Thursday, June 14, 2018

03.04.066 - சிவன் - மஞ்சள் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-05-27

3.4.66 - சிவன் - மஞ்சள் - சிலேடை

-------------------------------------------------------------

உண்ணும் உணவிலும் உள்ள ஒருபொருள்

வண்ண மிகவுடைய வான்பொருள் மண்ணை

அகழவைக்கும் அங்குமை யென்றும் பெயரா *

நிகரில் சிவன்மஞ்சள் நேர்.


சொற்பொருள்:

ஒரு - 1. ஒரு; / 2. ஒப்பற்ற; விசேஷமான;

பொருள் - 1. வஸ்து; / 2. (மெய்ப்பொருள்) கடவுள்;

வண்ணம் - 1. நிறம்; / 2. அழகு; குணம்;

வான் - 1. நன்மை; பெருமை; / 2. ஆகாயம்; தேவர் உலகம்;

அங்கு - 1. ஓர் அசைச்சொல்; / 2. அந்த இடத்தில்

* உமையென்றும்பெயராநிகரில் - 1. உமை என்றும் பெயர் ஆம்; நிகர் இல் / 2. உமை என்றும் பெயரா, நிகர் இல்

(இலக்கணக் குறிப்பு: தனிக்குறிலைச் சாராத மகரமெய் ஈற்றில் இருக்கும் சொல்லை அடுத்த சொல் மெல்லினத்தில் தொடங்கினால் முதற்சொல்லின் ஈற்றில் இருக்கும் மகரமெய் கெடும்).

உமை - 1. மஞ்சள்; / 2. உமாதேவி;

என்றும் - 1. எனவும்; / 2. எப்பொழுதும்

பெயரா - பெயராத - நீங்காத; (பெயர்தல் - பிரிதல்; விலகுதல்);

நிகர் - ஒப்பு; சமம்;

நேர் - ஒப்பு; சமம்;


மஞ்சள்:

உண்ணும் உணவிலும் உள்ள ஒரு பொருள் - நாம் சாப்பிடும் உணவிலும் இருக்கும் ஒரு வஸ்து.

வண்ணம் மிக உடைய வான் பொருள் - மிகவும் நிறம் உடைய சிறந்த பொருள்.

மண்ணை அகழ வைக்கும் அங்கு - (பூமிக்கு அடியில் விளைவதால்) நிலத்தை அகழந்து எடுக்க வைக்கும்.

உமை என்றும் பெயர் ஆம் - அதற்கு "உமை" என்றும் ஒரு பெயர் உண்டு.

மஞ்சள்.


சிவன்:

உண்ணும் உணவிலும் உள்ள ஒரு பொருள் - (எல்லாவற்றிலும் கலந்து இருப்பதால்) நாம் உண்ணும் உணவிலும் கலந்து இருப்பவன், ஒப்பற்ற மெய்ப்பொருள்.

வண்ணம் மிக உடைய வான் பொருள் - எல்லாக் குணங்களும் வடிவங்களும் உடையவன், மேலுலகில் உள்ளவன்.

மண்ணை அகழ வைக்கும் அங்கு - திருமாலை நிலத்தை அகழ்ந்து தேட வைத்தவன்.

உமை என்றும் பெயரா - உமாதேவி என்றும் பிரியாத ( = இணைந்து இருக்கின்ற);

நிகர் இல் சிவன் - ஒப்பு இல்லாத சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment