03.06 – மடக்கு
2007-05-16
3.6.6 - வேலை - எனவிருப்பாய் - மடக்கு
-------------------------------------------------
வேலை விடமுண்ட நீலகண்டன் மூவிலை
வேலை யுடையவன் தாள்தொழலே வேலை
யெனவிருப்பா யென்னெஞ்சே மார்க்கண்டர் காவா
யெனவிருப்பா யென்றானை யேத்து.
பதம் பிரித்து:
வேலை விடம் உண்ட நீலகண்டன், மூ இலை
வேலை உடையவன் தாள் தொழலே வேலை
என விருப்பாய், என் நெஞ்சே, மார்க்கண்டர் "காவாய்"
என "இருப்பாய்" என்றானை ஏத்து.
வேலை - 1. கடல்; 2. தொழில்;
மூ இலை வேல் - திரிசூலம்;
விருப்பு - விருப்பம்; அன்பு; (அப்பர் தேவாரம் - 5.34.6 - "இட்டமாய்த் தொழுவார்");
மார்க்கண்டர் - மார்க்கண்டேயர்;
காவாய் - காப்பாயாக;
இருத்தல் - நிலைபெறுதல்; சீவித்தல்;
என் மனமே! கடலில் எழுந்த ஆலகால விடத்தை உண்ட திருநீலகண்டன், திரிசூலம் உடையவன் திருவடியைத் தொழுவதே தொழில் என்று விருப்பத்தோடு, மார்க்கண்டேயர் "காப்பாற்று" என்று வேண்ட, "என்றும் நிலைத்து இருப்பாய்" என்று அருள்புரிந்தவனைத், துதிப்பாயாக!
---------------------
2007-05-22
3.6.7 - பெற்றிமை - பெற்றவனை - மடக்கு
-------------------------------------------------
பெற்றிமை யோர்நஞ்சைத் துற்றிக் கறைமிடற்றிற்
பெற்றிமை யோர்க்கமுதைத் தந்துவந்த பெற்றிமை
பெற்றவனை யென்பணியும் பித்தனை யெவ்வுலகும்
பெற்றவனை யென்றென்றும் பேணு!
பதம் பிரித்து:
பெற்றிமை ஓர்! நஞ்சைத் துற்றிக் கறை மிடற்றில்
பெற்று, இமையோர்க்கு அமுதைத் தந்து உவந்த பெற்றிமை
பெற்றவனை, என்பு அணியும் பித்தனை, எவ்வுலகும்
பெற்றவனை, என்றென்றும் பேணு!
பெற்றிமை - 1. பெருமை; 2. இயல்பு/தன்மை;
ஓர் - எண்ணு;
துற்றி - உண்டு; (துற்றுதல் - உண்ணுதல்);
பெற்றவன் - 1. உடையவன்; 2. ஈன்றவன்;
என்பு - எலும்பு;
(ஈசன்) பெருமையை எண்ணு! ஆலகால விஷத்தை உண்டு, கழுத்தில் கறையை ஏற்றுத், தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்து மகிழ்ந்த குணம் உடையவனை, எலும்பை ஆபரணமாக அணிகின்ற பேரருளாளனை, எல்லா உலகங்களையும் ஈன்றவனை, எப்பொழுதும் (மனமே) போற்றுவாயாக!
---------------
2007-05-22
3.6.8 - தலையோடு - கொள்பவனை - மடக்கு
-------------------------------------------------
தலையோடு கங்கையைத் தாங்கியையம் கொள்ளத்
தலையோடு செல்லுஞ் சரமாய்த் தலையோடு
கொள்பவனை மான்விழி மங்கையைக் கூறாகக்
கொள்பவனை என்னெஞ்சே கூறு!
பதம் பிரித்து:
தலை ஓடு கங்கையைத் தாங்கி, ஐயம் கொள்ளத்
தலையோடு செல்லும், சரமாய்த் தலையோடு
கொள் பவனை, மான் விழி மங்கையைக் கூறு ஆகக்
கொள்பவனை, என் நெஞ்சே கூறு!
