Wednesday, June 13, 2018

03.06.016 - 03.06.020 - எட்டி - அடிகளை - மடக்கு

03.06 – மடக்கு

2007-07-17

3.6.16 - எட்டி - அடிகளை - மடக்கு

-------------------------------------------------

எட்டி எனவிருப்பார், என்றும் இகழ்ந்துரைத்(து)

எட்டி இருப்போர்க்(கு); இனியவர் எட்டி

அடிகளைப் பற்றுவார்க்(கு) அல்லலெலாம் முக்கண்

அடிகளைப் போற்ற அறும்.


எட்டி - 1. எட்டிக்காய்; 2. தள்ளி; விலகி; 3. அடைந்து;

அடிகள் - 1. திருவடிகள்; 2. சுவாமி;

ஆர்தல் - பொருந்துதல்; ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்;

எட்டி என இருப்பார், என்றும் இகழ்ந்து உரைத்து எட்டி இருப்போர்க்கு - எப்பொழுதும் தகாத சொற்களைக் கூறித் தள்ளி இருப்பவர்களுக்கு (இறைவர்) எட்டிக்காய் போல இருப்பார்;

இனியவர், எட்டி அடிகளைப் பற்றுவார்க்கு - நெருங்கித் திருவடிகளைப் பற்றிக்கொள்பவர்களுக்கு இனிமை பயப்பவர்;

அல்லல் அம்-முக்கண் அடிகளைப் போற்ற அறும் - அந்த முக்கண் இறைவனை வணங்கினால் துன்பம் தீரும்.

---------------------

2007-07-17

3.6.17 - ஆறு - பொறிகள் - மடக்கு

-------------------------------------------------

ஆறு முடியில் அலைத்தோடும் எம்பெருமான்,

ஆறு முகத்தவன் அன்றுவரும் ஆறு

பொறிகள் உமிழ்கண்ணன், பொன்னடிகள் தம்மைப்,

பொறிகள் வழிக்குவரப் போற்று.


ஆறு - 1. கங்கை; 2. ஆறு என்ற எண்; 3. விதம்;

பொறி - 1. தீப்பொறி; 2. மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம்.

வழிக்குவருதல் - நல்வழிப்படுதல்;


ஆறு முடியில் அலைத்தோடும் எம்பெருமான் - முடியின்மேல் கங்கை அலைத்து ஓடுகின்ற சிவபெருமான்;

ஆறு முகத்தவன் அன்று வரும் ஆறு பொறிகள் உமிழ் கண்ணன் - (தேவர்கள் வேண்டிய) அன்று ஆறுமுகம் உடைய முருகன் வரும்படி (ஆறு) பொறிகளை உமிழ்ந்த நெற்றிக்கண் உடையவன்;

பொன்னடிகள் தம்மைப், பொறிகள் வழிக்குவரப் போற்று - (மனமே! இந்தக் கண், வாய், முதலான ஐந்து) பொறிகளும் நல்வழிப்பட (அப்பெருமானுடைய) பொன் போன்ற திருவடிகளைப் போற்றுவாயாக!

---------------------

2007-07-19

3.6.18 - மாதரை - நாணல்ல - மடக்கு

-------------------------------------------------

மாதரை எண்ணி மயங்கு(ம்) மடநெஞ்சே!

மாதரை மேனி வளர்சடைமேல் மாதரை

நாணல்ல பாம்புடைய நம்பன்தாள் போற்றாத

நாணல்ல நாளோ நவில்!


பதம் பிரித்து:

மாதரை எண்ணி மயங்கும் மட நெஞ்சே!

மாது அரை மேனி, வளர் சடைமேல் மாது, அரை

நாண் நல்ல பாம்பு உடைய நம்பன் தாள் போற்றாத

நாள், நல்ல நாளோ நவில்!


மாதரை எண்ணி மயங்கும் மட நெஞ்சே - பெண்களை எண்ணி மயங்கும் பேதைமனமே;

மாது அரை மேனி - உமை திருமேனியில் பாதி;

வளர் சடை மேல் மாது - வளர்கின்ற சடைமேல் கங்கை;

அரை நாண் நல்லபாம்பு - இடுப்பில் அரைஞாண் நாகப்பாம்பு;

உடைய நம்பன் தாள் போற்றாத நாள், நல்ல நாளோ நவில் - இவற்றையெல்லாம் உடைய சிவன் திருவடியைப் போற்றாத நாள் நல்ல நாளா? சொல்லு! (நம்பன் - சிவன்; விரும்பத் தக்கவன்); (நவில்தல் - சொல்தல்);

இலக்கணக் குறிப்பு:

தனிக்குறிலை அடுத்து வரும்பொழுது, ண்+= ண்ண; இதர இடங்களில் ண்+= ;

தனிக்குறிலை அடுத்து வரும்பொழுது, ள்+= ண்ண; இதர இடங்களில் ள்+= ;

---------------------

2007-07-19

3.6.19 - எம்மனை - ஆனாய் - மடக்கு

-------------------------------------------------

எம்மனை எம்பொருள் என்பார்! எமன்வரும்போ(து)

எம்மனை எப்பொருள் இங்குதவும்? எம்மனை

ஆனாய், அடியவர்க்கா வன்னமனை அன்றுதைத்த

ஆனாய்! அருளென்பார்க் குய்வு!


எம் மனை, எம் பொருள் என்பார்! எமன் வரும்போது

எம்மனை எப்பொருள் இங்கு உதவும்? "எம் அனை

ஆனாய்! அடியவர்க்கா வன்-நமனை அன்று உதைத்த

ஆனாய்! அருள்" என்பார்க்கு உய்வு!


எம்மனை - 1. எம் மனை; 2. எம் அனை;

எம் - எங்கள்;

= எந்த;

மனை - வீடு; மனைவி; குடும்பம்;

அனை - அன்னை; - இடைக்குறை விகாரம்;

ஆன் - இடபம்;

ஆனாய் - 1. ஆயினாய்; 2. இடப வாகனனே;

உய்வு - உய்தி; ஈடேற்றம்;


எம் மனை எம் பொருள் என்பார் - (சிலர்) "எம் குடும்பம், எம் பொருள்" என்று எப்போதும் எண்ணியும் சொல்லியும் இருப்பார்கள்;

எமன் வரும்போ(து) எம் மனை எப் பொருள் இங்(கு) உதவும்? - கூற்றுவன் வரும் சமயத்தில் எந்த மனை (வீடு, மனைவி, குடும்பம், இவற்றுள்), எந்தப் பொருள் இங்கே துணை வரும்?

எம் அனை ஆனாய் - "எம் தாய் ஆனவனே;

அடியவர்க்கா வன்-நமனை அன்று உதைத்த ஆனாய் - மார்க்கண்டேயருக்காக அன்று காலனை உதைத்த இடப வாகனனே!

அருள்!" என்பார்க்கு உய்வு - அருள்வாயாக!" என்று வழிபடும் அன்பர்களுக்கு உய்தி கிட்டும்.

---------------------

2007-07-19

3.6.20 - அஞ்சை - அளிமிகு - மடக்கு

-------------------------------------------------

அஞ்சைக் களத்துறை அப்பனது நாமவெழுத்(து)

அஞ்சை அனுதினம் செப்பிட, அஞ்சை

அளிமிகு வல்வினைநீ றாக்கி அருள்வான்!

அளிமிகு தாயே அவன்!


அஞ்சு - 1. ஐந்து; 2. அச்சம்;

அஞ்சைக்களம் - திருவஞ்சைக்களம்; (சுந்தரரது இறுதிப் பதிகம் பெற்ற தலம்);

அளித்தல் - தருதல்;

அளி - அன்பு;

அளி மிகு தாய் - அன்பு மிகுந்த தாய்;


அஞ்சைக்களத்து உறை அப்பனது - அஞ்சைக்களத்தில் மேவும் தந்தையின்;

நாம-எழுத்து அஞ்சை அனுதினம் செப்பிட - "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தைத் தினமும் செபித்திட;

அஞ்சை அளி மிகு வல் வினை நீறு ஆக்கி அருள்வான் - அச்சத்தைத் தருகின்ற மிகுந்த கொடிய வினையைச் சாம்பலாக்கி அருள்புரிவான்!

அளி மிகு தாயே அவன் - அவன் அன்பு மிகுந்த தாயே ஆவான்!

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment