Thursday, June 14, 2018

03.04.068 - சிவன் - சாம்பார் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-06

3.4.68 - சிவன் - சாம்பார் - சிலேடை

-------------------------------------------------------------

தண்ணீரை ஏற்கும் சமயத்தில் தானேயாம்

கண்ணீர் மிகுமாகா ரங்காட்டும் மண்ணோர்க்கு

செம்பொருள் ஆகநெருப் பேறுமுகக் கும்சாம்பார்

உம்பர் பிரானென் றுரை.


சொற்பொருள்:

ஏற்றல் - 1. ஏற்றுக்கொள்ளுதல்; பெறுதல்; / 2. சுமத்தல்;

சமயத்தில் - 1. சில சமயத்தில்; / 2. சைவ சமயத்தில்; ஊழிக்காலத்தில்;

தானே ஆம் - 1. சாம்பாரில் இருக்கும் காய்கறித் துண்டமே மிகும்; / 2. அவன் மட்டுமே ஆவான்;

மிகுமாகாரம் - 1. மிகுமா காரம் = மிகுமாறு காரம்; / 2. மிகும் ஆகாரம்;

ஆகாரம் - 1. உணவு; / 2. உருவம்;

மண்ணோர் - மனிதர்கள்;

செம்பொருள் - செம்மை + பொருள் - 1. சிவந்த வஸ்து; சிறந்த வஸ்து; / 2. கடவுள்; மெய்ப்பொருள்;

ஆகநெருப்பேறுமுகக்கும் -1. ஆக நெருப்பு ஏறும், முகக்கும் / 2. ஆகம் நெருப்பு, ஏறும் உகக்கும்

ஏறு - 1. மேலே ஏறுதல்; ஏற்றிவைக்கப்படுதல்; / 2. எருது;

முகத்தல் - 1. மொள்ளுதல் ; / 2. விரும்புதல்;

உகத்தல் - விரும்புதல்; மகிழ்தல்;

உம்பர் - தேவர்கள்;


சாம்பார்:

தண்ணீரை ஏற்கும் - தண்ணிரை ஏற்றுக்கொள்ளும்,

சமயத்தில் தானே ஆம் - சில சமயத்தில் மிகவும் தான்களே இருக்கும்.

மண்ணோர்க்கு கண்ணீர் மிகுமா காரம் காட்டும் - (சில சமயம்) மனிதர்களுக்குக் கண்ணீர் பெருகும்படி காரத்தைக் கொண்டிருக்கும்;

செம் பொருள் - சிவந்த வஸ்து;

ஆக நெருப்பு ஏறும் - சாம்பார் செய்வதற்காக நெருப்பின் மேல் ஏற்றிவைக்கப்படும்.

முகக்கும் சாம்பார் - (கரண்டியால்) மொள்ளப்படும் சாம்பார்;


சிவன்:

தண்ணீரை ஏற்கும் - கங்கையைத் தாங்குவான்,

சமயத்தில் தானே ஆம் - ஊழிக்காலத்தில் தான் தனியாக இருப்பான்,

ஆகாரம் காட்டும் மண்ணோர்க்குக் கண்ணீர் மிகும் - தன் உருவத்தைக் காட்டும்பொழுது (காட்சி கொடுக்கும்பொழுது) மனிதர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகும்;

செம்பொருள் - கடவுள்; மெய்ப்பொருள்;

ஆகம் நெருப்பு - தீப் போன்ற மேனியன் (அழல்மேனியன் , தீவண்ணன்); சோதி வடிவன்;

ஏறும் உகக்கும் - இடபத்தை ஊர்தியாக விரும்புபவன்;

உம்பர் பிரான் - தேவர்கள் தலைவனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment