04.38 - நாலூர் - "இரண்டாம் பதாதி" - சூலாரும் பிறவிதரும்
2013-12-30
நாலூர் - "இரண்டாம் பதாதி"
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா. சிறப்புக் குறிப்பைப் பிற்குறிப்பிற் காண்க.)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
சூலாரும் பிறவிதரும் தொல்வினையைத் தொலைத்தருள்வான்
பாலாரும் வெண்ணீற்றாய் படர்சடைமேல் தண்ணாற்றாய்
ஆலாரும் கண்டத்தாய் அம்மதியத் துண்டத்தாய்
நாலூரிற் பலாசவன நாதாவென் றடைவார்க்கே.
"பால் போல் வெள்ளிய திருநீறு பூசியவனே! படரும் சடைமேல் குளிர்ந்த ஆற்றை ஏற்றவனே; விடம் உண்ட கண்டத்தை உடையவனே! அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவனே! நாலூரில் எழுந்தருளியிருக்கும் பலாசவன நாதனே!" என்று போற்றி அடையும் அடியவர்களுக்குக், கருப்பத்திற் பொருந்தும் பிறவிகளை அளிக்கும் பழவினைகளை நீக்கிச் சிவபெருமான் அருள்புரிவான்.
* பலாசவன நாதர் - நாலூரில் ஈசன் திருநாமம்; (சூல் - கருப்பம்; ஆர்தல் - பொருந்துதல்; ஒத்தல்; உண்ணுதல்; ஆல் - விடம்; அம் - அழகு);
2)
பிறவிபல நல்குவினை பிணியறுத்துப் புரந்தருள்வான்
மறைபுகலும் நாவினனே வற்றாத அருட்கடலே
பிறைவளரும் சடையுடையாய் பேதையொரு பங்குடையாய்
நறைமலரார் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.
பிறவி பல நல்கு வினை பிணி அறுத்துப் புரந்து அருள்வான் - பல பிறவிகளைக் கொடுக்கும் வினைகளையும் பிணிகளையும் தீர்த்துக் காத்தருள்வான்;
மறை - வேதம்; பேதை - பெண்; நறை - தேன்; நம்பன் - சிவபெருமான் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்;
3)
நல்குரவும் உறுபிணியும் நணுகாத நிலைதருவான்
வெல்கொடியில் விடையுடையாய் வேலைவிட(ம்) மிடறுடையாய்
மல்குமிளம் பிறையுடையாய் மார்க்கண்டர்க் கிறவாமை
நல்கவலாய் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
நல்குரவு - வறுமை; உறுபிணி - பெரும்பிணி; பிறவிப்பிணி; வேலை விடம் மிடறு உடையாய் - கடல் நஞ்சைக் கண்டத்தில் உடையவனே; மல்கும் இளம் பிறை - வளரும் பிறை; மார்க்கண்டர்க்கு இறவாமை நல்க-வலாய் - மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவித் தன்மை அளிக்க வல்லவனே; (வலாய் - வல்லாய்; இடைக்குறை விகாரம்);
4)
உறுதுயர்தீர்த்(து) உம்பருல(கு) உறைவாழ்வை இனிதருள்வான்
அறுசமயப் பொருளானாய் அந்தகனைச் சூலத்தாற்
செறுபரனே கூற்றுதைத்த சேவடியாய் வண்டறையும்
நறுமலரார் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.
உறுதுயர் - பெரும் துன்பம் - பிறவிப்பிணி; உம்பர் உலகு உறை வாழ்வை - வானுலகத்தில் என்றும் நிலைத்திருக்கும் இன்ப வாழ்வை; அந்தகனைச் சூலத்தால் செறுபரனே - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவனே; (செறுதல் - அழித்தல்); (பரன் - மேலானவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.9.3 - "அந்தகனைச் செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர்"); வண்டு அறையும் நறுமலர் ஆர் பொழில் நாலூர் - வண்டுகள் ரீங்காரம் செய்யும், மணம் மிக்க மலர்கள் நிறைந்த சோலைகள் திகழும் நாலூர்;
5)
உம்பரார் போற்றுகின்ற உயர்நிலையை உகந்தருள்வான்
கொம்பனாள் ஒருகூறா கூரார்மூ விலைவேலா
கம்பமா கரியுரித்தாய் கருதார்முப் புரமெரித்தாய்
நம்பியே நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
உம்பரார் - தேவர்கள்; கொம்பு அனாள் - பூங்கொம்பு போன்ற உமையம்மை; கூர் ஆர் மூவிலை வேலா - கூர்மை பொருந்திய திரிசூலம் உடையவனே; கம்ப மா கரி உரித்தாய் - அசையும் இயல்பு உடைய பெரிய ஆண்யானையைக் கொன்று அதன் தோலை உரித்தவனே; கருதார் - பகைவர்; நம்பி - ஆணிற் சிறந்தோன்; கடவுள்;
6)
போற்றிடுவர் பாரிலெங்கும் என்றநிலை புரந்தருள்வான்
ஏற்றுவிளக்(கு) எரியேந்திக்(கு) எதற்கென்றார் வெருவுறநீர்
ஊற்றிவிளக்(கு) எரிக்கநமி நந்திபணி உகந்தவனே
நாற்றமலர்ப் பொழில்நாலூர் நம்பாவென் றடைவார்க்கே.
* நமிநந்தி அடிகள் நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க.
பார் - உலகம்; புரத்தல் - அனுக்கிரகித்தல்; "ஏற்றுவிளக்கு எரியேந்திக்கு எதற்கு" என்றார் வெருவுற - "கையில் தீயை ஏந்திய சிவனுக்கு மனிதர் ஏற்றும் விளக்கும் தேவையோ" என்று இகழ்ந்து பேசிய சமணர்கள் எல்லாரும் அஞ்சும்படி; நீர் ஊற்றி விளக்கு எரிக்க நமிநந்தி பணி உகந்தவனே - நமிநந்தி அடிகள் நாயனார் தொண்டினை மகிழ்ந்து ஏற்று, அவர் திருவாரூர்க் குளத்து நீரை ஊற்றி விளக்கு எரிக்கச்செய்தவனே; நாற்ற மலர்ப் பொழில் - மணக்கும் மலர்கள் நிறைந்த சோலை;
(பெரிய புராணம் - நமிநந்தியடிகள் நாயனார் புராணம் - 12.27.10 -
கையில் விளங்கு கனலுடையார் தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க் குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும் பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார். )
7)
பாரிலிம்மைப் புண்படுத்தும் பழவினையைத் தீர்த்தருள்வான்
ஊரிலெங்கும் உண்பலிதேர்ந்(து) உழல்வானே அலைமோதும்
நீரிலங்கும் சடைமுடியாய் நெற்றியிலோர் கண்ணுடையாய்
நாரிபங்க நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
பாரில் இம்மைப் புண்படுத்தும் - உலகில் இப்பிறப்பில் வருத்துகின்ற; உண்பலி தேர்ந்து உழல்வானே - பிச்சை ஏற்றுத் திரிபவனே; (சுந்தரர் தேவாரம் - 7.29.3 - "ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே"); நாரிபங்க - உமைபங்கனே;
8)
புண்படுத்தும் பொல்லாத வினைபோக்கிப் புரந்தருள்வான்
மண்பணியும் மலையெடுத்தான் மணிமுடிபத்(து) அடர்த்தவனே
பெண்புடையில் வைத்துகந்தாய் பிஞ்ஞகனே சுந்தரர்க்கு
நண்புடையாய் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
மண் - உலகத்தோர்; மணிமுடி பத்து அடர்த்தவனே - மணிகள் பதித்த கிரீடம் அணிந்த இராவணனின் பத்துத் தலைகளையும் நசுக்கியவனே; புடை - பக்கம்; பிஞ்ஞகன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; நண்பு - நட்பு ;
9)
பொல்லாத வினைதீர்த்துப் புகழாரும் நிலைதருவான்
வல்லானை மருப்பொசித்த மாலயனுக்(கு) அரியவனே
கல்லாலின் புடையமர்ந்து மறைப்பொருளைக் கற்பித்த
நல்லானே நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
வல்-ஆனை மருப்பு ஒசித்த மால் அயனுக்கு அரியவனே - வலிய யானையின் கொம்பை முறித்த திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே; (மருப்பு - தந்தம்); (ஒசித்தல் - முறித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழவெண்கொம் பொசித்த மாலும்"); கல்லாலின் புடை - கல்லால மரத்தின்கீழ்; நல்லான் - நல்லவன்;
10)
வினைகளெனும் விலங்கறுத்து மிகுநன்மை புரிந்தருள்வான்
மனைவரைவந்(து) இழித்துரைக்கும் வஞ்சகர்தம் சொல்துறந்து
புனைதிருநீ(று) அணிந்தார்கட்(கு) அன்புடையாய் புனிதநதி
நனைசடையாய் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
மனை - இல்லம்; வீடு; இழித்தல் - நிந்தித்தல்; புனை - அழகு; ஆபரணம்; அலங்காரம்; புனிதநதி நனைசடையாய் - கங்கைப்புனல் நனைக்கின்ற சடையை உடையவனே; (புனித = "புனிதனே" என்ற விளியாகவும் பொருள்கொள்ளல் ஆம்);
11)
விலங்கறுப்பான் சூலமுழை வெண்மழுவாள் ஏந்துமரன்
மலங்களிலா மாதேவா வார்சடைமேல் கூவிளமும்
இலங்கிளவெண் பிறையுமணி எம்பெருமான் ஏழைபங்கா
நலங்கிளரும் நாலூரில் நம்பாவென் றடைவார்க்கே.
விலங்கு அறுப்பான் - தளைகளை அழிப்பான்; சூலம் உழை வெண்மழுவாள் ஏந்தும் அரன் - கையில் சூலத்தையும் மானையும் ஒளிவீசும் மழுவையும் ஏந்தும் ஹரன்; (உழை - மான்); மலங்கள் இலா மாதேவன் - நின்மலன்; மகாதேவன்; வார்சடைமேல் கூவிளமும் இலங்கு இள-வெண்- பிறையும் அணி எம்பெருமான் - நீள்சடையின்மேல் வில்வத்தையும் ஒளிவீசும் இளம்-பிறைச்சந்திரனையும் அணிந்த எம் பெருமானே; ஏழைபங்கா - அர்த்தநாரீஸ்வரனே; கிளர்தல் - மிகுதல்; விளங்குதல்; சிறத்தல்;
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.
விசேஷக் குறிப்பு : இப்பதிகத்தில் ஒரு பாட்டின் முதல்அடியின் 2-ஆம் சீர் அடுத்த பாடலின் தொடக்கச் சீரோடு (அந்தாதி போலப்) பொருந்தி வருமாறு அமைந்தது. முதற்பாடல் - "சூலாரும் பிறவிதரும்". இரண்டாம் பாடல் - "பிறவிபல நல்குவினை". மூன்றாம் பாடல் - "நல்குரவும் உறுபிணியும்". இவ்வாறே பிற பாடல்களும். 11-ஆம் பாடல் - "விலங்கறுப்பான் சூலமுழை" என்று தொடங்கி முதற்பாடலின் முதற்சீரோடு மண்டலித்து வருகின்றது,.
இந்தப் புதிய அமைப்பை "இரண்டாம் பதாதி" என்று சொல்லலாம்! (பதம் = 1. சொல்; 2. இடம்; ஒரு பாடலின் இரண்டாம் பதத்தின் (சீரின்) ஆதியும் அடுத்த பாடலின் முதற்பதத்தின் (சீரின்) ஆதியும் இவ்வமைப்பில் பொருந்துவதால், இப்பெயர்).
----------- --------------
No comments:
Post a Comment