Monday, June 4, 2018

04.39 – திரைலோக்கி (திருலோக்கி)


04.39 – திரைலோக்கி (திருலோக்கி)


2013-12-31
திரைலோக்கி (இக்கால வழக்கில் 'திருலோக்கி')
------------------
(சந்தக் கலித்துறை - 'தானன தானன தான தான தனதானன ' என்ற சந்தம்).
(சம்பந்தர் தேவாரம் - 3.8.1 - "சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண" / "சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண");



1)
பாவம கன்றிட வேண்டில் எய்திப் பணிநெஞ்சமே
மூவகை மாசுகள் அற்ற மூர்த்தி முதலீறிலன்
சேவமர் கின்றவன் சென்னி மீது திரையேற்றவன்
சேவகன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



பாவம் அகன்றிட வேண்டில் எய்திப் பணி நெஞ்சமே - தீவினை தீரவேண்டும் என்றால், நெஞ்சே, நீ சென்றடைந்து ஈசனைத் தொழுவாயாக;
மூவகை மாசுகள் அற்ற மூர்த்தி - மும்மலங்கள் இல்லாதவன் இறைவன்;
முதல் ஈறு இலன் - முதலும் முடிவும் இல்லாதவன்;
சே அமர்கின்றவன் - இடபத்தை வாகனமாக விரும்பியவன்;
சென்னி மீது திரைற்றவன் - கங்காதரன்; (திரை - அலை; நதி; - இங்கே கங்கை);
சேவகன் - வீரன்;
மேவு இடம் - விரும்பி உறையும் தலமான;
செய் அணிந்த திரைலோக்கியே - வயல் சூழ்ந்த திரைலோக்கி என்ற தலத்தை;



2)
ஐயுற வொன்றிலை அல்லல் நீங்கும் அடைநெஞ்சமே
பையர வார்த்தவன் பாரி டங்கள் பலசூழ்ந்திசை
செய்யந டிப்பவன் திங்கள் நாகம் திகழ்சென்னியன்
செய்யவன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



ஐயுறவு ஒன்று இலை - சிறிதும் சந்தேகம் இல்லை; (ஐயுறவு - சந்தேகம்);
அல்லல் - துன்பம்;
பையரவு ஆர்த்தவன் - படம் உடைய நாகத்தை அரைநாணாகக் கட்டியவன்; (பை - பாம்புப்படம்;
பாரிடங்கள் பல சூழ்ந்து இசை செய்ய நடிப்பவன் - பூதகணங்கள் சூழ்ந்து இசை ஒலிக்க ஆடுபவன்; (பாரிடம் - பூதம்); (நடித்தல் - ஆடுதல்);
செய்யவன் - சிவந்த நிறம் உடையவன்;
அடை நெஞ்சமே ... திரைலோக்கியே - மனமே, திரைலோக்கியை அடைந்து ஈசனை வழிபடுவாயாக;



3)
பாயினில் வீழ்ந்துயிர் போய்வி டாமுன் பணிநெஞ்சமே
தாயினும் நல்லவன் சார்ந்த வர்க்குத் தயைமிக்கவன்
நோயிலன் நீறணி மார்பில் நூலன் நுதலார்கணில்
தீயினன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



பாயினில் வீழ்ந்து உயிர் போய்விடாமுன் - வியாதிகளால் படுத்தபடுக்கையாகி உயிர் பிரிவதன் முன்னமே;
நுதல் ஆர் கணில் தீயினன் - நெற்றியில் பொருந்திய கண்ணில் தீயை உடையவன்; (கணில் - கண்ணில் - இடைக்குறை விகாரம்);



4)
தொய்வற நித்தலும் இன்பம் ஆரத் தொழுநெஞ்சமே
எவ்வணம் அன்பர்கள் ஏத்தி னாலும் இனிதேற்பவன்
பவ்வவி டத்தினை உண்ட கண்டன் பவளம்புரை
செவ்வணன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



தொய்வு அற நித்தலும் இன்பம் ஆரத் தொழு நெஞ்சமே - தளர்ச்சி நீங்கி என்றும் இன்பமே மிக வணங்கு நெஞ்சமே;
எவ்வணம் அன்பர்கள் ஏத்தினாலும் இனிது ஏற்பவன் - அடிய்வரகள் எந்த விதமாக, எந்த வடிவினை வழிபட்டாலும் ஏற்று இன்னருள் செய்பவன்; (அடியவர்கள் வழிபட்ட விதங்களைப் பெரியபுராணத்தில் நாயன்மார்கள் வரலாறுகளிற் காண்க );
(காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.33 -
"நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்."
---- தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்கு அருளுதலே இவனது இயல்பு.......);
பவ்வ விடத்தினை உண்ட கண்டன் - கடல்நஞ்சை உண்ட நீலகண்டன்; (பவ்வம் - கடல்);
பவளம் புரை செவ்வணன் - பவளம் போல் செவ்வண்ணம் உடையவன்; (புரைதல் - ஒத்தல்);



5)
பற்பல நோய்தரு பாவம் நீங்கப் பணிநெஞ்சமே
மற்புயம் எட்டுடை மன்னன் நஞ்சை மணியாக்கிய
அற்புதன் அக்கினை ஆர மாக அணிமார்பினன்
சிற்பரன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



பற்பல நோய் தரு - பலவிதமான வியாதிகளையும் துன்பங்களையும் தருகின்ற; (நோய் - வியாதி; துன்பம்); (அப்பர் தேவாரம் - 5.47.7 - ".... நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சியே கம்பனே." - கச்சியேகம்பத்து இறைவன் ... நோய்களை உண்டாக்கும் வினைகள் நம்மிடத்துவாராமற் காக்கும் நாயகன் ஆவன்);
மற்புயம் எட்டுடை - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடைய;
அக்கினை ஆரம் ஆ அணி மார்பினன் - உருத்திராக்கத்தை/எலும்பை மாலை ஆக மார்பில் அணிந்தவன்; (அக்கு - எலும்பு; ருத்ராக்ஷம்); (ஆரம் - மாலை; ஆபரணம்);
சிற்பரன் - சித் பரன் - அறிவிற்கு எட்டாதவன்;



6)
துன்றிநம் தொல்வினை சூழு முன்னர்த் தொழுநெஞ்சமே
வென்றிவெள் ளேற்றினன் மேரு வில்லி விரையார்கழல்
ஒன்றிய சிந்தையொ டோம்பு மாணி உயிர்காத்திடச்
சென்றவன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



துன்றி நம் தொல்வினை சூழும் முன்னர் - னம் பழவினை நெருங்கிச் சூழ்வதன்முன்; (துன்றுதல் - நெருங்குதல்);
வென்றி வெள் ஏற்றினன் - வெற்றியுடைய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்;
மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
விரை ஆர் கழல் - மணம் கமழும் திருவடியை;
ஒன்றிய சிந்தையொடு ஓம்பு மாணி உயிர் காத்திடச் சென்றவன் - மனம் ஒன்றி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவன்; (ஓம்புதல் - போற்றுதல்); (மாணி - அந்தண பிரமசாரி - மார்க்கண்டேயர்);



7)
பொங்குவி னைத்தொடர் போக வேண்டில் புகழ்நெஞ்சமே
மங்கையைப் பங்கினில் வைத்து கந்த மதிசூடிறை
அங்கையில் ஆரழல் ஏந்தி ஆடும் அரன்மேவிடம்
தெங்குயர் சோலைகள் செய்ய ணிந்த திரைலோக்கியே.



பதம் பிரித்து:
பொங்கு வினைத்தொடர் போக வேண்டில் புகழ், நெஞ்சமே,
மங்கையைப் பங்கினில் வைத்து உகந்த மதிசூடு இறை,
அங்கையில் ஆரழல் ஏந்தி ஆடும் அரன் மேவு இடம்,
தெங்கு உயர் சோலைகள் செய் அணிந்த திரைலோக்கியே.
தெங்கு - தென்னைமரம்;



8)
அன்றிய வல்வினை அற்று வாழ அடைநெஞ்சமே
தென்றிசைக் கோன்தனைச் செற்ற தாளன் சினத்தால்மலை
அன்றசைத் தான்முடி அஞ்சொ டஞ்சை அடர்த்தானிடம்
தென்றலில் வாசனை சேர்ந்து லாவும் திரைலோக்கியே.



அன்றுதல் - பகைத்தல்; தென்திசைக்கோன் தனை - இயமனை;
செற்ற தாளன் - அழித்த திருவடியினன்; (செறுதல் - அழித்தல்);
சினத்தால் மலை அன்று அசைத்தான் முடி அஞ்சொடு அஞ்சை அடர்த்தான் இடம் - (தந்தேர் கீழே இறங்கியது கண்டு) மிகுந்த கோபத்தொடு கயிலைமலையை அசைத்த இராவணனது பத்துத்தலைகளையும் நசுக்கியவன் உறையும் தலமான ;
தென்றலில் வாசனை சேர்ந்து லாவும் திரைலோக்கியே - தென்றலில் மணம் கமழும் திரைலோக்கியை;



9)
நீமகிழ் வெய்திட வேண்டில் நீள நினைநெஞ்சமே
வாமனன் ஆனவன் வேதன் நேட வளர்சோதியன்
காமனை நீறெழக் காய்ந்த கண்ணன் கருதும்மிடம்
தேமலர் ஆர்பொழில் செய்ய ணிந்த திரைலோக்கியே.



நீ மகிழ்வு எய்திட வேண்டில் நீள நினை நெஞ்சமே - நெஞ்சமே, நீ இன்பம் அடையவேண்டும் என்றால், மிகவும் நினை; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்");
வாமனன் ஆனவன் வேதன் நேட வளர்சோதியன் - திருமாலும் பிரமனும் தேடும்படி ஓங்கிய சோதிப்பிழம்பு; (வேதன் - பிரமன்); (நேட - தேட);
கருதும்மிடம் - மகர ஒற்று விரித்தல் விகாரம் - விரும்பி உறையும் தலம்;
தேமலர் - தேம் மலர் - வாச மலர்; (தேம் - வாசனை; தேன்; இனிமை; தேனீ);
தேமலர் ஆர் பொழில் - வாசமலர் நிறைந்த சோலை; 'தேனீக்கள் பூக்களில் ஒலிக்கும் சோலை' என்றும் பொருள்கொள்ளலாம்;



10)
துன்னிவி னைத்தொடர் சூழு முன்னர்த் தொழுநெஞ்சமே
தென்னவன் நீறணி யாத தெண்ணர் சிறுசொல்கொளார்க்
கின்னலம் ஈபவன் ஏற தேறி இளவெண்பிறைச்
சென்னியன் மேவிடம் செய்ய ணிந்த திரைலோக்கியே.



துன்னி வினைத்தொடர் சூழு முன்னர்த் தொழு நெஞ்சமே - நெஞ்சமே, பழவினைத்தொடர் நெருங்கிச் சூழ்வதன்முன் தொழுவாயாக; (துன்னுதல் - செறிதல்);
தென்னவன் நீறு அணியாத தெண்ணர் - சிவபெருமானின் திருநீற்றினை அணியாத அறிவிலிகளது; ("தென்னவன்; நீறு அணியாத தெண்ணர் சிறுசொல்கொளார்க்கு இன்னலம் ஈபவன்;" என்று பிரித்துத், தென்னவன் என்ற சொல்லைத் தனியாகவும் பொருள்கொள்ளலாம்); (தென்னவன் - தென்னன் - அழகியவன் - சிவபெருமான்; தென்னாடுடையவன் என்றலுமாம்); (அப்பர் தேவாரம் - 5.21.5 - "தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்"); (தெண்ணர் - அறிவிலிகள்);
சிறுசொல் கொளார்க்கு இன்னலம் ஈபவன் - புன்மொழிகளை மதியாதவர்களுக்கு இன்னருள் செய்பவன்; (இன்னலம் - இன்+நலம் - இனிய நலம்);
ஏறதேறி - ஏறுஅது ஏறி - இடப வாகனன்;
இளவெண்பிறைச் சென்னியன் - வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையில் அணிந்தவன்;



11)
பந்தவி னைத்தொடர் பாற வேண்டிற் பணிநெஞ்சமே
வந்தனை செய்யிமை யோர்கள் வாழ வரைவில்லினால்
அந்தர முப்புரம் அட்ட ஐயன் அமரும்மிடம்
செந்தமிழ் நாவினர் சென்று போற்றும் திரைலோக்கியே.



பந்த வினைத்தொடர் பாற வேண்டிற் பணி நெஞ்சமே - பிணித்திருக்கும் பழவினைகள் அழியவேண்டும் என்றால் வணங்கு நெஞ்சமே; (பந்தம் - கட்டு); (பாறுதல் - அழிதல்);
வந்தனை செய் இமையோர்கள் வாழ - திருவடியை வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காக;
வரைவில்லினால் அந்தர முப்புரம் அட்ட ஐயன் அமரும் இடம் - மேரு மலையை வில்லாக்கி அதனைக்கொண்டு, வானில் திரிந்த முப்புரங்களை எரித்து அழித்த தலைவன் விரும்பி உறையும் தலமான; (வரை - மலை); (அந்தரம் - ஆகாயம்); (அடுதல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.49.1 - "சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண் ... அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்" - வானத்தில் உலவிய அசுரரின் முப்புரங்களையும் அழித்தவன்);
செந்தமிழ் நாவினர் சென்று போற்றும் திரைலோக்கியே - தேவரம் திருவசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் அன்பர்கள் சென்று போற்றும் திரைலோக்கியை;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலித்துறை - 'தானன தானன தான தான தனதானன ' என்ற சந்தம்.
சில பாடல்களில் முதற்சீர் தனதன என்றும் வரலாம்.
அடிகளின் ஈற்றில் உள்ள சீர்களைத் தவிர மற்ற சீர்களின் முடிவில் நெடில் பெரும்பாலும் வாராது .
(சம்பந்தர் தேவாரம் - 3.8.1 - "சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண" / "சடையுடை யானும்நெய் யாட லானுஞ் சரிகோவண");
2) திரைலோக்கி (இக்காலத்தில் 'திருலோக்கி ') - இத்தலம் திருப்பனந்தாள் அருகு உள்ளது) - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=282
-------------- --------------

No comments:

Post a Comment