தலை ஓடு கங்கையைத் தாங்கி - தலையில் ஓடுகின்ற கங்கையைத் தாங்கி;
ஐயம் கொள்ளத் தலையோடு செல்லும் - பிச்சை ஏற்பதற்குப் பிரமனது மண்டையோட்டை ஏந்திச் செல்கின்ற;
சரமாய்த் தலையோடு கொள் - மாலையாக மண்டையோடுகளை அணிகின்ற
பவனை - கடவுளை; சிவனை;
மான் விழி மங்கையைக் கூறு ஆகக் கொள்பவனை - மான் போன்ற மருண்ட பார்வையுடைய பார்வதியை உடலில் ஒரு கூறாக உடையவனை;
என் நெஞ்சே கூறு - என் மனமே, போற்றிக் கூறுவாயாக!
---------------
2007-05-23
3.6.9 - நாணாம் - வழுவாது - மடக்கு
-------------------------------------------------
நாணாம் புரமெரிநாள் வில்லுக்கு நாகமரை
நாணாம் பணிகின்ற நாதற்கு நாணாம்
வழுவாது போதொடு வாழ்த்த வருமே
வழுவாது போயின்ப வாழ்வு.
பதம் பிரித்து :
நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் அரை
நாண்,நாம் பணிகின்ற நாதற்கு; நாள் நாம்
வழுவாது போதொடு வாழ்த்த, வருமே
வழு வாது போய் இன்ப வாழ்வு .
இலக்கணக் குறிப்புகள் :
1. "நாகம்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைக்க;
2. ளகர ஈற்றுப் புணர்ச்சி விதி: (தனிக்குறிலை அடுத்து வாராத இடங்களில்): ள்+ந = ண என்று ஆகும்
நாண் ஆம் புரம் எரி நாள் வில்லுக்கு நாகம் - முப்புரங்களை எரித்த அன்று வில்லுக்கு நாண் ஆகியது நாகம்;
நாம் பணிகின்ற நாதற்கு நாகம் அரை நாண் - நாம் வணங்குகின்ற தலைவனுக்கு நாகம் அரைஞாண்;
நாள் நாம் வழுவாது போதொடு வாழ்த்த - (அப்பெருமானைத்) தினமும் நாம் மறவாமல் பூவோடு வாழ்த்தினால்;
வருமே வழு வாது போய் இன்ப வாழ்வு - (அவனுடைய அருளால் நம்) குற்றங்கள், வழக்குகள் எல்லாம் நீங்கி, இன்ப வாழ்வு வரும்.
---------------
2007-06-04
3.6.10 - நஞ்சிவன் - காலை - மடக்கு
-------------------------------------------------
நஞ்சிவன் கண்டத்தில் நல்லணி ஆகுமே
நஞ்சிவன் கண்ணெரிக்கும் வேள்மனமே நஞ்சிவன்
காலை வழிபடுமார்க் கண்டர்பால் காலன்போங்
காலை உதைத்தவன் காண்!
பதம் பிரித்து:
நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே
நஞ்சு! இவன் கண் எரிக்கும் வேள்! மனமே! நஞ்சு, இவன்
காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம்
காலை உதைத்தவன் காண்!
நஞ்சு - 1. விஷம்; / 2. (உள்ளம்) நைந்து; (அப்பர் தேவாரம் - 5.68.7 - "நஞ்ச நெஞ்சர்க் கருளு நள்ளாறரே" - நஞ்ச - நைந்த ; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது);
நம் சிவன் கண்டத்தில் நல் அணி ஆகுமே நஞ்சு! - நம்பெருமான் மிடற்றில் ஆலகால விஷம் அழகிய ஆபரணம் ஆகும்;
இவன் கண் எரிக்கும் வேள் - இவனது கண் மன்மதனை எரிக்கும்; (வேள் - மன்மதன்);
மனமே! நஞ்சு, இவன் காலை வழிபடும் மார்க்கண்டர்பால் காலன் போம் காலை உதைத்தவன் காண்! - மனமே, உள்ளம் கசிந்து இப்பெருமானது திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரிடம் காலன் சென்றபொழுது காலனை உதைத்தவன்!
---------------
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment