Thursday, June 14, 2018

03.04.067 - சிவன் - இட்டலி - சிலேடை

 03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-05

3.4.67 - சிவன் - இட்டலி - சிலேடை

-------------------------------------------------------------

பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்

வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே

ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி

ஆகுலம்தீர் ஈசன் அறி.


சொற்பொருள்:

பொடி - 1. மிளகாய்ப் பொடி; / 2. சாம்பல்; திருநீறு;

ஓடு - 1. உடன்; / 2. மண்டை ஓடு;

பொங்குதல் - 1. மாவு பொங்கி எழுதல்; / 2. சினத்தல்;

மா - 1. மாவு; / 2. விலங்கு - இங்கே எருது;

மேலும் - 1. இன்னும்; / 2. மேலேயும்;

வடிவு - 1. அழகு; / 2. உருவம்;

ஒத்திருத்தல் - 1. போல இருக்கும்; / 2. இசைந்து இருக்கும்;

பூவை - 1. (மல்லிகைப்) பூவை; / 2. பெண் (பார்வதி);

அடி மேலே - 1. தலைகீழே; / 2. திருவடி மேன்மையே; (மேல் - மேலிடம்; மேன்மை);

ஆவி - 1. நீராவி; / 2. ஆன்மா; உயிர்;

ஆகுலம் - மனக்கலக்கம்; துயரம்;


இட்டலி:

பொடியோடும் சேருமே - (சாம்பார், சட்டினி இவை மட்டுமன்றி) மிளகாய்ப்பொடியோடும் சேரும்.

பொங்கு-மா மேலும் வடிவு ஆகும் - பொங்கிய மாவு இன்னும் அழகாகும்.

ஒத்திருக்கும் பூவை - மல்லிகைப் பூவைப் போல் இருக்கும்.

அடி மேலே ஆகுமே - வேகும்போது (உண்ணும் இலையில் இடும்போது இருப்பது போல அன்றித்) தலைகீழாக இருக்கும். (இட்டலித் தட்டில் வேகும்போது இருக்கும் நிலையும் (உருண்டையான பாகம் கீழே) அதனை எடுத்து இலையில் இலையில் இடும்போது இட்டலி இருக்கும் நிலையும் (உருண்டையான பாகம் மேலே) தலைகீழாக இருக்கும்).

ஆவியுள் நிற்குமே - நீராவியுள் இருக்கும்.

இட்டலி - இட்லி;


சிவன்:

பொடி ஓடும் சேருமே - திருநீறும் மண்டையோடும் சேரும்.

பொங்கு-மா மேலும் வடிவு ஆகும் - சினக்கும் இடபத்தின் மேலும் தோன்றும் வடிவம் ஆகும்.

ஒத்து இருக்கும் பூவை - பார்வதி பிரியாமல் சேர்ந்திருப்பாள்.

அடி மேலே ஆகுமே - திருவடி மேன்மையுடையதே ஆகும்.

ஆவியுள் நிற்குமே - ஆன்மாவினுள் கலந்து இருப்பான்.

ஆகுலம் தீர் ஈசன் - துயர் தீர்க்கும் ஈசன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

2 comments: