Wednesday, July 5, 2017

03.04.051 - சிவன் - இருப்புப்பாதை - சிலேடை

 03.04 – சிவன் சிலேடைகள்


2006-05-17

3.4.51 - சிவன் - இருப்புப்பாதை - சிலேடை

-------------------------------------------------------------

இணைபிரியா தென்றும் இருக்கும் அரவம்

அணையுமோர் மாவூர்தி ஏறும் கணக்கற்றோர்

போகும் நெறியாய்ப் பொலியுமிருப் புப்பாதை

ஏகம்பம் மேய இறை.


சொற்பொருள்:

இணை - 3. pair, couple, brace; இரட்டை;

அரவம் - 1. ஒலி; / 2. பாம்பு;

அணைதல் - பொருந்துதல்;

ஓர் - 1. ஒரு; / 2. ஒப்பற்ற;

மா - 1. பெரிய; / 2. அழகு; விலங்கு;

ஊர்தி - வாகனம்;

ஏறு - 1. ஏறுதல்; / 2. இடபம்;

ஏகம்பம் - காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில்;


இருப்புப்பாதை:

இணைபிரியாது என்றும் இருக்கும் - எப்போதும் (இரண்டு தண்டவாளங்களாக) இணைபிரியாமல் இருக்கும்;

அரவம் அணையும் ஓர் மா-ஊர்தி ஏறும் - (அதன்மேல்) ஒலி பொருந்தும் ஒரு பெரிய வாகனம் (train) செல்லும்.

கணக்கற்றோர் போகும் நெறியாய்ப் பொலியும் - பல மக்கள் (பல ஊர்களுக்குப்) போகும் வழியாக விளங்கும்.

இருப்புப்பாதை - இரயில்பாதை (Railway track);


சிவன்:

இணைபிரியாது என்றும் இருக்கும் - பார்வதியைப் பிரியாமல் (அர்த்தநாரீஸ்வனாக), எக்காலத்தும் (அழிவில்லாது) இருப்பான்.

அரவம் அணையும் - (மேலே) பாம்பு பொருந்தும்;

ஓர் மா-ஊர்தி ஏறும் - இடபமும் ஒப்பற்ற அழகிய வாகனம் ஆகும்; ("ஏறும் ஓர் மா ஊர்தி"); ( - அல்லது - ஒப்பற்ற இடபவாகனத்தின்மேல் ஏறுபவன்);

கணக்கற்றோர் போகும் நெறியாய்ப் பொலியும் - பலர் செல்லும் நல்ல நெறியாக விளங்குவான்;

ஏகம்பம் மேய இறை - கச்சி ஏகம்பத்தில் உறைகின்ற இறைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment