03.04 – சிவன் சிலேடைகள்
2006-05-13
3.4.50 - சிவன் - புத்தகம் - சிலேடை
-------------------------------------------------------------
கற்றவர் காதலிப்பர் கையோடு கொண்டெங்கும்
சுற்றுவர் நல்ல துணையென்பர் வெற்றிபெற
வேண்டி உலகோதும் தையல்சேர் மேனியுண்டு
தாண்டவனார் ஓர்புத் தகம்.
சொற்பொருள்:
கற்றவர் - 1. படித்தவரகள்; / 2. ஞானநூல்களைக் கற்றவர், வழிபடக் கற்றவர்;
கையோடு - 1. உடன்; / 2. கையில் ஓடு (மண்டையோடு);
என்பர் - 1. என்று சொல்வர்; / 2. எலும்பை அணிபவர்;
வேண்டுதல் - 1. விரும்புதல்; / 2. பிரார்த்தித்தல்;
ஓதுதல் - 1. படித்தல்; / 2. ஜபம் செய்தல்; பாடுதல்;
தையல் - 1. தைப்பு (Sewing, stitching); / 2. பெண்;
தாண்டவம் - கூத்துவகை;
புத்தகம்:
கற்றவர் காதலிப்பர் - படித்தவர்கள் அதனை விரும்புவார்கள்;
கையோடு கொண்டு எங்கும் சுற்றுவர் - எங்குச் சென்றாலும் அதனை உடன் எடுத்துச் செல்வார்கள்;
நல்ல துணை என்பர் - நல்ல துணை ஆகும் என்பார்கள்;
வெற்றி பெறவேண்டி உலகு ஓதும் - உலக மக்கள் (பள்ளியில், வேலையில்) வெற்றி பெற அதனை விரும்பிப் படிப்பார்கள்;
தையல் சேர் மேனி உண்டு - புத்தகத்தில் தையலும் (binding) இருக்கும்;
ஓர் புத்தகம் - ஒரு நூல்;
சிவன்:
கற்றவர் காதலிப்பர் - ஞானிகள் நேசிப்பார்கள்;
கை ஓடு கொண்டு எங்கும் சுற்றுவர் - கையில் ஒரு மண்டையோட்டை ஏந்திப் பிச்சைக்காக எங்கும் திரிபவர்.
நல்ல துணை - பக்தர்களுக்குச் சிறந்த துணை ஆவார்.
என்பர் - எலும்பை அணிபவர்;
வெற்றி பெற வேண்டி உலகு ஓதும் - வாழ்க்கையில் வெற்றிபெற மக்கள் பிரார்த்தனை செய்து அவரது புகழைப் பாடுவர்;
தையல் சேர் மேனி உண்டு - பார்வதியோடு இணைந்த வடிவம் உள்ளவர் - அர்த்தநாரீஸ்வரர்;
தாண்டவனார் - கூத்து ஆடுபவர்; நடராஜர்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment