Monday, June 4, 2018

03.06.001 - 03.06.005 - வந்தி - விளங்குமெய்யன் - மடக்கு

03.06 – மடக்கு

2007-05-15

3.6.1 - வந்தி - விளங்குமெய்யன் - மடக்கு

-------------------------------------------------

வந்தி மகிழ்வுற மண்சுமந்தான் தாளிற்செவ்

வந்தி மகிழ்மலர் தூவிச்செவ் வந்தி

விளங்குமெய்ய னேதிருவே வேதங்கள் ஓத

விளங்குமெய்ய னேஎன்று வேண்டு.


வந்தி - திருவிளையாடற் புராணத்தில் வரும் மூதாட்டி;

செவ்வந்தி - 1. செவ்வந்திப்பூ; 2. சிவந்த அந்திப் பொழுதின் நிறம்;

மகிழ்வு - மகிழ்ச்சி;

மகிழ் மலர் - மகிழம்பூ;

விளங்குதல் - பிரகாசித்தல்; தெளிவாதல்;

மெய்யன் - 1. திருமேனியன்; 2. உண்மைப்பொருள் ஆனவன்;


(முன்னர் வைகையில் வெள்ளம் வந்த சமயத்தில்) வந்தி (என்ற முதிய பக்தை) மகிழக் கூலியாளாக வந்து மண் சுமந்தவனுடைய திருவடியில் செவ்வந்தி மலர், மகிழம்பூ முதலிய மலர்களைத் தூவிச், "சிவந்த அந்திப் பொழுதைப் போல் பிரகாசிக்கின்ற திருமேனி உடையவனே! செல்வமே! வேதங்களை நன்கு ஓதினால் தெளிவாகும் மெய்ப்பொருளே!" என்று பிரார்த்தனை செய்வாய் (மனமே)!

---------------------

2007-05-15

3.6.2 - பாராய் - வடிவேல் - மடக்கு

-------------------------------------------------

பாராய் மணிகண்டா பாடித் தொழுமெனைப்

பாராய் மணியே பரமாவன் பாராய்

வடிவே லுடையாய் மழுவோடு கையில்

வடிவே லுடையாயென் றேத்து.


பதம் பிரித்து:

"பார் ஆய் மணிகண்டா! பாடித் தொழும் எனைப்

பாராய்! மணியே! பரமா! அன்பு ஆர் ஆய்

வடிவு ஏல் உடையாய்! மழுவோடு கையில்

வடி வேல் உடையாய்" என்று ஏத்து.


பார் - 1. உலகம்; உலக மக்கள்; 2. கண்ணால் காண்;

ஆய் - 1. ஆராய்தல்; 2. தாய்;

வடிவு - உருவம்; வடிவம்;

வடி - கூர்மை;

ஏல் - ஏற்பது;

வேல் - சூலம்;

உடையான் - சுவாமி; கடவுள்; பெற்றிருப்பவன்;

ஏல் உடையாய் - வினைத்தொகை - ஏற்கின்ற உடையானே!


"உலகோர் தேடி ஆய்கின்ற நீலகண்டனே! மணியே! பரமனே; அன்பு நிறைந்த தாய் வடிவம் ஏற்கும் சுவாமியே! கையில் மழுவும் கூரிய சூலமும் உடையவனே! உன்னைப் போற்றி வணங்கும் என்னைக் கருணைக்கண்ணால் பார்த்து அருள்வாயாக" என்று (மனமே) துதிப்பாயாக!

---------------

2007-05-15

3.6.3 - வேதனை - பாவை - மடக்கு

-------------------------------------------------

வேதனை வேண்டி அடிதொழும் பத்தரது

வேதனை தீர்க்கும் விமலனை நாதனைப்

பாவையை மெய்யிலொரு பால்கொண்டா னைக்கண்ணில்

பாவையை ஒப்பானைப் பாடு.


பதம் பிரித்து:

வேதனை, வேண்டி அடி தொழும் பத்தரது

வேதனை தீர்க்கும் விமலனை, நாதனைப்,

பாவையை மெய்யில் ஒரு பால் கொண்டானைக், கண்ணில்

பாவையை ஒப்பானைப் பாடு.


வேதன் - வேதங்களை அருளிய கடவுள்;

வேதனை - நோவு;

விமலன் - மலம் அற்றவன்;

நாதன் - தலைவன்; கடவுள்;

பாவை - 1. பெண் (பார்வதி); 2. கண்ணில் உள்ள கருமணி;

மெய் - உடல்;

பால் - பக்கம்; பாதி;

ஒப்பான் - ஒத்தவன்;


(மனமே)! வேதங்களை அருளிய கடவுளைத், திருவடியை வணங்கும் பக்தர்களது வேதனையைத் தீர்க்கும் தூயவனைத், தலைவனைப், பார்வதியை உடலில் பாதியாகக் கொண்டவனைக், கண்ணில் பாவையைப் போன்ற சிவனைப் பாடுவாயாக!

---------------

2007-05-15

3.6.4 - இனியவர் - மாதவர் - மடக்கு

-------------------------------------------------

இனியவரே யெல்லா மெனவிறைஞ்சும் பத்தர்க்

கினியவரே யெவ்வொப்பு மில்லாத் தனியவரே

மாதவர் கூறெனக்கொள் மாதேவர் சேவடிக்கு

மாதவர் கூறுவர் வாழ்த்து.


பதம் பிரித்து:

"இனி அவரே எல்லாம்" என இறைஞ்சும் பத்தர்க்கு

இனியவரே! எவ்-ஒப்பும் இல்லாத் தனி அவரே!

மாது அவர் கூறு எனக் கொள் மாதேவர் சேவடிக்கு

மா தவர் கூறுவர் வாழ்த்து.


இனியவர் - இனிமையானவர்;

தனி - ஒப்பு இன்மை; ஒற்றை; ஏகாந்தம்;

மாது - பெண் - பார்வதி;

கூறு - பங்கு; கூறுதல் - சொல்லுதல்;

மாதேவர் - மகாதேவன்;

சேவடி- சிவந்த திருவடி;

மா தவர் - சிறந்த தவசிகள்;


இனித் தமக்கு எல்லாம் அவரே என்று தொழுகின்ற பக்தர்களுக்கு இனிமை தருபவர். எந்த வித ஒப்பும் இல்லாத, ஒப்பற்றவர் (-- அல்லது -- தனித்து இருப்பவர்). பார்வதியைத் தமது ஒரு பங்காகக் கொள்ளும் மகாதேவரது சிவந்த திருவடிக்குச் சிறந்த தவசிகள் வாழ்த்துக் கூறுவார்கள்.

---------------

2007-05-16

3.6.5 - முடியா - இறையே - மடக்கு

-------------------------------------------------

முடியா முதலே முனமாலாற் காண

முடியா வொளியே மதிசேர் முடியா

விறையே விரல்வைத் திராவணனைச் செற்ற

விறையே வெனமனமே யேத்து.


பதம் பிரித்து:

"முடியா முதலே! முனம் மாலால் காண

முடியா ஒளியே! மதி சேர் முடியா!

இறையே விரல் வைத்து இராவணனைச் செற்ற

இறையே!" என மனமே ஏத்து.


முடிதல் - 1. சாதல்; 2. இயலுதல்;

முடி - தலை; உச்சி;

முடியன் - முடியை உடையவன்; முடியா = முடியனே; மழுவன் என்பது மழுவா என்று விளியில் வருவது போல. (அப்பர் தேவாரம் 6.56.6 - "கூறேறு மங்கை மழுவா போற்றி")

முதல் - ஆதி; முதலில் இருந்தவன்; மூல காரணன் ஆன கடவுள்;

முனம் - முன்னம் - முன்; முன்பு;

மால் - திருமால்;

மதி - சந்திரன்;

இறை - 1. அற்பம்/கொஞ்சம்; 2. இறைவன்;

செறுத்தல் - அடக்குதல்; வெல்லுதல்; அழித்தல்; வருத்துதல்; (சம்பந்தர் தேவாரம் - 1.30.8 - "தொழிலான் மிகு....அரக்கனைச் செற்ற கழலான்...");


"இறவாத முதல்வனே! முன் விஷ்ணுவால் (அடியைக்) காண இயலாத சோதியாகி நின்றவனே! சந்திரன் இருக்கும் திருமுடியை உடையவனே! திருப்பாத விரலைச் சிறிதளவு ஊன்றி, இராவணனை அடக்கிய இறைவா!" என்று, மனமே, துதிப்பாயாக!

---------------


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment