Sunday, June 10, 2018

03.06.011 - 03.06.015 - நிலாவுடன் - கண்டங்கரியவன் - மடக்கு

 03.06 – மடக்கு


2007-06-21

3.6.11 - நிலாவுடன் - கண்டங்கரியவன் - மடக்கு

-------------------------------------------------

நிலாவுடன் சென்னிமேல் நீர்தாங் கிறையை

நிலாவுடன் மாளுமுன் நெஞ்சே சொலாய்நுதலிற்

கண்டங் கரியவன் காணாவன் பர்க்கெளிய

கண்டங் கரியவன் காப்பு.


பதம் பிரித்து:

நிலாவுடன் சென்னிமேல் நீர் தாங்கு இறையை,

நிலா உடல் மாளும் முன், நெஞ்சே சொலாய் ! நுதலில்

கண் தங்கு அரிஅவன் காணா, அன்பர்க்(கு) எளிய,

கண்டம் கரியவன் காப்பு.


நிலா - 1. சந்திரன்; 2. நில்லாத;

நுதல் - நெற்றி; தங்குதல் - இருத்தல்;

கண்டங்கரியவன் - 1. கண் தங்கு அரியவன்; 2. கண்டம் கரியவன்;

கண்டம் - கழுத்து;

அரியவன் - 1. சிவபெருமான்; (5.38.8 - "பேசற்கு அரியவன்"); 2. அரி - ஹரி - விஷ்ணு;

காப்பு - பாதுகாவல்;

இலக்கணக் குறிப்புகள்:

புணர்ச்சி விதி: ல்+= ன்ம;

புணர்ச்சி விதி: ண்+= ண்ட;


நெஞ்சே! சென்னிமேல் சந்திரனையும் கங்கையையும் தாங்கும் இறைவனை, இந்த நிலையற்ற உடல் மாளும் முன் துதிப்பாய்! நெற்றியில் கண் திகழ்பவனும், விஷ்ணுவால் அறியப்படாதவனும், அன்பர்களால் எளிதில் அடையப்படுபவனுமான நீலகண்டன் நம் காப்பு.

---------------------

2007-06-21

3.6.12 - கற்சிலை - காட்டில் - மடக்கு

---------------------------------------------------------------

கற்சிலை என்று கருதுவார் சொல்விட்டுக்

கற்சிலை கொண்டுபுரம் காய்ந்தவனைக் கற்கநெஞ்சே

காட்டில் நடமிடும் கண்ணுதல் ஈசனைக்

காட்டில் நமக்கிங்கார் காப்பு?


கல் - 1. கல்; / 2. மலை;

சிலை - 1. சிற்பம்; / 2. வில்;

கற்சிலை - 1. கல்லால் ஆன சிலை; 2. மேரு மலையால் ஆன வில்;

விடுதல் - நீங்குதல்;

புரம் - முப்புரம்;

காய்தல் - எரித்தல் ;

கற்க - திருவடியை வணங்கக் கற்பாய்; ("கற்றவர்" என்று திருமுறைகளில் வரக் காணலாம்);

காட்டில் - 1. சுடுகாட்டில்; / 2. காட்டிலும்; (உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் இடைச் சொல்);

நமக்கிங்கார் - நமக்கு இங்கு ஆர் - இங்கே யார் நமக்கு;

காப்பு - பாதுகாவல்; காவலாக இருப்பது;


மனமே! கல்லால் ஆன சிற்பம் என்று எண்ணுபவர்களது பேச்சைப் பொருட்படுத்தாது நீங்கி, மேருமலை வில்லால் முப்புரங்களை அழித்தவனை வணங்கக் கற்பாயாக; சுடுகாட்டில் கூத்தாடும் நெற்றிக்கண்ணுடைய பெருமானை அன்றி வேறு யார் இங்கே நமக்குப் பாதுகாவல்?

---------------------

2007-06-29

3.6.13 - உள்ளும் - வலியை - மடக்கு

---------------------------------------------------------------

உள்ளும் புறமும் உறைந்து, தனைஉருகி

உள்ளும் அடியவர் உள்ளத்தில் உள்ள

வலியை ஒழிப்பான், இலங்கையர் மன்னன்

வலியை ஒழித்தபெரு மான்.


உள்ளும் புறமும் உறைந்து - (படைப்பின்) உள்ளேயும் வெளியேயும் இருந்து; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.4.3 - "அண்டத்துக்(கு) அப்பாலாய் இப்பாலானே"); (உறைதல் - தங்குதல்; வசித்தல்);

தனை உருகி உள்ளும் அடியவர் உள்ளத்தில் உள்ள வலியை ஒழிப்பான் - தன்னை உருகி வழிபடும் பக்தர்களது மனவருத்தத்தைத் தீர்ப்பவன்; (உள்ளுதல் - எண்ணுதல்); (வலி - 1. துன்பம்);

இலங்கையர் மன்னன் வலியை ஒழித்த பெருமான்.- இராவணனை நசுக்கி அவனது வலிமையை ஒழித்த சிவபெருமான்; (வலி - 2. பலம்; அகங்காரம்; செருக்கு);

---------------------

2007-07-05

3.6.14 - வாசனை - வீடும் - மடக்கு

---------------------------------------------------------------

வாசனை உள்ள மலர்கொண்டு மாகயிலை

வாசனை ஏத்து மனமே!முன் வாசனை

வீடும் அவனருளால் வெவ்வினையை வென்றிங்கே

வீடும் அடைவாய் விரைந்து!


வாசனை - 1. நறுமணம்; / 2. முற்பிறப்பு அனுபவத்தால் இம்மையில் உண்டாகும் பற்று;

வாசன் - வசிப்பவன்;

வீடுதல் - விடுதல்; கெடுதல்; ஒழிதல்;

வீடு - முக்தி; வீடுபேறு;


வாசனை உள்ள மலர்கொண்டு மா கயிலை வாசனை ஏத்து - வாசமலர்களால் அழகிய கயிலை மலையில் உறையும் சிவபெருமானைத் துதி;


முன் வாசனை வீடும் அவன் அருளால் - அப்பெருமானது அருளால் பூர்வஜன்ம வாசனைகள் நீங்கும்;

அவன் அருளால் வெவ்வினையை வென்று இங்கே வீடும் அடைவாய் விரைந்து - அவன் அருளால் கொடிய வினையை வென்று ஜீவன்முக்தி நிலையையும் பெறலாம்.

---------------------

2007-07-09

3.6.15 - என்னை - இறையே - மடக்கு

---------------------------------------------------------------

என்னை எனவுன்னை ஏத்தி அறியாத

என்னை எழுதிட வைத்ததுதான் என்னை!

இறையே தொழுதாலும் இன்பங்கள் ஈயும்

இறையே மறவேன் இனி!


என்னை - 1. என் + (இரண்டாம் வேற்றுமை); / 2. என் ஐ; (தலைவன்); / 3. வியப்புக் குறிப்பு (என்ன விந்தை);

இறை - 1. அற்பம்; சிறிதளவு; / 2. இறைவன்;


என் தலைவன் என்று உன்னைத் துதித்து அறியாத என்னையும் உன் புகழைப் பாடவைத்தது என்ன விந்தை! கொஞ்சம் தொழுதாலும் இன்பங்களை வாரி வழங்கும் இறைவனே, உன்னை இனி மறவேன்.

---------------


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: