Thursday, November 26, 2015

02.38 – தென்-திருவாலங்காடு

02.38 – தென்-திருவாலங்காடு

2011-12-08
தென்-திருவாலங்காடு
(சோழநாட்டில் காவிரித் தென்கரையில் உள்ள தலம்; கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், ஆடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையே உள்ளது.)
----------------------------
(அறுசீர் விருத்தம் - மா மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - வரிய மறையார் பிறையார்)

1)
அனலார் கண்ணால் காமன்
.. ஆகம் தனைநீ றாக்கி
மினலார் இடையா ளோடு
.. விடையில் ஏறும் எந்தை
வினைதீர்த் தன்பர்க் கின்பம்
.. விளைக்கும் பெருமான் ஊராம்
புனலார் பொன்னித் தென்பால்
.. பொலியும் ஆலங் காடே.



ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்; நிறைதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
ஆகம் - உடல்;
மினல் ஆர் இடையாள் - மின்னல் போன்ற இடையை உடைய உமையம்மை;
விடை - இடபம்;
பொன்னி - காவிரி;
தென்பால் - தெற்கே; தென்கரையில்;
பொலிதல் - விளங்குதல்; செழித்தல்; சிறத்தல்;


அனல் ஆர் கண்ணால் காமன் ஆகம்தனை நீறு ஆக்கி - தீப்பொருந்திய நெற்றிக்கண்ணால் மன்மதன் உடலைச் சாம்பல் ஆக்கியவன்;
மினல் ஆர் இடையாளோடு விடையில் ஏறும் எந்தை - மின்னல் போன்ற இடையை உடைய உமையோடு இடபத்தின்மேல் ஏறி வரும் எம் தந்தை;
வினை தீர்த்து அன்பர்க்கு இன்பம் விளைக்கும் பெருமான் ஊர் ஆம் - வினைகளைத் தீர்த்து பக்தர்களுக்கு இன்பம் பெருக அருளும் பெருமான் உறையும் தலம் ஆகும்;
புனல் ஆர் பொன்னித் தென்பால் பொலியும் ஆலங்காடே - நீர் மிகுந்த காவிரிநதியின் தென்கரையில்.விளங்குகின்ற திருவாலங்காடு;



2)
விரையார் மலர்கள் தூவி
.. விமலா விண்ணோர் நாதா
அரையா அருளென் றேத்தும்
.. அன்பு நெஞ்சர் மீண்டு
தரைமேல் வாரா வண்ணம்
.. தருமெம் பெருமான் ஊராம்
திரையார் பொன்னித் தென்பால்
.. திகழும் ஆலங் காடே.



விரை ஆர் மலர்கள் தூவி - வாசம் மிக்க பூக்களைத் தூவி;
"விமலா விண்ணோர் நாதா அரையா அருள்" என்று ஏத்தும் - "விமலனே, வானோர் தலைவனே, அரசனே, அருளாய்" என்று துதிக்கும்;
அன்பு நெஞ்சர் மீண்டு தரைமேல் வாரா வண்ணம் தரும் எம் பெருமான் ஊர் ஆம் - பக்தர்கள் பூமியில் மீண்டும் பிறவாதபடி அருளும் எம் பெருமான் உறையும் ஊர் ஆகும்;
திரை ஆர் பொன்னித் தென்பால் திகழும் ஆலங்காடே - அலைகள் உடைய காவிரி ஆற்றின் தென்கரையில் விளங்குகின்ற திருவாலங்காடு;



3)
பண்ணேர் மொழியாள் பங்கா
.. பால்வெண் ணீற ணிந்தாய்
விண்ணோர் தலைவா நஞ்சை
.. மிடற்றில் வைத்தாய் என்று
கண்ணீர் கசிவார் தம்மைக்
.. காக்கும் பெருமான் ஊராம்
தெண்ணீர்ப் பொன்னித் தென்பால்
.. திகழும் ஆலங் காடே.



பண் நேர் மொழியாள் - பண்போல் இனிய மொழி பேசும் உமையம்மை;
பால் வெண் நீறு அணிந்தாய் - பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசியவனே;
மிடற்றில் - ண்டத்தில்;;
தெண்ணீர் - தெளிந்த நீர்;



4)
நால்வாய் உரியைப் போர்த்த
.. நம்பன் மேரு வில்லில்
மால்கால் தீயம் பாக
.. வான்முப் புரங்கள் சுட்டான்
வேல்போற் கண்ணி பங்கன்
.. வெள்ளை விடையன் ஊராம்
சேல்பாய் பொன்னித் தென்பால்
.. திகழும் ஆலங் காடே.



நால்வாய் - யானை; (தொங்குகிற வாயை உடையது);
உரி - தோல்;
நம்பன் - சிவன்;
மால் கால் தீ அம்பாக - திருமால், காற்று, அக்கினி மூவரும் உறுப்புகளாக அமைந்த அம்பு;
வான் முப்புரங்கள் - வானில் திரியும் முப்புரங்கள்;
சுட்டான் - எரித்தவன்;
(அப்பர் தேவாரம் - 5.10.3 - "அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ ...");
வேல்போற் கண்ணி பங்கன் - வேல் நிகர்க்கும் கண்கள் உடைய உமையவளைப் பங்கில் உடையவன்;
சேல் பாய் பொன்னித் தென்பால் - சேல் மீன்கள் பாயும் காவிரி ஆற்றின் தெற்கே;



5)
இலையோ மணக்கும் பூவோ
.. இட்டு வாழ்த்து வார்க்கு
மலைபோல் வினையைத் தீர்த்து
.. வான ளிக்கும் வள்ளல்
தலைமேற் கங்கை தன்னைத்
.. தாங்கும் பெருமான் ஊராம்
அலைசேர் பொன்னித் தென்பால்
.. அழகார் ஆலங் காடே.



6)
விரையார் கமலப் பாதம்
.. விரும்பும் அன்பர் தம்மைக்
கரைசேர் கலனாய் வந்து
.. காக்கும் கறைசேர் கண்டன்
அரைநா ணாக நாகம்
.. ஆர்த்த ஐயன் ஊராம்
திரைநீர்ப் பொன்னித் தென்பால்
.. திகழும் ஆலங் காடே.



விரை ஆர் கமலப் பாதம் விரும்பும் அன்பர் தம்மை - நறுமணம் பொருந்திய தாமரை போன்ற திருவடிக்கு அன்புடைய பக்தர்களை;
கரை சேர் கலனாய் வந்து காக்கும் கறை சேர் கண்டன் - வினைக்கடலில் ஆழாமே தெப்பம் ஆகிக் காத்துக் கரையிற் சேர்ப்பவன், நீலகண்டன்;
அரைநாணாக நாகம் ஆர்த்த ஐயன் ர் ஆம் - அரைநாணாக ஒரு நாகப்பாம்பைக் கட்டிய சிவபெருமான் உறையும் தலம் ஆகும்;
திரை நீர்ப் பொன்னித் தென் பால் திகழும் ஆலங்காடே - அலைகள் பொருந்திய காவிரி ஆற்றின் தென்கரையில் விளங்கும் திருவாலங்காடு.



7)
அறமு ரைக்க ஆலின்
.. அடியில் அமரும் ஐயன்
இறைவ காத்த ருள்வாய்
.. என்ற தேவர் உய்யக்
கறையை ஏற்ற கண்டம்
.. காட்டும் பெருமான் ஊராம்
அறையும் பொன்னித் தென்பால்
.. அழகார் ஆலங் காடே.



அறம் உரைக்க ஆலின் அடியில் அமரும் ஐயன் - சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லாலின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தி;
அறைதல் - ஒலித்தல்;



8)
மயல்கொண் டோடி வந்து
.. வலியால் மலையி டக்க
முயலும் இலங்கை மன்னன்
.. முடிபத் தடர்த்த எம்மான்
புயலின் நிறங்கொள் கண்டன்
.. புயங்கப் பெருமான் ஊராம்
கயல்பாய் பொன்னித் தென்பால்
.. கவினார் ஆலங் காடே.



மயல் - மயக்கம்; அறியாமை;
வலி - வலிமை; பலம்;
இடத்தல் - பெயர்த்தல்;
அடர்த்தல் - நெரித்தல்;
புயல் - மேகம்;
புயங்கப் பெருமான் - புஜங்கன் - பாம்பை அணிபவன்; (புஜங்கம் - பாம்பு);
கவின் ஆர் - அழகிய;


மயல்கொண்டு ஓடி வந்து, வலியால் மலை இடக்க முயலும் இலங்கை மன்னன் - அறியாமையோடு ஓடி வந்து, தன் புஜபலத்தால் கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனுடைய;
முடி பத்து அடர்த்த எம்மான் - பத்துத்தலைகளையும் நசுக்கிய எம் தலைவன்;
புயலின் நிறங்கொள் கண்டன் - கரிய மேகம் போல் நிறம் திகழும் கண்டத்தை உடையவன்;
புயங்கப் பெருமான் ஊர் ஆம் - பாம்புகளை அணிந்த பெருமான் உறையும் தலம் ஆகும்;
கயல் பாய் பொன்னித் தென்பால் கவின் ஆர் ஆலங்காடே - கயல்மீன்கள் பாயும் காவிரியின் தென்கரையில் உள்ள அழகிய திருவாலங்காடு;



9)
அன்னம் பன்றி யாகி
.. அயனும் அரியும் சென்று
முன்னம் தேடி வாட
.. மூளும் தீயாய் நின்றான்
உன்னும் அன்பர் நெஞ்சில்
.. உறையும் பெருமான் ஊராம்
செந்நெல் வயல்கள் சூழத்
.. திகழும் ஆலங் காடே.



அயனும் அரியும் - பிரமனும் விஷ்ணுவும்;
உன்னுதல் - தியானித்தல்; சிந்தித்தல்;
செந்நெல் - உயர்ந்த வகை நெல்;



10)
மறந்தும் உண்மை பேசா
.. வாயர் மார்க்கம் எல்லை
இறந்த அல்லல் ஆக்கும்
.. எரியம் பொன்றை ஏவிப்
பறந்த புரமூன் றட்டான்
.. பத்தர்க் கன்பன் ஊராம்
செறிந்த பொழில்கள் சூழத்
.. திகழும் ஆலங் காடே.



எல்லை - வரம்பு (Limit, border, boundary); அளவு (Measure);
இறத்தல் - கடத்தல் (To go beyond, transcend, pass over); நெறிகடந்துசெல்லுதல் (To transgress);
எரி அம்பு - தீக்கணை;
அடுதல் - அழித்தல்;


மறந்துகூட உண்மையைப் பேசாத வாயினை உடையவர்கள் சொல்லும் வழி, எல்லை கடந்த துன்பம் விளைக்கும்; வானில் பறந்து திரிந்த முப்புரங்களை எரிக்கும் அம்பு ஒன்றை ஏவி அழித்தவன், பக்தர்களுக்கு அன்போடு அருள்புரிபவன், சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர், காவிரியின் தென் கரையில் அடர்ந்த சோலைகள் சூழத் திகழும் திருவாலங்காடு.

11)
அஞ்சி வந்த உம்பர்க்
.. கபயம் அளித்த கண்டன்
அஞ்செ ழுத்தை ஓதும்
.. அன்பர்க் கருளும் அண்ணல்
செஞ்ச டைக்கண் கங்கை
.. திரியும் பெருமான் ஊராம்
அஞ்சு ரும்பி னங்கள்
.. ஆர்க்கும் ஆலங் காடே.



பதம் பிரித்து:
அஞ்சி வந்த உம்பர்க்கு அபயம் அளித்த கண்டன்;
அஞ்செழுத்தை ஓதும் அன்பர்க்கு அருளும் அண்ணல்;
செஞ்சடைக்கண் கங்கை திரியும் பெருமான் ஊராம்
அம் சுரும்பினங்கள் ஆர்க்கும் ஆலங்காடே.


உம்பர்க்கு - தேவர்களுக்கு;
கண்டன் - நீலகண்டன் (ஒருபுடைப்பெயர் - ஏகதேசம்);
செஞ்சடைக்கண் - சிவந்த சடையில்;
அம் சுரும்பு இனங்கள் - அழகிய வண்டினங்கள்;
ஆர்த்தல் - ஒலித்தல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) தென்-திருவாலங்காடு - இது சோழநாட்டில் காவிரித் தென்கரையில் உள்ள தலம்; கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில், ஆடுதுறைக்கும் குத்தாலத்திற்கும் இடையே உள்ளது;
2) தென்-திருவாலங்காடு - இருக்கும் இடம்: Google map: (thiruvAlangAdu (chozha nAdu) - map location: https://maps.google.com/maps?q=Kumbakonam,+Tamil+Nadu,+India&hl=en&ll=11.046532,79.525781&spn=0.002059,0.003484&sll=40.07304,-74.724323&sspn=6.573546,14.27124&oq=kumbakonam&hnear=Kumbakonam,+Thanjavur,+Tamil+Nadu,+India&t=h&z=19)
3) A blog post on this temple - தென்-திருவாலங்காடு : http://tamilanveethi.blogspot.com/2011/09/famous-vadaaranyaeswarar-sivan-temple.html?m=1
4) Another blog post on this temple - வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு - with pictures: http://enthamizh.blogspot.com/2012/10/blog-post_15.html
5) A write up in The Hindu in 2004 on this Thiruvalangadu temple on the banks of Cauvery: http://www.hindu.com/fr/2004/10/15/stories/2004101502650600.htm
Another write up in The HIndu in 2005 on this temple: http://www.hindu.com/fr/2005/06/17/stories/2005061700480300.htm

-------------- --------------

2 comments:

  1. ஆலங்காடு (தெற்கு) - (தென்-திருவாலங்காடு) பற்றிய தங்களது பதிகத்தை தற்போதுதான் படிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. பதிகம் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. மிக்க நன்றி அய்யா. தங்களது பதிகத்தை திருவாலங்காடு முக நூல் தளத்தில் பயன்படுத்திக் கொள்கிறென். தங்களது அனுமதியோடு.
    நன்றியும் அன்பும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக் கண்டு மகிழ்ந்தேன். இப்பதிகப் பாடல்களைத் திருவாலங்காடு முகநூல் தளத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்லன பரவட்டும்!

      Delete