Saturday, November 28, 2015

02.41 – கூடலையாற்றூர் - (திருக்கூடலையாற்றூர்)

02.41கூடலையாற்றூர் - (திருக்கூடலையாற்றூர்)



2012-01-21
திருக்கூடலையாற்றூர்
-------------------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு)
(சுந்தரர் தேவாரம் - 7.29.1 - "இத்தனை யாமாற்றை")



1)
ஓடது கலனாக ஊரிடு பலியேற்பான்
தோடணி உமைபங்கன் சுந்தரர் மொழிகின்ற
பாடலை மிகவேண்டிப் பழமலை வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.



ஓடு - பிரமனின் மண்டையோடு;
கலன் - பிச்சைப்பாத்திரம்;
பலி - பிச்சை;
தோடு அணி உமைபங்கன் - காதில் தோடு அணியும் உமையை ஒரு பங்காக உடையவன்;
சுந்தரர் - நம்பி ஆரூரர் - சுந்தரமூர்த்தி நாயனார்;
வேண்டி - விரும்பி; (வேண்டுதல் - விரும்புதல்);
பழமலை - திருமுதுகுன்றம் - விருத்தாசலம்;


* திருமுதுகுன்றை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுந்தரரைக் கூடலையாற்றூர் இறைவர் வழிப்போக்கராய் வந்து கூடலையாற்றூர்க்கு அழைத்துச்சென்று மறைந்தருளினார். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் பகுதி -
( சுந்தரர் தேவாரம் - 7.85.1 -
"வடியுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே" )



2)
தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் தழல்வண்ணன்
தக்கநன் மலராகத் தன்விழி இடுமாற்குச்
சக்கரம் அருள்செய்த சங்கரன் முடிமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.



தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் - தக்கன் செய்த யாகத்தை அழித்தவன்;
தழல்வண்ணன் - தீப்போன்ற செம்மேனி உடையவன்;
தக்க நன் மலராகத் தன் விழி இடு மாற்கு - (ஆயிரம் தாமரைகளில் ஒரு பூக்குறையக் கண்டு) சிறந்த மலராகத் தன் கண்ணையே இடந்து இட்டு வழிபட்ட திருமாலுக்கு;
கொக்கிறகு - ஒருவகைப்பூ; கொக்கின் இறகுமாம்;
(கொக்கு வடிவில் நின்ற குரண்டாசுரன் என்ற அசுரனை அழித்து அதன் அடையாளமாக, அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான்);
அணிவான் - அணிபவன்;



3)
பாவினை நிதம்பாடிப் பைங்கழல் பணிவாரின்
தீவினை அவையெல்லாம் தீர்ந்திட அருள்செய்வான்
சேவினை அமரீசன் செஞ்சடை யதன்மீது
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.



பாவினை - பாடலை;
சே - எருது;
அமர்தல் - விரும்புதல்;
சேவினை அமர் ஈசன் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஈசன்;
கூவிளம் - வில்வம்;
(அப்பர் தேவாரம் - 4.107.10 - "தேன்திகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்)



4)
கான்மிகு மலர்தூவிக் காவெனும் அடியார்கள்
வான்மிசை நிலையாக வாழ்ந்திட அருள்செய்வான்
மான்மறி மழுவேந்தி வார்சடை யதன்மீது
கூன்மதி அணிவானூர் கூடலை யாற்றூரே.



கான் - வாசனை;
கா - காத்தருள்வாயாக;
வான்மிசை நிலையாக - சிவலோகத்தில் நிலைத்து;
மான்மறி மழு ஏந்தி - மான்கன்றையும் மழுவையும் ஏந்தியவன்;
வார்சடை - நீள்சடை - நீண்ட சடை;
கூன்மதி - வளைந்த பிறைச்சந்திரன்;



5)
தொல்விரி புகழாளன் சுந்தரர் தமிழ்நாடி
நல்வழித் துணையாகி நம்பனின் முதுகுன்றம்
செல்வழி இதுவென்று செப்பிய மறைநாவன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே.



தொல்விரி புகழாளன் - தொல்புகழாளன், விரிபுகழாளன் - பழமையான புகழ் உடையவனும், விரிந்த புகழ் உடையவனும் ஆன சிவபெருமான்;
நம்பன் - சிவன்;
மறைநாவன் - வேதம் ஓதுபவன்;
கொல்விடை - கொல்லேறு - கொம்பினால் கொல்லத்தக்கதாகிய இடபம் - இதில் 'கொல்லுதல்' என்பது இன அடை.
அமர்தல் - விரும்புதல்;



6)
கார்விடம் அடைகண்டன் கையினிற் சிரமேந்தி
ஊர்விடை தனிலேறி உண்பலிக் குழலெந்தை
வார்குழல் உமைபங்கன் வானதி முடியேற்றான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.



கார்விடம் அடைகண்டன் - கரிய நஞ்சு அடையும் கழுத்தினன் / கரிய நஞ்சை அடைத்த கழுத்தினன் - நீலகண்டன்;
சிரம் - பிரமனின் மண்டையோடு;
ஊர்விடை - ஊர்கிற எருது;
உண் பலிக்கு உழல் எந்தை - பிச்சைக்குத் திரியும் எந்தை;
வார்குழல் உமை பங்கன் - நீண்ட கூந்தலை உடைய பார்வதியைப் பங்காக உடையவன்;
வானதி - வான் நதி - கங்கை;



7)
அஞ்சலர்க் கணையானின் அழகுடல் பொடிசெய்தான்
மஞ்சடை கயிலாயன் நஞ்சடை மணிகண்டன்
செஞ்சடை அதன்மீது திங்களும் அணிதேவன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.



பதம் பிரித்து:
அஞ்சு அலர்க் கணையானின் அழகு உடல் பொடி செய்தான்;
மஞ்சு அடை கயிலாயன்; நஞ்சு அடை மணிகண்டன்;
செஞ்சடை அதன்மீது திங்களும் அணி தேவன்;
குஞ்சரத்து உரியான் ஊர் கூடலையாற்றூரே.


அஞ்சு அலர்க்கணையான் - ஐந்து மலர் அம்புகள் உடைய மன்மதன்;
பொடி - சாம்பல்;
மஞ்சு - மேகம்; (திருமந்திரம் - 10.9.5.9 - ".... மஞ்சு தவழும் வடவரை ...")
குஞ்சரத்து உரியான் - யானைத்தோலை அணிந்தவன்;



8)
தாளடை அடியார்கள் தம்வினை களைந்தவ்வான்
ஆளவும் அருள்செய்வான் அருமலை அசைத்தானின்
தோளவை நெரித்துப்பின் நாளருள் புரியீசன்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே.



தாள் அடை அடியார்கள்தம் - திருவடியைச் சரண் அடைந்த பக்தர்களுடைய;
வினை களைந்து - வினைகளை நீக்கி;
அவ்வான் ஆளவும் அருள்செய்வான் - அச்சிவலோகத்தில் வீற்றிருக்க அருள்புரிவான்;
அருமலை அசைத்தானின் - கயிலைமலையை அசைத்த இராவணனுடைய;
தோள் அவை நெரித்துப் பின் நாள் அருள்புரி ஈசன் - புஜங்களையெல்லாம் நசுக்கிப் பின்னர் அவனுக்கு நீண்ட வாழ்நாளை அருள்செய்த இறைவன்;
கோள் அரவு அணிவான் ஊர் - கொடிய பாம்பை அணிந்த சிவபெருமான் உறையும் தலம்; (கோள் - வலிமை);



9)
பங்கயன் அரியன்று பைங்கழல் முடிகாணா
அங்கியின் உருவானான் அன்பரின் இடம்நாடி
இங்கென அருள்செய்வான் எழிலுறச் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே.



பங்கயன் அரி - தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்;
அங்கி - தீ;
பங்கயன் அரி அன்று பைங்கழல் முடி காணா அங்கி - (எதிர்நிரல்நிரையாக வந்தது) - பிரமனால் திருமுடியும் திருமாலால் திருவடியும் காணமாட்டாத சோதி;
அன்பரின் இடம்நாடி "இங்கு" என அருள்செய்வான் - பக்தர் இருக்கும் இடத்தைத் தேடிவந்து 'இதோ இங்கிருக்கிறேன்' என்று அவர்க்கு அருள்புரிபவன்;
(சம்பந்தர் தேவாரம் - 2.40.6 -
"எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் ...." )
கொங்கு - தேன்; வாசனை;
கொங்கு அலர் - வாசனை கமழும் பூக்கள்;



10)
நீற்றினைப் புனையாமல் நேர்மையை அறியாமல்
தூற்றிடும் மதிகேடர் தொல்வினைக் குழிநீங்கார்
போற்றிடும் அடியாரைப் பொன்றுதல் இலராக்கிக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே.



நீற்றினைப் புனையாமல் - திருநீற்றைப் பூசாமல்;
நேர்மை - உண்மை; நீதி; அறம்; நுண்மை;
மதிகேடர் - கெட்ட மதியை உடையவர்கள், ( தம் மனத்து அறிவிலாதவர் );
தொல்வினைக் குழி நீங்கார் - பழவினை என்ற குழியிலிருந்து தப்பமாட்டார்;
போற்றிடும் அடியாரைப் பொன்றுதல் இலர் ஆக்கி - போற்றி வணங்கிய அடியவரை இறத்தல் இல்லாதவர் ஆக்கி; (மார்க்கண்டேயர் வரலாறு);
கூற்றினை உதைத்தான் ஊர் - காலனை உதைத்த சிவபெருமான் உறையும் தலம்;



11)
அன்றலர் மலர்தூவி ஆயிழை ஒருகூறா
வென்றிகொள் விடையானே வெண்மழுப் படையானே
மன்றினில் நடமாடீ என்பவர் மயல்தீர்க்கும்
கொன்றையஞ் சடையானூர் கூடலை யாற்றூரே.



அன்று அலர் மலர் தூவி - அன்று பூத்த புதுமலர்களை (நாண்மலரைத்தூவி;
ஆயிழை ஒரு கூறா - பெண்ணொரு பாகனே;
வென்றிகொள் விடையானே - வெற்றியையுடைய இடபத்தை ஊர்தியாக உடையவனே;
வெண் மழுப் படையானே - பிரகாசிக்கும் மழுவாயுதத்தை ஏந்தியவனே;
மன்றினில் நடமாடீ - திருமன்றில் கூத்தாடுபவனே;
என்பவர் மயல் தீர்க்கும் - என்று தொழும் அடியவர்களது மயக்கத்தை (Confusion; bewilderment; delusion) நீக்கும்;
கொன்றை அம் சடையான் ஊர் - கொன்றை மலரை அணிந்த அழகிய சடையினனான சிவபெருமான் உறையும் தலம்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு;
2) சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 - பண்: நட்டராகம் -
"பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே."
3) திருக்கூடலையாற்றூர் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=850

----------- --------------

No comments:

Post a Comment