Wednesday, July 5, 2017

03.04.053 - சிவன் - வித்தைக்காரன் (Magician) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-22

3.4.53 - சிவன் - வித்தைக்காரன் (Magician) - சிலேடை

-------------------------------------------------------------

பெரிய பொருளை மறைத்துப் பிறகு

தெரியவைப்பான் சேல்விழிச் செவ்வாய்த் தெரிவை

உடல்கூறா வாள்காண்போர் உள்ளமுவக் கும்செஞ்

சடையரன்வித் தைக்காரன் தான்.


சொற்பொருள்:

- 1. இரண்டாம் வேற்றுமை உருபு; / 2. தலைவன்;

பொருளை - 1. பொருளினை; / 2. பொருள், ;

தெரிவை - பெண்;

கூறு - 1. பிளவுபட்ட துண்டு; / 2. பங்கு; பாதி;

காண்தல் . 1) பார்த்தல்; / 2. ஆராய்தல்;

உவத்தல் - களித்தல்;

வித்தை - 3. Magic, jugglery; மாயவித்தை.


வித்தைக்காரன் (Magician):

பெரிய பொருளை மறைத்துப் பிறகு தெரியவைப்பான் - பந்து, கட்டடம் போன்ற பெரிய பொருள்களை மறையுமாறு செய்வித்துப், பிறகு நம் கண்ணுக்கு மீண்டும் தெரியுமாறு செய்வான்;

சேல்விழிச் செவ்வாய்த் தெரிவை உடல் கூறு ஆவாள் - (அவன் செய்யும் மாயத்தால்) சேல்மீன் போன்ற கண்ணும் சிவந்த வாயும் உடைய அழகி தன் உடல் இருகூறு ஆவாள்;

காண்போர் உள்ளம் உவக்கும் - அதனைக் காணும் மக்கள் மனம் மகிழும்;

வித்தைக்காரன் - Magician;


சிவன்:

பெரிய பொருள் - சிறந்த பொருள் ஆனவன்; (-அல்லது- வடிவத்தில் மிகவும் பெரிய பொருள் ஆனவன்);

- தலைவன்;

மறைத்துப் பிறகு தெரியவைப்பான் - (தன்னை) மறைத்துப் பிறகு காட்சி கொடுத்து அருள் செய்வான்;

சேல்விழிச் செவ்வாய்த் தெரிவை உடல்கூறு ஆவாள் - சேல்மீன் போன்ற கண்ணும் சிவந்த வாயும் உடைய பார்வதி அவன் உடலில் ஒரு பங்கு ஆவாள்.

காண்போர் உள்ளம் உவக்கும் - (அவனைத்) தரிசிப்பவர் உள்ளம் மகிழும்; (-அல்லது- அவனை ஆராய்பவர் மனம் மகிழும்);

செஞ்சடை அரன் - சிவந்த சடையை உடைய ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment