03.06 – மடக்கு
2007-07-19
3.6.21 - அம்மையும் - உண்ணஞ்சால் - மடக்கு
-------------------------------------------------
அம்மையும் அப்பனும் ஆனவன் அன்பர்கட்(கு)
அம்மையும் ஆவான் துணைகண்டத்(து) அம்மையும்
உண்ணஞ்சால் உண்டான(து) ஓயா(து) அடிபோற்றி
உண்ணஞ்சால் உண்டேயிங்(கு) உய்வு!
பதம் பிரித்து:
அம்மையும் அப்பனும் ஆனவன்; அன்பர்கட்கு
அம்மையும் ஆவான் துணை; கண்டத்து அம்-மையும்
உண் நஞ்சால் உண்டானது; ஓயாது அடிபோற்றி
உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு!
அம்மை - 1. தாய்; 2. இப்பிறப்பினை அடுத்து வருவது - வருபிறப்பு;
மை - கருநிறம்;
உண்ணஞ்சால் - 1. உண் நஞ்சால்; 2. உள் நஞ்சால்;
உள் - உள்ளம்;
நஞ்சு - 1. விடம்; 2. நைந்து (உருகி); (சம்பந்தர் தேவாரம் - 3.97.5 - "உமைப் பேணிநஞ் சற்றவர் அருவினை இலரே" - நஞ்சு - நைந்து, மனம் குழைந்து. நஞ்சு - போலி)
அம்மையும் அப்பனும் ஆனவன் - அம்மையப்பன்;
அன்பர்கட்கு அம்மையும் ஆவான் துணை - பக்தர்களுக்கு இனி வரும் பிறவியிலும் துணை ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 3.22.6 - "அம்மையினும் துணை அஞ்செழுத்துமே");
கண்டத்து அம் மையும் உண் நஞ்சால் உண்டானது - (அவனுடைய) கண்டத்தில் இருக்கும் அந்தக் கருநிறமும் (தேவர்கள் வேண்ட) உண்ட ஆலகால விடத்தால் உண்டானது;
ஓயாது அடி போற்றி உள் நஞ்சால் உண்டே இங்கு உய்வு - சதா அவனது திருவடியைப் போற்றி உள்ளம் உருகினால், உய்வு பெறலாம்.
---------------------
2007-07-24
3.6.22 - கற்பனை - அந்தன் - மடக்கு
-------------------------------------------------
கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக்
கற்பனை என்றுரைப்பார் காணாரே கற்பனை
அந்தன் எனவாக்கும் ஆணவம்! தாள்தொழ
அந்தன் இடரும்போம் அங்கு.
கற்பனை - 1. போதனை; கல்வி; 2. இல்லாததை இருப்பதாக எண்ணுவது; 3. கற்பன்+ஐ
கற்பன் - கல்வியுள்ளவன்;
ஐ - இரண்டாம் வேற்றுமை உருபு;
அந்தன் - 1. அறிவில்லாதன்; குருடன்; 2. எமன்;
கற்பனை கல்லால்கீழ்க் கற்பிக்கும் முக்கணனைக் கற்பனை என்று உரைப்பார் காணாரே - சனகாதியருக்கு ஞானத்தைக் கல்லால-மரத்தின்கீழ்ப் போதித்த முக்கண்ணனை இல்லை என்று உரைப்பவர்களால் காண இயலாது.
கற்பனை அந்தன் என ஆக்கும் ஆணவம் - படித்தவனையும் ஆணவம் குருடன் ஆக்கும்;
தாள் தொழ அந்தன் இடரும் போம் அங்கு - ஈசன் திருவடியை வணங்கினால் எமபயமும் நீங்கும்;
---------------------
2007-07-24
3.6.23 - திரையடை - ஒற்றி - மடக்கு
-------------------------------------------------
திரையடை நாள்வரும்ஊர் சேர்ந்தழவுன் ஆட்டத்
திரையடை நாள்வரும்; சிந்தி! திரையடை
ஒற்றி தனில்நெஞ்சே, ஓர்பங்கில் பார்வதி
ஒற்றி உறைஇறையை ஓது!
திரை - 1. தோலின் சுருக்கம்; 2. திரைச்சீலை (curtain); 3. அலை/கடல்;
அடைதல் - எய்துதல்; கிட்டுதல்;
அடைத்தல் - மூடுதல்;
ஒற்றி - 1. திருவொற்றியூர்; 2. ஒற்றி - ஒன்றாகி; ஒன்றுபட்டு;
ஒற்றுதல் - பொருந்துதல்; ஒன்றிற்படும்படி சேர்த்தல்; தழுவுதல்; (அப்பர் தேவாரம் - 5.24.1 - ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினை)
ஓதுதல் - பாடுதல்;
திரை அடை நாள் வரும் - தோல்-சுருக்கம் அடையும் காலம் வரும்; (மூப்பு வந்துவிடும்);
ஊர் சேர்ந்து அழ உன் ஆட்டத்-திரை அடை-நாள் வரும் - சுற்றமும் ஊரும் கூடி அழும்படி (இயமன் வரவால் இந்த உலக மேடையில்) உன் ஆட்டம் ஆகித் திரையை மூடும் காலம் வரும்;
சிந்தி நெஞ்சே - மனமே! எண்ணிப் பார்!
திரை அடை- ஒற்றிதனில் ஓர் பங்கில் பார்வதி ஒற்றி உறை இறையை ஓது - கடல்அலை அடைகின்ற திருவொற்றியூரில் ஒரு பங்காக உமையம்மை பொருந்தி இருக்கும் இறைவனைப் பாடு!
---------------------
2007-07-31
3.6.24 - மஞ்சளை - பூசி - மடக்கு
-------------------------------------------------
மஞ்சளை மாகயிலை மன்னனைப் பாடாது
மஞ்சளை மங்கையே! வந்திடுவாய்! மஞ்சளைப்
பூசி மடுவிற் புகுந்தாடிப் பொன்னடியைப்
பூசி! வினைஅற்றுப் போம்.
மஞ்சு - 1. மேகம்; 2. கட்டில்;
அளைதல் - தழுவுதல்; கலத்தல்; துழாவுதல்;
மா - அழகிய; சிறந்த; பெருமை;
பூசுதல் - தடவுதல்;
மடு - நீர்நிலை;
ஆடுதல் - குளித்தல்;
பூசித்தல் - பூசை செய்தல்;
(குறிப்பு: திருவெம்பாவையை ஒட்டிய கருத்து).
மஞ்சு அளை மா கயிலை மன்னனைப் பாடாது மஞ்சு அளை மங்கையே! - மேகம் தழுவும் அழகிய கயிலை மலையில் உறையும் அரசனாகிய சிவபெருமானைப் பாடாமல், கட்டிலைத் தழுவும் (உறங்கும்) பெண்ணே!
மஞ்சளைப் பூசி மடுவில் புகுந்(து) ஆடிப் பொன் அடியைப் பூசி! - மஞ்சளை (உடலில்) பூசி, நீர்நிலையில் குளித்து, (அவனுடைய) பொன் போன்ற திருவடிகளைப் பூசை செய்! (அப்படிச் செய்தால்) வினைகள் அழிந்து போகும்.
---------------------
2007-09-29
3.6.25 - விண்டு - மதுவார் - மடக்கு
-------------------------------------------------
விண்டு தொழநீள் வியன்தழலைப் போற்றவினை
விண்டு விடும்நெஞ்சே மென்மலர்கள் விண்டு
மதுவார் சிறைவண்டு வந்தறையும் தில்லை
மதுவார் சடையன்தாள் வாழ்த்து.
பதம் பிரித்து:
விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற வினை
விண்டு விடும்! நெஞ்சே! மென் மலர்கள் விண்டு,
மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் தில்லை
மது, வார் சடையன் தாள் வாழ்த்து.
விண்டு - 1. திருமால்; 2. நீங்கி; 3. மலர்ந்து;
விள்ளுதல் - நீங்குதல்; மலர்தல்; சொல்லுதல்;
மதுவார் - 1. மது + ஆர்; 2. மது + வார்;
மது - 1. தேன்; 2. அமுதம்;
ஆர்தல் - 1. உண்ணுதல்; நிறைதல்; பொருந்துதல்; அணிதல்;
வார்தல் - 1. நெடுமையாதல்; 2. ஒழுகுதல்/சொரிதல்;
சிறை - இறகு;
தில்லை மது - தில்லையில் உள்ள அமுதம்/தேன் - கூத்தப்பிரான். (அப்பர் தேவாரம் - திருமுறை 4.39.1 - "திருவையாறு அமர்ந்த தேனே");
வார் சடை - நீண்ட சடை;
மது ஆர் சடை - தேன் (மலர்கள்) பொருந்திய சடை;
மது வார் சடை - (அப்பர் தேவாரம் 5.85.1 - "மட்டுவார் குழலாள்");
தில்லை மதுவார் சடையன் - தில்லை மது, வார் சடையன் / தில்லை மது ஆர் சடையன்;
விண்டு தொழ நீள் வியன் தழலைப் போற்ற - விஷ்ணு (அடி தேடிக் காணாது) வணங்குமாறு ஓங்கிய பெரிய சோதியைத் துதித்தால்;
வினை விண்டு விடும் - வினை நீங்கிவிடும்;
நெஞ்சே - (அதனால்) மனமே!
மென் மலர்கள் விண்டு - மென்மையான மலர்கள் மலர்ந்து;
மது ஆர் சிறை வண்டு வந்து அறையும் - தேன் உண்ணும், சிறகுகளை உடைய வண்டுகள் வந்து ரீங்காரம் செய்யும்;
தில்லை மது வார் சடையன் தாள் வாழ்த்து - தில்லையில் உறையும் தேன்/அமுதம் ஆன, நீண்ட சடையை உடைய, சிவன் திருவடியை வணங்கு; (--அல்லது-- தில்லையில் உறையும், இன்பத் தேன் சொரியும், சடை உடைய சிவன் திருவடியை வணங்கு) (--அல்லது-- தில்லையில் உறையும், தேன் பொருந்திய மலர்களை அணிந்த சடை உடைய சிவன் திருவடியை வணங்கு);
(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - திருமுறை 12.242: - "மன்றுள் ஆடு மதுவின் நசையாலே மறைச்சுரும்பு அறை புறத்தின் மருங்கே");
---------------
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment