03.04 – சிவன் சிலேடைகள்
2006-05-27
3.4.54 - சிவன் - இராணுவ வீரன் (Soldier) - சிலேடை
-------------------------------------------------------------
கண்ணிற் பொறிபறக்கும் கையிற் படையிருக்கும்
நண்ணார் புரமெரிப்பா னாக மிகவளையும்
மண்ணோர் அவன்மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர்
திண்ணார்போர் வீரன் சிவன்.
சொற்பொருள்:
பொறிபறத்தல் - 1. கோபத்தோடு பார்த்தல்; / 2. தீப்பொறி சிதறுதல்;
படை - ஆயுதம்;
நண்ணார் - எதிரிகள்; பகைவர்;
புரம் - 1. நகரம்; / 2. முப்புரம்;
புரமெரிப்பா னாக மிகவளையும் - 1. புரம் எரிப்பான், ஆகம் மிக வளையும்; / 2. புரம் எரிப்பான் நாகம் மிக வளையும் (/ அளையும்);
எரிப்பான் - 1. எரியச் செய்வான் / செய்பவன்; 2. எரிக்க; எரிப்பதற்கு;
ஆகம் - உடல்;
நாகம் - பாம்பு; மலை;
அளைதல் - தழுவுதல்;
திண் ஆர் - வலிமை மிக்க;
இலக்கணக் குறிப்புகள் :
1. பான் = எதிர்கால வினையெச்ச விகுதி; (உதாரணம்: கற்பான் வருவான் = கற்க வருவான்);
2. தனிக்குறிலைச் சாராத இடத்தில், இரண்டாம் சொல் மெல்லினத்தில் தொடங்கினால், முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ம்" கெடும்;
போர்வீரன்:
கண்ணில் பொறிபறக்கும் - (போரிடும் போது) கோபத்தோடு பார்ப்பான்;
கையில் படை இருக்கும் - அவன் கையில் ஆயுதம் இருக்கும்;
நண்ணார் புரம் எரிப்பான் - பகைவர்களது நகரங்களை (குண்டு வீசி) எரிப்பான்;
ஆகம் மிக வளையும் - அவன் உடல் மிக வளையும் - (supple body);
மண்ணோர் அவன் மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர் - நாட்டுமக்கள் அவன் பெருமையைப் போற்றுவர்;
திண் ஆர் போர்வீரன் - வலிமை மிக்க போர்வீரன்;
சிவன்:
கண்ணில் பொறிபறக்கும் - தீ உமிழும் நெற்றிக்கண்ணை உடையவன்;
கையில் படை இருக்கும் - கையில் மழுப்படை, சூலம் முதலியன இருக்கும்;
நண்ணார் புரமெரிப்பான் நாகம் மிக வளையும் (/ அளையும்) - பகைவர்களது முப்புரங்களை எரிக்க மேருமலையும் (அந்த வில்லில் நாணாகக் கட்டியிருந்த) நாகப்பாம்பும் மிகவும் வளையும்; (-அல்லது- முப்புரம் எரித்தவன்; அவன் மேல் பல நாகங்கள் பின்னியிருக்கும்);
மண்ணோர் அவன் மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர் - உலகத்தோர் அவன் பெருமையைப் போற்றி (அவன் அருள் பெற்று) மகிழ்வார்கள்;
சிவன் - சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment