02.40 – நெடுங்களம் - (அத்தனை நலமுற அருளாய்)
2012-01-07
திருநெடுங்களம்
"அத்தனை நலமுற அருளாய்"
-------------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் விளம் மா" - அரையடி வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு")
(சுந்தரர் தேவாரம் - 7.58.1 - "சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்")
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே")
1)
மிடியிலா நன்னிதி நல்லவர் கூட்டு
.. விருப்புடை உறவினர் பொறுப்புடை மக்கள்
நெடியவாழ் நாள்பெரும் பிணியிலா யாக்கை
.. நீட்டிய கரத்தினர்க் களிக்கிற நெஞ்சு
படிமிசைப் பல்லுயிர் ஓம்பிடும் பண்பு
.. பத்தியோ டஞ்செழுத் தியம்புநா என்றுன்
அடியனேன் அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
மிடி - வறுமை; துன்பம்;
கூட்டு - சினேகம்;
பொறுப்பு - பொறுமை;
யாக்கை - உடல்;
படி - பூமி;
பத்தியோடு அஞ்செழுத்து இயம்பு நா - பக்தியோடு நமசிவாய என்ற திருவைந்தெழுத்தைச் சொல்லும் நாக்கு;
அடியனேன் - அடியேன்;
அத்தனை - அவ்வளவு;
அடியனேன் அத்தனை நலமுற அருளாய் - நான் அந்நலங்கள் எல்லாம் அடைய அருள்வாய்;
அருநடம் - அரிய நடனம்;
நடமாடுதல் - கூத்தாடுதல்;
2)
இறைவனே உனையலால் எம்துணை இங்கார்
.. என்றடி போற்றிய இமையவர்க் காகக்
கறைதனை ஏற்றருள் கண்டனே கண்மேல்
.. கண்திகழ் நெற்றியாய் செஞ்சடை மீது
பிறைபுனை ஈசனே ஆணொடு பெண்ணாய்ப்
.. பேசுதற் கரியவா அன்பருக் கன்பா
அறவனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
அறவன் - அறவடிவினன்;
குறிப்பு: "அத்தனை நலமுற அருளாய்":
a) முதற்பாடலில் சொன்ன அத்தனை நலங்களும் அடைய அருள்வாயாக;
b) உம்மைத்தொகையாகக்கொண்டு,, 'நலம் அத்தனையும் உற' என்று கூட்டி, 'எல்லா நலங்களும் அடைய அருள்வாயாக' என்றும் பொருள்கொள்ளலாம்;
c) "தந்தையை" என்றும் பொருள்கொள்ளலாம்;
-- இவ்வாறே இப்பதிகத்தின் மற்றப் பாடல்களிலும்;
3)
குரவொடு கூவிளம் சூடிய முடிமேல்
.. குளிர்மதிக் கீற்றொடு கங்கையும் புனைவாய்
பரசொரு கையிலும் மூவிலைச் சூலப்
.. படையொரு கையிலும் தாங்கிய பெருமான்
பரசுவார் பசியையும் பிணியையும் தீர்த்துப்
.. பரகதி அருள்கிற பரமனே வானோர்
அரசனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
குரவு - குரவம்/குரா மலர்;
கூவிளம் - வில்வம்;
பரசு - மழு;
மூவிலைச் சூலப் படை - திரிசூலம்;
பரசுதல் - துதித்தல்;
* (சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ... ")
4)
கமையதன் உருவினாய் கருணைமா கடலே
.. கண்ணுதற் கடவுளே கற்பகத் தருவே
உமையவள் நாதனே அருளெனப் போற்றும்
.. உம்பரின் குறைகளைத் தீர்த்திட அன்று
குமரனைப் பெற்றவா குறைவிலா நிறைவே
.. குழகனே கோளராக் கச்சணி கோவே
அமரனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
கமை - பொறுமை;
குமரன் - முருகன்;
குழகன் - இளையோன்; அழகன்;
கோள் அராக் கச்சு அணி கோவே - நாகப்பாம்பை இடுப்பில் கச்சாக அணியும் தலைவனே;
அமரன் - தெய்வவடிவினன்;
5)
பண்ணியல் பாடலும் பன்மலர்த் தொடையும்
.. பதமலர் இட்டுளம் உருகிடும் அன்பர்
பண்ணிய முன்வினைப் பற்றறுத் தவர்க்குப்
.. பாரொடு விண்ணையும் பரிந்தருள் பவனே
பெண்ணொரு பங்கெனத் திகழ்கிற பெருமான்
.. பிரமனின் சிரத்தினில் பிச்சையை ஏற்கும்
அண்ணலே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
பண் இயல் பாடல் - இசையோடு பொருந்திய தேவாரப் பாடல்கள்;
பன்மலர்த் தொடை - பல பூக்கள் திகழும் மாலை;
பதமலர் - திருவடித்தாமரை;
அருள்பவனே - அருள்கின்றவனே; அருளும் பவனே (பவன் - ஈசன் திருநாமங்களுள் ஒன்று);
6)
மழவிடை அமர்கிற மன்னவ அன்றோர்
.. மலையினை வில்லென வளைத்துமுப் புரங்கள்
அழலெழ ஓர்கணை எய்தவ ஆலின்
.. அடியமர்ந் தருமுனி நால்வருக் கறஞ்சொல்
குழகனே புரிகுழல் உமையொரு கூறா
.. கோலமா மதியினை முடிமிசைச் சூடும்
அழகனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
மழவிடை - இளமையுடைய எருது;
அமர்தல் - விரும்புதல்; இருத்தல் (to sit);
ஆலின் அடி அமர்ந்து அரு முனி நால்வருக்கு அறம் சொல் குழகன் - தட்சிணாமூர்த்தி;
குழகன் - இளையோன்; அழகன்;
புரிகுழல் உமை - சுருண்ட கூந்தலை உடைய பார்வதி;
கோல மா மதி - அழகிற் சிறந்த சந்திரன்;
7)
துணிமதி ஒளிவிடும் செஞ்சடை தன்னுள்
.. சுழல்மலி கங்கையை ஒளித்தருள் செய்தாய்
பணியினை மார்பினில் ஆரமாப் பூண்டு
.. பாய்விடை ஊர்பவ பாற்கடல் நஞ்சு
மணியெனத் திகழ்கிற மாமிட றுடையாய்
.. மலரடி வழுத்திடும் அடியவர்க் கென்றும்
அணியனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
துணிமதி - பிறைச்சந்திரன்; (துணி - துண்டம்);
பணி - நாகம்;
ஆரமா - ஆரமாக; மாலையாக; (ஆரம் - மாலை);
பாய்விடை - பாய்ந்துசெல்லும் இடபம்;
மா மிடறு உடையாய் - அழகிய கண்டத்தை உடையவனே;
வழுத்துதல் - போற்றுதல்;
அணியன் - அண்மையில் உள்ளவன்; அருகே இருப்பவன்;
8)
மமதையால் மலையினை வீசநி னைந்த
.. மதியிலா அரக்கனின் மணிமுடி பத்தும்
கமலமார் விரலினை ஊன்றிநெ ரித்துக்
.. கானமும் கேட்டுநாள் தந்தமுக் கண்ணா
குமுதமார் வாயினாய் கொன்றையார் முடியாய்
.. குவளையங் கண்ணினாள் கூறெனக் கொண்ட
அமுதனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
மமதை - செருக்கு; ஆணவம்;
கமலம் - தாமரை; (பொதுவாகத் 'தாமரைப்பாதம்' என்று வரும். இங்கே 'தாமரை போன்ற விரல்' என்று வந்துள்ளது. விரலின் செம்மை, மென்மை, இவற்றைச் சுட்டுகிறது);
ஆர்தல் - ஒத்தல்; / பொருந்துதல்; அணிதல்;
கானம் - இசைப்பாட்டு; ('கானமும்' என்றதில் 'உம்' எச்சவும்மை. இராவணன் அழுகையையும் சுட்டியது);
குமுதம் - செவ்வாம்பல் மலர் (Red Indian water-lily);
குவளை அம் கண்ணினாள் - குவளைமலர் போன்ற கரிய அழகிய கண்களை உடைய பார்வதி;
அமுதன் - அமுதம் போன்றவன்;
9)
பரிவொடு பதமலர் துதிக்கிற பத்தர்
.. பக்கலில் அரணென நிற்கிற பரனே
பெரியவர் எவரெனப் பேதுறு கின்ற
.. பிரமனும் பாம்பணை மேல்துயில் கொள்ளும்
கரியனும் அன்னமும் பன்றியும் ஆகிக்
.. கழலொடு முடியினை நேடியும் காணா
அரியனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
பரிவு - அன்பு; பக்தி;
பக்கல் - பக்கம் (Side); (பக்கலில் - பக்கத்தில்);
பேதுறுதல் - மயங்குதல்; அறியாதிருத்தல்;
பாம்பணை - பாம்புப் படுக்கை;
கரியன் - திருமால்;
நேடுதல் - தேடுதல்;
அரியன் - அரியவன்;
10)
நீற்றினைத் தரிக்கிலா நெற்றியர் வஞ்ச
.. நெஞ்சருக் கருள்கிலாய் நின்னடி நாளும்
போற்றிய பத்தரின் ஆருயிர் காத்துப்
.. பொற்கழ லாலெமன் மார்பிலு தைத்தாய்
ஏற்றனே பிறப்பொடு மூப்பிறப் பில்லாய்
.. ஏந்திழை கூறனே இருஞ்சடை தன்னுள்
ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
தரித்தல் - அணிதல்; (தரிக்கிலா - அணியாத);
அருள்கிலாய் - அருளமாட்டாதவனே;
ஏற்றன் - இடப வாகனன்;
பிறப்பொடு மூப்பு இறப்பு இல்லாய் - பிறத்தல், மூத்தல், இறத்தல் இல்லாதவனே;
ஏந்திழை - பெண் - பார்வதி;
இரும் சடை - பெரிய சடை;
ஆற்றன் - கங்கை ஆற்றை உடையவன்;
11)
உன்பனை மொத்தமும் ஆணென எள்ளும்
.. உறிபிடித் தவர்வியப் பெய்திடக் காழி
மன்புகல் தமிழுகந் தவையெலாம் பெண்ணாய்
.. மாறியின் குலைகளை ஈனுமா றருள்வாய்
இன்பனே ஈடிலாப் புகழினாய் போற்றி
.. இயம்பிடும் பத்தரின் இடர்களைந் தருளும்
அன்பனே அத்தனை நலமுற அருளாய்
.. அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.
எள்ளுதல் - எள்ளிநகையாடுதல்; பரிகாசம் செய்தல்; (To ridicule, deride, laugh at);
உறிபிடித்தவர் - சமணர்கள்; (நீர்க்கலசத்தை ஓர் உறியில் வைத்து அவ்வுறியை ஒரு பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்வது சமணர் வழக்கம்.)
காழி மன் - சீகாழியின் தலைவன் - திருஞானசம்பந்தர்;
புகல் தமிழ் உகந்து - பாடிய தேவாரத்தை விரும்பிச் செவிமடுத்து;
இன் குலைகளை ஈனுமாறு - இனிய குலைகளைத் தரும்படி;
ஈடு இலாப் புகழினாய் - ஒப்பற்ற புகழ் உடையவனே;
* திருவோத்தூரில் ஒரு சிவனடியாரின் பனைமரங்கள் எல்லாம் ஆணாகவே இருக்கக்கண்டு சமணர்கள் அவரை ஏளனம் செய்தனர்; திருஞானசம்பந்தர் அவ்வூர்க்கு வந்தபோது அதைக் கேட்டுப், 'பூத்தேர்ந்தாயன' என்று தொடங்கும் பதிகம் பாடி அவற்றைப் பெண்பனைகள் ஆக்கினார்.
(சம்பந்தர் தேவாரம் - 1.54.11 -
குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளைப்
பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்
விரும்பு வார்வினை வீடே. )
(பெரிய புராணம் :
சீரின் மன்னும் திருக்கடைக்காப்
.. பேற்றிச் சிவனா ரருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன்
.. காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து
.. நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர்
.. போற்ற அங்கண் இனிதமர்ந்தார். )
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) திருநெடுங்களம் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=571
-------------- --------------
No comments:
Post a Comment