Wednesday, June 27, 2018

03.06.026 - 03.06.030 - இருவரை - மாவில் - மடக்கு

03.06 – மடக்கு

2007-10-05

3.6.26 - இருவரை - மாவில் - மடக்கு

-------------------------------------------------

இருவரை பேரரக்கன் எய்க்க அடர்த்தாய்

இருவரை ஏற்றாய்என் உள்ளத்(து) இருவரை

மாவில் லெனக்கொண்டு மாற்றார் புரமெரித்தாய்

மாவில் லமைத்தேன் மனத்து.


பதம் பிரித்து:

இரு-வரை பேர் அரக்கன் எய்க்க அடர்த்தாய்!

இருவரை ஏற்றாய்! என் உள்ளத்து இரு; வரை

மா வில் எனக் கொண்டு மாற்றார் புரம் எரித்தாய்!

மா இல் அமைத்தேன் மனத்து!


இரு - 1. பெரிய (இருமை); 2. இரண்டு;

வரை - மலை;

பேர்த்தல் - பெயர்த்தல்;

எய்த்தல் - இளைத்தல்;

அடர்த்தல் - நசுக்குதல்;

ஏற்றல் - சுமத்தல்;

மா - 1. பெரிய; 2. அழகிய; சிறந்த;

மாவில் - 1. மா + வில் (பெரிய வில்) / 2. மா + இல் (அழகிய இல்லம்);

மாற்றார் - பகைவர்;

அடர்த்தாய், ஏற்றாய், எரித்தாய் - இவை, "அடர்த்தவனே", "ஏற்றவனே", "எரித்தவனே" என்ற விளிகள்;

இரு-வரை பேர்- அரக்கன் எய்க்க அடர்த்தாய் - கயிலாய மலையைப் பெயர்த்த இராவணன் வருத்தம் உற, அவனை விரலால் நசுக்கியவனே;

இருவரை ஏற்றாய் - பார்வதி, கங்கை என்ற இருவரைத் தாங்கியவனே;

வரை மா-வில் எனக்கொண்டு மாற்றார் புரம் எரித்தாய் - (மேரு) மலையைப் பெரிய வில்லாகக் கொண்டு பகைவர்களின் முப்புரங்களை எரித்தவனே;

என் உள்ளத்(து) இரு - எனது உள்ளத்தில் உறைவாயாக!

மா-இல் அமைத்தேன் மனத்து - (உனக்கு என்) மனத்தில் சிறந்த இடம் அமைத்தேன்.

---------------------

2007-10-12

3.6.27 - என்பார்க்கும் - கண்மறைக்கும் - மடக்கு

-------------------------------------------------

என்பார்க்கும் ஈசனவன் எங்குளன் காட்டுவாய்

என்பார்க்கும் இங்கே இயம்பலாம் என்பார்க்கும்

கண்மறைக்கும் கட்டிருந்தக் கால்?ஆங்கே ஆணவக்

கண்மறைக்கும் கைதொழார் கண்.


பதம் பிரித்து:

"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!"

என்பார்க்கும் இங்கே இயம்பலாம், "என் பார்க்கும்

கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? ஆங்கே, ஆணவக்

கள் மறைக்கும் கைதொழார் கண்.


என்பு - எலும்பு;

ஆர்த்தல் - அணிதல்;

என் - என்ன;

கண் = விழி; ஞானம்;

கால் - பொழுது;

கண்மறைக்கும் = கள் மறைக்கும்; (கள் - Toddy; மது)

இலக்கணக் குறிப்பு :

(ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம் - 154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.)


"என்பு ஆர்க்கும் ஈசன் அவன் எங்கு உளன்? காட்டுவாய்!" என்பார்க்கும் இங்கே இயம்பலாம் - "எலும்பை அணியும் ஈசனான சிவபெருமான் எங்கே இருக்கிறான்? எமக்குக் காட்டுவாயாக!" என்று கேட்பவர்க்கும் இங்கே விடை கூறலாம்;

என் பார்க்கும் கண், மறைக்கும் கட்டு இருந்தக்கால்? - கண்ணால் எதனைப் பார்க்க இயலும், அதனை மறைக்கின்ற ஒரு கட்டு இருக்கும்பொழுது?

ஆங்கே, ஆணவக் கள் மறைக்கும் கைதொழார் கண்! - அதுபோல், இறைவனை வணங்காதவரது அகக்கண்ணை (/அறிவை) ஆணவம் என்ற கள்ளானது (அதனால் உண்டாகும் மயக்கத்தினால்) மறைக்கும்.

---------------------

2007-10-13

3.6.28 - திரியும் - நிலைத்துயர் - மடக்கு

-------------------------------------------------

திரியும் மனமே தினமும்சே ஏறித்

திரியும் மகேசன்சீர் செப்பு திரியும்

நிலைத்துயர் நீங்கிடும் நீங்காத அன்பே

நிலைத்துயர் வாழ்வடைவாய் நீ.


திரிதல் - 1. அலைதல்; 2. போதல்; 3. திரும்புதல் (return); / கெடுதல் (perish)

(திருமந்திரம் - முதல் தந்திரம் 5. யாக்கை நிலையாமை: "மன்றத்தே .... சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே" - திரும்பாமலே போய்விட்டான்).

சே - இடபம்; எருது;

சீர் - புகழ்; பெருமை; இயல்பு;

செப்புதல் - சொல்லுதல்;

நிலை - 1. நிலைமை; தன்மை; 2. உறுதி; நிலைத்து இருத்தல்;

நீங்குதல் - பிரிதல்;


திரியும் மனமே - அலைகின்ற (என்) மனமே;

தினமும் - தினந்தோறும்; (தினமும் என்பதை இருபக்கமும் இடைநிலைத் தீவகமாக இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்);

சே ஏறித் திரியும் மகேசன் சீர் செப்பு - இடபத்தின்மேல் ஏறிச் செல்லும் சிவபெருமானது புகழைப் பாடுவாயாக;

திரியும் நிலைத் துயர் நீங்கிடும் - (இவ்வுலகில்) மீண்டும் வரும் (பிறக்கும்) நிலைமை என்ற துயரம் விலகிடும்; (-- அல்லது -- இழிந்து அழியும் நிலைமை என்ற துயரம் விலகிடும்);

நீங்காத அன்பே நிலைத்து உயர் வாழ்வு அடைவாய் நீ - என்றும் மாறாத அன்பே நிலைபெற்றுப், பேரின்ப வாழ்வைப் பெறுவாய் நீ!

---------------------

2007-10-15

3.6.29 - துருத்திக்காற்று - அத்தனையும் - மடக்கு

-------------------------------------------------

துருத்திக்காற் றாக்கும் சுடுகனலை இங்கோ

துருத்திக்காற் றோடஅனல் சூழும் துருத்திக்காற்

றத்தனையும் வீண்என் றறிந்தின்றே நம்மையாற்

றத்தனையும் அம்மையையும் போற்று.


பதம் பிரித்து:

துருத்திக்காற்று ஆக்கும் சுடுகனலை; இங்கோ

துருத்திக்காற்று ஓட, அனல் சூழும்! துருத்திக்கு ஆற்று

அத்தனையும் வீண் என்று அறிந்து, இன்றே நம் ஐயாற்று

அத்தனையும் அம்மையையும் போற்று.


துருத்திக்காற்று - 1. துருத்தி + காற்று / 2. துருத்திக்கு + ஆற்று;

துருத்தி - 1. உலை ஊது கருவி (bellows); 2 & 3. தோற்பை - உடலுக்கு ஆகுபெயர்;

காற்று - 1. வாயு; 2. மூச்சுக்காற்று; சுவாசம்; உயிர்ப்பு;

ஆற்றுதல் - செய்தல்;

ஆக்குதல் - செய்தல்;

கனல் - நெருப்பு;

ஓடுதல் - செல்லுதல்;

அனல் - தீ;

அத்தன் - தந்தை; சிவன்;

அத்தனையும் - 1. அவ்வளவும்; எல்லாமும்; 2. தந்தையாகிய சிவனையும்;

நம்மையாற்று - 1. நம் + ஐயாற்று / 2. நம்மை + ஆற்று;

ஐயாற்று - திருவையாற்றில்;

ஆற்றுதல் - செய்தல்; தாங்குதல்;

அம்மை - தாய்; பார்வதி;


துருத்திக்-காற்று ஆக்கும் சுடு-கனலை - (கொல்லனது) துருத்தியிலிருந்து வரும் காற்றுச், சுடுகின்ற நெருப்பை நன்கு எரியச் செய்யும்;

இங்கோ துருத்திக்-காற்று ஓட, அனல் சூழும் - (ஆனால்), இங்கே, தோற்பை ஆகிய உடலிலுள்ள உயிர்ப்புச் சென்றுவிட, (அதனைச்) சுற்றித் தீ இருக்கும்;

துருத்திக்கு ஆற்று அத்தனையும் வீண் என்று அறிந்து - (எனவே, இந்த) உடலுக்குச் செய்யும் எல்லாம் பயன் அற்றன என்று உணர்ந்து;

இன்றே நம் ஐயாற்று அத்தனையும் அம்மையையும் போற்று - இப்பொழுதே, திருவையாற்றில் எழுந்தருளும் நம் அம்மையப்பனை வணங்குவாயாக! (-- அல்லது -- இப்பொழுதே, நம் அனைவரையும் தாங்கும் அப்பனையும் அன்னையையும் வணங்குவாயாக!)

("மனமே!" என்ற விளி தொக்கு நிற்கின்றது).

---------------------

2007-10-16

3.6.30 - தொடுத்தசரம் - அந்தத்தில் - மடக்கு

-------------------------------------------------

தொடுத்தசரம் ஒன்றால் எயில்மூன்று சுட்டான்,

தொடுத்தசரம் சூடிய தூயன் தொடுத்தசரம்

அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும்,

அந்தத்தில் ஆடும் அவன்!


தொடுத்தல் - 1. எய்தல்; 2. பூ முதலியவற்றை இணைத்தல்; 3. உண்டாக்குதல்;

சரம் - 1. அம்பு; 2. மாலை; 3. நடப்பன/அசைவன/இயங்குவன. உயிர்கள்; (அசரம் - நிற்பன; இங்கே தொக்கு நிற்கின்றது).

எயில் - கோட்டை; மதில்;

சூடுதல் - அணிதல்;

அந்தம் - 1. முடிவு; 2. இருட்டு;

ஒடுக்குதல் - லயிக்கச்செய்தல் (to cause to merge one in another);


தொடுத்த சரம் ஒன்றால் எயில் மூன்று சுட்டான் - எய்த ஓர் அம்பினால் முப்புரங்களையும் சுட்டு எரித்தான்;

தொடுத்த சரம் சூடிய தூயன் - தொடுத்த மலர்மாலைகள் அணிந்த புனிதன்;

தொடுத்த சரம் அந்தத்தில் தன்னுள் அடங்க ஒடுக்குவதும் - சிருஷ்டித்த உயிர்கள் முடிவில் தன்னுள்ளே அடங்கும்படி (அவற்றை) ஒடுக்குபவனும்

அந்தத்தில் ஆடும் அவன் - இருட்டில் நடம் ஆடும் அவனே!

("அப்பெருமானை வணங்குவாயாக" என்பது தொக்கு நிற்கின்றது).

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment