03.04 – சிவன் சிலேடைகள்
2006-06-05
3.4.60 - சிவன் - ஒற்றி (அடைமானம்) - சிலேடை
-------------------------------------------------------------
ஒருவரிடம் உள்ளவர் என்றறிந் தற்றார்
வருவரே பத்திரம் ஈவர் திருவுடைச்
செல்வர் அவர்கொடுப்பார் தேவையறிந் திவ்வுலகோர்
சொல்வரொற்றி ஈசர் துணை.
சொற்பொருள்:
ஒருவர் - 1. ஒரு மனிதர்; / 2. ஒப்பற்றவர்;
இடம் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. இடப்பக்கம்; ஆகாயம்;
உள்ளவன் - பணக்காரன்;
அற்றார் - 1. வறியவர்; / 2. துறவிகள்; பக்தர்கள்;
பத்திரம் - 1. (வீடு, நிலம் போன்றவற்றின்) சாசனம்; / 2. பாதுகாப்பு;
திரு - 1. செல்வம்; / 2. பாக்கியம்; தெய்வத்தன்மை;
ஒற்றி - 1. அடைமானம் (Pledge, property mortgaged or hypothecated); / 2. திருவொற்றியூர்;
துணை - 1) ஒப்பு; 2) காப்பு;
ஒற்றி (அடைமானம்):
ஒருவரிடம் உள்ளவர் என்று அறிந்து அற்றார் வருவரே - (ஒருவரைப்) பணம் உள்ளவர் என்று அறிந்து அவரிடம் பணமுடை உள்ளவர்கள் வருவார்கள்.
பத்திரம் ஈவர் - (தங்களுக்குச் சொந்தமான நிலம், வீடு போன்றவற்றின்) பத்திரத்தைக் கொடுப்பார்கள்.
திருவுடைச் செல்வர் அவர் கொடுப்பார் தேவை அறிந்து - (அதனைப் பெற்றுக்கொண்டு) அச்செல்வர் வந்தவருடைய தேவையைத் தெரிந்துகொண்டு (அடைமானம் வைத்ததன் மதிப்பையும் கருத்திற்கொண்டு) பணம் கொடுப்பார்.
இவ்வுலகோர் சொல்வர் ஒற்றி - உலகோர் இதனை ஒற்றி (அடைமானம்) என்பார்கள்;
சிவன்:
ஒருவர் இடம் உள்ளவர் என்று அறிந்து அற்றார் வருவரே - "ஒப்பற்றவர், ஒருவரை (உமையை) இடப்பக்கம் கொண்டவர்" என்று உணர்ந்து (அப்பெருமானாரை நாடி) அடியவர்கள் வருவார்கள்.
பத்திரம் ஈவர் - (அவர்களுக்கு அப்பெருமானார்) பாதுகாப்பு அளிப்பார்.
திருவுடைச் செல்வர் அவர் கொடுப்பார் தேவை அறிந்து - சகல செல்வங்களுக்கும் உறைவிடமான அவர் பக்தர்களுடைய தேவையை அறிந்து கொடுப்பார். (திருவாசகம் - குழைத்த பத்து - திருமுறை 8.33.6 - வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ");
இவ்வுலகோர் சொல்வர் ஒற்றி ஈசர் துணை - உலகோர், ஒற்றியூர் உறையும் சிவபெருமானாரைத் "துணை" என்று சொல்வார்கள்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment