான்;
ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து :
94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும் . உதாரணம் :
மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்; செய் + நன்றி - செய்ந்நன்றி; கை + மாறு - கைம்மாறு;


4)
விண்ணி னார்பணி வீரன் வெண்மதிக்
கண்ணி யானுறை காளத்தி
உண்ணி லாவிய அன்பொ டேத்திடும்
மண்ணி னார்வினை மாயுமே.


கண்ணி - முடிமேல் அணியும் மாலை;
உண்ணிலாவிய - உள் நிலாவிய;

விண்ணினார் பணி வீரன் - தேவரெல்லாம் வணங்கும் வீரன்; (முப்புரம் எரித்தவன், விடம் உண்டவன்,,,);
வெண்மதிக் கண்ணியான் - வெண் திங்களை முடிமேல் மாலையாக அணிந்தவன்;
உள் நிலாவிய அன்பொடு ஏத்திடும் மண்ணினார் வினை மாயுமே - உள்ளத்தில் பொருந்திய பக்தியோடு துதிக்கும் மண்ணுலகத்தவரின் வினைகள் எல்லாம் அழியும்;


5)
செய்யன் மூவிலை வேலன் மான்மறிக்
கையி னானுறை காளத்தி
நையும் நெஞ்சொடு நாடி ஏத்துதல்
செய்ய வல்வினை தீருமே.


செய்யன் - சிவந்த நிறத்தினன்;
மூவிலை வேலன் - திரிசூலத்தை ஏந்தியவன்;
மான்மறிக் கையினான் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன்;
நையும் நெஞ்சொடு - உருகும் மனத்தோடு;
நாடி ஏத்துதல் செய்ய - விரும்பித் துதிக்க;


6)
திங்கள் சூடிய சென்னி யின்மிசைக்
கங்கை யானுறை காளத்தி
பொங்கும் அன்பொடு போற்றி என்பவர்
இங்கு வாடுதல் இல்லரே.


திங்கள் சூடிய சென்னியின்மிசைக் கங்கையான் - சந்திரனைச் சூடிய திருமுடிமேல் கங்கையையும் உடையவன்;


7)
காட்டில் மாநடம் ஆடி கண்ணுதல்
காட்டு வானுறை காளத்தி
நாட்டம் ஆர்கிற நெஞ்சொ டேத்திட
வாட்டு வல்வினை மாயுமே.


காட்டில் மாநடம் ஆடி - சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;
கண்ணுதல் காட்டுவான் - நெற்றிக்கண் திகழ்பவன்;
நாட்டம் ஆர்கிற நெஞ்சொடு ஏத்திட - விருப்பம் (பக்தி) மிகுகிற மனத்தினால் போற்றிட;
வாட்டு வல்வினை மாயும் - வாட்டுகிற வலிய வினைகள் எல்லாம் அழியும்;


8)
மத்த னாய்மலை ஆட்டும் மன்னனைக்
கத்த வைத்தவன் காளத்தி
பத்த ராய்ப்பணி வார்க்குப் பாரினில்
எய்த்தல் என்பதும் இல்லையே.


மத்தன் - வெறிபிடித்தவன்; பைத்தியம்;
மலை ஆட்டும் மன்னனை - கயிலையைப் பெயர்க்க முயன்ற இலங்கை வேந்தன் இராவணனை;
எய்த்தல் - இளைத்தல்; வருந்துதல்;
* இம்மையிலும் இன்பம்; வினைகள் அழிவதால் மறுபிறப்பும் இல்லை;


9)
ஆண வத்தொடு நேடு மாலயன்
காணொ ணானுறை காளத்தி
பேணி நிற்கிற பெற்றி உள்ளவர்
மாணி லாவினை மாயுமே.


பெற்றி - இயல்பு; தன்மை; பெருமை;
மாண் - மாட்சிமை (Greatness; glory; splendour; excellence; dignity);
மாண் இலா வினை - தீவினை;

ஆணவத்தொடு நேடு மால் அயன் காணொணான் உறை காளத்தி - அகந்தையோடு அடியும் முடியும் தேடிய திருமாலாலும் நான்முகனாலும் காண இயலாத சிவபெருமான் உறையும் திருக்காளத்தியை;
பேணி நிற்கிற பெற்றி உள்ளவர் மாண் இலா வினை மாயுமே - போற்றுகின்ற தன்மை உள்ளவரின் தீவினைகள் எல்லாம் அழியும்.


10)
மிண்டர் சென்றடை யாத வேதியன்
கண்டன் மேவிய காளத்தி
இண்டை கோத்தடி ஏத்து தொண்டரின்
பண்டை வல்வினை பாறுமே.


மிண்டர் - கல் நெஞ்சர்;
வேதியன் - வேதங்களை அருளிச் செய்தவன்;
கண்டன் - நீலகண்டன்; (ஒருபுடைப் பெயர்; ஏகதேசம்);
இண்டை - ஒருவகை மாலை (Circlet of flowers, variety of garland);
கோத்தல் - தொடுத்தல்;
டி ஏத்து தொண்டரின் - திருவடியை வணங்கும் அடியவர்களது;
பண்டை வல்வினை - பழைய, வலிய வினைகள்;
பாறுதல் - அழிதல் (To be destroyed, ruined);


11)
கால னாருயிர் கால அன்றுதை
காலி னானுறை காளத்தி
கோல நன்மலர் கொண்டு வாழ்த்திடும்
சீலம் உள்ளவர் செல்வரே.


பதம் பிரித்து:
காலன் ஆர் உயிர் கால அன்று உதை
காலினான் உறை காளத்தி
கோல நன் மலர் கொண்டு வாழ்த்திடும்
சீலம் உள்ளவர் செல்வரே.

ஆர் உயிர் - அரிய உயிர்;
காலுதல் - கக்குதல்;
(அப்பர் தேவாரம் - 4.38.2 - "பொடிதனைப் பூச வைத்தார் ... காலனைக் கால வைத்தார்...");

காலனை அவன் அரிய உயிரைக் கக்குமாறு அன்று உதைத்த திருவடியை உடைய சிவபெருமான் உறையும் காளத்தியை அடைந்து அப்பெருமானை அழகிய நல்ல பூக்களால் போற்றி வாழ்த்தும் பக்தர்கள் செல்வர்களே;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு:
a) ப்பாடல் அமைப்பை "ஆசிரிய இணைக்குறட்டுறை" என்று கருதலாம்.
b) முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.
c) 'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.
d) ஒரோவழி 2-ஆம் சீர் (தானன) என்பது 'தான என்று வரக்கூடும்; அப்படி அச்சீர் தான என்று ஆயின், அதனை அடுத்த சீர் (3-ஆம் சீர்) நிரையசையில் தொடங்கும்.
e) அடி ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என முடியும்.
f) 2-ஆம் அடியில் ஈற்றுச்சீர் தானான என்றும் வரக்காணலாம்.


2) சம்பந்தர் தேவாரம் - 2.112.11
வீடி னார்மலி வெங்க டத்துநின்
றாட லானுறை யாடானை
நாடி ஞானசம் பந்தன் செந்தமிழ்
பாட நோய்பிணி பாறுமே.


3) இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பை ஓரளவு ஒத்தவை. ஆனால் சில வித்தியாசங்கள்:
a) இவற்றில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் மடங்கி வருவது இல்லை. (இடைமடக்கு இல்லை);
b) 2-ஆம், 4-ஆம் அடிகளில் ஈற்றுச்சீர் தானா என்றில்லாமல் தானனா என்று உள்ளது.
-------- ------------
4) திருக்காளத்தி - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1009

----------- --------------

No comments:

Post a Comment