Saturday, July 8, 2017

03.04.058 - சிவன் - பானை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-30

3.4.58 - சிவன் - பானை - சிலேடை

-------------------------------------------------------------

பெண்ணிடஞ்சேர் பெற்றி பிறங்கும் எரிவென்ற

வண்ணமுருக் காட்டும் வடிவுபல எண்ணில்

வரும்தண்ணீர் தாங்கும் உடைதலையும் காண்போம்

கருங்களன் மட்பானை காண்.


சொற்பொருள்:

இடம் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. இடப்பக்கம்;

பெற்றி - தன்மை; பெருமை;

பிறங்குதல் - விளங்குதல்;

எரி - நெருப்பு; தீ;

வெல்தல் - 1. ஜெயித்தல் (To conquer, overcome); / 2. ஒத்தல் (To resemble);

எண்ணில் - எண்ணினால்; தியானித்தால்;

உடைதலை - 1. உடைபடுவதை; / 2. உடைபட்ட தலை;

கருங்களன் - நீலகண்டன்; (களம் - கண்டம்);

மட்பானை - மண்ணால் ஆன பானை;

காண் - முன்னிலை அசை;


பானை:

பெண்ணிடம் சேர் பெற்றி பிறங்கும் - பெண்களிடம் சேர்கின்ற தன்மை இருக்கும்;

எரி வென்ற வண்ணம் உருக் காட்டும் - நெருப்பை வென்ற (தீயினாற் சுடப்பட்டும் அதனால் எரிக்கப்படாத) சிறப்பை அதன் உருவம் காட்டும்;

வடிவு பல எண்ணில் வரும் - எண்ணினால் பல வடிவங்களில் உள்ள பானைகள் நினைவிற்கு வரும்;

தண்ணீர் தாங்கும் - தண்ணீரைத் தன்னுள் தாங்கும்;

உடைதலையும் காண்போம் - (கீழே விழுந்தால்) உடைவதையும் காணலாம்;

மட்பானை - மண்ணால் ஆன பானை;


சிவன்:

பெண் இடம் சேர் பெற்றி பிறங்கும் - இடப்பக்கம் உமை சேர்கின்ற பெருமை திகழும்;

எரி வென்ற வண்ணம் உருக் காட்டும் - தீப் போன்ற செம்மேனியன்;

வடிவு பல - அவன் வடிவங்கள் பல;

எண்ணில் வரும் - தியானித்தால் காட்சி கொடுப்பான்;

தண்ணீர் தாங்கும் - கங்காதரன்;

உடைதலையும் காண்போம் - அவன் கையில் (பிரமனது) உடைந்த மண்டையோட்டையும் காணலாம்;

கருங்களன் - நீலகண்டன்; (திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.113.9 - "கடல்விடம் உண்ட கருங்களனே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment